பூட்டின் சாவி

Posted by அகத்தீ Labels:

 





பூட்டின் சாவி

 

 

பாழடைந்த பங்களாக்களும்

பாதியில் நின்றுபோன கட்டிடங்களும்

எழும்பிக் கொண்டிருக்கும் கட்டுமானங்களும்

கண்ணில் படாத

பயணம் ஏதேனும் உண்டா ?

 

சொத்துச் சண்டை  கவுரவ மோதல்

துரோகம் பாராமுகம் பொறாமை

குழைந்து பேசுதல் கூசாத பொய்

பரிமாறாத உறவுகளின் கூடல்

எங்கேனும் உண்டா ?

 

யார் நன்றாக இருக்கிறார்

யார் கவலை இன்றி காலம் தள்ளுகிறார்

யார் திருப்தியாய் வாழ்கிறார்

எது கஷ்டம் ? எது சந்தோஷம் ?

எல்லோரிடமும் ஒரே மாதிரி அகராதி உண்டா ?

 

எல்லாமே ஒப்பீடுதான்

எதனை எதனோடு யாரை யாரோடு

எப்படி ஏன் என்பதில்தான்

வாழ்வின் ரகசியம் புதைந்து கிடக்கிறது

பூட்டின் சாவி  அவரவர் அனுபவமே !

 

 

சுபொஅ.

17/12/2023.

 

 


வாசமாய் நிறைந்திருக்கும் சகமனிதனின் நேசம்…….

Posted by அகத்தீ Labels:

 





 

 

வாசமாய் நிறைந்திருக்கும் சகமனிதனின் நேசம்…….  

 

 

”வாசல்-2021” – பத்தாவது ஓசூர் புத்தகத் திருவிழா தொகுப்பு நூல் குறித்து நான் அறிமுகம் எழுதும் போது ,  ஆதவன் தீட்சண்யா ,பழ .பால சுந்தரம் இருவரது சிறுகதைகளைக் குறிப்பிட்டு ”ஆக இந்த இரு கதைகளும் மொழி ,இனம் ,மாநிலம் என்கிற வேலிகளைத் தாண்டி மனிதம் பேசுகிறது .வாழ்வின் வலியைப் பேசுகிறது . ” எனக் குறிப்பிட்டேன்.

 

இப்போது பழ.பாலசுந்தரத்தின் சிறுகதைத் தொகுப்பு ”காவேரி ஓரம்” வாசித்தேன் . அன்று நான் வியந்த “பொன்னார்” சிறுகதையையும் “ கடக்கால்” எனும் இன்னொரு கதையையும் இணைத்தது போல் “ பொன்னாற்றின் கடக்கால் பழ.பாலசுந்தரம் சிறுகதைகளை முன்வைத்து” என அணிந்துரைக்கு  கமலாலயன் தலைப்பிட்டிருப்பது மிகை அல்ல . நிஜம். அவற்றை முத்திரைக் கதைகளாக அவர் தேர்ந்திருப்பாரோ ?

 

ராஜஸ்தான் சிறுநகர் ஆல்வாரின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆழ்துளைய்க் கிணறு அமைக்க நாமக்கல்லில் இருந்து போன தொழிலாளர்களின் உலுக்கும் அனுபவப் பதிவே ”பொன்னார்”.தண்ணீருக்காக தன் ஒற்றைக் குடிசையை இடிக்கவும்  உடன்பட்ட ஏழை ; “ இருளில் கையைப் பற்றிக் கொண்டு ,தனக்கு இருபது வயதில் ஒரு பெண் இருப்பதாகவும் ,அவனுக்கு விருப்பமென்றால் அவளை அனுப்பி வைப்பதாகவும் ,எப்படியாவது கிணறு பூர்த்தியானால் போதும் …” என சொன்னவரின் கையை உதறிய நவலடி ,.. தண்ணீருக்கான வாழ்வின் வலியும் பொங்கும் மனிதமும் ஒன்று கலந்த சிறுகதை .அடடா ! எப்படி இந்தக் கதை அவருக்கு கிடைத்தது என ஒரு கட்டுரையே எழுத வேண்டும் போலிருக்கிறது .

