வரலாறு படைத்த என். ராமகிருஷ்ணன் நூல்களில் வரலாற்றின் நாயகர்கள்

Posted by அகத்தீ



வரலாற்றைப் படிக்க வேண்டாம்; வரலாற்றைப் படைப்போம் என ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மாணவர்களிடையே பேசினார். இதனை அறிஞர் பெருமக்கள் கண்டித்தனர். வரலாற்றை முறையாக படிக்காமல் - உள்வாங்காமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் கடந்த காலம் என்ற ஒன்று உண்டு. கடந்த காலம் என்று இல்லாத ஒன்று இவ்வுலகில் உண்டா? தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மைதான். நிகழ்காலத்தின் மூலத்தை கடந்த காலத்திலும், விளைவுகளை எதிர்காலத்திலும் தேடுவது தவிர்க்க முடியாதது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்படுத்த விரும்புவோருக்கும், சீர்கேடுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கும், கடந்த காலத்தைப் பற்றிய அறிவும், புரிதலும், உணர்வும் பயனுள்ளவையாக அமையும். அத்தகைய கடந்தகால அறிவு-தெளிவு-உணர்வு இவற்றைத்தான் வரலாறு என்று குறிப்பிட வேண்டும் என்கிறார் பேராசிரியர் அ. கருணானந்தன்.
நாம் இன்று பள்ளிகளில் படிக்கும் வரலாறு எத்தன்மையது? இதுகாறும் உருவாக்கப்பட்ட, தரப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறுகளாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறுகளாகவே இருந்திருக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணானந்தன் மேலும் கூறுகிறார்:
தற்கால இந்திய வரலாற்று அணுகுமுறை ஆங்கில ஆதிக்கத்தின் போது இருந்த அணுகுமுறையிலிருந்து பெரிய அளவில் மாறவில்லை. இரண்டிலுமே அரசியல் கிளர்ச்சிகள், ஆட்சி மாற்ற கிளர்ச்சிகள், சமூக மாற்ற கிளர்ச்சிகள், விவசாயிகள் கிளர்ச்சிகள், தொழிலாளர் கிளர்ச்சிகள் போன்றவற்றிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. இராஜாராம் மோகன்ராய், வித்யாசாகர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, அலிகார் இயக்கம் ஆகியோர்கள் இடம்பெறும் வரலாற்றில் இராமலிங்க வள்ளலார், மகாத்மா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, இராமசாமிபெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் ஏன் இடம் பெறுவதில்லை? தெலுங்கானா கிளர்ச்சி, புன்னப்புரா, வயலார், கிளர்ச்சி, கோவை மில் தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை மறைக்கப்படுவது ஏன்?
வரலாறு கொடுக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது - வரலாறு திரிக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது-வரலாறு மறைக்கப்படுவதற்கும் நோக்கம் இருக்கிறது என்கிறார் கருணானந்தன்.
இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிற வரலாறும் சரி, வரலாற்று நாயகர்களும் சரி, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியே எனில் மிகையல்ல.
வரலாற்று நாயகர்கள் என இங்கே நாம் குறிப்பிடுவது; கம்யூனிஸ்ட் இயக்கத்தை - உழைப்பாளி மக்கள் இயக்கத்தை இந்திய தேசத்தில் கட்டி எழுப்ப முன்னத்தி ஏர் ஓட்டியவர்கள் - தமிழகத்தில் இப்பணியில் முதல் சாலை போட்டவர்கள் பற்றிய வரலாறே ஆகும்.
இங்கே எனக்கு பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட நூல்கள் 15 ஆகும்.
1) முசாபர் அகமது
2) இ.எம்.எஸ்.
3) பி.டி. ரணதிவே
4) ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
5) ஜோதிபாசு
6) பி. ராமமூர்த்தி
7) எ. பாலசுப்பிரமணியம்
8) ஏ. நல்லசிவன்
9) எம். ஆர். வெங்கட்ராமன்
10) கே. ரமணி
11) பி.ஆர்.பரமேஸ்வரன்
12) வி.பி. சிந்தன்
13) கே. அனந்தன் நம்பியார்
14) எம்.கே.பாந்தே
15) அந்தமான் தீவுச்சிறை
இதில் முதல் 13 பேரும் இப்போது உயிரோடு இல்லை; எம்.கே. பாந்தே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அந்தமான் தீவுச் சிறை ஓராயிரம் தியாகக்கதை சொல்லும் குறிப்புகள்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கருக்கொண்ட போதே சதி வழக்குகளை எதிர்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் கருக்கொலை முயற்சி, சிசுக்கொலை முயற்சி இவற்றிற்கு தப்பி அதன் விளைவுகளோடு வளர்ந்த குழந்தையைப் போன்றதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு. அப்படியெனில் அந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு எஃகாக உருமாறியவர்கள் என செக்கோஸ்லேவேகிய மாவீரன் ஜூலியஸ் பூசிக் கூறுவது மிகையல்ல என்பதை இந்நூல்கள் நிறுவுகின்றன.
