2010 விளிம்பில் 2011 வாசலில் அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடி...

Posted by அகத்தீ Labels:


இன்றுதான் பிறந்ததுபோல் இருக்கிறது; அதற்குள் ஓய்வுபெறும் நேரம் நெருங்கிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது?
நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் புத்தாண்டு வாசலில் நிற்கிறது.
மனிதகுலம் பல லட்சம் ஆண்டுகள் பயணப் பட்டுவிட்டது. கற்காலத்திலிருந்து கம்யூட்டர் யுகத்துக்கு மனிதன் முன்னேறிவிட்டான். ஆயினும் கடந்த நூற்றாண்டுகளில் மனிதகுலம் பாய்ந்து தாவி முன்னேறியதைப்போல அவ்வளவு வேகமாய் அதற்குமுன் எப்போதுமே பயணித்ததில்லை; அதிலும் கடந்த பத்தாண்டுகளாய் சந்திக்கிற பிரச்சனைகள் சொல்லில் அடங்காது.
இயற்கையைக் கண்டு பயந்து நடுங்கிய மனி தன் அதன்முன் மண்டியிட்டான். அப்புறம் மெல்ல மெல்ல எழுந்தான் தன் கைவலுவாலும் மூளை பலத்தாலும் காட்டைத் திருத்தினான். நாட்டை நகரை புதுக்கினான் ஆலைகள், சோலைகள், சாலைகள் அவன் கைவண்ணத்தில் புன்னகைத் தன... ஆனால் இன்று அதிவேக வளர்ச்சித் திக்கில் வெறிகொண்டு ஓடுவதால் வயல்களை, குடிசை களை, தோப்புகளை, சோலைகளை கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான். இயற்கையை அள வுக்கு மீறி சுரண்டி உறிஞ்சியதால் இயற்கை பழி வாங்கத் துவங்கிவிட்டது.
காற்று மாசுபட்டுவிட்டது. குடிநீர் கெட்டுவிட் டது. நிலத்தடி நீர் விஷமாகிவிட்டது. இனி அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். எங்கே போகிறோம்?
நாம் இன்று காண்பதெல்லாம் நம் மூதாதை யர்கள் நமக்கு விட்டுச்சென்ற கொடைகள்; ஆக் கித்தந்த களஞ்சியங்கள். அவற்றை நம் சந்ததி யருக்கு நாம் மிச்சம் வைப்போமா? அவை நமது தனிச்சொத்தல்ல! அவற்றை அழிக்கிற உரிமை நமக்கு இல்லை. இதை உரக்கச் சொல்லியாக வேண்டும்... காலம் விரைகிறது.
அம்மணமாய்த் திரிந்த மனிதன் இலைதழை இவற்றை அணிந்த முதல் மனிதர்களைப் பரிக சித்தான்; காலம் கெட்டுப் போனதாய் சொல்லிச் சென்றான். அம்மணக்குண்டி ராஜ்யத்தில் கோவ ணம் கட்டியவன் பைத்தியக்காரன் ஆனான். ஆனால், அவனால் அம்மணமாய் நீண்டநாள் திரிய முடியவில்லை கோவணம் கட்டினான். அப்போது வேட்டி சேலை கட்டியவர்கள் வித்தியாசமாய் தெரிந்தனர். கிராப் வெட்டியவர்களை கேலி செய் தான், காலம் கெட்டுப்போனது என்றான். ஆனால் அவன் மாறிப் போனான். புதியன வரும்போதெல் லாம் பழமை கெக்கொலி கொட்டி பரிகசிக்கும்; காலம் கெட்டுப்போனதென சபிக்கும் ஆயினும் முன்னேற்றப்பாதையிலே இந்த முட்டுக்கட்டை கள் நொறுங்கிப் போகும். ஆம் தலைமுறை இடை வெளிகளின் சலிப்பையும். சபிப்பையும் முன்னேற் றச் சரித்திரம் காலால் எட்டி உதைத்துவிட்டு சென்று கொண்டே இருக்கும். அதுதான் வளர்ச்சி யின் விதி.
ஒவ்வொரு நொடியிலும் அதுவரை அறியப் படாத பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தபடியே அறிவியல் வளர்கிறது. நேற்றுவரை சரியென நம்பி வந்த பலவற்றை அறிவியல் வெளிச்சம் பிழை யெனக் காட்டிவிட்டது. நேற்றைப் பற்றிய புரிதல் மட்டுமே இன்றைக்கு வழிகாட்டாது. அதே சமயம் நேற்றைப் புரியாமல் இன்றைப் புரிந்து கொள் வதும் இயலாது. வளர்ச்சி என்பது நேற்றின் தொடர்ச்சி; இன்றின் மலர்ச்சி; நாளையின் எழுச்சி.
காட்டில் வல்லாடி தாவரங்கள் தனது வளர்ச் சிக்காக பிறவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். அதையும் மீறி வளைந்து நெளிந்து சூரியனை தரிசித்த தாவரங்கள் உண்டு. முட்டிமோதி முன் னேறிய அவை தன்னம்பிக்கையின் படிமம் ஆயின. ஆனால், தோப்புகள் சீராக ஒன்றுக்கொன்று வழி விட்டு எல்லாம் வளர்ந்தன. இதுதிட்டமிட்ட வளர்ச்சி. ஆயினும் ஆசைப் பார்த்தினியமும் விஷ முள் மரங்களும் வளர்ந்து தோப்பை காடாக்க முயல் கிறது. தடுக்க வேண்டிய தோட்டக்காரனோ அதை ஊக்குவிக்கிறான் சபாஷ் சரியான போட்டி என்று கைதட்டுகிறான். வளர்ச்சியின் போதையில் ஆட்டவிதிகளை தூக்கி எறிந்ததால் ஆடுகளம் இப்போது காவு கேட்கிறது. மகிழ்ச்சி ஆரவாரம் ஒலிக்க வேண்டிய திடலில் கூச்சலும் முனகலும் சிரிப்பும் அழுகையும் பரபரப்பும் பற்கடிப்பும்... தவறு எங்கே? இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் சீர்படுத்தி விடலாம்.
எங்கே தொடங்குவது? யார் தொடங்குவது?
யார் செய்யப்போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?
கடல் கொந்தளிக்கிறது. அலை சீறி அடிக் கிறது. சூறாவளி சுழன்றடிக்கிறது. அடை மழைவிடா மல் பெய்கிறது. சூரியனை தரிசித்து வெகு கால மாயிற்று. எங்கும் இருள் கவ்விக்கிடக்கிறது. பட கின் பாய்மரம் பிய்ந்துவிட்டது. இயந்திரம் பழுதாகி விட்டது. படகில் ஓட்டை விழுந்துவிட்டது. ஆயி னும் படகைச் செலுத்த வேண்டும். இப்போது துடுப்பை இயக்கும் ஆற்றல் எவருக்கு இருக் கிறதோ அவன்தான் இளைஞன். அவன்தான் நாளையின் நம்பிக்கை.
எங்கே இருக்கிறார்கள் இளைஞர்கள்? தோற்றுப் போன கிழவன் இப்படி அவநம்பிக்கை அபசுரம் இசைக்கிறான். நுகர்வு வெறியிலும் சுயநல வேட்கையிலும் தன்னையிழந்து இளைய தலை முறை சீரழிந்து கிடப்பதாக ஓய்வு நாற்காலிப் புரட்சிக்காரர்கள் சலிப்போடு கூறுகிறார்கள்.
பாவம் நேற்றை அவர்கள் அறியவில்லை. அன்று நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்ற இளைஞர்களைவிட பங்கேற்காத இளைஞர்கள் அதிகம். எல்லோரும் எழுந்திருந்தால் இணைந் திருந்தால் வெள்ளைக்காரனை விரட்ட இருநூறு ஆண்டுகள் ஆகியிருக்காதே! ஆயினும் நம்பிக்கை வறண்டு போகாத அக்னிக் குஞ்சுகள்தாமே விடு தலை ஜோதியை கொண்டுவந்து சேர்ந்தனர்.
தேசியப் பேரலை வீசியடித்தபோது அதன் ஓட்டத்தில் கலந்து கரைந்து போனவர்கள் அநே கம். அவர்களை வரலாறு மறந்துவிட்டது. எதிர்நீச் சல் போட்ட பகத்சிங் இன்னும் சாகாமிலிருக்கி றான். அதுதான் இளமையின் பொருள்; குறியீடு.
தமிழகத்தில் திராவிட அலை வீசியபோதும், அதற்குள்ளே பிளவுகள் வந்து சுழன்றடித்தபோதும், நாயக மயக்கங்களை மீறி நம் இளைஞர்கள் வெண்கொடியை உயர்த்திப்பிடிக்கவில்லையா? ஏன், சாதியக் கொடிகள் வட மாவட்டங்களில் பிற கட்சிக் கொடிகளை வெட்டிச்சாய்த்துக் கொண்டி ருந்த வேளையில் வாலிபர் இயக்கத்தின் வெள் ளைக் கொடி முளைக்கவில்லையா? சிகப்பு நட் சத்திரம் பிரகாசிக்கவில்லையா?
ஆளரவமற்ற சாலையில் மிதிவண்டியில் முந்திச் சென்று கொடி நடுவதல்ல சாதனை; நெரி சலில் திணறும் சாலையில், அடைந்து திணறும் வாகனங்களுக்கு இடையில் புகுந்து நெளிந்து வளைந்து துணிந்து முன்செல்பவன், நெரிசல் கூச்சலுக்கிடையே பூபாள ராகத்தை உரக்க முழக்குபவன், நம்பிக்கை பூக்களையும் நாளைக் கான போர் முரசையும் ஒரே நேரத்தில் சுமந்து செல்பவன், பிரச்சனைகளை முனை முகத்து சந் திப்பவன் - அவனே இளைஞன்! நாளைய தலை வன்! அவன், அவள் இரு பாலருக்கும் இதுதான் இயற்கை விதித்த நியதி.
இன்று பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது; புதிய தலைமுறை நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் இனறு கம்பீரமாய்... இதோ.... இதோ.... இதோ...!
அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடியே புத்தாண்டு புன்னகைக்கிறது...

நன்றி: வண்ணக்கதிர்

2 comments :

  1. ப.கவிதா குமார்

    நம்பிக்கை பொங்கும் வார்த்தைகளுடன்
    எழுதப்பட்ட சிறந்த கட்டுரை.
    வாழ்த்துக்கள்.
    ப.கவிதா குமார்

  1. K.CHINNIAH

    கடந்த நூற்றாண்டுகளில் மனிதகுலம் பாய்ந்து தாவி முன்னேறியதைப்போல அவ்வளவு வேகமாய் அதற்குமுன் எப்போதுமே பயணித்ததில்லை;
    இன்று அதிவேக வளர்ச்சித் திக்கில் வெறிகொண்டு ஓடுவதால் வயல்களை, குடிசை களை, தோப்புகளை, சோலைகளை கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான். இயற்கையை அள வுக்கு மீறி சுரண்டி உறிஞ்சியதால் இயற்கை பழி வாங்கத் துவங்கிவிட்டது.
    காற்று மாசுபட்டுவிட்டது. குடிநீர் கெட்டுவிட் டது. நிலத்தடி நீர் விஷமாகிவிட்டது. இனி அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். எங்கே போகிறோம்?
    முன்னோர்கள் ஆக்கியதை,அனுபவித்துக்கொண்டே,அழிக்கிற காலம் இது! விழுந்து கிடக்கிறோம்! மீண்டும் எழுவோம் புதிய வீரம்!உற்சாகம்! ஆனால் நாம் காணக் கிடைக்க வேண்டும்???? இவனின் வார்த்தைகள் அவனுக்கு புரியும்!

Post a Comment