உயிர் விலை மதிக்க முடியாதது. அதனை விபத்துகளில் இழப்பது சகிக்க முடியாத சோகம். ஆண்டுதோறும் இந்தியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்திலும் உலகம் முழுவதிலும் 25 வயதிற்குட்பட்ட 40 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் 14 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 2 மணிநேரத்திலும் சராசரி 3 பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 1993ஆம் ஆண்டு 6,528 சாலை விபத்துகளில் 7,349 பேர் உயிரிழந்தனர். ஆனால், 2009ஆம் ஆண்டு 12,727 சாலை விபத்துகளில் 13,746 பேர் உயிரிழந்துள்ளனர், அதாவது தினசரி 38 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.
2006ஆம் ஆண்டு 11,009 பேர் உயிரிழந்தபோது இவற்றை படிப்படியாக 20 விழுக்காடு குறைத்து 2013ஆம் ஆண்டுக்குள் 8,800 சாவுகள் என்று குறைக்கப்போவதாக தமிழக உள்துறை உறுதி மொழி எடுத்தது. ஆனால், கடந்த ஆண்டே சாவு எண்ணிக்கை 13,746 ஆகிவிட்டது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும். இந்த விபத்துகளின் காரணம் என்ன?
2009ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 90 விழுக்காடு ஓட்டுநர் தவறால் நிகழ்ந்தது. பாதசாரிகள் கவனக்குறைவு, வேறு சில கவனக்குறைவுகள், எந்திரக் கோளாறு இவை காரணமாக நிகழ்ந்த விபத்து 6.5 விழுக்காடு மட்டுமே. மோசமான சாலை, மோசமான பருவநிலை, இதரக் காரணங்களால் நேர்ந்த விபத்து 3.5 விழுக்காடு மட்டுமே.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, கைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் வண்டி ஓட்டுவது, அளவுக்கு மீறிய உற்சாகத்தையோ கோபத்தையோ வண்டி ஓட்டுவதில் காட்டுவது, அதிவேகமாக வண்டி ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயற்சிப்பது போன்ற பல தவறுகள்தான் ஓட்டுநர்களால் விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் ஹெட் லைட்டின் அதிக ஒளியை கட்டுப்படுத்தாமல் இருப்பதும் இதன் காரணமாகிறது.
முந்தைய ஆட்சியில் 3 ஆயிரம் கடைகளுடன் துவக்கப்பட்டு அப்போது 2,828 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்த டாஸ்மாக் இன்று 6,823 கடைகளோடு 12 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்த டாஸ்மாக் விற்பனை உயர்வுக்கும் சாலை விபத்துகளுக்கும் தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் கடந்த 2005ம் ஆண்டு தினசரி 16 கோடி டாஸ்மாக் விற்பனை நடந்தபோது தினசரி 26 பேர் சாலை விபத்தில் பலியானார்கள் கடந்த ஆண்டு தினசரி விற்பனை 38 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் தினசரி 38ஆக உயர்ந்தது. புத்தாண்டு தின டாஸ்மாக் விற்பனை இலக்கு 100 கோடி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம்..... இதைவிட விளக்கம் தேவையா? அரசு வருவாயில் 30 விழுக்காடாக இருக்கும் டாஸ்மாக் வருவாயை பற்றிப் பேசுவது அரசுக்கு தலைவலியாக இருக்குமோ? ஆயினும் இதையும் இணைத்துப் பேசாமல் சாலை விபத்துகளை குறைக்க இயலாது.
அரசை குறை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் மக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட வேண்டும். அதுவும் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். சாலை விதிகளை நாம் மதிக்காவிட்டாலும் எதிரே வருகிறவர் மதிக்காவிட்டாலும் விபத்து நிகழும். ஆகவே எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை தேவை. மேலும் குடிப் பழக்கம் ஒழுக்கக் கேடு என்பதாக பார்ப்பதைக் காட்டிலும் அது ஆரோக்கியக் கேடு, உயிரைப் பறிக்கும் எமன் என்பதை ஆழமாக உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டுக் கொண்டாட்டமானாலும் சரி. வேறு எந்த மகிழ்ச்சியான கொண்டாட்டமானாலும் சரி. போதையில்லாமல் விபத்தில்லாமல் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் எல்லோரும் மகிழக் கொண்டாடலாமே! விபத்துகளில்லா ஆண்டு மலரட்டும்.
2010 விளிம்பில் 2011 வாசலில் அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடி...
Posted by அகத்தீ Labels: கட்டுரை
இன்றுதான் பிறந்ததுபோல் இருக்கிறது; அதற்குள் ஓய்வுபெறும் நேரம் நெருங்கிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது?
நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் புத்தாண்டு வாசலில் நிற்கிறது.