தாஷ்கண்ட் - பெஷாவர் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என மூன்று முக்கிய சதிவழக்குகளை எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் இம்மண்ணில் காலூன்றியது. முசாபர் அகமது வாழக்கை வரலாற்று நூலில் இதன் வேர்களும் கூறுகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
சரிதை என்பதும் சுயசரிதை என்பதும் அது எவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் வாழ்ந்த காலகட்டத்தை; கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதிலிருந்து பயன்தரும் படிப்பினையைப் பெற்றுக்கொள்வதும் என்பதாகும். ஒரு சரிதையின் உருவாக்கத்திற்கு எத்தகைய உழைப்பும் ஆக்கத்திறனும் தேவைப்படுகிறது எத்தனை வருடங்கள் செலவிட வேண்டியுள்ளது என்பதை நூலாசிரியரின் உரையில் நன்குகாணலாம். இவ்வாறு தோழர் பி. ராமமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புரை எழுதியுஎள்ள எம். பாலாஜி கூறுவது வெறும் வார்த்தைகளல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. இந்த 15 நூல்களும் ஏன் அவரின் மொத்த நூல்களும் இதன் சாட்சியே ஆகும்.
இதில் ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் எனும் இஎம்எஸ் வாழ்க்கை வரலாறு என். ராமகிருஷ்ணனின் ஆக்கம் அல்ல. மொழியாக்கம் செய்தவர்தாம் என். ராமகிருஷ்ணன். வேதங்களிலிருந்து மார்க்சியத்தை நோக்கி வளர்ந்த இஎம்எஸ் குறித்து இவர் தனியாகவும் நூல் எழுதியுள்ளார். இவரின் மொழியாக்கத் திறனுக்கு இந்நூல் சான்று பகர்கின்றது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கான முன்னுரையில் இஎம்எஸ் எழுதுகிறார்:
ஒரு கம்யூனிஸ்ட் ஆவதற்காகதான் பிறந்து வளர்ந்த சமூக அரசியல் சூழ்நிலையை எதிர்த்துப்போராட வேண்டியிருந்த மனிதனின் கதை இது; பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபின் முதலில் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்த மனிதனின் கதை இது
இந்த கணிப்பு அவரது, அதாவது இஎம்எஸ்ஸின் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் எல்லா தலைவர்கள் வாழ்க்கையிலும் இதனைக் காணமுடிகிறது. என். ராமகிருஷ்ணன் எழுத்தின் கூர்மை இதனை மையப்படுத்தியே தலைவர்கள் வாழ்வை சித்தரிப்பதிலும் செயல்பட்டிருப்பதை உறுதியாகக் கூறமுடியும்.
தோழர் பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு என்பது என். ராமகிருஷ்ணன் படைப்பிலே முத்திரை பதிக்கும் முதல்வரிசை நூல்களில் இடம் பெறும். இதனை அவரே ஒப்புக்கொள்வார்.
தன் வாழ்க்கை வரலாற்றை சுதந்திரப்போராட்ட, கம்யூனிஸ்ட் இயக்க, தொழிற்சங்க இயக்கப் பின்னணியோடு இணைத்து எழுத வேண்டும் என்றும், வெறும் தனிமனிதனின் வரலாறாக எழுதக்கூடாது என்றும் கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன் என தோழர் பி. ராமமூர்த்தி விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு பெருமளவு அதற்கு நியாயமும் வழங்கி இருக்கிறார்.
ஆயினும் இதே அளவுகோல் பிறவாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூற இயலாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வரலாற்றுச் சூழலை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் பெருத்துவிடும். கூறியது கூறல் மீண்டும் மீண்டும் நிகழும், ஆயினும் தேவையானவற்றை தேவைப்படும் இடத்தில் கூறவும் இவர் தவறவில்லை. இந்த நூல்களை எல்லாம் இணைத்துப் படிக்கும்பொழுது அன்றைய காலகட்டத்தின் அரசியல் சமூக பொருளாதார வரலாறும் இதில் இவர்கள் பங்களிப்பும் நன்கு புலனாகும்.
எந்த தனிமனிதரும் வரலாற்றின் படைப்புதான். அதே சமயம் அந்த வரலாற்றை முன்நகர்த்துவதில் அவரின் தனித்த ஆளுமைக்கும் முக்கிய பங்கு உண்டு. வள்ளுவர் காலத்தில் காரல் மார்க்ஸ் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் மூலதனம் எழுதியிருக்கமாட்டார், திருக்குறள் போல்தான் அறநூல், வாழ்வியல் நூல் படைத்திருப்பார். ஒரு வேளை வள்ளுவன் மார்க்ஸ் பிறந்த காலத்தில் இருந்திருந்தால் சமூக அறிவியல் நோக்கில் தத்துவ நூல் எழுதியிருப்பார். இருவருமே அவரவர் வாழ்ந்த காலத்தின் மாபெரும் கொடை; அதேபோல அவர்களின் ஆளுமை அந்தந்த காலத்தை முன்நகர்த்தும் நெம்புகோலாயின எனில் தவறல்ல.
இதை ஏன் சொல்லுகிறேன் எனில் இந்த மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு அத்தகைய எளிமை, அத்தகைய அர்ப்பணிப்பு, அத்தகைய தியாகம் இன்றைய கம்யூனிஸ்ட்டுகளிடம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். வெளிப்பார்வைக்கு அது உண்மையெனினும் அது முழு உண்மையல்ல. அன்றைய காலகட்டத்தின் நெருக்குதல்களுக்கிடையே ஒடுக்குமுறைகளுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு முன் நீண்டு கிடந்தது அத்தகைய கரடு முரடான பாதையே அதில் பயணிக்கிறபோது ஏற்பட்ட சிரமங்களும், அதைத் துணிந்து சீர்செய்து வழிஅமைத்த மனவுறுதியும் நம்மை வியக்கவைக்கும் அந்த பாதையில் நடைபோடும். மற்றவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றம் காணமுயற்சிக்கின்றனர். இவர்களின் வாழ்வும் பணியும் அதற்கொப்பவே அமையும்.
ஜோதிபாசுவின் வாழ்க்கை பாதை மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் பெற்றுவரும் வெற்றியின் பின்னால் உள்ள இரத்தத்தையும் வியர்வையையும் நமக்கு விளங்கவைக்கும்; சுர்ஜித்தின் வாழ்க்கைப் பாதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் செல்லும் திசை வழியின் அவசியத்தை; அதன் பரிணாமத்தை அதற்காக நடத்திய உள்கட்சி போராட்டத்தை படம் பிடிக்கும்.
இ.எம்.எஸ்., பி. ராமமூர்த்தி உட்பட மூத்த தோழர்களின் வாழ்க்கை வரலாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் பிரிக்க முடியாது. அதே சமயம் வெறும் கட்சி வாழ்க்கை மட்டுமே தனிமனித வாழ்வு ஆகாது அல்லவா?
இ.எம்.எஸ். நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஏ. நல்லசிவன் கூறுவார், ஒரு கம்யூனிஸ்ட் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள உறவும் பாசமும் அரசியல் வாழ்வில் அவன் அடையும் கடும் துன்பங்களால் பல நேரங்களில் பாதிக்கப்படுவதும், அதனை உறுதியுடன் சமாளிப்பது மட்டுமின்றி பாசமிக்க குடும்பத்தினரை எப்படி அணுக வேண்டும் என்பதைனையும் விளக்குகிற பகுதியாகும்.
இதேபோன்ற கூறுகள் மற்றெல்லா நூல்களிலும் சுட்டிக்காட்ட என். ராமகிருஷ்ணன் தவறவில்லை. பி. ராமமூர்த்தி தன்தாயின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக தனது தாயார் மரணம் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தது; மரணப் படுக்கையிலிருந்த தன் மனைவி சாராதாவை சந்திக்க தலைமறைவாய் இருந்த எம்.ஆர். வெங்கட்ராமன் சென்றதும், ..நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைப்படியே நடந்துகொள்ளுங்கள், என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்...சீக்கிரம் தப்பித்துவிடுங்கள்... என மனைவி கேட்டுக்கொண்டதும், என ஒவ்வொரு வரலாற்றிலும் பாசப்போராட்டங்கள் சிலவற்றை என். ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ள பாங்கு தனித்துவம் ஆனது. கம்யூனிஸ்டுகள் காதலும் பாசமும் இல்லாத இரும்பு இதயம் படைத்தவர்கள் அல்ல; உண்மையான காதலும் ஊற்றெடுக்கும் பாசமும் அவர்களின் தனித்துவம். ஆயினும் அரசியல் புறச்சூழலால் அவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் பட்ட சிரமங்கள் அளவற்றது. என். ராமகிருஷ்ணன் அந்த வாழ்வுக்கு உரிய நியாயம் அனைத்து நூல்களிலும் வழங்கியுள்ளார்.
தோழர் எ. பாலசுப்பிரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், பி. ராமமூர்த்தி என ஓரளவு வசதியும் வாய்ப்பும் படைத்த மத்திய தர வர்க்கத்திலிருந்து அதுவும் உயர் சாதியிலிருந்து வந்தவர்கள் சந்தித்த பிரச்சனைகள் தனித்துவமானது. சுயசாதி மறுப்பும் பூணூலை அறுத்தெறிந்து சனாதன தளை உடைத்து அடித்தட்டு மக்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதும் மிகப்பெரிய அர்ப்பணிப்பாகும். இவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல் நெடுக இதன் அழுத்தமான சுவடுகளை என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் தாழ்த்தப்பட்ட மக்களை, தோல் பதனிடும் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்களோடு இணைந்து போரிட்டது தனிக்காவியமாகும். வர்க்கப் போராட்டமும் சாதி எதிர்ப்பு போராட்டமும் இணைந்த அந்த போராட்ட களம் புதிய படிப்பினைதரும். அதேபோல பூதிப்புரம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டுப் பாதையை மறுத்து ஆதிக்க சாதியினர் கட்டிய சுவரை இடித்துத் தகர்த்தும், அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்ற மேல்சாதி நிர்பந்தத்திற்கு பணியமறுத்து அந்த சிறு அளவு வாக்கால் தோல்வியை சந்தோஷமாக ஏற்றதும் சாதாரணமானதா?
இவர்கள் வாழ்க்கை இப்படியெனில் தோழர் கே. ரமணியின் வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. வறுமையை சுவைத்த வாழ்க்கை கடைக்கோடியிலிருந்து போராடிப் போராடி அங்குலம் அங்குலமாக முன்னேறிய ஒரு ஏழை பஞ்சாலைத் தொழிலாளியின் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சோகக் கதையாகும். பி.ஆர். பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட், அனந்தநம்பியார் போன்றோர் வாழ்வுகளும் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்த மனிதர்களின் போராட்ட வாழ்வின் கதையன்றோ? பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்வு தமிழக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட எழுச்சியின் வரலாறாகும், ரமணியின் கதை கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாறு எனினும் மிகையல்ல, அதோடு மட்டுமல்ல தன்னம்பிக்கை சுயமுயற்சி இவைபற்றியெல்லாம் இப்போது வெளிவரும் ஆன்மீக நெடிமிக்க சுய முன்னேற்ற நூல்கள் தராத நம்பிக்கையை போராட்ட உணர்வை வைராக்கியத்தை இரத்தத்தோடு கலக்கச் செய்யும் வாழ்க்கை வரலாறு ரமணியுடையது. அதனை அந்த வாழ்க்கைப் போராட்ட வலியோடு என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். ஒரு வகையில் தற்போது அவரது வாழ்க்கைப் போராட்டமும் அத்தகையதுதானே!
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தனியான வார்ப்படத்தில் வார்க்கப்பட்டவன் என்றார் தோழர் ஸ்டாலின். ஆனால் தனிவார்ப்படமாக அவர்கள்பட்ட அடியும் பயணித்து கடந்த பாதையும் - அப்பப்பா நம்மை மலைக்கவைக்கிறது. ஆழமான தத்துவ மோதல்களும் உள்கட்சிப் போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் கொண்ட கொள்கைக்காக அவமதிப்புகளையும், கட்சியின் தண்டனைகளையும் ஏற்று செயல்பட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் என்றும் பயன்தரும். தோழர் பி.டி. ரணதிவே வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். தோழர் பி.டி. ரணதிவே சந்தித்த அவமானங்களைப்போல் வெறொருவர் சந்தித்திருக்கக் கூடுமோ என ஐயமே எழுகிறது. அதனை பி.டி. ஆர் எதிர் கொண்ட விதம்தான் இன்றைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
இந்தியாவில் கம்யூனிட் கட்சியை கட்டி வளர்த்தவர்கள் வரிசையில் பி.டி ஆருக்கு தனி இடம் உண்டு. சிறந்த அறிவாளி. விடுதலைக்கு பின் கட்சிக்குள் ஏற்பட்ட அதி தீவிரவாத போக்குகள் கட்சிக்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. அதனால் கட்சிக்குள் கருத்து மோதல் தீவிரமானது. பி.டி. ஆர் பாதைக்கு எதிரானவர்கள் கைவலுப்பட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறல் ஏற்பட்டபோது அஜய் கோஷ், எ.ஏ டாங்கே, சி. ராஜேவர்ராவ், பசவபுன்னையா ஆகிய நால்வர் கொண்ட தூது குழு ரஷ்யா சென்று டாலினிடம் விவாதித்தது. டாலின் இந்திய கம்யூனிட் கட்சி மேற்கொண்ட இடது தீவிரவாத தவறுகளை சுட்டிக் காட்டியதுடன்; பி.டி ஆர் செயலாற்றல் மிக்க, திறமைமிக்க கம்யூனிட்- கட்சியிடம் இழப்பதற்கு திறமை மிக்க ஊழியர்கள் மிகக் குறைவு, எனவே அவரை இழந்து விடவேண்டாம் மத்தியக் குழுவில் சேர்க்க வேண்டாம் ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வேறு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று யோசனை கூறினார்.
ஆயினும், அன்று கட்சியில் நிலவிய சூழ்நிலை வேறுமாதிரியாகவே இருந்தது. கட்சியின் மத்தியக்குழு விசாரணைக்கு பின் ரணதிவேயை இரண்டு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதை விசுவாசமிக்க கம்யூனிடாக பி.டி ஆர் ஏற்றுக் கொண்டார்.
இப்பொழுது பல தோழர்களுக்கு அவர் வேண்டாத மனிதராக காணப்பட்டார். பலர் அவரை சந்தித்துப் பேசுவதையே தவிர்த்தனர். என்கிறார் அவர். வரலாற்றை எழுதிய என். ராமகிருஷ்ணன் அவரது மனைவி விமலா ரணதிவே வார்த்தையில் கூறுவதானால். 1951 முதல் 1955 வரைப்பட்ட கால கட்டமானது பி.டி ஆருக்கு மிகவும் சோதனை மிக்க காலகட்டமாகும். டாங்கேயும் அவரது ஆதரவாளர்களும் அவரை மிகவும் மட்டகரமாக நடத்தினார்கள்.