 

தான் கடுமையாக வேலை செய்து எழுப்பிய கட்டிடத்தில் இன்று பெரிய பேக்டரி ஆயிரகணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என பெருமிதம் பொங்க தன் மனைவி மல்லிகாவுக்கு சொல்லி ,அதைக் காட்ட ஆசையோடு அழைத்துப் போகிறான் கட்டிடத்தொழிலாளி செல்வமணி .அங்கு ஆலை மூடப்பட்டு சிதிலமடைந்து கிடக்கிறது . “ இங்க வேல செஞ்ச அத்தன பேரு கதியும் என்னாச்சோ..” உருகும் செல்வமணி . இக்கதை இன்னொரு உயரத்தைத் தொடுகிறது .

 

அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்தை பகடி செய்யும் “தென்னைக்  கூத்து “ படித்து சிரித்தேன் .மெய் .மெய்யைத் தவிர வேறில்லை . மேலதிகாரிகளை குளிர்விக்க செய்யும் காமெடிகள் நிறைய உண்டு . இளநீராக  வாங்கி குவிக்க ; வந்த அதிகாரி சர்க்கரை இல்லாத காபி கேட்பதாக முடிகிறது . இங்கு ஒரு நல்ல சம்பவம் நினைவுக்கு வந்தது . [ நூலறிமுகத்துக்கு தேவை இல்லை .ஆயின் தெரிய வேண்டிய செய்தி என்பதால் பதிகிறேன்.]

 

என் தோழர் சோமங்கலம் கிராமசேவக்  சு.செல்வரங்கன் [ தமுஎச சென்னை செங்கை செயற்குழு உறுப்பினராக இருந்த சுப.செல்வம்தான்] சொன்னது . அவசரகாலம் . சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் மாதிரி கிராம திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் இந்திராகாந்தி வருகை தந்தார் .ஏற்பாடுகளின் கெடுபிடி அவசரகாலத்தில் கேட்கவா வேண்டும் .விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சோமங்கலம் அங்கிருந்து விமான நிலையம் என ஏற்பாடு .

 

அதிகபட்சம் ஒரு மணிநேர நிகழ்வு. தாசில்தார் தலைமையில் ஒரு குழு .இளநீர் ,பழங்கள் , காபி ,டீ ,பிஸ்கட் ,பிரட் எல்லாம் ரெடி .கடுமையான சோதனை . இந்திரா காந்தி வந்தார் .மேடை பரபரப்பானது .மேடையில் உட்கார்ந்ததில் இருந்து அவர் பதட்டமாகி நாலா பக்கமும் பார்க்கிறார் .கலெக்டர் ,அதிகாரிகள் திணறல் .

 

ஒரு கிராமத்துப் பெண் அவசரமாக மேடையேற அதிகாரிகள் தடுக்க ,இந்திரா தலையிட அந்தப் பெண் அருகே போகிறாள் . இருவரும்  பேசுகின்றனர் . இந்திரா அந்தப் பெண்ணோடு இறங்கி போகிறாள் . அதிகாரிகள் ,பாதுக்காப்பு படை எல்லோரும் பீதியடைந்தனர் .யாரையும் கூட வரக்கூடாது என இந்திரா தடுத்துவிட்டார்.

 

அந்தப் பெண்ணின் குடிசைக்குப் போய் ஓலை மறைப்பில் அவசர அழைப்பை நிறைவேற்றிவிட்டு  , அந்த பெண் கொடுத்த தண்ணீரையும் குடித்துவிட்டு வந்தார் .

 

அன்று பேசிய போது இந்திரா சொன்னார் ,” அந்தப் பெண்ணுக்கு இந்தி ,இங்கிலீஸ் தெரியாது .எனக்குத் தமிழ் தெரியாது .ஆனால்  ஒரு பெண்ணின் உணர்வை இன்னொரு பெண்ணால் உணர முடியும்.மொழி தடை அல்ல .ஆண்களுக்கு பெண்ணின் வலி தெரியாது . இந்த ‘மாதிரி கிராமம்’கூட ஆண்களின் மாதிரி கிராமம்தான் . பெண்களின் கோணத்தில் அவர்களிடம் பேசி தேவைகளைக் கேட்டறிந்து திருத்துங்கள் பெண்களின் மாதிரி கிராமமாய்’.”என்றார். இன்றும் அசை போட வேண்டிய செய்தி அது .

 

” நியாயப் பிஞ்சு” எனும் கதை குழந்தைகளின் மாசற்ற உள்ளத்தின் பிழிவு. காகங்களை  நேசிக்கும் அருணா , தான் கண்டெடுத்த கோழிக்குஞ்சை  சாப்பிட்டு விட்டதால் காக்கைகளிடம் டூ விட்டுவிட்டு நாய்க்கு சோறு வைக்கும்போது கள்ளங்கபட மற்ற அன்பு சிரிக்கிறது .

 

 “ஆற்றுப்படை ” கதையை படித்த பின்  “ அஞ்சு ரூபாய் குடுக்கிறீங்களாண்ணா ? குதிச்சுக் காட்டுறேன்..” என ஒரு சிறுவன் குரல் தூங்க விடாமல் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .ஒகனேக்கல் அருவியில் நாற்பதடி பாறை மீது நின்று எண்பதடி ஆழ அருவிக்குள் குதிக்கும் சிறுவர்களின் வலிமிகுந்த வாழ்க்கைப் பாட்டினை நூறடி பறையிலிருந்து குதித்து செத்துப்போன சிறுவனை .. மீண்டு குதிக்க பாறை ஏறும் அவன் தம்பியை  எழுதும் போதே வார்த்தை எனக்கு தடுமாறுகிறது .

 

குதிரை வண்டிக்காரனின் மானுட பாசத்தை பேசும் “பரிமாற்றம்” , அமைப்புகளை உருவாக்க முன்நின்றோர் உதாசீனப் படுத்தப்படுவதை பேசும்.“தேன்கூடு”

,முதுமையின் வலியையும் சுயமரியாதையையும் பேசும் “நெல்லுக்கு இறைத்த நீர்”, நொடியும் நடுத்தர வர்க்க வாழ்வைப் பேசும் “ மறுகோணம்” “ நறும்புனல்”, விளைநிலம் ரியல் எஸ்டேட் ஆவதை சுற்றி பின்னப்பட்ட “உழுதுண்டு வாழ்வாரே”, “புலம்” , புகுந்த வீட்டின் கொடுமையைப் பேசிய “நீர் நீதி”, டிவி வருகையால் தன் பேரனோடு கதைக்கும் இனிய பொழுதைத் தொலைத்த பாட்டியின் மனப்போராட்டத்தை சொல்லும் “வதம்”, நாட்டு விடுதலைக்காக வேரில் நீர் பாய்ச்சியவரின் சொல்லப்படாத கதையைச் சொல்லும் “மறைமுகம்” தன்னலம் பாராது பொதுப்பணியில் அர்ப்பணிப்போர் வாழ்வின் இறுதியில் மனம்வெதும்பும் காட்சியைப் பார்த்திருக்கிறோம் . அது சார்ந்து அமைப்புகளை உருவாக்க முன்நின்றோர் உதாசீனப் படுத்தப்படுவதை பேசும்.“தேன்கூடு” ; இப்படி நூல் முழுவதும் மனதில் நிறைகிறது .

 

தேர்ந்த படைப்பாளி கமலாலயன் அணிந்துரையில் நன்கு திறானாய்வு செய்துள்ளார் ; நான் அதற்கும் மேல் என்ன சொல்ல.

 

மொத்தம் 15 கதைகள் . எந்தக் கதையும் சிக்கல் சிடுக்கில்லாதவை ,எளிமையானவை ஒவ்வொன்றிலும் வாசமாய் நிறைந்திருக்கும் சகமனிதனின் நேசம் . பழ.பாலசுந்தரம் தொடர்ந்து சிறுகதை நாவல் என பயணிக்க வாழ்த்துகள் .

 

காவேரி ஓரம் , [ சிறுகதைகள்] ,ஆசிரியர் : பழ. பாலசுந்தரம் ,

வெளியீடு : மலர் புக்ஸ் , தொடர்புக்கு : 9382853646 / 8825767500

பக்கங்கள் : 116 , விலை : ரூ.130/

 

 சு.பொ.அகத்தியலிங்கம்.

14/12/2023


என்றும் எங்கும் ..

Posted by அகத்தீ Labels:

 


என்றும் எங்கும் ..

 

 அவனை

வழியனுப்பும் போது

ஞாபகமாக

ஜோல்னா பையை

தோளில் மாட்டிவிடுங்கள்

இல்லாவிடில்

அடையாளம் தெரியாமல்

குழம்பிவிடுவார்கள் !

 

 அந்த ஜோல்னா பையில்

நான்கு ஐந்து

புத்தகங்களை போட்டு

அனுப்ப மறக்க வேண்டாம்!

இல்லாவிடில்

புத்தகங்களைத் தேடி

மீண்டும் பூமிக்கு

அவன் வந்துவிடக்கூடும் !

 

 பூதவுடலுக்கு

குல வழக்கம் ,

குடும்ப சம்பிரதாயம்

சாதி ,மத சடங்குகள்

எதையும் செய்துவிடாதீர் !

மீறிச் செய்தால்

பிணமும் எழுந்து நின்று

போராடத் தொடங்கிவிடும் !

 

 செங்கொடி போர்த்தி

அனுப்பி வையுங்கள்

சொர்க்கமோ நரகமோ

அநீதியும் அறியாமையும்

தாண்டவமாடும் இடமெங்கும்

போராட கொடி வேண்டும்

அவன் என்றும் எங்கும்

போராளிதானே !

 

 

புண்ணிய நதியில் கரைத்தோ

புனித சமாதி எழுப்பியோ

அவனை காயப்படுத்தி விடாதீர்!

மருத்துவ மாணவர் கற்க

உடல் தானமாகுக !

இறந்தும் பாடமாவான் !

 

 

அவன் படத்துக்கு

படையல் போடுவதோ

நாயக பிம்பத்தை

கட்டமைக்கவோ வேண்டாம்!

நினைவுகள் காலவெளியில்

கரைந்து போகட்டும் !

முளைத்தெழட்டும் முன்னிலும்

வீரியமான புதிய தலைமுறை !

 

சுபொஅ.

[ 2023 மே மாதம் எழுதியது .ஏனோ பதிவிடாமல் இருந்துள்ளேன் . 12/12/23 ல் பதிவிடுகிறேன். செண்டிமெண்டாக யாரும் வாசிக்க வேண்டாம் . ]

 

 

 

 

 


ஆழ்கடலின் கீழெவர்க்கும் அறிய முடியாமல்

Posted by அகத்தீ Labels:

 



ஆங்கிலக் கவிஞன் தாமஸ் கிரே ஒரு கிராமத்தின் கல்லறை பற்றி எழுதி அழியாப் புகழ்பெற்றான். அந்தக் கல்லறைத் திடலில் மாய்ந்து போன அரிய திறமைசாலிகளை நினைத்து ஓர் இரங்கல் கவிதை வரைந்திருக்கிறான் தாமஸ் கிரே . அவனது கவிதையைத் தழுவிக் கவிமணி சுருக்கமாகச் சிலவரிகள் எழுதியிருக்கிறார் .
ஆழ்கடலின் கீழெவர்க்கும்
அறிய முடியாமல்
அளவிறந்த ஒளிமணிகள்
அமிழ்ந் துறையும் அம்மா !
கடல் சூழ்ந்த உலகு புகழ்
காவியம் செய்யாமல்
கண்மூடும் கம்பருக்கோர்
கணக்கில்லை அம்மா !
என ஏக்கம் ததும்ப எழுதிய கவிமணி முத்தாய்ப்பாய் சொல்லுவார் :
தக்க திறனிருந்தும் –நல்ல
தருணம் வாய்த்தில தேல்
மிக்க புகழெய்தி –மக்கள்
மேன்மை அடையாரம்மா !
மேலே சுட்டப்பட்டவை கவிஞர் சிற்பி எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை . “ அருந்திறல் பெரும் பேராசிரியர் மு.அண்ணாமலை” என தம் ஆசிரியர் குறித்து பதிப்பித்த நூலில் எழுதியவையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . .
சுபொஅ.
9/12/2023.

அந்த ரகசிய அறையில்

Posted by அகத்தீ Labels:

 




அந்த ரகசிய அறையில்

புதைக்கப்பட்டுள்ளவை

என்னவாக இருக்கும் ?

 

தெரியாத வரைதானே

அவை ரகசியம்

 

 

அந்த மர்மப் புதிரை

விடுவிப்பது எப்போது ?

 

விடுவித்தால் அது

எப்படி புதிராக இருக்கும் ?

 

மன அழுக்கை வெளுத்த

சாம்பலும் இல்லை

மனபூட்டை திறக்கும்

சாவியும் இல்லை .

மண்ணுக்கடியில் புதைந்த

சிதையில் எரிந்த

அத்தனை பேரும் சாட்சி !

 

ரகசியங்களத் தோண்ட முனைந்து

இதயம் ரத்தம் கசிய வேண்டாம் !

