இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

Posted by அகத்தீ Labels:

 

இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

 

 

என் நினைவு அடுக்குகளில் எங்கே தடவினாலும் மறக்க முடியாத தோழர் ஒருவர் என்னோடு பேசத் தொடங்கிவிடுகிறார் .

 

ஆம் .இன்று என்னோடு  பேசியவர் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவர் , இன்று ஆலமரமாய் ஓங்கி வளர்ந்திருக்கும் அச்சங்கத்தின் விதையும் வேருமாய் இருந்தவர் தோழர் பூ.நா.மூர்த்தி .

 

நான் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் அவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை .அப்போது சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியில் நான் செயல்பட்டேன் . வாலிபர் அமைப்பு எங்கும் பரவ வேண்டும் அதற்கு போக்குவரத்துத் தொழிலாளிகள் எந்த உதவியும் செய்யத் தயார் என சொன்னவர் .செய்தவர் .

 

அவர் உடல் நலிவுற்ற போது சந்திக்கும் என் போன்ற தோழர்களிடம் . “ வேளாவேளைக்கு சாப்பிடுங்கள் , உடல் நலத்தைப் பேணுங்கள் .நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது கட்சி ஆரோக்கியமாக இருப்பதற்கு மிக அவசியம்.” என வலியுறுத்துவார் .

 

அவரிடம் பழைய பிரசுரங்கள் ,ஆவணங்கள் எல்லாம் நிறைய உண்டு .அவர் மறைவுக்குப் பின் அவரது மருமகன் மூர்த்தி மூலம் பெரியமேடு தோழர் தண்டபாணி [அஞ்சல்துறை ஊழியர்] வழி பெரியமேடில் அமைக்கப்பட்ட தோழர் பி.ராமமூர்த்தி நூலகத்துக்கு வழங்கப்பட்டது . இப்போதும் அது இருக்கலாம்.

 

பொதுவாய் போக்குவரத்து தொழிலாளிகளுக்கோ ,மின் ஊழியர்களுக்கோ ,ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கோ தொடர்பு இல்லாத கிராமமோ நகரமோ இருக்கவே முடியாது . அவர்கள் நினைத்தால் எங்கும் நம் அமைப்பை விதைத்துவிட முடியும் . தோழர் ஏ.கே.கோபாலன் எழுதிய “ நான் என்றும் மக்கள் ஊழியன்” சுயவரலாற்று நூலில் இத்தகைய அனுபவத்தைப் பதிந்திருப்பார்.

 

சென்னையில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் ஆரம்ப நாட்களில் பல போக்குவரத்து தொழிலாளர்களும் மின் ஊழியர்களும் தங்கள் தொடர்புகள் மூலம் புதிய இடங்களில் வாலிபர் முன்னணி கிளை துவக்க உதவியதை எண்ணிப் பார்க்கிறேன் .

 

வாலிபர் சங்கம் பரவ குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களும் ,மின்வாரிய ஊழியர்களும் என தோள் கொடுத்த அனுபவம் சொல்லச் சொல்ல விரியும்.

 

வாலிபர் சங்கம் தன் நிதித் தேவைக்கு உண்டி ஏந்தி சென்ற போதெல்லாம் இவர்கள் கொடுத்த அரவணைப்பு சொல்லில் அடங்கா . சம்பள தினத்தில் போக்குவரத்து டெப்போக்கள் ,மின்வாரிய அலுவலகங்கள் செல்வோம் . வாயிலில் நின்று உண்டி வசூல் செய்வோம் .உடன் நின்று நிதி வசூலுக்கு உதவுவதோடு டீயும் , உணவும் தந்து வழியனுப்பிய நிகழ்வுகள் அடடாவோ அடடா!

 

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போக்குவரத்திலும் மின்வாரியத்திலும் மம்மது ,ரைமாண்ட் ,செல்வராஜ் ,அன்பழகன் ,சின்னத்துரை ,மதுரை ,முத்துசாமி இப்படி  ஏராளமான தோழர்கள் பெயரைக் குறிப்பிட ஆசை ஆயினும் எனக்கும் ஞாபக மறதி உண்டே , எனவே ஒருவரைக் குறிப்பிட்டு இன்னொருவரை குறிப்பிடாவிட்டால் பிழையாகிவிடுமே என் செய்ய ?

 

எடுத்துக்காட்டாய்ச் சொல்வதாயின் சென்னை வியாசர்பாடி ,பக்தவச்சலம் நகர் ,சாஸ்திரி நகர் சுற்றுவாட்டாரம் முழுவதும் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப உறுதுணையாக இருந்த தோழர்கள் லூர்து ,ராமு உள்ளிட்ட போக்குவரத்துத் தோழர்களைச் சொல்லலாம்.

 

தோழர் கேசவமூர்த்தியைச் சொல்லாமல் இருக்க முடியாது . போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் ஆகி பல வருடம் வழக்கு நடத்தி பணியில் சேர்ந்தவர் .கொஞ்சம் கரடு முரடாகப் பேசுவார் .கட்சி மீதான விசுவாசத்திலும் ஓடோடி உதவி செய்வதிலும் , போராட்டம் எனில் முன்நிற்பதிலும் சளைக்காத தோழர் கேசவமூர்த்தி. தோழர் புலவர் கஜேந்திரனோ இனிக்க இனிக்க பேசி அரவணைப்பவர் . திருவள்ளூர் மாவட்டத்தில் இவரால் வெங்கம் பகுதியில் கிடைத்த தொடர்புகள் குறிப்பிடத்தக்கது .

 

பட்டியல் பெரிது எனவே முழுவதும் சொல்லவில்லை.

 

அதேபோல் இந்தியன் ஆயில் டி எஸ் ரங்கராஜன் ,எல் ஐ சியில்  கே என் கோபாலகிருஷ்ணன் , ரிசர்வ் வங்கி உ.ரா.வரதராஜன் .முண்டன் என பல தோழர்கள் இளைஞர்களுக்கு கொடுத்த ஆக்கமும் ஊக்கமும் அளவில .

 

இன்றைக்கு அரசின் கண்ணும் காதும் மூக்கும் கிராமம் குக்கிராமம் வரை உண்டு என சொல்லுவார்கள் .அது உண்மையே .

 

ஆயின் போக்குவரத்தும் மின்சாரமும் கல்வியும் எங்கும் வியாபித்து இருக்குதே .நம் உழைக்கும் வர்க்கம் அரசியல் ஞானம் பெற்றால் – அரசியல் விழிப்பு பெற்றால் – அரசியல் அர்ப்பணிப்பு வரப்பெற்றால் நம்மைவிட வலைப்பின்னல் போன்ற வலு யாருக்கு கிடைக்கும் ?

 

ஆரம்பப்பள்ளி ,உயர்நிலைபள்ளி ஆசிரியர்களுக்கு சமூக விழிப்புணர்வும் வர்க்க அரசியல் விழிப்புணர்வும் உறுதியாகிவிட்டால் நாம் விரும்பிய மாற்றம் வெகுதொலைவில் இல்லை .

 

விடுதலை போராட்ட காலத்தில் இருந்தது . தமிழகத்தில் திராவிட அரசியலின் தோற்ற காலத்தில் இருந்தது ,கேரள மேற்குவங்க மாநிலங்களில் துவக்க கால இடதுசாரி அரசியலின் வேராய் இருந்தது .

 

இப்போது மதவெறிக்கு எதிரான போரில் மிக வலுவாய்த் தேவைப்படுகிறது .

 

இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

 

உழைக்கும் வர்க்கத்தை அரசியல்படுத்துவதே ஆகும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

12/4/2022.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உரைச் சித்திரம் : 6

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 6

 



எதைத் தொட்டாலும்

இயற்கையைத் தொடாமல் பாடமாட்டார் … …. ….

 

 

கடற்கரை எனில் எவ்வளவோ இருக்கும் . ஒவ்வொன்றையும் உற்று நோக்கி ரசித்து வியந்து வாழ வேண்டும் . இயற்கையின் அற்புதங்கள் தோண்டத் தோண்ட சுவைக்கும் .

 

அதோ பாருங்கள் அந்தக் கடற்கரையில் !

 

ஒரு பெண் ஆமை ஊர்ந்து நகர்ந்து செல்கிறது . அதுவும் நிறைமாதக் கர்ப்பமான பெண் ஆமை . இப்போதோ சிறிது நேரத்திலோ முட்டை இட்டுவிடும் .

 

கடல் மண்ணில் படர்ந்திருக்கும் அடும்புக் கெடியை சிதைத்து – மணலைத் தோண்டி குழியாக்கி – அதில் முட்டையிட்டு பின் மணலால் மூடி அவ்விடத்தை மேடாக்கிவிடும் அந்த பெண் ஆமை . எப்படித் தெரியுமா ?

 

கோடு  வட்டு விளையாட்டு ; அதாவது கோலிக்குண்டை குழியில் வீழ்த்தும் விளையாட்டு .அதுபோல் தான் தோண்டிய குழியில் முட்டையிட்டு மூடிவிடும் அந்த பெண் ஆமை . அந்த முட்டை வளைந்த யானைத் தந்தம் போன்று வெண்மையாக இருக்கும் .  புலால் நாற்றம் மிக்கதாய் இருக்கும்.

 

முட்டையிட்டுவிட்டு பெண் ஆமை நகர்ந்து போய்விடும் .அதன் பின் அதன் இணையான பிளந்த வாயை உடைய ஆண் ஆமை வந்து அந்த முட்டையை அடை காத்து நிற்கும் . எதுவரை தெரியுமா ?

 

முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும் வரை காத்து நிற்கும் .

 

ஆக ,ஆமைகள் கூட முட்டை இடுவதிலும் குஞ்சு பொரிப்பதிலும் ஆணும் பெண்ணும் சமபங்கு வகிக்கும் அறம் வியக்கவைக்கிறது .

 

இயற்கையின் இந்த அற்புதத்தை விவரித்துவிட்டு ; அதைத் தொட்டு மேலே செல்கிறார் நம் புலவர்.

 

இப்படிப்பட்ட ஆமைகள் மிகுந்துள்ள கடற்கரைச் சோலையை தன் வலிமையான குதிரை பூட்டிய தேரில் கடந்து வருகிறான் நம் கவிதை நாயகன் . எப்படி வருகிறான் தெரியுமா ?

 

முன்பு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகய் கள்ளத்தனாக வந்து போனவன் ; இன்று ஊரெல்லாம் அறிந்து கொள்ளும்படி மிடுக்காய் வருகிறானாம்.

 

அன்று தனியே வந்தவன்,இப்போது தோழர்களோடு வருகிறானாம். அவர்கள் அந்த ஊர்ப்பெண்களெல்லாம் வேடிக்கை பார்க்கும் படி ஆரவாரமாய் கூக்குரலிட்டபடி வருகிறார்களாம் .

 

அன்று குதிரை வேகமாய் ஓடாமல் மெதுவாய் தேரை ஓட்டிக்கொண்டு வந்தவன். இன்று குதிரை  கம்பீரமாய் சடக் சடக்கென பாய்ந்து வரும்படி ஓட்டிக்கொண்டு வருகிறானாம்.

 

இதனைக் கண்டு அஞ்சுகிறாயா தோழி ! அஞ்சாதே ! ஊரறிய மணம் முடிக்கவே வருகிறான் எனத் தோழி சமாதானம் செய்தாளம் .

 

கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் அமைந்த குமுழிஞாழல்  ஊரில் வாழந்த நப்பசலையார் எனும் பெண்பாற் புலவர் இவ்வாறு பாடி இருக்கிறார் . அகநானூற்றில் இப்பாடல் இடம் பெற்றிருக்கிறது .

 

காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை எனப்படும் . அந்நிலம் பொதுவாய் மேடு பள்ளம் மிகுந்ததாய்க் காணப்படும் .

 

தேர்க் குதிரைகளை தாட்டுக் குச்சியால் முடுக்கினால் அம்பு போல் வேகமெடுக்கும் மிகுந்த ஓசை எழும் ஆகவே அப்படிச் செய்யாமல் கடிவாளத்தைப் பதமாகப் பிடித்து ஓசை படாமல் நைசாக வருவானாம் .

 

இப்படி இரவில் வரும் அவனது கூரிய தேர்ச் சக்கரத்தில் சிக்கிய அடும்புக் கொடி பாம்பு படம் எடுப்பது போல் உயருமாம் ; படம் எடுத்த பாம்பின் உச்சியில் நெய்தல் மலர் சூடியது போல் அக்காட்சி இருக்குமாம் .

 

 

மழை பொழிந்து ஓய்ந்திருக்கிறது .மழை நீர் பள்ளங்கள் தோறும் தேங்கி இருக்கிறது .

பல இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் இசைப்பதுபோல் வாயைப் பிளந்து தவளைகள் தேங்கிய நீரில் குதித்தபடி உற்சாகமாய் இரைகின்றன .

 

சிறிய புதர்கள் நிறைந்திருக்கிறது .அப்புதர்களில் பிடவம் பூக்கள் நீண்ட காம்புகளுடன் பூத்து செந்நிலப் பரப்பில் வெண்மணல் போலக் கொட்டிக் கிடக்கின்றன.

 

 

வழி நெடுக நச்சுப்பை விரித்தபடி நிற்கும் நாகப் பாம்பு போல கோடல் மலர்கள் இதழ்களை விரித்திருக்கின்றன.

 

 

வளைந்த கொம்புகளை உடைய இரலை மான்  அங்கே தேங்கி இருக்கும் நீரை - தெளிந்த நீரைப் பருகிவிட்டு தான் விரும்பும் பெண் துணையோடு மகிழ்ந்து குலாவுகிறது.

 

 

தேரை ஓட்டிச் செல்பவனே ! இப்படி அழகும் அமைதியும் பூத்துக் குலுங்கும்  குளுமை மிகுந்த காட்டின் வழியே உன் தேரை ஓட்டிச் செல்வாயாக !

 

 

தேரை இழுத்துகொண்டு ஓடும் குதிரை களைப்படைந்துவிடாமல் இருக்குமாறு பார்த்து பக்குவமாய்த் தேரை ஓட்டிச் செல்வாயாக !

 

பிடரி மயிர் கொய்யப்பட்டுவிட்ட குதிரை . அதனை லாவகமாக ஓட்டு ! கழுத்து மணியோசை ஊரை எழுப்பிவிடாதபடி ஓட்டு !

 

 

என் மீது காதல் கொண்ட பெண்ணை – அழகிய மாநிறம் கொண்ட பருவ மங்கையை – விரைந்து நான் காதல் பொங்க தழுவ வேண்டும் !

 

 

என் ஆசை அறிந்து தேரினை ஓட்டிச் செல்வாயாக !

 

 

போர் முடிந்து ஊர் திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்கு சொல்லுவதாய் இப்பாடலை எழுதி இருக்கிறார் பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் எனும் பெண்பாற் புலவர் .

 

 

அகநானூறு காட்டும் இவ்விரண்டு காதல் காட்சியிலும் செய்தி என்னவோ மிகச் சிறியதுதான் .ஆனால் ,அதைச் சொல்லுவதற்கு முன் இயற்கையை வியந்துரைக்கும் பாங்கு அற்புதம் .அற்புதம் .

 

 

சங்க இலக்கியம் நெடுகிலும் வீரத்தை பாடினாலும் , காதலைப் பாடினாலும் , துயரத்தைப் பாடினாலும் ,அறிவுரை சொல்லப் பாடினாலும் வாழ்க்கையோடு இயைந்த எதைப்பாடினாலும் அது இயற்கையோடு இயைந்திருக்கும் .

 

 

இயற்கையைத் தொடாமல் எதையும் பாடவே தெரியாது சங்கப் புலவனுக்கு . அப்படி இயற்கையோடி இயைந்து வாழ்ந்தவர் தமிழர் எனில் நமக்கு சொல்லவே இனிக்கும் தானே ! வேறெந்த மொழியிலும் இந்த அளவு இயற்கையோடு ஒன்றிய இலக்கியம் இல்லை என்கின்றனர் ஆய்ந்தறிந்த பெருமக்கள்.

 

 

மாதிரிக்கு இரண்டை இங்கே காட்சிப் படுத்தினேன். இரண்டும் பெண்பாற் புலவர் பாடியது என்பது சிறப்புச் செய்தி.

 

 

இன்னும் பலதை பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கலாம்.

 

 

“ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?

நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.

 

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த     5

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:

 

 

முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல

வாவு உடைமையின் வள்பின் காட்டி,   10

ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி

 

 

செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி

நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,

பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,

இர வந்தன்றால் திண் தேர்; கரவாது    15

 

 

ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்

அரவச் சீறூர் காண,

பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.”

 

 [ அகநானூறு : 160 ]

 

 

 

“படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,

 

வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;

 

ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.”

 

அகநானூறு : 154

 

எதைப்பாடினாலும் அது இயற்கையோடு இயைந்து பாடுக !

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

9/4/2022.

இயற்கையும் பயங்கரவாதியோ!

Posted by அகத்தீ Labels:

 

இயற்கையும் பயங்கரவாதியோ!

 

 


கொதிக்கும் வெயில் கண்டு

சூரியனை சபிப்பாயோ ?

சூரியன் அணைந்துவிட்டால்

பிரபஞ்சத்தின் கதி என்ன ?

 

கொட்டும் மழை கண்டு

வானத்தை சபிப்பாயோ ?

வானம் பொய்த்துவிட்டால்

குடிப்பதற்கும் வழியுண்டோ ?

 

கொந்தளிக்கும் சுனாமி கண்டு

கடலைச் சபிப்பாயோ ?

கடலும் வற்றி வறண்டுவிட்டால்

கற்பனையே மிரட்டுமன்றோ ?

 

இயற்கை பெருங் கொடையே

சீற்றங்கள் அதன் இயல்பே

சீற்றங்கள் எப்போது எழும் ? - அநீதி

சகிக்க முடியாத போதன்றோ ?

 

 

காட்டை அழிக்கவும் எல்லை உண்டு

பூமியை தூர்க்கவும் எல்லை உண்டு !

குப்பையைக் கொட்டவும் எல்லை உண்டு !

எல்லைமீறின் இயற்கையும் பயங்கரவாதியே!

 

இயற்கையை புரிந்திடுக – மனிதா!

இயற்கையோடு இயைந்து வாழ்க !

அணைத்தால் இனிக்கும் இயற்கை!

பகைத்தால் அழிக்கும் இயற்கை !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

7/4/2022.

ஆவணங்களைத் தேடி….

Posted by அகத்தீ Labels:

ஆவணங்களைத் தேடி….

 

நான் என் கட்சி அரசியல் வாழ்வில்  நினைவுகளை அசைபோட்டு பதிவுகள் சிலவற்றைப் போட்டேன் . அதனையொட்டி  தோழர்கள் சிலர் அப்போதைய புகைப்படங்களை சேர்த்து பதிவிடலாமே என கருத்து தெரிவித்தனர் .

 

முதலாவதாக அன்றைய காலகட்டத்தில் அலைபேசி கிடையாது ,ஷெல்பி கலாச்சாரத்துக்கு வாய்ப்பே இல்லை . ஒரு ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்து தீக்கதிருக்கு அனுப்புவது என்றாலே பணம் தேவைப்படும் காலம் எனவே அக்காலத்தில் படங்கள் குறைவு .

 

இரண்டாவதாக , தங்களை முன்னிலைப் படுத்துவதை பெரிதாக விரும்பாத காலம் அது . நான் பொதுவாக புகைப்படங்களில் ஆர்வம் காட்டியதில்லை . புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை .எனக்குத் தேவையும் இல்லை.

 

 ‘ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தணம்’ என்பது போல எந்த நிகழ்வாயினும் அதில் தாம் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படாவிட்டாலும் - அழைப்பிதழிலே பெயர் இடம் பெறாமல் இருந்தாலும் , மேடையில் கூச்சப்படாமல் ஏறி உட்காருவோர் அப்போதும் உண்டு . போட்டோக்களில் எங்கே நின்றால் உட்கார்ந்தால் தன் முகம் நன்கு பதிவாகும் என்கிற கணக்கோடு நிற்போர் உண்டு . இப்போதும் அத்தகையோர் உண்டு .

 

மேடையில் யார்யாரை எங்கெங்கு உடகாரவைப்பது என்பது நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது . அதற்கென சில ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியமும் கூட . ஆனால் சிலருக்கு அது பொருட்டே அல்ல . அன்றும் இன்றும் இதனை நாகரீகமாக உணர்த்துவது எளிதாக இல்லை .

 

சிலருக்கு இயல்பாகவே போட்டோ ஃபேஸ் இருக்கும் .அழகாகத் தெரிவர் . எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் முகம் பளிச்சிடும் .சிலரை எத்தனை போட்டோ எடுத்தாலும் உம்மென்றே இருப்பார் . சிரிப்பு மருந்துக்கும் இருக்காது .

 

பொதுவாய் போட்டோ கான்சியஸ் - போட்டோவின் மீதான கவனம் முன்னைவிட இப்போது அதிகரித்திருக்கிறது .சில வேளை கொஞ்சம் அதீதமாகவும் போய்க் கொண்டிருக்கிறது .

 

ஆயிரம் சொன்னாலும் புகைப்படங்கள் முக்கிய ஆவணம் என்பதை மறுப்பதற்கில்லை . ஆகவே புகைப்படங்களையும் ஆவணப்படுத்துவது தேவையாகிறது .

 

நம்முடைய மூத்த முன்னோடிகள் பலரை நாம் மறந்தே விட்டோம் . பெயரை நினைவுக்கு கொண்டு வருவதே மிகச் சிரமம் . முகத்தை நினைவுக்கு கொண்டு வருவது இன்னும் சிரமம் .

 

தயவுசெய்து கட்சி அலுவலகங்களில் புகைப்படங்களின் கீழ்  பெயரை குறிப்பிட்டு வையுங்கள் .இயன்றால் அவரைப் பற்றி மூன்றோ நான்கோ வரிகளில் சிறு குறிப்பும் வைத்தால் நல்லது . புதிதாக வருவோர் அறிந்துகொள்ள ஏதுவாகும் .

 

நம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகங்கள் ,இதர அமைப்புகளின் அலுவலகங்களில் ஊரறிந்த தலைவர்களில் புகைப்படம் இடம் பெறுகிறது மிக்க மகிழ்ச்சி .

 

ஆயின் , ஒவ்வொரு மாவட்டத்திலும் நினைவு படுத்த வேண்டிய தோழர்கள் ,வேராய் இருந்த தோழர்கள் பலர் உண்டு . அவரின் புகைப்படங்கள் உண்டா இல்லையே !

 

எடுத்துக்காட்டாக, சென்னை மாவட்டக் குழு அலுவலகங்களின் சுவற்றில் தோழர்கள் கஜபதி , சி பி தாமோதரன் , கே எம் ஹரிபட் , பி .ஜி .கே .கிருஷ்ணன் , எஸ்  கே சீனிவாசன் , மேயர் எஸ் கிருஷ்ணமூர்த்தி ,ருக்குமணி அம்மாள் , சாரி ,சர்க்கரைச் செட்டியார் என நீளும் பட்டியலில் உள்ளோர் படங்கள் உண்டோ ?  

 

இதை எழுதும் போது என்னால் பல தோழர்களின் பெயரையும் முகத்தையும் நினைவுக்கு முழுதாய் கொண்டுவர முடியவில்லை . சொல்ல வேண்டிய பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதே உண்மை .

 

சென்னை [ அதாவது இன்றைக்கு ஆறு மாவட்டங்கள்]  வரலாறே எழுதப்படவில்லை .யாருக்கும் அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை .இந்த லட்சணத்தில் இந்தப் படங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள் என தோழர்கள் சிலர் புலம்புவதும் காதில் விழுகிறது . நாம் சங்கை ஊதிவைப்போம் … யாருக்காவது சரியெனத் தோன்றலாம் அல்லவா ?

 

 

இளைய தலைமுறையே ! நீங்கள் உங்கள் முன்னோடிகளைத் தேடித்தேடி உரிய இடம் அளிப்பீர் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அது காலத்தின் தேவை அல்லவா ?

அதுபோல் நாட்டை உலுக்கிய போராட்டங்களின் புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதுவும் வரலாற்றின் ஓர் அங்கமே ! அதுமட்டுமா ? இப்போதெல்லாம் வீடியோக்களும் ஆவணமே ! ஆக ,இனி ஆவணக் காப்பு என்பது பொருட் செலவும் தொழில்நுட்ப ஞானமும் கலந்ததே !

 

இடையில் ஒரு நினைவு , திமுக தொழிற் சங்கமான தொமுச பேரவையின் வரலாறு நூலாக வந்துவிட்டது .சிஐடியு வரலாறு எப்போது வரும் ?

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பே உலக தொழிற்சங்க உதவியுடன் தமிழக தொழிற்சங்க போராட்ட வரலாறு தொகுக்கும் பணி நடைபெற்றது .தோழர் சந்திரசேகரன் நாயர் அதில் பணியாற்றியதாக நினைவு .

 

ஆக ஆவணங்கள் இருக்கும் . இந்திய மாணவர் சங்கத்தோடு தொடர்புடைய வரலாற்று மாணவர்களும் இருப்பர் . சிஐடியு வரலாற்றை எழுதலாமே !

 

ஆவணங்களை சேகரிப்பீர் ! பாதுகாப்பீர் ! நிச்சயம் எதிர்காலம் நம் வரலாற்று வேரைத் தேடும் . தவிக்கவிட்டுவிடாதீர்கள் !

 

என் எதிர்பார்ப்பும் ஆசையும் நிறைவேறும் காலம் விரைவதாக !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம். 5/4/2022.

 .


உரைச் சித்திரம் : 3.

Posted by அகத்தீ Labels:

 உரைச் சித்திரம் : 3.

 

குறை நிறைகளோடு பழகுவோமே !

 

 

ஒவ்வொரு மரத்துக்கும் ஓர் இயல்பு உண்டு . அதை நம் சமூகம் நன்கறியும் .

 

கமுகு மரத்தை அதாவது பாக்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ; நாள் தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் . அப்போதுதான் காய்த்துக்கொண்டே இருக்கும் .தண்ணீர் பாய்ச்சுவது நின்றுபோனால் காய்ப்பதும் நின்று போகும் .

 

தென்னை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வப்போது அதாவது விட்டு விட்டு நீர் பாய்ச்சினும் காய்ப்பதை நிறுத்தாது .

 

அதே வேளை பனை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எப்போதோ பாய்ச்சிய தண்ணீருக்கு காலம் முழுவதும் பயன் தரும் .

 

நட்பும் அப்படித்தான் . சிலர் நட்பு பாக்கு மரம் போன்றது , பணத்தால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே நட்பு நீடிக்கும் . சற்று வற்றினாலும் நட்’பூ’ உலர்ந்து உதிர்ந்து விடும்.

 

சிலர் நட்பு தென்னை போல அவ்வப்போது அதாவது வாய்ப்புள்ள போது மட்டும் பணமோ உதவியோ செய்து மகிழ்ந்தால் போதும் ; காலம் நெடுக நட்’பூ’ புன்னகைக்கும் .

 

சிலர் நட்பு பனை போன்றது . எப்போதோ செய்த ஒன்றை வாழ்நாள் முழுவதும் மறவாது கொண்டாடும் .குதுகலிக்கும் .நட்’பூ’ மணம் வீசிக்கொண்டே இருக்கும் .

 

இந்த நட்பு நீடிக்க என்ன செய்ய வேண்டும் ?

 

அரிசியாக அப்படியே விளைவதில்லை . நெல்லாகவே விளையும் .நெல்லில் உமி இருக்கும் . உமியை நீக்கித்தான் அரிசியை எடுக்க வேண்டும் . உமி இருக்கிறது என்பதால் அரிசி வேண்டாம் சோறு வேண்டாம் எனச் சொல்ல முடியுமா ?

 

பொங்கிப் பாயும் தண்ணீரில் நுரை கொப்பளித்து வரும் .எனக்கு நுரை பிடிக்காது எனவே தண்ணீரே வேண்டாம் எனச் சொல்வோமா ?

 

அழகிய பூவாயினும் அங்கு அதில் புல்லி வட்டம் இருக்கும் , ரோஜா பூவை எடுத்தால் முள் இருக்கும் . ஆதலால் பூக்களை வெறுப்போமோ ?

 

நாம் நண்பராக வாரி அரவணைத்தவரிடமும் சில குற்றங் குறைகள் இருக்கும் . குற்றங் குறை இல்லாத மனிதர் யார் ? குற்றம் பார்க்கின் சுற்றம் உண்டோ ? நட்பு உண்டோ ?

 

காதலாயினும் நட்பாயினும் குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதுதானே வாழ்வை இனிதாக்கும் ! சின்னச் சின்ன குற்றங்களைக் கண்டு வெறுக்கத் துவங்கினால் ஒவ்வொருவரும் தனித்தே இருக்க வேண்டியதுதான்.

 

நாம்தான் அணை கட்டுகிறோம் .தண்ணீரைத் தேக்குகிறோம். ஏதோ காலச் சூழலால் அணை உடைந்து நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது . கோபப்பட்டு என்ன செய்ய ?

 

அதற்காக மீண்டும் அணை கட்டாமல் இருக்க முடியுமா ?தண்ணீரைத் தேக்காமல் இருக்க முடியுமா ?

 

சில நேரங்களில் நாம் விரும்பி நட்பு கொண்டோர் நாம் வெறுக்கும் சில செயல்களைச் செய்துவிடக்கூடும் . சொற்களைக் கொட்டிவிடக்கூடும் . அந்த ஒன்றைச் சொல்லியே நட்பை காவு கொடுக்க இயலுமா ? காதலுக்கும் இதுவே !

 

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் – அதாவது பிளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் கலந்துதான் நட்பும் காதலும் .அப்படியே ஏற்பதும் தொடர்வதுமே வாழ்க்கையின் வெற்றி !

 

இப்படி எல்லாம் நம்மை செப்பனிடும் நல்ல வழிகாட்டியே சங்க இலக்கியங்கள் .நாலடியார் வரைந்த சில செய்திகளை இங்கு தீட்டிக் காட்டினேன் .

 

நீங்களும் அசை போடுங்கள் !

 

 

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

216



நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

221




செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.                                        222



 

குறை நிறைகளோடு மக்களை அரவணைக்கப் பழகுவோமே !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24/3/2022.

aaa.jpg