சாதியிலிருந்து நீக்கப்பட்டவரைப்போல் நடத்தினார்கள் என்று விமலா ரணதிவே கூறுவதிலிருந்து அந்த மன உழைச்சலைப் புரிந்து கொள்ள முடியும். பலமாதங்கள் கட்சி வழங்கும் ஊதியம் கூட வழங்கப்படவில்லை விமலா வேலைக்குப் போய் ஈட்டும் சொற்ப வருவாயும் லீலா சுந்தரய்யா அவ்வப்போது அனுப்பும் சிறு உதவியும் தான் வயிற்றுப்பாட்டுக்கானது.தனது சகோதரி அகல்யா ரங்கனேக்கள் வீட்டில் ஒரு அறையில் ஒட்டுக் குடித்தனமாக வாழ்ந்தார். மனைவி வேலைக்கு போனதும்; தனது மகன் உதய் தான் அவரது ஒரே பற்றுக்கோடு அவனை பராமரிப்பதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.
அவருக்கு கட்சி வேலை எதுவும் தரப்படவில்லை. கட்சி அலுவலக வராண்டாவில் உட்கார்ந்து படிப்பதும் தனக்கு தானே சதுரங்கம் ஆடுவதுமாக கழித்தார். கட்சி அவருக்கு வேலைதரவில்லை எனினும் கட்சி அலுவலகம் செல்வதை நிறுத்தவில்லை.
இந்தச் சூழலில் 1953 ஆம் ஆண்டு கட்சித் தலைமைக்கு வரவாய்ப்பிருந்தும் அதனை பி.டி ஆர் நிராகரித்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிட் இயக்க முக்கியத் தலைவர்களில் ஒருவரான என். பிரசாத்ராவ் விவரித்து பிடி ஆரின் சுய கட்டுப்பாட்டை சுட்டிக் காட்டுகிறார். இதனை என். ராமகிருஷ்ணன் தான் எழுதிய நூலில் மேற் கோளாகவும் காட்டுகிறார்.
மதுரையில் கட்சிக் காங்கிர நடைபெற்ற சமயத்தில் பி.டி ஆரும் டாக்டர் அதிகாரியும் கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் தாம். டிராக்ஸிய வாதிகள், துருக்கியர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடபட்ட எங்களில் சிலர் இவ்விரு தலைவர்களுக்கும் கட்சியில் அவர்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமென்று விரும்பினோம். அவர்கள் இருவரும் மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பினோம். இதற்காகப் பிரதிநிதிகளைத் திரட்டும் வேலை என்னிடம் ஒப்படைக்கப் பட்டது டாக்டர் அதிகாரி போட்டியிட சம்மதித்தார். ஆனால் பி.டி ஆர் போட்டியிட உறுதியாக மறுத்து விட்டார். அவர் மீது மத்தியக் குழுவின் தடை இருக்கும்வரை அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். பெருத்த ஆதரவோடு அவர் வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால் அவர் கட்சிக் கட்டுப்பாட்டில் இறுதியாக இருந்தார்.
மத்தியக்குழு முன் மொழிந்த பெயர் பட்டியலில் டாக்டர் அதிகாரியின் பெயர் இல்லை. ஆனால் நாங்கள் அவர் பெயரை முன் மொழிந்தோம் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
தன் மீதிருந்த தடை நீக்கப்படும் வரை பி.டி ஆர் கட்சியின் சாதாரணச் சிப்பயாக இருந்தார். அதுதான் அவரது உருக்கு போன்ற கட்டுப்பாடு
1955 ஆம் ஆண்டு மீண்டும் மகாராஷ்டிர மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது வரலாறு. `உளிக்கு பயந்தால் சிலை இல்லை அதுபோல ஒவ்வொரு வெற்றியாளனும் அதற்காக அவன்பட்ட அவமானங்களும் காயங்களும் அளவற்றது. இந்த நூல் நெடுக இத்தகைய காயங்களின் பதிவு நிறையவே உண்டு. பி. ராமமூர்த்தியும், எ. பாலசுப்பிரமணியமும், எம்.ஆர். வெங்கட்ராமனு அவர் கொள்கையில் உறுதியாக நின்றபோது அதனை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று; அவர்களே அறுத்தும் எறிந்துவிட்ட பூணூலையும், சாதி அடையாளத்தையும் அவர்கள் மீது பூசி அசிங்கப்படுத்திய வக்கிர அரசியல் வேட்டையை எப்படி எழுதுவது. அதே சமயம் இவர்களின் அப்பழுக்கற்ற - சாதி ஆணவமற்ற - ஒடுக்கப்பட்ட மக்கள்பால் அளவற்ற அக்கறையும் கொண்ட அவர்களின் வரலாற்றை உரிமைப் போர் களங்களினூடே நூலாசிரியர் சொல்லியுள்ள பாணி நெற்றியடி எனின் தவறு அல்ல.
அதேபோல கே. ரமணி, வி.பி. சிந்தன், அனந்தநம்பியார், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றவர்கள் மலையாள தேசத்திலிருந்து வந்தவர்கள், ஆயினும் தமிழக உழைப்பாளி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். சிண்டன் என்ற பெயரையே சிந்தன் என மாற்றியமைத்தவர் பாரதிதாசன் அல்லவா? சென்னை நகர உழைக்கும் மக்களை திரட்டியதில் முன்நின்றவர் வி.பி.சி. அல்லவா? சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறது என்றால் அது தோழர் பி.ஆர். பரமேஸ்வரனும், வி.பி. சிந்தனும், கே.எம். ஹரிபட்டும், பி.ஜி.கே. கிருஷ்ணனும், கே. கஜபதியும் விதைத்த விதைகளின் - உழைத்த உழைப்பின் அறுவடையே ஆகும். பி.ஆர்.பரமேஸ்வரன் வாழ்க்கை வரலாற்றில் ஒரு அத்தியாயத்துக்கு `அமைப்பு மனிதர் என என். ராமகிருஷ்ணன் தலைப்பிட்டிருப்பது தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. நூற்றுக்கு நூறு உண்மையாகும். தோழர் ஏ. நல்லசிவன் வாழ்க்கைக் கதையிலும் இது பொருந்தும். தத்துவ விவாதத்திலும் பிரச்சனைகளை அடியாளம் வரை ஊடுருவி பரிசீலிப்பதிலும் அவர் பாணியே தனி. எளிமையின் இலக்கணம். அவர் சிறைவாழ்க்கை தலைமறைவு வாழ்க்கை என பெரும் தியாகம் செய்தவர். இதை எழுதுகிறபோதே அவருடைய கையொடிந்தது சுதந்திரப்போரில் என்று பொய் எழுதவில்லை மாறாக கிரிக்கெட் பார்க்க மரம் ஏறி கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டார் என்றே எழுதினார் என்.ராமகிருஷ்ணன்.
தொழிலாளி வர்க்கத்தை உசுப்பி எழுப்புவது மட்டுமே தலைமைப் பண்பு ஆகாது. சில நேரங்களில் தொழிலாளி வர்க்கம் தவறி தறிகெட்டு புறப்பட்டு விடுவதுமுண்டு. அப்போது கரைவுடைத்து வரும் அந்த காட்டுவெள்ளத்தை எதிர்த்து நின்று மடைமாற்றிவிடுவது அசாதாரணமானது. நூல் நெடுக அத்தகைய சாட்சிகள் உண்டு. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சென்னையில் மோதல் ஏற்பட்டபோது அதனை துணிச்சலாக எதிர்நின்ற தொழிலாளர்களை அமைதிப்படுத்திய வி.பி. சிந்தன் பணி அடடா... அடடாவே. என். ராமகிருஷ்ணன் இதனை உரிய முறையில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஒருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும்போது உற்சாக மூட்டும் அம்சங்கள் மட்டுமல்ல, ஊக்கத்தை கெடுக்கும் அம்சங்கள் பலவும் தெரியவரும். இப்போதுதான் எழுத்தாளர் இதய சுத்தியோடும் இயக்க அக்கறையோடும் செயல்பட வேண்டியவராக உள்ளார். எல்லா நூல்களிலும் என்.ராமகிருஷ்ணன் இதனை கறாராக பின்பற்றியுள்ளார். பி.டி. ரணதிவே வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதிய எம்.கே. பாந்தே கூறுகிறார், பி.டி.ஆருடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட பலகருத்து வேறுபாடுகள் கொண்ட விபரங்களுக்குள் போக ராமகிருஷ்ணன் உணர்வுபூர்வமாக எந்த முயற்சியும் செய்யவில்லை. வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஏற்கெனவே இதைக் கூறியுள்ளேன்)
ஆம், அங்கேதான் என். ராமகிருஷ்ணன் நிமிர்ந்து நிற்கிறார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். கடந்த காலத்தைப் பற்றிய அறிவு-தெளிவு-உணர்வு இவைதான் வரலாறு என பேராசிரியர் கருணானந்தன் கூறியது. இவர் எழுத்தில் உண்மையாகியுள்ளது. எந்தச் சூழலிலும் தனது கருத்தை யார்மீதும் ஏற்றிச்சொல்ல என். ராமகிருஷ்ணன் முயலவே இல்லை. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பலநூறுபேர்களை பேட்டிகண்டு, நூற்றுக்கணக்கான நூல்களை ஏடுகளைப் படித்துச் சலித்து சேகரித்த விபரங்களை ஒப்பனையின்றி - கற்பனைச் சரடு இன்றி - எளிமையாய் கோர்வையாய் தந்ததில்தான் என். ராமகிருஷ்ணன் வெற்றியுள்ளது.
எம்.கே. பாந்தே வரலாறு சிஐடியு வரலாற்றோடும் அனந்தநம்பியார் வரலாறு ரயில்வே தொழிலாளர் போராட்டத்துடனும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஏ. நல்லசிவன் வாழ்க்கை தமிழக கம்யூனிஸ்ட் கட்சி - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.
`அந்தமான் தீவுச்சிறை நூல் அற்புதமானது. சிறைத்தண்டனை தியாகிகள் மனதை உருக்குலைக்கவில்லை. மாறாக புடம்போட்டது. புத்தகம் அவர்களின் போர்வாளானது. கல்வி அவர்களுக்கு கேடயமானதும் ஆச்சரியமான உண்மை. சமரசங்களுக்கு இடமற்ற போராட்ட குணம், சிறைக்குள்ளும் போராட்டங்கள், படிப்பு, விவாத மேடைகள், மாநாடுகள், கையெழுத்துப் பத்திரிகைகள், தாங்கள் சிறையில் உழைத்துப்பெற்ற சம்பளத்தில் வீரர்கள்வாங்கிய (70 வருடங்களுக்கு முன்பு) தூரகிழக்கின் பிரச்சனைகள், பால்கன் நாடுகள், சோஷலிசம் எதற்காக? என்று நீளும் புத்தகங்களின் பட்டியல் - வெளிநாடுகளுக்கு சந்தா அனுப்பி படித்த நியூயார்க் டைம்ஸ், நியூ ஸ்டேட் மென், லண்டன் டைம்ஸ் என்று நீளும் இதழ்களின் பட்டியல் - இவையெல்லாம் தமது மந்தைத்தனமுள்ள முகத்தில் ஓங்கி அறைகின்றன என்கிறார் வாசல் வெளியீட்டகத்தைச் சார்ந்த ஸ்ரீரசா நூலைப் படித்தபின் அது முழுக்க முழுக்க மெய் என்பதை உணர முடியும்.
இங்கு பட்டியலில் உள்ள 14 தலைவர்களின் வாழ்க்கை சுருக்கத்தையோ - உணர்ச்சி பதிவுகளையோ எடுத்துச்சொல்வது இங்கு என் வேலை அல்ல. அந்நூல்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்நூல்களை என். ராமகிருஷ்ணன் எப்படி நேர்மையாக தந்துள்ளார் என்பதுதான் நம்முன் உள்ள பிரதான அம்சம்.
சமீபத்தில் ஒரு பேராசிரியர் எழுதிய ஒரு கம்யூனிஸ்ட் தலைவனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்ட நேர்ந்தது. அப்போது என். ராமகிருஷ்ணனின் உழைப்பும் நேர்மையும் கறார் அளவுகோலும் பளிச்சென துலக்கமாயின. உதாரணமாக விடுதலைக்கு முன் எட்டு ஆண்டுகள் விடுதலைக்குப் பின் எட்டு ஆண்டுகள் என பேராசிரியர் அத்தலைவரின் சிறைவாழ்வை குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே பல்வேறு கட்டங்களாக மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேலே என தொடர்கிறார். கணக்கு இடிக்கிறது. உண்மையின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் சிறைப்பட்ட அவரின் தியாகம் கூட இவரது பொறுப்பற்ற எழுத்தால் நாளை ஆய்வாளர் சந்தேகப்படுவதாக ஆகிவிடும்.
ஆனால் ராமகிருஷ்ணன் நூல்கள் பல செய்திகள் கட்சி வரலாற்றிலும் - மாவட்ட கட்சி வரலாற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வாழ்க்கை வரலாறுகளிலும் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாது. சில இடங்களில் சுருக்கமாகவும் சில இடங்களில் விரிவாகவும் வரும். ஆனால் அவற்றுக்கு இடையே தகவல் முரண்பாடு இருக்காது. இதனை பலமுறை நான் ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். ஆர். உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னரும் பல நூல்கள் எழுதும்போது இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.
வார்த்தை ஜோடனைகளுக்காக கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தகவல்களை உள்ளது உள்ளபடி தருவதும், அதனை தகவல்கள் சிலரின் வாய்மொழிக் கூற்றாகவோ அல்லது நூல் ஆதாரங்களின் அடிப்படையிலோ அமைந்திருப்பதும் அவரது எழுத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
உன்னுடைய வாழ்க்கையை விவரித்த பின்னரும்
பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமான
வார்த்தைகள் உள்ளன என்றால்,
சொல்ல வேண்டியதை எல்லாம்
சொல்லிவிட்டோம் என்பதல்ல, ஆனால்
உன்னைக் குறித்து
முழுமையாகச் சொல்வதற்கு
நாங்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்
என்ற காரணத்தால்தான் என்கிற மகாகவி காளிதாஸ் கவிதை வரிகள்
பி.ஆர். நூலின் முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்திருப்பார். அதே கவிதையை இவருக்கு அப்போது நாம் சமர்ப்பிக்கலாம். அது வெறும் புகழ்ச்சி ஆகாது, உண்மையாகும்.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் குறித்து அவர் நிறையவே சொல்லியிருப்பினும் சிங்காரவேலர் குறித்து இவர் தனியாக எழுதவில்லை.தோழர் ஏ.கே. கோபாலன், சுந்தரய்யா போன்றோர் வாழ்க்கை சுயவரலாறு வெளிவந்துவிட்டதால் இவர் எழுதாமல் தவிர்த்திருக்கக்கூடும்; அதே சமயம் பிரமோத் தாஸ்குப்தா, பசவபுன்னையா போன்றோர்க் பற்றிய பதிவும் சென்னை, தஞ்சை மாவட்ட(இன்று அதுவே பலமாவட்டங்களாகிவிட்டன) வரலாறுகள் எழுதப்படுவதும் அவசியம். அவரிடம் உரிமையோடு இவற்றை எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக மேல் கூறியவற்றையும் எழுதியபின், இவரது நூல்களை வரிசைக்கிரமமாகத் தொகுத்து. கூறியதை கூறாமல் எடிட் செய்து நான்கைந்து பாகங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடுவது மிகமிக அவசியம். நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடிப்படையாக உள்ளது.
என். ராமகிருஷ்ணனின் எழுத்துப்பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். உங்கள் உழைப்பும் நேர்மையும் எளிமையும் இனி யாருக்கும் வராது. உங்கள் முன் நாங்கள் மண்டியிடுகிறோம். வணங்குகிறோம். எங்களின் வேர்களை எங்களுக்குக் காட்டியதற்காக....
டால்ஸ்டாயின் கவித்துவமான வரிகளோடு என் உரையை நிறைவு செய்ய விழைகிறேன்.


ஒரு தேனீ பூவின் மேல் அமரும்
வேளையில் ஒரு குழந்தையை கொட்டியது
தேனீயைக் கண்டு அஞ்சிய அக்குழந்தை
மக்களைக் கொட்டுவதற்காகவே தேனீக்கள்
வாழ்கின்றன என்றது.

தேனீ பூவிதழ்களை ருசிப்பதைப்பார்த்த ஒரு கவிஞன்
பூக்களின் நறுமணத்தை நுகர்வதற்காகவே
தேனீக்கள் வாழ்கின்றன என்றான்

மற்றொரு தேனி வளர்ப்பவன்
தேன்கூடுகளின் உயிரியலை
நெருக்கமாகப் பார்த்து
தேனீ மகரந்தத் தூள்களை எடுத்துக் குட்டித் தேனீகளுக்கு உணவு அளிப்பதற்கும்
ராணித் தேனீயை மகிழ் விப்பதற்கும் - அவை தனது
வம்சத்தை விருத்தி செய்வதற்காகவும்
வாழ்கின்றன என்றான்.

தேனீ ஆண்மலரின் மகரந்தத்தை
பெண்மை உறுப்புக்கு
எடுத்துப் பறந்து செல்வதைப் பார்த்த
ஒரு தாவரவியல் அறிஞர்
அது அம்மலரை
செழிப்பாக்குவதற்குத்தான் செல்கிறது;
அதுவே அதன் இருத்தலுக்கான அம்சம் என்றான்

தாவரங்களின் குடிபெயர்வை
பார்த்த இன்னொருவன்
தேனீக்கள்
இந்த குடிபெயர்வுக்கு
உதவுவதாக கூறினான்
தேனியின் வாழ்வின் அர்த்தம் என்றான்
ஆனால்

தேனீயின் தேடல்
முதலில் கூறியதிலோ
இரண்டாவது கூறியதிலோ
அல்லது மனித அறிவில்
பகுத்துப்பார்க்க முடிகிற பலவற்றாலோ
முடிந்த முடிவாவதில்லை

தேனீயின் தேடல் பற்றிய
கண்டுபிடிப்புகள் மனித அறிவு வளர வளர
அதன் இருத்தலுக்கான அர்த்தம்
மேலும் மேலும் நம்முடைய புரிதலுக்கும்
அப்பால் இட்டுச் செல்கிறது

மனிதன் பார்க்க முடிவதெல்லாம்
தேனீயின் வாழ்வியலோடு
பிற உயிர்களின் உறவை மட்டும்தான்
எனவே அதுபோலவேதான்
வரலாற்றுக் கதாபாத்திரங்களின்
இருத்தலும் தேசத்தின் இருத்தலும்



(வரலாறு படைத்த என்.ராமகிருஷ்ணன் நூல்களை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற படைப்பரங்கில் சு.பொ.அகத்தியலிங்கம் வாசித்த கட்டுரை)

3 comments :

  1. premaprabha

    i know NR since a long time. great admirer of mine. a noble man down to earth simplicity evolving an example to others. have read some of his writings. wish i must read all his work. one can witness his simplicity in his writing too. i learnt many things from him. my great salute

  1. GRANDHAPURA

    Comrade where can i get these books..can you give information

  1. na.ve.arul

    தோழர் சு.பொ.
    அருமையான விஷயங்கள் அடங்கிய என்.ரா பற்றிய கட்டுரை சிறந்த பதிவு. டால்ஸ்டாயின் அற்புதமான கவிதையுடன் முடித்துள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
    நா.வே.அருள்

Post a Comment