நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 11.

Posted by அகத்தீ Labels:

 


 

 

சடங்கு சம்பிரதாயங்களை மீறுகிறப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் வீட்டுக்குள்ளும் நடத்த வேண்டியிருக்கிறது .இதில் தோல்விகூட கிடைக்கலாம் , ஆயினும் விடாது முயற்சிக்க வேண்டும் . குடும்ப ஜனநாயகமும் இந்த போராட்டமும் முரண்படவும் நேரிடலாம் .தொடர்ந்து பயிற்றுவிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 11.

 


என் தம்பி ஐயப்பனுக்கு தோழர் ஏ நல்லசிவன் தலைமையில் ராஜபாளையத்தில் திருமணம் நடந்தது . போராட்ட களத்திலும் சிறையிலும் தோழர் ஏஎன் உடன் ஒன்றாக இருந்த  கட்சியின் மூத்த தோழர் எம் .மீனாட்சிசுந்தரத்தின் மகள்தான் மணமகள் . தோழர் டி .ஜானகிராமன் ,வே .மீனாட்சிசுந்தரம் முயற்சியில் இத்திருமணம் கைகூடியது .

 

திருமணத்தில் வாழ்த்திப் பேசும்போது தோழர் ஏ என் சொன்னார் , “ தோழர் சுபொ தன் திருமணத்தை மட்டுமல்ல தன் தம்பி திருமணத்தையும் ஐயர் இல்லாமல் நடத்தியுள்ளார் . பாராட்டுக்குரியது அதே போல் தோழர்  எம் எம் எஸ் சும் தன் வீட்டாரை ஒப்புக் கொள்ளவைத்து இப்படி திருமணத்தை நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது . இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் ,நான் என் வீட்டாரை இது போன்ற திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை . நான் தோற்ற இடம் , தோழர் சுபொவும் எம் எம் எஸ்சும் ஜெயிச்சிருக்காங்க…மனசாரப் பாராட்டுகிறேன் .”

 

இப்படி மனம் திறந்து பாராட்டவும் பேசவும் திறந்த மனதும் துணிச்சலும் தேவை . இங்கு என் நினைவுக்கு ஓர் செய்தி வருகிறது . அவசரகாலம் முடிந்ததும் சென்னை இராயபுரத்தில் சிபிஎம் மாநில மாநாடு நடைபெற்றது . அம்மாநாட்டில் நெல்லைத் தோழர் பாலவிநாயகம் தன் விவாதத்தின் ஊடே தோழர் ஏஎன் வீட்டில் சடங்கு ,சம்பிரதாயம் கடைப்பிடிப்பது சரியா என கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினார் . இறுதியில் தொகுப்புரை வழங்கிய தோழர் ஏபி சொன்னார் .கட்சித் தோழர்கள் சடங்கு சம்பிரதாயத்தை  தவிர்க்க வேண்டு . அதிலும் கட்சி மாநில , மாவட்ட மட்டத்திலுள்ள தோழர்கள் இது கட்டாயம் தவிர்க்க வேண்டும். தோழர் ஏஎன்னுக்கும் அதையே வலியுறுதுகிறோம் .அவர் வீட்டுச் சூழல் காரணமாக சில சமரசங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கிறது . எல்லோருக்கும் இந்த சவால் இருக்கிறது . கம்யூனிஸ்டுகள் வீட்டில் சர்வாதிகாரியாக இருக்கமுடியாது . இருக்கவும்கூடாது . ஏனையோர் நம்பிக்கையை நசுக்க முடியாது . இது மிகவும் சிக்கலான பிரச்சனை . கம்பியில் நடப்பது போன்ற சர்க்கஸ் .”

 

என் தம்பி கல்யாணத்தில் தோழர் ஏஎன் பேசியதை மேற்கண்ட சம்பவத்தோடு இணைத்துப் பார்த்தால் அவர் உள்ளத்தில் நீண்டநாள் புழுங்கிக் கொண்டிருந்த விஷயம் என உணரலாம்.

 

மூத்த தோழர் சோம்நாத் சாட்ட்ர்ஜி தன் தந்தை மறைவை ஒட்டி தந்தையின் கடைசி விருப்பப்படி கடுமையாக சடங்காச்சாரத்தை கடைப்பிடிக்க நேர்ந்தது .ஊடகங்களில் பரபரப்பானது . கட்சியின் மத்தியக் குழுவும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது .

 

சடங்கு சம்பிரதாயங்களை மீறுகிறப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் வீட்டுக்குள்ளும் நடத்த வேண்டியிருக்கிறது .இதில் தோல்விகூட கிடைக்கலாம் , ஆயினும் விடாது முயற்சிக்க வேண்டும் .குடும்ப ஜனநாயகமும் இந்த போராட்டமும் முரண்படவும் நேரிடலாம் .தொடர்ந்து பயிற்றுவிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

 

இதே போன்ற இன்னொரு கேள்வி தொடர்ந்து கட்சிக்குள் விவாதமாகும் .கட்சித் தோழர்கள் தன் மனைவியை மாதர் சங்கத்தில் இணைப்பது ,பிள்ளைகளை மாணவர் ,வாலிபர் சங்கங்களுக்கு அனுப்புவது இரண்டிலும் தொய்வு உள்ளதே . அதிலும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய தோழர்களே சறுக்குவதும் நடக்கிறதே .

 

இது குறித்து ஓர் விவாதத்தில் தோழர் ஏஎன் சொன்னார் , ” நம் விருப்பம் ,வேண்டுகோள் எல்லாம் இதுதான் , ஆனால் இதனை மனைவி மீதோ ,மகள் மீதோ ,மகன் மீதோ கட்டாயமாகத் திணிக்க முடியாதே ! என் போன்றோர் வாழ்வின் பெருங்காலம் சிறை ,தலைமறைவு ,போராட்டம் எனப் போனதால் குடும்பத்தில் எங்களில் சிலரால் போதுமான தலையீடு செய்ய முடியாமல் போயிற்று .இன்றைக்கு அப்படி இல்லை . நாம் குடும்பத்தில் எப்படி நடக்கிறோமோ அப்படித்தான் மனைவியும் பிள்ளைகளும் நம்மை மதிப்பார்கள் . முதலில் உங்கள் குடும்பம் உங்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள் .அதன் பின் நீங்கள் கோருவது தானே நடக்கும் .இது ஒரு வழிப்பாதை அல்ல .இருவழிப்பாதை.” என்றார் . [ நினைவில் இருந்தபடி எழுதுவதால் வார்த்தைகள் முன்பின் இருக்கும் .ஆயினும் கருத்து அதுவே ]

 

சைதை தேரடியில் பெருமுயற்சி எடுத்து தமுஎகச முதல் கலை இரவை நடத்துகிறது . சென்னையில் இவ்வடிவம் வெற்றிபெறுமா என்கிற பெரும் கேள்விக்குறியோடுதான் எல்லோரும் இருந்தோம் .தோழர்கள் ஆர் உத்தண்டராமன் , சைதை ஜே  உள்ளிட்ட ஒரு படை இயங்கியது . கலையிரவு துவங்குவதற்கு கால் மணிநேரம் முன்பு ஒரு முதியவர் முன்வரிசை நாற்காலியில் வந்து உட்காருகிறார் . அப்போதுதான் பார்க்கிறோம் அவர் ஏஎன் . அவரை நெருங்கி தோழர்கள் மேடைக்கு அழைக்கிறோம் . நான் கலையிரவைப் பார்க்கவே வந்தேன் .நீங்கபாட்டுக்கு மற்ற வேலைகளை கவனியுங்க என அனுப்பிவிட்டு விடிய விடிய உட்கார்ந்து கவனித்தார் .பனி கொட்ட ஆரம்பித்ததும் தலையில் துண்டு போட்டுக்கொண்டார் .

 

இடையில் இரண்டு மூன்று முறை டீ கொடுத்த தோழர்கள் சர்க்கரை போட்டு கொடுத்துவிட்டார்கள் . அவரும் குடித்துவிட்டார் . பின்னர் கேட்கையில் பரவாயில்லை தோழர்கள் கஷ்டப்பட்டு ஓடி ஓடி வேலை செய்யுறாங்க .இது ஒரு பிரச்சனையே இல்லை என்றார் . இன்னொன்று எப்போது ஸ்விட்டை நீட்டினால் எடுத்து சாப்பிட்டுவிடுவார்  .அவர் இயல்பு அப்படி .

 

தோழர் ஏஎன் ஓர் சினிமாப் பிரியரும்கூட எல்லா படத்தையும் பார்த்துவிடுவார் . “இரவு சீக்கிரம் சாப்பிட்டால் நைட் ஷோ போகிறார்னு அர்த்தம்டா ,ஆனா யாருகிட்டயும் சொல்ல மாட்டான் , அவனே ஒற்றையா கிளம்பிவிடுவான்,” என தோழர் ஆர் ஆர் கேலி செய்வார் . நானும் வேறு சில தோழரும் இரவுக் காட்சிக்குப் போய் திரும்பிப் பார்த்தால் அவர் இருப்பார் . தோழர் பி ஆர் பியும் சினிமா பார்க்கத் தவறமாட்டார் .

 

தோழர் ஏஎன் கையில் எப்போதும் ஒரு பாக்கெட் டிரான்சிஸ்டர் இருக்கும் .ஒரு செய்திவிடமாட்டார் .கேட்பார் .கிரிகெட் மேட்ச் தொடங்கிவிட்டால் காதோடு டிரான்சிஸ்டரை ஒட்டிவிட்ட மாதிரி திரிவார் . கிரிகெட் கமெண்டரியைக் கேட்டுக்கொண்டே இருப்பார் . ஏதேனும் கமிட்டிக் கூட்டம் நடந்தால் அடிக்கடி வெளியே வந்து கிரிகெட் ஸ்கோரைக் கேட்பார் .

 

புரட்சிக்காரன் ,கம்யூனிஸ்ட் யாராயினும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றிரண்டில் கூடுதல் நாட்டம் இருக்கவே செய்யும் . அது பிழையல்ல .மனித இயல்பு . வேறு எதிலும் நாட்டம் இல்லை வெறுமே மார்கஸ் ,லெனின் என பஜனை மட்டும் செய்வோம் என்கிற வறட்டுப்பேர்வழிகள் அன்றும் இருந்தனர் .இன்றும் இருக்கின்றனர் .

 

அவர்களை  “ரோல் மாடல் கம்யூனிஸ்ட்டாக” ஒரு போதும் பார்க்காதீர்கள் தோழர் ஏஎன் வாழ்க்கை சொல்லும் செய்தி இன்னும் உண்டு !

பேசுவோம் !!!

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18 ஆகஸ்ட் 2021.

 

 

 

 

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 10.

Posted by அகத்தீ Labels:

 

சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 10.

 

 

சங்கராபரணம் எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் ஓர் விமர்சனம் .அதைப் படித்ததும் கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர் ராமராஜ்  வந்தார் . நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த தோழர் ஏ பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் ஆர் .

 

உடனே ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேர் பார்க்கிறோம் . சின்னையா !  டிக்கெட் புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.

 

மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் ஏ பி  என நினைவு ] எழுதிய விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .

 

தோழர் உ.ரா .வரதராசன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய போது அவருக்கு ஓர் கடுமையான நெருக்கடி . கட்சிக்குள்ளும் வங்கி அரங்கிற்குள்ளும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் . அப்போது ஓர் நாள் இரவு சுமார் 10 மணிக்கு பழவந்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள எம்ஜிஆர் நகரிலுள்ள என் குடிசைக்கு உ .ரா. வந்தார் .வழக்கம் போல் நான் ,கந்தன் , ரிசர்வ் வங்கித் தோழன் முண்டன் ,ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் அவருடன் புறப்பட்டு மீனாம்பாக்கம் விமானநிலையத்திற்கு எதிரே உள்ள தெரு ஓர டீ கடைக்கு சென்றோம் . வறுத்த மீனும் கட்டன் சாயாவும் அங்கே ஸ்பெஷல் .  நாங்கள் போகும் போது அரட்டையில் உரா பங்கேற்காமல் சிகெரெட்டை மாறி மாறி புகைத்தவாறே வந்தார் .இரவு மூன்று மணிவரை அங்கிட்டும் இங்கிட்டும் அலைவதும் டீ சாப்பிடுவதும் . புகைப்பதுமாக நேரம் கடந்தது . ஒன்றரைப் பாக்கெட் சிகெரெட்டையாவது உரா காலி செய்திருப்பார்.

 

வீட்டிற்கு புறப்படத் தயாரானார் . தலைவர் டென்ஷனில் இருக்கார் நாம் வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு வருவோம் என்றார் தோழர் முண்டன் . வீட்டை நெருங்கியதும் சொன்னார் , “ காம்ரேட் முண்டன்! காம்ரேட் ஏபி சொன்னதை ஏற்கிறேன் .இரண்டொரு நாளில் என் திருமணம் என்றார் .

 

அதன்படி கோகலே மண்டபத்தில் மிக எளிமையாய் சடங்கு சம்பிரதாயம் அனைத்தையும் புறந்தள்ளி வெறும் கற்கண்டோடு வரதராசன் –சரஸ்வதி திருமணம் நடைபெற்றது . தோழர்களைப் பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் கறார்தன்மையோடும் உறுதியோடும் செயல்பட்ட தோழர் ஏபியின் ஆளுமையும் , பழமையை அடித்து நொறுக்கும் வேகமும் என்னை வியக்க வைத்தது .

 

வாலிபர் சங்கம் சார்பில் இளம் தோழர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் பழநியில் நடைபெற்றது . நான் அதில் பங்கேற்றேன் .அதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் “கட்சித் திட்டம்” குறித்த வகுப்பு எடுக்கிறார் .தோழர் ஏபி ஓர் நாற்காலியில் உடகார்ந்து பேசுகிறார் .எல்லோரும் தரையில் ஜமுக்காளத்தில் இருக்கிறோம் . நான் கல்யாண மண்டப தூணில் சாய்ந்து கொண்டு வகுப்பைக் கேட்கிறேன் .கூட்டம் துவங்கி பத்தாவது நிமிடம் நான் தூங்கிவிட்டேன் . என்னோடு ஐந்தாறு பேர் நிலையும் அதுவே ! ஏபி என்னை அழைத்து எழுப்புகிறார் ,

” நேற்று நைட்டு சினிமாவுக்கு போனீங்களா ?”

“ஆமாம்” என நாங்க தலையாட்ட ,

“ டீக்கடையில் அரட்டை அடிச்சிட்டு எப்போ தூங்குனீங்க ?”

“ மூன்று மணிக்கு மேல்..”

 “ இங்க காலையில பொங்கல வேற போட்டுட்டு தூங்க வச்சிட்டானுக …இவங்க டீ தர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் .எல்லோரும் வெளியே போய் டீ குடிச்சு ஃபிரஷ் ஆகி வாங்க” ன்னு  அனுப்பிச்சிட்டாரு .

 

அப்புறம் அரை மணி நேரத்துக்குபின் வகுப்பு ஆரம்பிச்சிருச்சு ,வகுப்பு முடிந்ததும் .கேள்வி பதில் நேரம். விருதுநகர் பாலதண்டாயுதம் ஓர் கேள்வியை வீசுகிறார் .

 

 “ காம்ரேட் பாலத்தண்டாயுதம் நாலஞ்சு வருஷமா எல்லா வகுப்பிலேயும் இதே கேள்வியைக் கேட்குற நானு ஒரே பதிலை சொல்லுறேன் . இப்பவும் உனக்காகச் சொல்லல இங்க இருக்கிற மற்றவங்களுக்காகச் சொல்லுறேன் “னு ச்சொல்லி பதில் சொன்னார் .

 

அதைத் தொடர்ந்து சொன்னார் ,” பாலதண்டாயுதம் நீ ஒழுங்கா வக்கீல் வேலையைப் பாரு ! [ எங்கள காமிச்சு] இந்த மாதிரி யூத்துக்கு வழிவிடு ! யூத்துன்னா யாரு ? ஸ்போர்ட்ஸ் ,சினிமா, சயின்ஸ், பாலிட்டிக்ஸ் ,சோஷியல் ரிஃபார்ம் ,சோஷியல் சர்வீஸ் ,காதல் , துணிவு ,எதிர்ப்பு .புரட்சி,தேடல் , இன்னும் ஆயிரம் இருக்கு…. எல்லாம் இருக்கும் .. அதுதான் யூத் .அப்படி எல்லாவற்றுக்கும் இடம் இருந்தால்தான் வாலிபர் சங்கம் . இருபத்தி நாலு மணி நேரமும் மீசையை முறுக்கிக்கிட்டே இருக்கிறது புரட்சி அல்ல ; யூத்தோட கலந்து சமூக உணர்வை மெல்ல ஊட்டணும் … நிச்சயம் இந்தப் பிள்ளைகள் அதைச் செய்வாங்கன்னு நம்பிக்கை இந்தக் கிழவனுக்கு இருக்கு !” [ நினைவில் பதிந்த படி எழுதியுள்ளேன் .முன் பின் இருக்கலாம் ].

 

இதைவிட வாலிபர் சங்கத்துக்கு யார் வழிகாட்ட முடியும் ?

 

” ஓர் வாலிபர் சங்கம் முற்போக்கானதா பிற்போக்கானதா என்பதை அளக்கும் கருவி எது ? அந்த வாலிபர் சங்கம் தொழிலாளி விவசாயி வர்க்க உரிமைப் போராட்டங்களோடு தோள் இணைகிறதா ? இல்லையா ? என்பதுதான்.” என்கிற மாசேதுங் மேற்கோளை மிகச் சரியாக அறிவுறுத்துவார் .

 

அதே சமயம் வாலிபர் சங்கம் கட்சியின் வாலாக அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி கட்சி சொல்வதை திருப்பிச் சொல்வதும் செய்வதுமாக இருக்கக்கூடாது … இளைஞர்களை வென்றெடுக்குமாறு கிரியேட்டிவிட்டியோட சுயமாகச் செயல்படணும்..ஜனநாயகபூர்வமாகச் செயல்படணும் ..துடிப்பாக இருக்கணும் …என உணர்வுபூர்வகாக வழிகாட்டியவர் .

 

 “தப்பு வந்திடுமோ எனத் தயங்காதீங்க  ! நாங்களும் தப்பு செய்திருக்கோம் .திருந்தி இருக்கோம் . பயப்படாமல் வேலை செய்ங்கோ ! தப்பு வந்தால் ஒப்புக்கொள்ளுங்க ! திருத்திக்கோங்க ! அவ்வளவுதான் ….. அதுதான் வளர்ச்சியின் சூத்திரம்” என்பார் .

 

தோள் அணைத்து நம்பிக்கை ஊட்டிய தோழர் ஏபி குறித்து சொல்ல இன்னும் நிறைய உண்டு ! தொடர்ந்து பேசுவோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

16 ஆகஸ்ட் 2021.

 

இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய்

Posted by அகத்தீ Labels:

 


இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய் கடலுக்கடியில் ஓழிச்சு வச்சுட்டாரம்.

இந்தியாவைத் தேடி ஒரு ரிஷி ஆயிரம் ஆண்டுகள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல் தவம் இருந்தாராம். 

தவத்தில் மனம் உருகிய பரசுராமர் கடலை நோக்கி அம்புவிட்டாராம். கடல் கிழிந்து இந்தியா வெளியே தெரிஞ்சுதாம்.  

கிருஷ்ண பருந்து தூக்கிட்டு வந்து இங்க போட்டிச்சாம். 

அப்போ அங்கே நேரு குடும்பம் ஒரு நாற்காலியில ஏறி உட்கார்ந்துகிச்சாம். இதனால் பீடை புடிச்சுகிச்சாம். 

மோடின்னு ஒரு மந்திரவாதி கோமியத்தை தெளிச்சு பீடையை விரட்டிக்கிட்டு அங்கே உட்கார்ந்தாரம். 

இதனால் மனம் மகிழ்ந்த ஏழரைச் சனி ஆரம்பம் ஆச்சாம். வாக்குச்சனி போக்குச்சனி மூக்குச்சனி அழுக்குச்சனின்னு காலம் ஓடிக்கிட்டே இருந்திச்சாம்.

மாட்டுச்சாணியை சாப்பிட்டு மாட்டு மூத்திரம் குடிச்சு மக்களெல்லாம் சந்தோஷமாக இருந்தாங்களாம்.

சுபம்.

( மக்கள் கேட்டுக் கொண்டதால் இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை புளுகுனி புராணத்திலிருந்து எடுத்து பாட புத்தகத்தில் சேர்த்தார்களாம்.)

சிரிக்காதீங்க!!!!   நாளை இதை ஆராய்ந்து பிஎச்டி வாங்கப் பாருங்க!!!! 

சுபொஅ.
13/8/21

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

Posted by அகத்தீ Labels:

 

“ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

 

[ தோழர்கள் கே எம் , ஏபி ,ஏஎன் , ஆர்யு என நான்கு பேரைச் சுற்றியே நினைவலைகள் சுழல்வது ஏன் என தோழர்கள் சிலர் கேட்கின்றனர் . நூற்றாண்டு நாயகர் என கட்சி அறிவித்த நான்கு பேரையே இப்போதைக்கு நினைவுகூர்கிறேன்  . தோழர் விபிசி ,பி ஆர் பரமேஸ்வரன் ,அப்துவஹாப் ,பி ராமச்சந்திரன் , கே எம் ஹரிபட் , கே.ரமணி , டி ஜனகிராமன் ,உரா வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,ஜானகி அம்மாள் ,பாப்பா உமாநாத் , கஜபதி ,பிஜிகே கிருஷ்ணன் , செல்லமுத்து ,தனுஷ்கோடி ,ஹேமச்சந்திரன் ,எஸ் கே சீனிவாசன் ,சி.பி.தாமோதரன்  என நான் நினைவுகூர வேண்டிய  பெரும்பட்டியல் உண்டு .காலமும் களமும் பின்னர் அனுமதித்தால் பார்க்கலாம்.]

 

 “ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் . அப்போது அவர் பெரிதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவராய் ஒரு சாராரால் பார்க்கப்பட்டனர் . அவரின் ஆய்வு எல்லை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் ; இன்னும் ஆழமாக சொல்ல வேண்டியதாய் இருக்கலாம் ; ஆயின் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே இது குறித்து பேசத்துவங்கியவர் என்பதுதான் முக்கியம் .இன்றைக்கு மேலும் அப்பார்வை ஆழமாக அகலமாகச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

மேலும் தோழர் ஏ பியின் தந்தை அமிர்தலிங்கய்யார் ,பரமேஸ்வரய்யர் செய்த ராமாயண ஆராய்ச்சியை சார்ந்து [ அதை அப்படியே மொழியாக்கம் செய்யாமல்] “ ராமாயணம் உண்மையும் புரட்டும் “ தொடரை கே எம் செம்மலரில் எழுதிய போது அது தேவையா எனக் கேள்வி எழுப்பியோரில் நானும் உண்டு .

 

ஆயின் இன்றைக்கு அது எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது .இராமாயணத்துக்கோ ,மகாபாரத்ததுக்கோ தென்இந்தியாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை , எங்கோ வட இந்தியாவில் ஓர் மூலையில் இனக்குழுக்களிடேயே நடந்த மோதலில் முகிழ்த்த கதையை ஊதி ஊதி இப்படி ஆக்கிவிட்டார்கள் என்கிற உண்மை எவ்வளவு முக்கியமானது இன்றைக்கு .

 

இராமாயணம் ,மகாபாரதத்தை வெட்டியும் ஒட்டியும் மாறுபட்ட பலகோணங்களில் மீண்டும் மீண்டும் நாவல்கள் எழுதப்படும்போது சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்றவை அவ்வாறு பெரிய அளவு செய்யப்படாதது ஏன் ? [ ஒரு சில முயற்சிகள் உண்டு ] “ சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்” என தோழர் கே.எம் எழுதியத் தொடர் இக்கோணத்தில் முக்கியத்துவம் பெறுகிறதே . ஆயின் இராமயண ஆய்வுத் தொடரை கே எம் எழுதிய போது சந்தித்தது போன்றே  இத்தொடரின் போதும் விமர்சனத்தைச் சந்திதார் .

 

கவிஞர் இளவேனில் அளவு கே .முத்தையாவை கேலியும் கிண்டலும் செய்தவர் இல்லை ; ஆனால் அந்த இளவேனிலுக்கு பெண் கேட்டு ஓர் தந்தையின் இடத்தில் தன்னை நிறுத்தி வேளச்சேரிக்கு கே எம் போனபோது நானும் செந்தில்நாதனும் உடன் இருந்தோம் .அத்திருமணத்தை முடிக்க எல்லாவகையிலும் துணைநின்றார் . அப்போது அவரிடம் ஓர் கேள்வி கேட்டோம் , “ இளவேனில் உங்களைக் கடினமாக விமர்சிப்பவர் .நீங்கள் அவருக்காக இப்படி அலைகிறீர்களே ?” ஓர் சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னார் , “ இளவேனில் திறமையான நல்ல எழுத்தாளர் ,பல்வேறு திறன் கொண்டவர் .இளம் தோழர் .அவரை காப்பாற்றுவது நம் பொறுப்பு.” இதுதான் தோழர் கே.எம் இயல்பு.

 

தமிழ் – தமிழர் – தமிழ்ப்பண்பாடு – தமிழர் உரிமை என்கிற கோணத்தில் சிந்தித்தவர் தோழர் கே .எம் ; அதற்காக செயல்பட்ட்டவர் . அவரது முயற்சியும் உழைப்பும் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும் . திறமையான இளம் தோழர்களை இனங்கண்டு [நான் உட்பட] அரவணைத்து அழைத்துச் செல்வதில் தோழர் கே.எம் பெரும் முனைப்பு காட்டியவர் .

 

தீக்கதிர் மட்டுமல்ல செம்மலரும் அவர் அரவணைப்பில் வேர்பிடித்து வளர்ந்ததுதான் . தமுஎகசவும் அவரின் வியர்வையிலும் இரத்ததிலும் நாற்றாகி பயிராகி செழித்து வளர்ந்ததே !

 

கையால் அச்சுக்கோர்த்து டிரெடில் மிஷினில் அச்சிட்டு வெளிவந்த காலத்திலிருந்து கணினி ,நவீன அச்சு இயந்திரம் ,நவீனத் தகவல் தொடர்பு என படிப்படியான வளர்ச்சியில் தானும் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நிற்பது பெரும் சவாலே .அதனை கே எம் எதிர்கொண்டார் .

 

இப்போது இனி நாளேடு அச்சுப்பத்திரிகை தேவையா ? எல்லாம் இண்டர்நெட் , சமூக வலைதளம் என பாயும் உலகில் நாம் இன்னும் பத்தாம் பசலியாய் இருக்கலாமா ?கேள்வி எழுகிறது . கூடாது .

 

நவீனமான எதையும் நாம் புறக்கணிக்கக்கூடாது . கால ஓட்டத்தில் எங்கேயும் நம் பின்தங்கிவிடக்கூடாது .ஆயின் சுரண்டும் வர்க்கம் எவ்வளவுநாள் நம்மை அனுமதிக்கும் ?

 

“தேஷ்டைஷீ “ எனும் கட்சியின் வங்காள வார ஏட்டின் பொன்விழாவில் 2012 ல் பேசும்போது இன்றைக்கும் கட்சி ஏடுகள் தேவையா எனும் கேள்விக்கு பதில் அளித்து தோழர் சீத்தாராம் யெச்சூரி சொன்னவற்றை இங்கு அசைபோடல் தேவைப்படுகிறது ..

 

 “கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, மிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும்,  நம் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டிட கட்சி ஏடுகளின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆளும் வர்க்கங்கள்  தங்கள்  சமூகத்தின் மீது அவர்களுடைய தத்துவார்த்த மேலாதிக்கத்தை செலுத்திக்கொண்டே எப்போதும் தங்கள் வர்க்க ஆட்சியை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள். 

 

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கூறியிருப்பது போல, ’’ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற சிந்தனைகள்தான். அதாவது, பொருளாய சக்திகளை ஆளுகின்ற வர்க்கம், அதே சமயத்தில்  தன் நாட்டில் உள்ள அறிவுஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது. பொருளாய உற்பத்திச் சாதனைகளைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறது.’’

 

ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம்தான், கிராம்சி விளக்குவதைப்போன்று, அரசால் மட்டும் அமல்படுத்தப் படுவதில்லை,  அதன் பின்னணியில் இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.”

 

மேலும் விளக்குகிறார் , “இவ்வாறாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாக, முதலாளித்துவம்  “தாம் விரும்பக்கூடிய விஷயங்களை ,மக்கள் விரும்பக்கூடிய விஷயமாக’  தங்கள் விளம்பரங்களின் மூலம் கட்டமைத்துவிடுகிறார்கள்.

 

இவ்வாறு இவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது தொடுக்கும் தாக்குதலை நாம் சமாளித்து முறிய்டிப்பது எப்படி? முதல் கட்டமாக, உலகமயம் மற்றும் வகுப்புவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்புகளினால் மதிமயங்கி மழுங்கிக் கிடக்கும் மக்களிடம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். அவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முறியடித்திட இது மிகவும் அவசியம்.”

 

இவற்றை  கட்சி ஏடும் கட்சி அமைப்பும் இல்லாமல் சாதிக்க முடியுமா ? கட்சி அமைப்பு ,கட்சி ஏடு தீக்கதிர் ,செம்மலர் ,தமுஎகச , தமிழ்பண்பாடு என்கிற வட்டத்துக்குள் தன்னை ஒப்புகொடுத்த  தோழர் கே எம் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து பேசுவோம்.

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10 ஆகஸ்ட் 2021.

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8

Posted by அகத்தீ Labels:

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8.

 

ஒரு பொய்ச்செய்தியை அதிகார பீடத்தில் உள்ளவர் கசியவிடும்போது அச்செய்தி , எப்படி இறக்கை கட்டி வேகமாகப் பறந்து உண்மைச் செய்தியாகவே நம்பும் அளவுக்கு பதிந்துபோகும் என்பதற்கான ஓர் சாட்சி நான் . இப்படி செய்திகளை கசியவிட்டு ஆட்டம் காட்டுவதில் எம் ஜி ஆர் வல்லவர் .

 

சரி ! நடந்ததைச் சொல்கிறேன் . 1982 பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் . சிபிஎம் கட்சியானது திமுக ,அதிமுக இரண்டு அணியிலும் இல்லை . சில குட்டிக் கட்சிகளோடு தனி அணி . ஜக்கையன் [ அதிமுக ] , இராமகிருட்டினன் [திமுக] , அப்துல் வஹாப் [சிபிஎம்] உட்பட 22 பேர் போட்டி . அன்றைய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் கொடைக்கானலும் அடக்கம் . நான் கிட்டத்தட்ட மூன்றுவாரம் அங்கே தங்கி இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் .

 

கடைசி நாள் பிரச்சாரத்திற்கு தோழர் ஆர் உமாநாத்தும் நானும் ஓர் காரில் கொடைக்கானல் மலையேறிக்கொண்டிருக்கிறோம் . மேலும் இரண்டு தோழரும் உண்டு . ஓர் போலீஸ் ஜீப் எங்களைத் தடுத்து முதலமைச்சர் எம் ஜி ஆர் கொடைக்கானல் பிரச்சாரம் முடித்து கீழே வந்து கொண்டிருக்கிறார் . ஆகவே கொஞ்சம் ஓரம் கட்டி நில்லுங்கள் என்றார் . நின்றோம் . உமாநாத்தும் நானும் கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம் . முதல்வர் வண்டிவரும் ஓசை கேட்டது . சட்டென்று எங்கள் முன் எம் ஜி ஆர் வண்டி நின்றது . எம் ஜி ஆர் கீழே இறங்கினார் . வேறு யாரையும் கிட்டே அனுமதிக்கவில்லை .

 

 “ காம்ரேட் ஆர்யு சவுக்கியமா ? காம்ரேட் பாப்பா பிரச்சாரத்துக்கு வரவில்லையா ? காம்ரேட் பாப்பாவுக்கு ஒடம்பு சவுரியம் இல்லேன்னு கேள்விப்பட்டேன் . ”என சடசடன்னு கேட்டார் .

 

உமாநாத் . “ ஆம் .அவருக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை..”என்றார் . “ ஒடம்ப நல்லா கவனிச்சுக்குங்க , வேணும்னா சொல்லுங்க ஸ்பெஷல் டாக்டரை ஏற்பாடு செய்யுறேன் …” என சொல்லியவாறே எம் ஜி ஆர் கிளம்பிவிட்டார் .

 

எல்லாம் இரண்டு நிமிடத்தில் முடிந்தது .

 

எம்ஜிஆரைத் தொடர்ந்து கே.ஏ.கிருஷணசாமியும் ,ராகவானந்தமும் வேறொரு காரில் இருந்தபடியே கையை ஆட்டிவிட்டுச் சென்றனர் .

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 “ கொடைக்கானலில் எம்ஜிஆர் –உமாநாத் திடீர்

 சந்திப்பு ; அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ரகசிய ஆதரவா ?” என்பது போன்ற செய்திகள் இறக்கை கட்டி பறந்தன . கலைஞர் கடும் விமர்சன அறிக்கை .

அதிமுக ஜெயித்தது .திமுக தோற்றது .பழி சிபிஎம் மேல் விழுந்தது . கலைஞர் சிபிஎம் – அதிமுக ரகசிய உறவென கடிதம் தீட்டினார் . தேர்தல் முடிவைத் தொடர்ந்த விமர்சனங்களில் இந்தப் பொய்யே ஓங்கி நின்றது .

 

நண்பர்களும் தோழர்கள் சிலரும் கூட இந்நேரத்தில் ஆர்யூ ஏன் எம்ஜிஆரைச் சந்தித்தார் எனக் கேள்வி எழுப்பினர் .

 

எம்ஜிஆர் தன் நம்பிக்கைகுரிய மக்கள் குரல் பத்திரிகையாளர் மூலம் கசியவிட்ட பொய் உண்மைபோல் இன்றும் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் நிலைக்கிறதே ! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் நடந்ததை சிபிஎம் எவ்வளவு விளக்கியும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை . உமாநாத்தோடு அந்த நொடியில் நின்ற நான் மட்டுமே சாட்சி !! என் செய்ய ? எம் ஜி ஆர் இது போன்ற செய்திகளை பரப்புவதில் வல்லவர்.அவர் வாய்திறந்து இவற்றை வெளியே பேசவே மாட்டார் ! அதுதான் அவரின் சாமர்த்தியம் !!!

 

இப்போதும் சிபிஎம் கட்சிக்கு எதிராய் வதந்திகளும் பொய்களும்  ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து இப்படித்தான் பரப்பப்படுகிறது .உண்மையைவிட இந்த போலிச் செய்திகள் வலுவாய் பேசப்படுகிறதே ! அதுவே வேதனை ! தோழர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் !

 

CCAU – CAMPAIGN COMMITTEE AGAINST UNEMPLOYMENT வேனையின்மை எதிர்ப்பு நடவடிக்கைக்குழு : 1990 பிப்ரவரி முதல் ஜூன் வரை நடத்திய பிரச்சார இயக்கம் , நிறைவாக குமரி ,நாகை ,ராமேஸ்வரம் , நீலகிரி என நான்கு முனையிலிருந்து பிரச்சாரப் பயணம் , சென்னைக் கடற்கரையில் பேரணி என உத்வேகம் ஊட்டிய நிகழ்வு . சிஐடியு ,வாலிபர் சங்கம் , மாணவர் சங்கம் , மாதர் சங்கம் ,அரசு ஊழியர் சங்கம் , இன்சுரன்ஸ் ,மத்திய , மாநில ஊழியர் அமைப்புகள் என விரிவாக ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பு .

 

இவ்வமைப்பு உருவாக்கத்திலும் ஆர் .உமாநாத் காட்டிய அக்கறையும் வழிகாட்டலும் முக்கியமானது .ஏ.கே .பத்மநாபனும் நானும் இதில் கூடுதல் பங்காற்றினோம் . ஒரு கூட்டத்தில் பிரச்சாரத்தை ஒட்டி ஒரு சிறுபிரசுரம் கொண்டுவர யோசிக்கப்பட்டது .எல்லோரும் காம்ரேட் ஆர்யூ அந்த பிரசுரத்தை எழுதலாம் என்றனர் .டக்கென்று ஆர்யூ தலையிட்டு சு.பொ.அகத்தியலிங்கம் எழுதட்டும் ,பின் எல்லோருக்கும் சுற்றுக்கு விடட்டும் .எல்லோரின் யோசனைக்கு பிறகு அதனை நான் பார்த்துக் கொடுக்கிறேன் என்றார் .நான் “ வேலை இனியும் கனவல்ல…” என்ற பிரசுரத்தை எழுதினேன் .சுற்றுக்கு விட்டேன் . சில திருத்தங்களுக்குப் பின் இறுதியாக உமாநாத் பார்வைக்கு கொண்டு போனேன் . முழுதாக வாசித்தார் . இப்படியே இருக்கட்டும் என்றார் .பிரசுரம் வெளிவந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது .

 

அதன் பின் ஓர் நிகழ்வில் பேசிய ஒர் மத்தியதர ஊழியர் தலைவர் இப்பிரசுரத்தை எழுதிய உமாநாத் என குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார் . பிரசுரம் சிசிஎயு சார்பில் வந்ததே தவிர யார் பெயரிலும் அல்ல.நான் அந்த கூட்டத்தில் இல்லை . இறுதியில் பேசிய உமாநாத் இப்பிரசுரத்தை எழுதியது சு.பொ.அகத்தியலிங்கம்தான் நானல்ல எனக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியுள்ளார் . பின்னர் ஓர் முறை வாலிபர் சங்க நிகழச்சிக்கு அங்கு சென்ற போது தோழர்கள் இந்நிகழ்வைச் சொன்னார்கள் . ஊழியர்களின் திறமையை பங்களிப்பை உரிய முறையில் அங்கீகரித்து மதிப்பளிக்கும் குணம் ஆகப்பெரியது . அது உமாநாத்திடம் நிரம்ப உண்டு .

 

வேலையின்மை உச்சத்தை எட்டும் இக்காலகட்டத்தில் மீண்டும் CCAU போன்ற முயற்சிகள் பெரிதும் தேவை அல்லவா ?

 

தோழர் என் .சங்கரய்யா சாதி மறுப்பு காதல் திருமணம் எனில் முன்னுரிமை கொடுத்து பங்கேற்பார் . ஆர்யுவுக்கு அத்துடன் சடங்கு மறுப்பும் சேர்ந்தாக வேண்டும் . தாலி எடுத்துக் கொடுக்கும் புரோகிதராக நான் வரமாட்டேன் என விடாப்பிடியாக ஆர்யு சொல்லிவிடுவார் . வந்துவிட்டாலும் அதனை தான் செய்யமாட்டார் .வேறு யாரையாவது பணித்துவிடுவார் .அப்போதும் பேசும்போது தாலி தேவை இல்லை என பேசுவார் . பாலின சமத்துவத்தில் அதிக அக்கறை காட்டினார் . அது குறித்து பேச நிறைய உண்டு . பேசுவோம் தொடர்ந்து .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8 ஆகஸ்ட் 2021.

 

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.

Posted by அகத்தீ Labels:

 அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.
“ தந்தியென்றால் / முன்பெல்லாம் / பட்டிக்காட்டார் பதறிப்போய் / அது என்னவென்று அறிவதற்கு /துடியாய்த் துடிப்பார்.” என கலைஞர் கருணாநிதி ஓர் கவியரங்கக் கவிதையில் பாடியிருப்பார் .
பிறப்பு செய்தியோ இறப்புச் செய்தியோ தந்தி மூலமே அறிய முடியும் ; வேறு தகவல் தொடர்பு கிடையாது .இந்தத் தந்தியோ ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும் . ஆகவே தந்தி வந்தாலே கிராமப்புறத்தில் அறிய பெரும் பதட்டம் நிலவும்.
இந்த நினைவலையில் முதல் பகுதியில் செய்திகளை ARPPAATTAM என தங்கிளீஸில்தான் அனுப்ப வேண்டும் என்றிருந்த அன்றைய செய்தியாளர் அனுபவத்தை சுட்டி இருந்தேன்.
இந்தச் சூழலில் மாநிலங்களவை உறுப்பினராயிருந்த அன்புத் தோழர் ஏ .நல்லசிவன் இதற்கானப் போராட்டத்தை துவக்கினார் . தமிழில் தந்தி அடிக்க முடியும் என தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப்பட்ட சான்றாதாரங்களோடு வாதிட்டார் .வென்றார் . அதுவும் உடனே கிடைத்துவிடவில்லை கடும் போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது .
தமிழில் தந்தி கொடுக்கும் வசதியை பெற்றுத் தந்தார் . அதற்காக மாநிலம் முழுவதும் பல மையங்களில் பாராட்டு விழா நடந்தது . மாவட்டம் நினைவில் இல்லை . குமரியோ /புதுவையோ பாராட்டு விழாவில் நானும் பேசினேன் .
“ தமிழில் தந்தி கொண்டு வந்துவிட்டோம் , ஆனால் இப்போதும் போலீஸ் ஸ்டேஷன் போனால் நாலு வார்த்தை தாட்டுப்பூட்டுண்ணு இங்கிளீஸ்ல பேசினால் சார்னு கூப்பிட்டு மரியாதையாக உட்காரவைக்கிறானுக தமிழில் பேசினால் விரட்டுறானுக… “என நான் பேசினேன்.
அடுத்து வந்த தோழர் ஏ என் என் பேச்சைத் தொட்டு பேசினார் , “ போலீஸ் ஸ்டேஷன் மட்டுமா தாலுகா ஆபிஸ் ,கலெக்டர் ஆபீஸ் எங்கும் இதே லட்சணம்தான் .நம்மாளு கோர்ட்டுக்கு போறான் .வக்கீலுக்கு பீஸை அள்ளிக் கொடுக்கிறான் . எங்க வக்கீலு இங்கிளீஸ்ல பிச்சு வாங்கிறாருன்னு பெருமையா நாலு பேருட்ட சொல்லிக்கிறான் .ஆனா கேஸ் தோற்றுப் போகுது .வக்கீலு சரியா பேசினாரா ? தப்பாப் பேசினாரா ?நமக்காகப் பேசினாரா ? எதிரிக்காக பேசுனாரா ? நமக்குத் தெரியாது . .கோர்ட் தமிழில் நடந்தால் இதெல்லாத்தையும் நாமள கண்காணிக்கலாமே . கோர்ட் ,போலீஸ் , தாலுகா ஆபீஸ் ,கலெக்டர் ஆபீஸ், படிப்பு எல்லாம் தமிழில் வேண்டும்.” என்றார் .
தோழர் ஏஎன் பேச்சில் அடுக்குமொழி இருக்காது . சாதாரண பாமர மொழிதான் இருக்கும் .ஆனால் வாதம் வலுவாக இருக்கும் . தமிழ் மக்களுக்கா உழைப்பாளி தமிழ் மக்களுக்காக வலுவாக வாதிடுவார் ஆனால் ,குரல்தான் அவர் எதிரி !
அவர் அந்த பேச்சினூடே சொன்ன இன்னொரு செய்தி , “ டிரான்ஸ்போர்ட் ,இபி , மில் , பேக்டிரி எங்கும் தொழிலாளிக்கு மெம்மோ கொடுக்கிறாங்க . இங்கிளீஸ்லதான் கொடுக்கிறாங்க . ‘ எனக்கு இங்கிளீஸ் தெரியாது ,தமிழில் கொடுங்கன்னுன்னு ‘ நம்ம தொழிலாளி பதில் கொடுக்கிறான் .போராடித்தான் எங்கும் தமிழைக் கொண்டுவர வேண்டியுள்ளது .”
இதே காலகட்டத்தில் மாணியாடர் படிவம் , வங்கிப் படிவம் எல்லாம் தமிழில் வேண்டுமென குமரி அனந்தன் போராடி வென்றார் . கூகுள் பே , டிஜிட்டல் மணி இல்லாத காலம் , போதுமான வங்கிக் கணக்கு எல்லாம் இல்லை .பெரும்பாலோருக்கு மணியாடர் மூலமே மகனோ கணவரோ அனுப்பும் பணம் , முதியோர் பென்ஷன் உட்பட கிடைக்கும் நிலை . இச்சூழலில் இந்தப் படிவங்களெல்லாம் ஆங்கிலத்தில் என்பது எவ்வளவு கொடுமை .
இப்போது தந்தி அலுவலகங்களே மூடப்பட்டுவிட்டது .தொழில் நுட்பம் மாறியாச்சு . ஆனால் ,மொபைலுக்கு மெஜேஸ் கூட இந்தியில் அனுப்பும் கொடுமை ; எந்த மொழியிலும் தகவல் அனுப்ப தொழில் நுட்பத் தடை இல்லாத காலத்தில் எல்லாம் இந்தித் திணிப்பு என்பது மமதையின் உச்சம் ;இந்துத்துவத்தை நோக்கிய முயற்சி . இதை எதிர்க்க பழசை எல்லாம் நினைவூட்டினேன் . ஆம் எல்லா முனையிலும் இந்தி திணிக்கப்படுவதை சகிக்க முடியாது . முறியடித்தாக வேண்டும் .
தோழர் ஏஎன் ஐ பெரும்பாலும் அலுவலகத்தில் சாரத்தில்தான் பார்க்க முடியும் . லுங்கி ,கைலி என பலபெயர் இருப்பினும் குமரி ,நெல்லையில் சாரம் என்றே சொல்லுவார் . அதுவும் மூட்டித் தைக்கபடாமல் கட்டும் வழக்கம் .தோழர் ஏஎன்னுக்கு அதுவே மிகவும் பிடித்தமான உடை .
தோழர் ஏ.என் கியூப புரட்சி தின நிகழ்ச்சிக்கு போய்வந்த அனுபவத்தை நான் உட்பட சில தோழர்கள் கேட்டுக்கொண்ட போது பல செய்திகளைச் சொன்னார் இடையிலே மகிழ்ச்சியாகச் சொன்னார் , “ ஏதோ ஒரு நிகழ்வுக்கு போகும் நெரம் நெருங்கிவிட்டதாம் ,இவர் உடன் இருந்த கியூப தோழரிடம் பேசிக்கொண்டே இருந்தாராம் . நேரம் ஆகிவிட்டது புறப்பட வேண்டிய நேரம் ஏஎன் கேட்டாராம் லுங்கியில் பொது நிகழ்வில் பங்கேற்கலாமா ? அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .
இங்கே இன்னொன்றை சுட்டுவதும் பொருந்தும் , சென்னை வியாசர்பாடி ,பக்தவச்சலம் நகர் ,சாஸ்திரி நகர் பகுதிகளில் வாலிபர் சங்கம் சிறப்பாக செயல்பட்ட காலம் ; அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரி வம்பு இழுத்தார் . சாலையில் வாலிபர் சங்கத்தவர் லுங்கியோடு நிற்பதை எதிர்த்தார் .கைது செய்து மிரட்டினார் .லுங்கியை ரவுடி உடையாக சினிமா சித்தரிப்பது போலவே அவரும் சித்தரித்தார் . இதைக் கண்டித்து அங்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினோம் .நான் பங்கேற்று கடுமையாக பேசினேன் .
கூட்டத்திற்கு பின் ஓர் பழைய தோழர் நான் பேசியது சரியல்ல என கட்சிக்கு புகார் செய்துவிட்டார் . தோழர் ஏ என் ஓர் நாள் என்னை அழைத்து இது பற்றிக் கேட்டார் .நானும் நடந்ததைச் சொன்னேன் . பின் ஏ என் சொன்னார் , “ புகார் கொடுத்த தோழரிடம் அவர் பார்வை தவறு என அப்போதே சொல்லிவிட்டேன் . நானே சாரம்தானே விரும்பிக் கட்டுகிறேன் என அவரிடம் சொன்னேன் . பொது புத்தியில் உறைந்துள்ள இந்த பார்வையை மாற்ற நாம் முனைய வேண்டும்,” என்றார் .
தந்தைப் பெரியார் பொது வெளியில் லுங்கியோடு உலவினார் . கலைஞரும் ,ஸ்டாலினும் ,வைகோவும் லுங்கியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர் . தோழர் ஏ என் , ஆர் .உமாநாத் போன்றோர் லுங்கியை விரும்பி அணிவர் .
லுங்கிக்கு இவ்வளவு பெரிய பதிவு ஏன் என சிலர் கேட்கலாம் . நாம் என்ன உடை உடுக்க வேண்டும் என இந்துத்துவ மதவெறிபினரும் பிற மத அடிப்படை வாதிகளும் உத்தரவிடும் காலம் இது இப்போது , “ எனது உடை எனது தேர்வு “ எனச் சொல்ல வேண்டும் அல்லவா ?
தோழர் ஏ என் பற்றி பேச நிறைய நிறைய உண்டு தொடர்ந்து பேசுவோம் !
சு.பொ.அகத்தியலிங்கம்.
7 ஆகஸ்ட் 2021.