Posted by அகத்தீ Labels:

 

கேள்விகள் தொடரும் ...1.


பிறப்போடு வந்த மத அடையாளத்தை விட்டொழிக்க முடியுமா ?

 

கேள்வியே பிழை .நான் எந்த மத அடையாளத்தோடும் குறியோடும் பிறக்கவில்லை .என் தாயும் தந்தையும் சைவ சமய நம்பிக்கை சார்ந்து ஒழுகியவர்கள் .அவர்கள் என்னை வளர்த்த போது என்னில் அதன் சாயல் ,நிழல் ,கருத்து எல்லாம் படிந்தது .அதனாலேயே நான் அந்த மதம் என என்மீது அடையாளம் சுமத்துவது எப்படி நியாயமாகும் ? என் மீது மட்டுமல்ல யார் மீதும் பிறப்பு சார்ந்து மத அடையாளம் சுமத்துவது வன்முறை என்றே நான் கருதுகிறேன்.

 

நான் அந்த மதத்தின் அடிப்படை தத்துவப் போக்கை அறிந்தேனா ? ஒப்புக் கொண்டேனா ? இந்த இந்த காரணங்களால் இம்மதம் பிற மதங்களோடு உயர்ந்தது என அலசி அறிந்தேனா ? எதுவும் இல்லை . என் பெற்றோர் ஓர் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதால் நானும் அதே மதம் என்பது அறிவுக்கு பொருந்துமா ?

 

ஓர் குறிப்பிட்ட பருவம் வந்த உடன் அதாவது பள்ளிப் படிப்பு முடியும் போது எனக்கு இனி எத்தகைய கல்வி வேண்டும் என விரும்பி நானே தேர்ந்தெடுக்க உரிமை வேண்டும் என்பது எவ்வளவு நியாயமோ ?

 

திருமண வயதை அடைந்ததும் என் இணையை நானே தேர்ந்தெடுக்க உரிமை வேண்டும் என்பது எவ்வளவு பொருள் பொதிந்த வாதமோ ?

 

அக்காலகட்டத்தின் என் வாழ்க்கை முறையை நானே கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு சரியோ !

 

அதேபோல் ,அந்த காலகட்டத்தில் ஏதேனும் ஒரு மதத்தை விரும்பி ஏற்கவோ , நிராகரிக்கவோ , வேறு சிந்தனைப் போக்குகளில் ஈடுப்பாடு காட்டவோ முழு உரிமை வழங்கப்படுவதுதானே நியாயம் ?

 

அதாவது ஒருவனோ ஒருத்தியோ அறிவு பூர்வமாக சிந்தித்து சுய சிந்தனையின் அடிப்படையில் ஓர் மதத்தை தழுவவோ விலகவோ ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யும் போதுதானே அது உறுதியான அடையாளமாகக் கொள்ள முடியும் .அதை விடுத்து பிறந்த உடனேயே என் மச்சம் போல் ஒட்டிக் கொண்டு வந்தால் எப்படி என் மதமாகும் ? மச்சம் என சொல்லலாம் .அவ்வளவே !

 

மொத்தத்தில் என் மீது சமூகம் சுமத்தியுள்ள மத அடையாளம் என் விருப்பமின்றி என் மீது சுமத்தப்பட்டதே. என் மீது நிகழ்த்தப்பட்ட முதல் வன்முறையே ! அதை ஏற்கவோ விட்டொழிக்கவோ எனக்கு முழு உரிமை உண்டு .

 

கேள்விகள் தொடரும் ….

 

சுபொஅ. 15 /10 /2022.


இரண்டடி கதிர்க்குறள் ,

Posted by அகத்தீ Labels:

 



குறள் என்றதும் திருக்குறளோடு ஒப்பிட்டும் ஆய்வாகவும் விமர்சனம் எழுத வேண்டுமே எனத் தயங்கிய படியே நூலைப் புரட்டினேன்.
“ முப்பால் இதுவல்ல வள்ளுவனும் நானல்ல
ஒப்புயார் செய்தாலும் தப்பு”
என பாயிரத்தில் கனல்வனன் சொல்லிவிட்டதால் மனத்தடை நீங்கி உள்நுழைந்தேன்.
“ மருதுவர் ஆக முயல்வோர்க்கு நச்சு
மருந்தினை நீட்டுதிக் காடு”
என நீட்டுக்கு எதிராக பேசும் போதே நூலின் செல்வழி நிகழ்காலம் என்பது புலனாயிற்று .
“ சோற்றைவாங்கி உண்பதற்குச் சொந்தசாதி கேட்பவன்
காற்றையெண்ணி பார்ப்பானோ ஓய் !” எனவும் ,
“ நீரோடும் பாதையெலாம் வீடாக்கி வைத்துவிட்டு
ஊர்மூழ்கிப் போனதென்று பேச்சு” எனவும் ,
“ஆடுண்போம் மீனுண்போம் நாட்காலை நீராடி
மாடுண்போம் யார்தடுப்பார் வா” எனவும்,
“பெண்புகாத கோயிலும் பெண்செயாத பூசையும்
பெண்தொழாத தெய்வமும் பாழ்” எனவும்,
சீறிப்பாய்கிற குறள்கள் எல்லாம் சமகால அரசியல் சமூக கொந்தளிப்பின் வெடிப்பல்லவோ ?
நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை நாம் அறிவோம் ; அதைத் தொட்டு கனல்வனன் சொல்கிறார் ;
“பிடில்மீட்டல் இன்றில்லை வாத்து வளர்த்தல்
மயிலூட்டல் என்றுமாறிப் போச்சு “
யாரைச் சாடுகிறார் தெரியுதா ?
“ என உரையெழுத வேண்டாத பளிச்சில்
உறை சுழற்றிய ஒருபிடியின் இருவாளாய்
ஒவ்வொரு குறளையும்
கனல்வனன்
உயிப்போடு
சுழற்றியிருக்கிறார்.”
என கவிஞர் அறிவுமதி மிகச்சரியாகவே மதிப்பிடுகிறார்.
“தமிழ்ப்பா படியுங்கள் .பாவெழிலில் நனையுங்கள்.” எனக்கவிஞர் மகுடேஷ்வரன் கூற்றை வழிமொழிகிறேன்.
“குறளை தன் சனாதன நோக்கில் சிதைப்போர் களம் இறங்கியுள்ள சூழலில் ; இந்த குறள்களையும் சிலர் தம் நோக்கிற்கு அதன்பகுதியாக்கி திசை திருப்ப வழி உண்டாகும் அல்லவா ? எனவே உலகம் போற்றும் குறள் வடிவத்தை நகலெடுக்காமல் இருப்பது நல்லதல்லவா ?” – இது என் தனிப்பட்ட கருத்து .
இரண்டடி கதிர்க்குறள் ,
ஆசிரியர் : கனல்வனன்,
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்,
தொடர்புக்கு : 90955 07547 / 98422 75662
பக்கங்கள் : 112 விலை : 100.
சுபொஅ.
re

ஆரோக்கிய வாழ்வுக்கு இலவச ஆலோசனைகள். {சிரிங்க…. சிரிச்சுகிட்டே இருங்க….}

Posted by அகத்தீ Labels:

 ஆரோக்கிய வாழ்வுக்கு இலவச ஆலோசனைகள்.

{சிரிங்க…. சிரிச்சுகிட்டே இருங்க….}

 

குறிப்பு :

ஆட்டுகல்லில் மாவு அரைங்க ,

அம்மிக்கல்லில் கறிக்கு அரைங்க ,

விறகு அடுப்பில் சமைங்க ,

இப்படி குளிங்க ,

இதை இதை சாப்பிடுங்க

என இயற்கை ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் மகாபீடங்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின் எனக்கும்  “ஞான ஒளிவட்டம்” பின்னால் பளிச்சிட யோசித்தவையே கீழே !

 

1] யாரும் பேண்ட் சர்ட் போடாதீங்க ! அவை குளிர் மிகுந்த ஐரோப்பிய உடை . கோவணம் மட்டுமே கட்டுங்கள் .சூரிய ஒளி உடம்பில் பட்டுக்கொண்டே இருக்கட்டும் ! நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .நம் முன்னோர்கள் நூறாண்டு வாழ்ந்த ரகசியம் இதுதான் .[ அன்றைய சராசரி வாழ்நாள் 30 ஆண்டுகளே எனும் உண்மையை சொல்லும் மடையர்கள் சொல் கேளாதீர்]

 

2] பெண்கள் ஜாக்கெட் அணியாதீர் ! மார்புப் புற்று நோய்க்கு ஜாக்கெட்டே காரணம் . அதனால்தான் நம் முன்னோர் ஜாக்கெட் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர் . முன்னோர்கள் முட்டாள்களில்லை. [ ஜாக்கெட் அணிய போராடிய சமூகசீர்திருத்தவாதிகள் அந்நிய கைக்கூலிகள் . ]

 

3] காங்கிரிட் வீடுகளே நோய்க்கு மூலகாரணம் . ஓலைவேய்ந்த மண்குடிசையே ஆரோக்கியம் வாசம் செய்யும் மாளிகை .ஆகவே குடிசையில் குடியேறுங்கள் ! [ குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்பது கொள்ளையட்டிப்பதற்கான முழக்கமே !]

 

4] கேன் தண்ணீரோ /குழாய் தண்ணீரோ குடிக்காதீர் .இரசாயணம் கலந்தது .நோய் உருவாக்கும் ! ஐந்து கி.மீ நடந்து போயாவது குட்டையில் தேங்கி நாறும் தண்ணீரை எடுத்து வந்து அருந்துங்கள் .தாயையும் தண்ணீரையும் பழிக்கக்கூடாதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ! [ சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பது சுத்தமான ஏமாற்று ]

 

5] நோய் வந்தால் டாக்டரிடம் போகாதீங்க ! சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லை ; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை என்று நம்ம மூத்தோர் சொன்னது பொய்யில்லை . நோய் வந்ததும் சுக்கை அரைச்சு உடலெல்லாம் பூசுங்க . அப்புறம் கடுக்காய் ,அரளிவிதை , இஞ்சி , ஊமத்தை ,வேப்பிலை ,துளசி இப்படி பதினெட்டு மூலிகைகளை அரைத்து காய்ச்சி வேத முறைப்படி அரை மண்டலம் குடியுங்கள் ! [ எந்த முறை வைத்தியம் ஆயினும் முறையா படிச்சவங்களிடம் போகாதீங்க ! அவங்க பணம் புடுங்குவாங்க ! வாட்ஸ அப் வைத்தியமே நல்லது]

 

6] பஸ் ,ரயில் ,பைக் ,ஸ்கூட்டர் , கார் ,வேன் எதிலும் பயணம் செய்யாதீர்! மூட்டுவலி ,கால்வலிக்கு அதுதான் காரணம் . இருபது முப்பது கி.மீ ஆனாலும் நடந்தே செல்லுங்கள் . [ வாகனங்கள் கார்ப்பரேட் கொள்ளை அடிக்கவே என உணருங்கள் .வாகனங்கள் வாங்காதீர் !]

 

7 ] நீங்க இப்ப சாப்பிடுகிற அரிசி ,காய்கறி ,பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் .ரப்பர் ,இராசயணம் இவற்றால் தொழிற்சாலைகளில் சீனாவில் செய்யப்படுபவை . எனவே செடியில் காய்த்த காய்கறிகள் , மரத்தில் பழுத்த பழங்கள் ,வயலில் விளைந்த தானியங்களை “ ஆர்கானிக்” எனக் கேட்டு வாங்குங்கள் . விலையைப் பற்றி கவலைப்படாதீங்க !நீங்களே வயலில் போய் நெல்லை உதிர்த்து உரலில் குத்தி முறத்தில் புடைத்து சோறாக்கி உண்டால் உத்தமம் . [ ஆர்கானிக்குக்கு அர்த்தம் என்னன்னு யாராவது கேட்டால் பெப்பெப்பே என சொல்லுங்க]

 

இன்னும் நிறைய   “பொன்னான” ஆலோசனைகள் கைவசமிருக்கு வேண்டுவோர் அணுகினால் தரப்படும்.

 

இவண்,

முகநூல் வாட்ஸ் அப் போதனைகளால் நொந்து நூடுல்ஸ் ஆன அப்பாவி

சுபொஅ. 6/9/2022.

உரைச் சித்திரம். 21. எந்த இறைச்சியும் எமக்கு பகையில்லை !

Posted by அகத்தீ Labels:

 

 


உரைச் சித்திரம். 21.

 

எந்த இறைச்சியும்

எமக்கு பகையில்லை !

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும் மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !

 

 சைவம் ,அசைவம் என்ற சொற்களெல்லாம் மதம் சார்ந்தவை . உண்மையை பிரதிபலிக்காதவை . தாவர உணவு ,புலால் உணவு என்று சொல்லலாம் .அதுக்கூட பிழையே . புலால் உணவு ,தாவர உணவு என்றே வரிசைப்படுத்த வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் புலால் உண்பவரே அன்றும் இன்றும் . ஆகவேதான் புலால் மறுப்பு ,புலால் உண்ணாமை என வள்ளுவரும் இதரரும் பேசினர் . அதனை அடியொற்றி  புலால் ,அபுலால் என்று வேண்டுமானால் புதிதாகச் சொல்லப் பழகலாம்.

 

தமிழரின் ஆதிப் பண்பாடு புலால் உணவே . நெய்யில் பிசைந்த புலால்கூடிய சோற்றையே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்டும் .

 

இன்று பிரியாணி மிகுதியாய் விரும்பப்படும் ஓர் உணவு . ஊண்  [ இறைச்சி ] ,நெய் ,அரிசி கலந்து வேகவைத்த உணவை சங்க இலக்கியங்கள் பல இடங்களில் வியந்தோதுகின்றன. இது பிரியாணிதானே .காய்கறி கலந்தால் அது கூட்டாஞ்சோறு ,இறைச்சி கலந்தால் பிரியாணி அவ்வளவுதான்.

 

அக்காலத்தில் எண்ணை கிடையாது .நெய்யே பெரிதும் பயன்படுத்தப்பட்டன . எள்ளைப் பிழிந்து எடுக்கப்பட்ட நெய் எள்நெய் ஆனாது ; எண்ணை ஆனது . இப்போது அதனை நல்லெண்ணை என்கிறோம் . எண்ணை பொதுப் பெயராகிவிட்டது .

 

சங்க காலத்தில் புலால் உண்டதற்கான நிறைய சாட்சிகள் உண்டு .ஒன்றிரண்டை இங்கு பார்ப்போம்.

 

 

பதிற்றுப்பத்தில்  புலவர் குமட்டூர்க் கண்ணனார் சேர மன்னன் இமயவரம்பன் (இமையவரம்பன்) நெடுஞ்சேரலாதனை பற்றிப் பாடிய பாடல் ஒன்று கூந்தல் விறலியர் எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது . அழகிய கூந்தலை உடைய பெண் பாடகர் ஆடிப்பாடி சொல்லும் பாங்கில் அமைந்ததால் கூந்தல் விறலியர் என்றானதோ ! [ புலவர்கள் பிரச்சனை .நாம் பாட்டுக்குள் செல்வோம்.]

 

 “உண்மின் கள்ளே! அடுமின் சோறே! அதாவது எல்லோரும் கள்ளைக் குடியுங்கள் ! சோற்றை ஆக்குங்கள் ! இறைச்சியை அறுத்து துண்டு துண்டாக்குங்கள் ! எல்லாவற்றையும் அடுப்பிலேற்றி வேகவையுங்கள் !

 

கருத்த முடியினை அவிழ்த்துவிட்டு ஐந்து வகையாய் பின்னலிட்டு , அல்குலும் குலுங்க ,புன்முறுவல் சிந்தி ,இளமை பொங்க ஆடும் கூந்தல் விறலியரே !

 

நீங்கள் அணிந்துள்ள பொன் அணிகளை கழற்றி வருவோர்க்கெல்லாம் இல்லை எனாது வழங்குங்கள் ! நீங்கள் அடுப்பிலே வேகவைத்த புலால் உணவை வருவோருக்கெல்லாம் வயிறார உண்ணத்தாருங்கள் ! சேர மன்னன் இயமவரம்பன் சேரலாதனிடம் பெற்ற பொன்னையும் பொருளையும் அவ்வாறு வழங்குதல் பிழையே இல்லை ! பெற்றதை உதவுமின் !

 

இந்த மண்ணுலகையெல்லாம் தன் குளிர்ந்த மழையால் குளிர்வித்து ,வளம் சேர்த்து செழிப்பைக் கொடுத்து காக்கும் மாமழை பல்லாண்டு பெய்யாமல் பொய்த்து ஊரே காய்ந்து வறண்டு துன்பமுறினும் சேரலாதன் தன் கொடையை நிறுத்தவே மாட்டான் ! தன்னை நாடி வருபவரை ஏமாற்றாமல் கேட்டதைத் தருவான். கள்ளைக் குடியுங்கள்..”

 

கள்ளும் அந்நாளில் போதையின் கூறாக இல்லை .உணவின் பாகமாகவே இருந்துள்ளது . ஒளவையும் கள் குடித்திருக்கிறார் .புறநானூறு [235] பாடலில் அதிகமான் பற்றி பெருமையுடன் சொல்வார் ,” சிறிய கள் பெறினே ,எமக்கு ஈயும் / மன்னே ! பெரிய கள் பெறினே ! யாம் / பாடத் தான் மகிழ்ந்துண்ணும்,” ஆகவே கள்குடியுங்கள் எனச் சொன்னது தமிழ் மரபே !

 

நற்றினையில் புலவர் இளந்தேவனார் இன்னொரு காட்சியை விவரிக்கிறார் ;

 

பளபளக்கும் வளையலை அணிந்த பெண்ணே ! நேற்று இரவு உன் வீட்டிற்கு வந்தவரோ அந்த பெரும் புகழுக்கு சொந்தக்காரர் ! நீ நெய்யை அள்ளிக் கொட்டி விலங்கின் கொழுத்த இறைச்சியை வேகவைத்த போது உண்டான ஆவியில் உன் முகம் வியர்த்து ,கண்ணையும்  மறைக்க மெல்ல குறுநடை நடந்து சென்ற உன்னை வாரிப் புணர்ந்தாரே ! பேரன்பால்தான். எப்படித் தெரியுமா ?

 

ஏ ! பெண்ணே ! பசி மிகுந்த யானை தன் பருத்த காலால் நிலத்தை உதைத்துக் கொண்டு போகும் . அந்த களர் நிலம் பெரும் புழுதியை அந்த உதைப்பில் கிளறி விட்டுவிடும் . அந்த புழுதி மூட்டத்தில் தடுமாறி மெல்ல நடந்து நெடுந்தூரம் சென்று சிறிய பாறையில் ஏறி அங்குள்ள கிணற்றில் நீரை அருந்தி தாகம் தணிக்கும் அதுபோல் உன்னிடம் வந்துள்ளார் !

 

பார்த்தீரா ! நெய்யில் இறைச்சியை வேகவைத்த காட்சி இது ! தீயில் மானைச் சுட்டுத் தின்னும் காட்சி புறநானூற்றில் . வன் பரணர் பாடுகிறார் . மான் வேட்டை அன்றைய சமூகத்தில் குற்றச் செயல் அல்ல .இன்று இயலாது .

 

 “தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படுபவன் அரசன் நள்ளி. தோட்டி எனப்படுவது இப்போது தொட்டபெட்டா என அழைக்கப்படுகிறது .நீலகிரியின் உயர்ந்த சிகரம் இது . இந்த கண்டீரக் கோப் பெருநள்ளி வெட்டுவக் குலத்தினன் . வல்வில் வேட்டுவன் என்றும் அழைக்கப்படுகிறான்.


நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை  புலவர் வன்பரணர் பாடுகிறார் . குளிரில் நடுங்குகிறது பருந்து .அதன் சிறகு பியந்திருக்கிறது . அது போல புலவரது ஆடை  கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் நடந்து தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்குள் அவர் வந்துவிட்டாராம்.

 

வழியில் ஒருவன் இவரது வறுமைக் கோலத்தையும், உடல் நலிவையும் ,சோர்ந்த முகத்தையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிவிட்டு வந்து கொண்டிருக்கிறான் ,கையில் அணிந்திருந்த காப்பில் இரத்தக் கறைபடிந்திருந்ததாம்  ; தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம்.

 

பார்ப்பதற்கு  ஒரு செல்வக்குடியில் பிறந்தவன் போல்தான் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன்பே அவன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி ; தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம்.

 

உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகம் எனப்படும் காப்பையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம்.

 

புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம்.

 

பின்னர் புலவர் அங்கே உடன் வந்த சிலரைக் கேட்டாராம். அவர்கள் சொன்னார்களாம் , தோட்டி மலை மக்களைக் காக்கும்,"நளிமலை நாடன் நள்ளி". முன்பின் அறியாமல் அறிமுகம்கூட இல்லாமல் பசியாற்றி – அள்ளிக் கொடுத்ததை என்னென்போம் ! என்னென்போம் !”

 

நற்றிணை காட்டும் இன்னொரு காட்சி புதிதானது .பன்றிக்கறி இங்கு விருந்தாகிறது.


“
தினைக்கதிர் அளவு கடந்து விளைந்து கிடக்கிறது . சொரசொரப்பான கழுத்தையுடைய ஆண் பண்றியும் - தோலாய் வற்றிய கொங்கையுடைய பெண் பன்றியும் கணக்கின்றி தினைப்பயிரை மேய்ந்து தள்ளாடி நடந்தது .

 

தெருவின் ஒடுக்கத்தில் மறைந்திருந்த கானவன் - காட்டில் வாழ்பவன் ; ஆண் பன்றியை வில்லால் அடித்துக்கொன்று எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுக்கிறான் . அவளும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அதைப் பங்கிட்டுக்  கொடுத்து தானும் சமைத்து கணவனுக்குப் பரிமாறுகிறாள்.

இத்தகைய பண்பாடு நிலவும் மலை நாடே ! ஆண் யானை புலியை எதிர்பார்த்து இருக்கும் இரவில்கூட வர அஞசாதவனே! பாம்புப் புற்றை கரடிக் கூட்டம் தோண்டும் வழியில் வராதீர் ..” இப்படித் தொடரும் அப்பாடல் .

 

இது மாதிரிக்கு சொன்னதுதான் . இப்போதும் தமிழ்நாட்டில் புலால் உண்போர் 90 விழுக்காட்டிற்கு அதிகம் . இங்கே மதப் புனிதம் பேசி நம் வாய்க்குள் கையை விட்டு அவர் விருப்ப உணவைப் பறிப்பது தகாத கொடுஞ்செயல் அன்றோ !

 

 

எந்த இறைச்சியும் எமக்கு பகையில்லை !

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும்மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !



 

 

 “உண்மின் கள்ளே! அடுமின் சோறே!

எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!

வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,

இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,

ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல்,           5

கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!

பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்

மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,

மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட

தண் இயல் எழிலி தலையாது மாறி,      10

மாரி பொய்க்குவது ஆயினும்,

சேரலாதன் பொய்யலன் நசையே!”      

 

[ பதிற்றுப்பத்தில்  புலவர் குமட்டூர்க் கண்ணனார். ]

 

பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த

வெண் புறக் களரி விடு நீறு ஆடி,

சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்

பாஅர் மலி சிறு கூவலின் தணியும்

நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-      5

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,

கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட

விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,

சிறு நுண் பல் வியர் பொறித்த

குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.    10

 

 

– இளந்தேவனார் நற்றிணை [41]

 

 

 “கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,

தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்

உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,

மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,      5

வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,

செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,

தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,

இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,

கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,            10

தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்

தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்

இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்,

அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,

நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,           15

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,

விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,

பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்

பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம் என,

மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்       20

மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;

எந்நா டோ? என, நாடும் சொல்லான்!

யாரீ ரோ! எனப், பேரும் சொல்லான்;

பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;

இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி          25

அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்

பளிங்கு வகுத் தன்ன தீநீர்,

நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.            ”

 

புறநானூறு .150 .புலவர் வன்பரணர்,

 

 

 


   “ பிணர்ச் சுவற் பன்றி தோல் முலைப் பிணவோடு,

கணைக் கால் ஏனல் கைம்ம்மிகக் கவர்தலின்,

கலதர் அரும்புழை அல்கி , கானவன்

வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை,

புனை இரும் கதுபின் மலையோன் கெண்டி,

குடிமுறை பகுக்கும் நெடுமலை நாடே!

உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்

இரவின் அஞ்சாய் ! அஞ்சுவல் - அரவின்

ஈர் அனைப் புற்றம் , கார் என முற்றி

இரைதேர் என்கினம் அகழும்

வரைசேர் சிறு நெறி வாராதீமே !”

 

[ நற்றிணை - 336 ]

 

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும்மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

7 /9 /2022.

 

குறிப்பு :

சங்க இலக்கியம் – வாழ்வு சார்ந்து நான் எழுதிவந்த  “உரைச் சித்திரம்” எனும் இத்தெடர் இதுவரை 21 பகுதிகள் வந்துவிட்டன .25 பகுதியானதும் நிறைவு செய்யலாம் எனக் கருதுகிறேன் .உங்கள் கருத்து என்ன ?

சுபொஅ.7 /9 /2022.