மனிதகுலம் பல லட்சம் ஆண்டுகள் பயணப் பட்டுவிட்டது. கற்காலத்திலிருந்து கம்யூட்டர் யுகத்துக்கு மனிதன் முன்னேறிவிட்டான். ஆயினும் கடந்த நூற்றாண்டுகளில் மனிதகுலம் பாய்ந்து தாவி முன்னேறியதைப்போல அவ்வளவு வேகமாய் அதற்குமுன் எப்போதுமே பயணித்ததில்லை; அதிலும் கடந்த பத்தாண்டுகளாய் சந்திக்கிற பிரச்சனைகள் சொல்லில் அடங்காது.
இயற்கையைக் கண்டு பயந்து நடுங்கிய மனி தன் அதன்முன் மண்டியிட்டான். அப்புறம் மெல்ல மெல்ல எழுந்தான் தன் கைவலுவாலும் மூளை பலத்தாலும் காட்டைத் திருத்தினான். நாட்டை நகரை புதுக்கினான் ஆலைகள், சோலைகள், சாலைகள் அவன் கைவண்ணத்தில் புன்னகைத் தன... ஆனால் இன்று அதிவேக வளர்ச்சித் திக்கில் வெறிகொண்டு ஓடுவதால் வயல்களை, குடிசை களை, தோப்புகளை, சோலைகளை கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான். இயற்கையை அள வுக்கு மீறி சுரண்டி உறிஞ்சியதால் இயற்கை பழி வாங்கத் துவங்கிவிட்டது.
காற்று மாசுபட்டுவிட்டது. குடிநீர் கெட்டுவிட் டது. நிலத்தடி நீர் விஷமாகிவிட்டது. இனி அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். எங்கே போகிறோம்?
நாம் இன்று காண்பதெல்லாம் நம் மூதாதை யர்கள் நமக்கு விட்டுச்சென்ற கொடைகள்; ஆக் கித்தந்த களஞ்சியங்கள். அவற்றை நம் சந்ததி யருக்கு நாம் மிச்சம் வைப்போமா? அவை நமது தனிச்சொத்தல்ல! அவற்றை அழிக்கிற உரிமை நமக்கு இல்லை. இதை உரக்கச் சொல்லியாக வேண்டும்... காலம் விரைகிறது.
அம்மணமாய்த் திரிந்த மனிதன் இலைதழை இவற்றை அணிந்த முதல் மனிதர்களைப் பரிக சித்தான்; காலம் கெட்டுப் போனதாய் சொல்லிச் சென்றான். அம்மணக்குண்டி ராஜ்யத்தில் கோவ ணம் கட்டியவன் பைத்தியக்காரன் ஆனான். ஆனால், அவனால் அம்மணமாய் நீண்டநாள் திரிய முடியவில்லை கோவணம் கட்டினான். அப்போது வேட்டி சேலை கட்டியவர்கள் வித்தியாசமாய் தெரிந்தனர். கிராப் வெட்டியவர்களை கேலி செய் தான், காலம் கெட்டுப்போனது என்றான். ஆனால் அவன் மாறிப் போனான். புதியன வரும்போதெல் லாம் பழமை கெக்கொலி கொட்டி பரிகசிக்கும்; காலம் கெட்டுப்போனதென சபிக்கும் ஆயினும் முன்னேற்றப்பாதையிலே இந்த முட்டுக்கட்டை கள் நொறுங்கிப் போகும். ஆம் தலைமுறை இடை வெளிகளின் சலிப்பையும். சபிப்பையும் முன்னேற் றச் சரித்திரம் காலால் எட்டி உதைத்துவிட்டு சென்று கொண்டே இருக்கும். அதுதான் வளர்ச்சி யின் விதி.
ஒவ்வொரு நொடியிலும் அதுவரை அறியப் படாத பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தபடியே அறிவியல் வளர்கிறது. நேற்றுவரை சரியென நம்பி வந்த பலவற்றை அறிவியல் வெளிச்சம் பிழை யெனக் காட்டிவிட்டது. நேற்றைப் பற்றிய புரிதல் மட்டுமே இன்றைக்கு வழிகாட்டாது. அதே சமயம் நேற்றைப் புரியாமல் இன்றைப் புரிந்து கொள் வதும் இயலாது. வளர்ச்சி என்பது நேற்றின் தொடர்ச்சி; இன்றின் மலர்ச்சி; நாளையின் எழுச்சி.
காட்டில் வல்லாடி தாவரங்கள் தனது வளர்ச் சிக்காக பிறவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். அதையும் மீறி வளைந்து நெளிந்து சூரியனை தரிசித்த தாவரங்கள் உண்டு. முட்டிமோதி முன் னேறிய அவை தன்னம்பிக்கையின் படிமம் ஆயின. ஆனால், தோப்புகள் சீராக ஒன்றுக்கொன்று வழி விட்டு எல்லாம் வளர்ந்தன. இதுதிட்டமிட்ட வளர்ச்சி. ஆயினும் ஆசைப் பார்த்தினியமும் விஷ முள் மரங்களும் வளர்ந்து தோப்பை காடாக்க முயல் கிறது. தடுக்க வேண்டிய தோட்டக்காரனோ அதை ஊக்குவிக்கிறான் சபாஷ் சரியான போட்டி என்று கைதட்டுகிறான். வளர்ச்சியின் போதையில் ஆட்டவிதிகளை தூக்கி எறிந்ததால் ஆடுகளம் இப்போது காவு கேட்கிறது. மகிழ்ச்சி ஆரவாரம் ஒலிக்க வேண்டிய திடலில் கூச்சலும் முனகலும் சிரிப்பும் அழுகையும் பரபரப்பும் பற்கடிப்பும்... தவறு எங்கே? இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் சீர்படுத்தி விடலாம்.
எங்கே தொடங்குவது? யார் தொடங்குவது?
யார் செய்யப்போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?
கடல் கொந்தளிக்கிறது. அலை சீறி அடிக் கிறது. சூறாவளி சுழன்றடிக்கிறது. அடை மழைவிடா மல் பெய்கிறது. சூரியனை தரிசித்து வெகு கால மாயிற்று. எங்கும் இருள் கவ்விக்கிடக்கிறது. பட கின் பாய்மரம் பிய்ந்துவிட்டது. இயந்திரம் பழுதாகி விட்டது. படகில் ஓட்டை விழுந்துவிட்டது. ஆயி னும் படகைச் செலுத்த வேண்டும். இப்போது துடுப்பை இயக்கும் ஆற்றல் எவருக்கு இருக் கிறதோ அவன்தான் இளைஞன். அவன்தான் நாளையின் நம்பிக்கை.
எங்கே இருக்கிறார்கள் இளைஞர்கள்? தோற்றுப் போன கிழவன் இப்படி அவநம்பிக்கை அபசுரம் இசைக்கிறான். நுகர்வு வெறியிலும் சுயநல வேட்கையிலும் தன்னையிழந்து இளைய தலை முறை சீரழிந்து கிடப்பதாக ஓய்வு நாற்காலிப் புரட்சிக்காரர்கள் சலிப்போடு கூறுகிறார்கள்.
பாவம் நேற்றை அவர்கள் அறியவில்லை. அன்று நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்ற இளைஞர்களைவிட பங்கேற்காத இளைஞர்கள் அதிகம். எல்லோரும் எழுந்திருந்தால் இணைந் திருந்தால் வெள்ளைக்காரனை விரட்ட இருநூறு ஆண்டுகள் ஆகியிருக்காதே! ஆயினும் நம்பிக்கை வறண்டு போகாத அக்னிக் குஞ்சுகள்தாமே விடு தலை ஜோதியை கொண்டுவந்து சேர்ந்தனர்.
தேசியப் பேரலை வீசியடித்தபோது அதன் ஓட்டத்தில் கலந்து கரைந்து போனவர்கள் அநே கம். அவர்களை வரலாறு மறந்துவிட்டது. எதிர்நீச் சல் போட்ட பகத்சிங் இன்னும் சாகாமிலிருக்கி றான். அதுதான் இளமையின் பொருள்; குறியீடு.
தமிழகத்தில் திராவிட அலை வீசியபோதும், அதற்குள்ளே பிளவுகள் வந்து சுழன்றடித்தபோதும், நாயக மயக்கங்களை மீறி நம் இளைஞர்கள் வெண்கொடியை உயர்த்திப்பிடிக்கவில்லையா? ஏன், சாதியக் கொடிகள் வட மாவட்டங்களில் பிற கட்சிக் கொடிகளை வெட்டிச்சாய்த்துக் கொண்டி ருந்த வேளையில் வாலிபர் இயக்கத்தின் வெள் ளைக் கொடி முளைக்கவில்லையா? சிகப்பு நட் சத்திரம் பிரகாசிக்கவில்லையா?
ஆளரவமற்ற சாலையில் மிதிவண்டியில் முந்திச் சென்று கொடி நடுவதல்ல சாதனை; நெரி சலில் திணறும் சாலையில், அடைந்து திணறும் வாகனங்களுக்கு இடையில் புகுந்து நெளிந்து வளைந்து துணிந்து முன்செல்பவன், நெரிசல் கூச்சலுக்கிடையே பூபாள ராகத்தை உரக்க முழக்குபவன், நம்பிக்கை பூக்களையும் நாளைக் கான போர் முரசையும் ஒரே நேரத்தில் சுமந்து செல்பவன், பிரச்சனைகளை முனை முகத்து சந் திப்பவன் - அவனே இளைஞன்! நாளைய தலை வன்! அவன், அவள் இரு பாலருக்கும் இதுதான் இயற்கை விதித்த நியதி.
இன்று பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது; புதிய தலைமுறை நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் இனறு கம்பீரமாய்... இதோ.... இதோ.... இதோ...!
அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடியே புத்தாண்டு புன்னகைக்கிறது...
நன்றி: வண்ணக்கதிர்
மயில், குயில், கிளி, புறா, பட்டாம் பூச்சி, முயல், மான் என ஒவ்வொன் றும் பேரழகு. இயற்கையின் அருட் கொடை, அழகின் சிரிப்பு.
இவற்றை விரும்பாத குழந்தை கள் உண்டோ? பெரியவர் உண்டோ? மனதைக் கிறங்க வைக்கும் இவற்றை கவிஞர்கள் விடுவரோ எளிதில்?
பெண்களைப் பாடாத கவிஞர் உண்டோ? அதிலும் பெண்களை மயிலோடும் குயிலோடும் ஒப்பி டாத கவிஞரை எங்கேனும் கண்ட துண்டோ?
மயில், குயில், பெண், கவிதை இவற்றுக்கு இடையே உள்ள உறவு இயற்கையானது. முன்னை பழ மைக்கும் பழமையானது. பின் னைப் புதுமைக்கும் புதுமையா னது. ஆயினும் இன்னும் எத்தனை காலம் மயிலோடும் குயிலோடும் பெண்ணை ஒப்பிட்டுப் பாடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? இக்கேள்வி அவ்வப்போது சீறி எழத்தான் செய்கிறது.
இக்கேள்விக்கு விடைதேடும் முன் இங்கே இரண்டு கவிதை களை சற்று பார்ப்போம். ஒரு கவி தையின் தலைப்பு மயில். இன் னொன்றின் தலைப்பு குயில்.
அழகிய மயிலே! அழகிய மயிலே என கவிதை தொடங்கும். உனது தோகை புனையாச் சித்தி ரம்/ ஒளிசேர் நவமணி களஞ்சியம் அதுவாம் என்றெல்லாம், வர்ணணை தொடரும். ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள்/ ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்/மரகத உருக் கின் வண்ணத்தடாகம்/ஆன உன் மெல்லுடல், ஆடல் உன் உயிர்/
இவை என்னை எடுத்துப் போயின
இப்படி கவிஞர் சொல்லிக் கொண்டே போவது அவரின் ரச னைக்கு சாட்சி. ஆனால் அதோடு நிற்காமல் தன் வேலையைத் தொடங்கினார்;
நீயும் பெண்களும் நிகர் என்கிறார்/நிசம் அது நிசம் நிசம் நிசமே ஆயினும்/பிறர் பழி தூற் றும் பெண்கள் இப்பெண்கள்/அவர் கழுத்து உன் கழுத்தா குமோ சொல்வாய்/ இப்படி கழுத்துக்குத் தாவிய கவிஞர் அத்தோடு விட்டாரா? இல்லை, அப்புறம் பெண்கள் கழுத்து குட்டையாகவும் மயிலின் கழுத்து நீளமாகவும் உள்ளதற்கான கார ணத்தை கற்பனை செய்கிறார். அயலான் வீட்டின் அறையில் நடப்பதை/ எட்டிப் பார்க்கா திருப்பதற்கே/இயற்கை அன்னை இப் பெண்களுக்கெல் லாம்/குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ/ கறை யொன்றில்லா கலாப மயிலே/நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தாள் என்று ஒரு குதர்க்க மான காரணத்தை சொல்லிவிட்டு மயிலே இதை வெளியே சொல் லாதே, மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்று நீட்டுகிறார்.
மோசமான கவிஞராக இருக் காரே! அவர் யார் எனக் கேட்கி றீர்களா? பொறுங்கள்! அவசரம் வேண்டாம். கவிதை முடிய வில்லை. இதோடு முடித்திருந்தால் அவர் சாதா கவிஞர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார். அதில் பெண்கள் ஏன் அப்படி இருக்கி றார்கள் என்ற கேள்விக்கு விடை சொன்னார் புவிக்கொன்று உரைப் பேன் புருஷர் கூட்டம்/பெண் களை ஆதிப்பெருநாள் தொடங்கி/ திருந்தா வகையில் செலுத்துத லால்/அவர்கள் சுருங்கிய உள் ளம் விரிந்த பாடில்லையே என ஆண்கள் மீதே குற்றப்பத்திரிகை வாசித்தார். அதனால்தான் அவர் புரட்சிக் கவிஞர். இப்போது புரிந் திருக்குமே இக்கவிதையை யாத்த வர் பாரதி தாசன் என்பது...
