அகத்தேடல்-2
Posted by
நி
ரப்பமுடியா
வெற்றிடம் ஏதுமில்லை
நிரம்பியதும் வெளியேறியதும்
ஒன்றாகவும் இருக்கலாம்
வேறாகவும் இருக்கலாம்
ஒவ்வொன்றிலும்
முந்தையதின் எச்சமும் உண்டு
மூண்டெழும் புதியதும் உண்டு
அடையாளத்தை
நிலைநிறுத்த
வாழ்வோடு நடக்குது
மல்லுக்கட்டு
வென்றது எது? வீழ்ந்தது எது?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
பிறப்பா?
உறவா?
குடும்பமா?
புழுதி விளையாடிய தெருவா?
இளமை கழிந்த
ஊரா?நட்பா?
வித்தை பயின்ற இடமா?
தேமலாய் தொடரும்
சாதியா?
தொப்புள்கொடிவழி வந்த
மொழியா?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
மண்டையில் உறைந்த
மதமா?
மனதுக்கு உகந்த
மாநிலமா?
போராடிப்பெற்ற
தேசமா?
போராட்ட வாழ்வின்
வர்க்கமா?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
இயற்கையாய் அமைந்த
பாலினமா?
இணையேதும் இல்லா
மானுடமா?
படித்தபடிப்பும்
பெற்ற காயங்களும்
துடைத்தெறிந்ததா?
துலங்க வைத்ததா?
அடையாளங்களை
ஆழங்காணமுடியா
அடையாளச் சிக்கலில்
அகப்பட்டு உழலும் வேளை
அகத்தேடல் காட்டும்பாதை...
-சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment