டாஸ்மாக்கும் விபத்தும்

Posted by அகத்தீ Labels:



யிர் விலை மதிக்க முடியாதது. அதனை விபத்துகளில் இழப்பது சகிக்க முடியாத சோகம். ஆண்டுதோறும் இந்தியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்திலும் உலகம் முழுவதிலும் 25 வயதிற்குட்பட்ட 40 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் 14 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 2 மணிநேரத்திலும் சராசரி 3 பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 1993ஆம் ஆண்டு 6,528 சாலை விபத்துகளில் 7,349 பேர் உயிரிழந்தனர். ஆனால், 2009ஆம் ஆண்டு 12,727 சாலை விபத்துகளில் 13,746 பேர் உயிரிழந்துள்ளனர், அதாவது தினசரி 38 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

2006ஆம் ஆண்டு 11,009 பேர் உயிரிழந்தபோது இவற்றை படிப்படியாக 20 விழுக்காடு குறைத்து 2013ஆம் ஆண்டுக்குள் 8,800 சாவுகள் என்று குறைக்கப்போவதாக தமிழக உள்துறை உறுதி மொழி எடுத்தது. ஆனால், கடந்த ஆண்டே சாவு எண்ணிக்கை 13,746 ஆகிவிட்டது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும். இந்த விபத்துகளின் காரணம் என்ன?

2009ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 90 விழுக்காடு ஓட்டுநர் தவறால் நிகழ்ந்தது. பாதசாரிகள் கவனக்குறைவு, வேறு சில கவனக்குறைவுகள், எந்திரக் கோளாறு இவை காரணமாக நிகழ்ந்த விபத்து 6.5 விழுக்காடு மட்டுமே. மோசமான சாலை, மோசமான பருவநிலை, இதரக் காரணங்களால் நேர்ந்த விபத்து 3.5 விழுக்காடு மட்டுமே.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, கைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் வண்டி ஓட்டுவது, அளவுக்கு மீறிய உற்சாகத்தையோ கோபத்தையோ வண்டி ஓட்டுவதில் காட்டுவது, அதிவேகமாக வண்டி ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயற்சிப்பது போன்ற பல தவறுகள்தான் ஓட்டுநர்களால் விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் ஹெட் லைட்டின் அதிக ஒளியை கட்டுப்படுத்தாமல் இருப்பதும் இதன் காரணமாகிறது.

முந்தைய ஆட்சியில் 3 ஆயிரம் கடைகளுடன் துவக்கப்பட்டு அப்போது 2,828 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்த டாஸ்மாக் இன்று 6,823 கடைகளோடு 12 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்த டாஸ்மாக் விற்பனை உயர்வுக்கும் சாலை விபத்துகளுக்கும் தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் கடந்த 2005ம் ஆண்டு தினசரி 16 கோடி டாஸ்மாக் விற்பனை நடந்தபோது தினசரி 26 பேர் சாலை விபத்தில் பலியானார்கள் கடந்த ஆண்டு தினசரி விற்பனை 38 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் தினசரி 38ஆக உயர்ந்தது. புத்தாண்டு தின டாஸ்மாக் விற்பனை இலக்கு 100 கோடி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம்..... இதைவிட விளக்கம் தேவையா? அரசு வருவாயில் 30 விழுக்காடாக இருக்கும் டாஸ்மாக் வருவாயை பற்றிப் பேசுவது அரசுக்கு தலைவலியாக இருக்குமோ? ஆயினும் இதையும் இணைத்துப் பேசாமல் சாலை விபத்துகளை குறைக்க இயலாது.

அரசை குறை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் மக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட வேண்டும். அதுவும் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். சாலை விதிகளை நாம் மதிக்காவிட்டாலும் எதிரே வருகிறவர் மதிக்காவிட்டாலும் விபத்து நிகழும். ஆகவே எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை தேவை. மேலும் குடிப் பழக்கம் ஒழுக்கக் கேடு என்பதாக பார்ப்பதைக் காட்டிலும் அது ஆரோக்கியக் கேடு, உயிரைப் பறிக்கும் எமன் என்பதை ஆழமாக உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டுக் கொண்டாட்டமானாலும் சரி. வேறு எந்த மகிழ்ச்சியான கொண்டாட்டமானாலும் சரி. போதையில்லாமல் விபத்தில்லாமல் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் எல்லோரும் மகிழக் கொண்டாடலாமே! விபத்துகளில்லா ஆண்டு மலரட்டும்.

0 comments :

Post a Comment