இன்னொரு கவிஞர் குயில் என்ற தலைப்பில் தன் கற்பனைச் சிறகை விரித்தார் கருப்பிலே அழகு கண்கவர் கண்கள் என் றெல்லாம் வர்ணித்து தோட்ட மெல்லாம் சுற்றுவாய் விடுதலைப்/ பாட்டிலே மண்ணை மயக்கு வாய் பச்சைக் / காட்டிலே உல வும் கவிதையின் குழல் நீ / ஏட் டிலே காணா இசையின் வெள் ளம் நீ இப்படி குயில் பாட்டில் மயங்கி பிதற்றி மேலும் தொடரும் போதுதான் அவர் பெண்கள் குர லோடு குயிலின் குரலை ஒப்பிடு வதை ஏற்க மறுத்தார். உன் குரல் பெண்ணின் குரலுக் கொப்பெனப்/ பன்னுவர் கவிஞர், பாதிதான் உண்மை/ என்று அடித்து சத்தி யம் செய்தார். ச்சே...என்னாச்சு இக்கவிஞருக்கு என கேள்வி குடைய தொடர்ந்து படித்தால் புதிர் அவிழும்.
பெண்களின் குரலிலே பிணி யும் ஏக்கமும் /எண்ணிலாச் சோகமும் பயமும் அடிமையும் / நிறைந்தன ஆதலால் நேரிசைக் குரலிலே / கறையே அமைந் தது... என ஓங்கிக் குட்டினர். ...கவின் குயிலே.உன் / விடு தலைக்குரலிலே வெற்றி எக்கா ளம் / நடுங்கும் பெண்களின் நற்குரல் தன்னிலே / விடுதலை இசையும் வீரமும் இல்லையே இப்படி ஒப்பிட்டு மனம் புழுங் கினார் கவிஞர். ஆனால் இதோடு நின்றிருந்தால் அவர் கவிதை காலமழையில் கரைந்து போயிருக் கும். ஆனால் இவர் கவிதை சாகாத கவிதை ஆயிற்றே! அவர் இறுதி யாகச் சொல்வார், பெண்கள் இந் நிலை அடைந்ததற்கு யார் கார ணம் என்பதை, அவர் கூறுகிறார்;
கெடுதலை செய்தனர் ஆணி னக் கிறுக்கர் / கூவுவாய் குயிலே குவலயத்தில் இனிமேல் / மேவும் சமநிலை மேவிடும் என்றே
இந்த சவுக்கடி வரிகளில் சிலிர்த்தெழுகிறார் கவிஞர் தமிழ் ஒளி.
மயிலைப் பாடிய கவிஞர் பாரதி தாசனும் குயிலைப்பாடிய கவிஞர் தமிழ் ஒளியும் பெண்ணடிமைத் தனத்தை சாடியதோடு அதற்கு ஆண்களே காரணம் என நறுக் கென்று குத்தீட்டியாய் கவிதை யைப் பாய்ச்சினர். ஆக எதையும் பாடு பொருளாக்கலாம். ஆனால் பார்வை எது என்பது தான் முக்கி யம். சரிதானே/
ஏசுநாதரும் அம்மளை மாதிரி பறை சாதிக் காரனாத்தான் இருப்பாரோ இல்லையான அந்த மனிசனையும் சாட்டை வாரால் அடிச்சு சிலுவையச் சொமக்க வச்சிருக்க மாட்டாங்களே
- இப்படி மனசுக்குள் சொல்லிக் கொண்டான் சிறுவன் ஒசேப்பு.
அந்த பிஞ்சு மனதில் பட்டுத் தெறித்த இந்த வரிகள் ஒரு சமூகத்தின் யுகாந்திர வலியை சுமந்து நிற்கின் றன. தோலை உரித்து மிளகாய்ப் பொடி தூவியதுபோல் சமூக யதார்த் தத்தைக் கீறிக் காட்டுகின்றன.
டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் முழுவதுமே இயல்பான வார்த் தைகளால் மிக நுட்பமான சமூக உண் மைகளை படம் பிடித்துச் சொல்கிறது.
தோல் தொழிற்சாலை கழிவு நீரால் விளை நிலங்களும், குடிநீரும் எப்படி மாசுபட்டு கிடக்கிறது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
அந்த தோல் ஷாப்புகளில் உட லும் உள்ளமும் ரணமாக உழைத்த; நாற்றத்திலும் வெக்கையிலும் பொசுங்கிய அந்த மனித ஜீவன்களை என்றைக்காவது நாம் நினைத்துப் பார்த்த துண்டா?
இந்த நாவல் நம் கையைப் பிடித்து அந்த தோல் ஷாப்புக்கு அழைத்துச் செல்கிறது; அந்தச் சுண்ணாம்புக் குழி யில் நம் காலை நனைக்க வைக்கிறது; அந்த நாற்றத்தை நம்மை நுகர வைக் கிறது; அங்கிருந்து அந்த தொழி லாளிகள் வாழும் சேரிக்கு நம்மை கூட்டிச் செல்கிறது; அழுகி நாறும் தீண் டாமைக் கொடுமையை, சுரண்டல் வெறியை பார்த்து நம்மை பதைக்க வைக்கிறது. இது நாவல் அல்ல வரலாற்று உண்மைகள்.
நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் திண்டுக்கல்லில் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறுகொண்டெழுந்த வரலாற்று செய்திகளை குவிமையமாக்கி; தமிழ கம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களையும் உட்கிரகித்து ரத்தமும் சதையும் உள்ள கதாபாத் திரங்களாக, செங்கொடி புத்திரர்க ளாக நம்மிடையே உலவவிட்டுள்ளார் டி. செல்வராஜ்.
117 பாத்திரங்கள் பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த நாவலின் கதாநாயகன் யார்? பார்ட்டக போல் வீறு கொண்டெழுந்த ஒசேப்பா? இவர்களோடு தோள் இணைந்து நின்ற தோழர் ஏ. பாலசுப்பிரமணியன் சாயல் கொண்ட சங்கரனா? தீர்ப்பு சொல்வது சிரமம். ஏனெனில் இந்நாவலின் மையக்கரு சமூக எழுச்சி என்பதால் இதில் பங்கு பெறும் ஒவ்வொருவருமே கதாநாயகர்கள் கதாநாயகிகளே!
ஏண்டா சாண்டாக் குடிக்கி பொட்டச்சிண்டா அம்புட்டு எளக் காரமோ? பறச்சி சக்கிலிச்சிண்டா அம்புட்டு எளக்காரமோ, நீங்க கையப் புடிச்சா படுத்துக் கணுமோ பல பட்டறப் பய... என மாடத்தி சீறும்போது நாமே எழுந்து போய் அவன் கன்னத்தில் இரண்டு அறைவிடலாம் எனத் தோன்று கிறது.
அடி ஆத்தே இந்த அக் குருவத்தை கேக்க நாதியில்லையா? நேத்து ருசுவாயி வந்திருக்க பச்சை மண்ணெ, அம்மணமா ஆக்கிப் பருந்தாட்டமா தூக்கிட்டுப் போரானே முடிவான்...
அஸின் ராவுத்தர் தோல் ஷாப்பில் கேட்ட இந்த அலறல் வழக்கம் போல் அன்றாட நிகழ்வாகிவிடவில்லை. அப்பாவி ஒசேப் திமிறி எழுந்தான். முதலாளியின் மைத்துனன் முதாபா மீரான் மீது பாய்ந்து தூக்கி வீசினான். அந்த சிறுபொறி காட்டுத் தீயானது. மாபெரும் எழுச்சியின் விதையானது. அதுதான் இந்நாவல்.
ஒசேப்பை கட்டி வைத்து உதைப் பதைக் கண்டு இயல்பான மனிதநேயத் தோடும் கோபத்தோடும் பாய்ந்த இரு தயசாமி கிறுத்துவத்துக்கு புதுமுகம் தருகிறார். பாதிரியாராக ஆசைப் பட்டவர் பாவப்பட்ட மக்களின் போரா ளியாக மாறுகிறார்.
நந்தவனப் பட்டியில் சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வந்த சங்கரன் தடையை உடைத்தது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. மறுபக்கம் அக்ரஹாரம் கொதித்தது.
என்ன குத்தம் செய்தானின்ணா கேக்கிறேன் கணேசய்யர், இதைவிட என்ன அபச்சாரம் ஓய் செய்ய வேணும்? ஒரு ஃபராமணன், அதிலே யும் ஆச்சாரமான குடும்பத்திலே ஜெனிச்சவன் சண்டாள ஜனங்கவாசம் செய்யும் சேரிக்குப் போய்... அதுக ளோட ஒண்ணா மண்ணா கலந்திருக் கான். அதோட சகிக்க முடியாத அநி யாயம் என்னண்ணா ஒரு பறைச் சாதி பெண்ணோட பொணத்தை ஒரு சட்டைகார மிலேச்சப் பயலோடு சேர்ந்து தோளிலே தூக்கியிருக்கான் இதைவிட அபச்சாரம் என்ன வேணும்? என நாராயணய்யர் கொட்டினார்.
அக்ரஹாரத்தை எதிர்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக சங்கரன் பயணப்பட்ட கதை இந்நூலில் ரத்தமும் சதையு மாய் பதிவாகி உள்ளது. கம்யூனிட் கட்சியை பார்ப்பணர் கட்சி என பகடி பேசும் அரைவேக்காட்டு அறிவு ஜீவி கள் நெற்றிப் பொட்டில் அறைகிறது இந்நூல். பூணூலை அறுத்தெறிந்து அம்மக்களுடன் சங்கரன் கலந்ததைக் கூட திடீர், நிகழ்வாக அல்ல இயல் பான போக்கில் சன்னஞ் சன்னஞ் சமாக ஏற்பட்ட மாற்றமாகவே டி.செல் வராஜ் பதிவு செய்திருப்பது எழுத்து நேர்மையைக் காட்டுகிறது.
பாதிரியார் அங்கியைதூக்கி எறிந்து விட்டு தங்கசாமி தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்காக போராட வந்த கதை.
காங்கிர சோஷலிட்டாக கம்யூனிடாக அடக்கமாய் செயல் பட்ட அமைப்பாளர் போராளி மதன கோபால் சாயலில் வேலாயுதம் அவரு டைய நெஞ்சுறுதி அவர் சந்தித்த அடக்குமுறைகள் அடடா... கம்யூ னிட்டுகள் தொழிற்சங்கத்தை கட்டி வளர்க்க சொரிந்த ரத்தமும் கண் ணீரும் இவ்வளவு உயிர்த்துடிப்புடன் இதுபோல் இன்னொரு நாவலில் சொல்லப்பட்டிருக்குமோ என்பது ஐயமே!
அருக்காணி என்ற பெண் பாத்திரம் எழுச்சியுற்ற உழைக்கும் பெண்களின் இலக்கணம் அல்லவா? பொட்டச் சிக்கு கோபம் வந்தா பூமி தாங்காதுடா தொங்கா என வில்லன் முதபா மீரனை தூக்கி வீசி அவன் மீது குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்யும் சிட்டம்மா; அந்தப் பழி சங்கத்துக்காரன் மேல் விழுந்தபோது நேர்மையோடு உண்மையைச் சொன்ன சத்திய ஆவேசம்; இந்நாவல் முழுவதும் வரும் அருக்காணி, தாயம் மாள், மாடத்தி சிட்டம்மாள் ஒவ்வொரு பெண்ணும் உழைக்கும் மக்களின் பெண்ணியம் இது என கோடு கிழித்துக் காட்டுகின்றது.
அக்னீமேரியும் அமலோற்ப மும் இதர பெண்களும் தியாகத்தின் சாட்சிகள். தியாகம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒரு லட்சியம் மனித மனங்களைக் கவ்வுமானால் அது எவ்வளவு பெரிய போராட்ட சக்தியாக மாறும் என்பதை கூறவும் வேண் டுமோ?
சந்தனத்தேவன் அடியாளாய் வந்தவன் விழிப்புற்றபோது அவனுள் நிகழும் இமாலயமாற்றங்கள், சீயான் தேவர், முத்துப்பேச்சி, விருமாயி எல்லோருமே சமூகம் சிருஷ்டித்த பாத்திரங்கள். அவர்கள் தங்களை உணரும்போது ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள்! அதுதானே நிலைத்த பலன் தரும்!
திண்டுக்கல் தொழிற்சங்க வர லாறு மட்டுமல்ல இந்த நாவல்; ஏறத் தாழ 40 ஆண்டுகள் தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுப் போக்கும் எந்தவித பிரசங்கமும் செய்யாமல் காட்சிகளாக பாத்திரங்கள் மூலமே பதிய வைத்த தன் மூலம் டி. செல்வராஜ் வெற்றி பெற்றுவிட்டார்.
காங்கிர கட்சியில் அப்பழுக் கற்ற தியாகிகள் இருந்தனர். ஆனால் நாடு விடுதலை அடையும்போது முதலாளிகள், கள்ளச்சந்தைக்காரர் கள், திருடர்கள் கதர்சட்டை போட்டு தலைவரானார்கள் தியாகம் ஓரம் கட்டப்பட்டது. காங்கிர சுரண்டும் வர்க்கக் கூடாரமானது. இதை மிக நுட்பமாக இரண்டே அத்தியா யங்களில் செல்வராஜ் தீட்டிக்காட்டி விட்டார்.
கம்யூனிட் கட்சி தடை செய் யப்பட்ட காலத்திலேயேயும் அது மக் கள் நல்வாழ்வுக்கானப் போரில் எப்படி இரண்டறக் கலந்து நின்றது என்பதை இந்நாவல் விவரிக்கிறது.
காவல்துறையும் அதிகார வர்க்க மும் சுரண்டும் வர்க்கத்திற்கும் சாதிய அடக்குமுறைக்கும் துணை நிற்பதை உரிய முறையில் இந்நாவல் பதிவு செய்கிற வேளையில் அதே காவல் துறையிலும் அதிகார வர்க்கத்திலும் ஜனநாயக எண்ணங்கொண்டோரும் இருப்பதை நளினமாகப் பதிவு செய் துள்ளது. துண்டு பாய் என்கிற சவுக் கத்தலி, செல்ல மரைக்காயர் என்கிற சிறு வியாபாரி போன்ற பல பாத் திரங்கள் மூலம் எந்த மதமாக இருந் தாலும் அதற்குள்ளும் வர்க்க வேற் றுமை இருப்பதையும்; நேர்மையும் தியாகமும் போர்குணமும் மிக்க சாதாரண மக்கள் பெரும்பாலோராக இருப்பதையும் அழகாக நாவ லாசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஆயினும் நீதிதுறையில் வர்க்கப் பாசம் ஏன் நூலாசிரியரால் சரியாகத் தோலுரிக்கப்படவில்லை.
ஒசேப் - தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; எந்த தெருவில் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டாரோ; தீண்டாமையின் கோரத்துக்கு இலக் கானாரோ அதே ஊரில் நகர்மன்றத் தலைவராகிறார்.
இத்துடன் நாவலை முடிக்க வில்லை. பெற்ற வெற்றி தற்காலிக மானது; போராட்டம் முடியவில்லை தொடர்கிறது என்பதன் குறியீடாக சங்கரன் மறுபடியும் கைதாவதுடன் நாவல் நிறைகிறது. ஆனால் நாவல் நம்முள் கிளர்த்தும் உரத்த சிந்தனை கள் ஓராயிரம். ஆம். வர்க்க பகைமை, வர்ணப் பகைமையை வெல்லும் யுத்தியை இந்நாவல் சித்தரிக்கிறது.
இது தலித் நாவலா? ஆம் தலித் மக்களை விழிப்படையச் செய்யும் நாவல். இது வர்க்கப் போராட்ட நாவலா? ஆம். வர்க்கப் போராட்டம் எப்படி அன்றாடம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பறைசாற்றும் நாவல். இது வரலாற்று நாவலா? ஆம். கம்யூனிட் இயக்க தியாக வரலாற்றை உயிர்துடிப்போடு உணர வைக்கும் நாவல்? இது துப்பறியும் நாவலா? ஆம். மீரான்பாய் மரணத்தை துப்பறியும் கதை நிகர்த்த சபென்ஸூடன் நகர்த்தும் நாவல். அதற்கும் மேல் இது. மதபீடங்கள் அது கிறுத்துவம் ஆனாலும் இலாம் ஆனாலும் இந்து மதமானாலும் எப்படி சுரண்டும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் அமைப்புகளாகவே இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதால் இது மறு மலர்ச்சி நாவலுமாகும்.
கம்யூனிட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு பல வெளிவந்துள் ளன. ஆயினும் அவை இன்னும் வெகுமக்களைச் சென்றடைய வில்லை. கட்சிக்குள்ளும் முழுமை யாகச் சென்றடையவில்லை. கம்யூ னிட்டுகளின் மீதும் கம்யூனிட் தலைவர்கள் மீதும் எதிரி வர்க்கம் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. இச்சூழலில் கம்யூ னிட்களின் தியாகத்தை போற்ற இந்நாவல் தெருத் தெருவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
கம்யூனிட்டுகளுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. மூடநம்பிக் கைகள் இல்லை. சுயநலம் இல்லை. மக்களுக்காக எல்லாவித தியாகங் களுக்கும் தயாரானவர்களே கம்யூனிட் டுகள். அவர்கள் காட்டுகிற பாதைதான் இந்த நாட்டை உய்விக்கும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம். எனவே ஒவ்வொரு கட்சி கிளையும் ராமாயணம் மகாபாரதக் கதை சொல்லுவது போல் இந்த நாவலை தெருத் தெருவாகச் சொல்ல வேண்டும்.
தேநீர் நாவல் மூலம் இதுவரை தேநீர் செல்வராஜ் என அறியப்பட்ட இந்நாவலாசிரியர் இந்நாவல் மூலம் தோல் செல்வராஜ் என இனி அறியப் படுவார்.
தோல், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவு (பி) லிட், 41பி, சிட்கோ இண்டடிரியல் எடேட், அம்பத்தூர், சென்னை - 600 098. பக். 712, விலை 375/-
ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போரா ளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்?கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான். இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர் மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல; இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.
நந்திதா ஹச்சர் எழுதிய வஞ்சக உளவாளிகள் என்ற நூல் பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.
இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்மா ஜன நாயகப் போராட்டக் கதை - இந்திய வெளியுறவுக் கொள்கைக் குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா?
“ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை” என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சி யோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.
பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற் போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்க தேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!
பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
“ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட் கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்” என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார்:“வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்.”
இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.
ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும் அமைதிக்கான ஜட்டிகள் இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.
பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள் என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி பற்றிய விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். மனித உரிமை பற்றிய பேச்சு கானல் நீர் தானோ?
வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே. "தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இலாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம் 'இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்...' என்றேன்!" இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?
இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.ஜான்பெர்கின் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.
இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!
வஞ்சக உளவாளி
(பர்மா போராளிகளை ஏமாற்றியஇந்திய ராணுவம்)
நந்திதா ஹச்சர்.
தமிழில்: அ. குமரேசன்,
கிழக்குப் பதிப்பகம்33/15 எல்டாம் சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.
பக். 228, விலை ரூ. 170/-
(நன்றி: ‘தீக்கதிர்’ 14.11.2010 இதழ் ‘புத்தக மேசை’ பக்கம்