 

யாரையும் முழுதாய் புரிந்து கொள்ள

யாராலும் முடியாது

புரிந்தவரை போதும்

குறை நிறைகளோடு

புன்னகைத்து வாழப்பழகு !

 

சுபொஅ.

9/12/2023.

 

 


தஞ்சை மாவட்ட செங்கொடி

Posted by அகத்தீ Labels:

 


 


வாலிபர் சங்கத்தில் நான் இயங்கியபோது தஞ்சையில் என்னோடு இயங்கிய தோழர்களில் ஒருவர் பக்கிரிசாமி .களப்போராளி . அவர் கடும் முயற்சி செய்து தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை சுண்டக் காய்ச்சிய குறிப்புகளாய் ஓர் சிறு நூலாய்த் தந்துள்ளார் .அவர் முயற்சிக்குப் பாராட்டுகள் .

 

தஞ்சையின் அன்றைய நிலைமை ,கட்சி துவக்கம் , மாநாடுகள் ,போராட்டங்கள் ,தியாகிகள் . சதிவழக்குகள் ,வெண்மணி என பதினொரு அத்தியாயத்தில் பல குறிப்புகளைத் தொகுத்துள்ளார் . ஒரு பருந்துப் பார்வையில் வரலாற்றைப் புரிய இது உதவும் என்பதில் ஐயமில்லை .

 

அதே வேளை , தகவல்களை தக்க ஆவணங்களோடு ஒப்பிட்டு திருத்தம் செய்ய வேண்டும் . என் முதல் பார்வையில் பல தகவல் பிழைகளும் விடுபடுதலும் இருப்பதாய் உணர்ந்தேன் .ஒப்பிட்டு சொல்ல ஆவணங்கள் என் கையிருப்பில் இல்லை . எடுத்துக் காட்டாய் பாரதிமோகனுக்கு பின் செல்லமுத்து கட்சிச் செயலாளராய் இருந்ததாய் என் நினைவு .[ சரிபார்க்கப்பட வேண்டும்] அதுபோல் சட்டமன்ற உறுப்பினர் விபரங்கள் சரியாக தொகுக்கப்படவில்லை . இன்னும் ஒரு முறை தகவல்களை சரிபார்த்து அடுத்த பதிப்பில் செப்பம் செய்யவும்.

 

முன்னுரையில் வெ.ஜீவகுமார் தான் எழுத திட்டமிட்டதாகக் கூறியுள்ளார் .எழுதுக ! எழுதுக ! பல நூல்கள் வருவது தேவையே .புதிய கோணங்களும் செப்பம் செய்யப்பட்ட தகவல்களும் இடம் பெறட்டும்.

 

தோழர் ச.தமிழ்ச் செல்வன் தஞ்சை மாவட்ட போராட்ட வரலாற்றை எழுதப் பணிக்கப்பட்டதையும் ; அவரும் ஏற்றுக்கொண்டதையும் அறிவேன் .காலம் நகர்கிறது .நானும் இரண்டு மூன்று ஆண்டுகளாய் கேட்டு வருகிறேன் .இந்த ஆண்டு இந்த ஆண்டு என கடத்திவிட்டார் .அண்மையில் கேட்டபோது மூன்று மாதங்களில் வரும் என உறுதி சொன்னார் .கவின் மலருக்கும் அதையே சொல்லியுள்ளார் .ஆவலுடன் எதிர்பார்ப்போமாக !

 

சென்னை மாவட்ட கட்சி வரலாற்றை எழுத யார் முயற்சிப்பார் ? . தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுத முன்வந்த போதும் சில தலைவர்களின் பெருத்த கனவால் தடை பட்டது .இப்போது அவரும் இயற்கை எய்திவிட்டார் . யாரையும் கட்சி பணிக்கவும் இல்லை .இப்போது ஆறு மாவட்டக்குழுக்கள் முடிவெடுக்கணும் . தோழர் பக்கிரிசாமி எழுதியதுபோல் ஓர் சிறு நூலாவது வருமா ? நம்பிக்கை அருகில் இல்லை.

 

தஞ்சை மாவட்ட செங்கொடி வீரகாவியம் ,

ஆசிரியர் : தஞ்சை கே.பக்கிரிசாமி ,

வெளியீடு : பொன்னி , தொடர்புக்கு :4 ஏ ,பூபதி நகர் ,கீழ்க்கட்டளை , சென்னை 600 117. Email : vivekdushy@gmail.com பக்கங்கள் : 78 , விலை : ரூ. 100/

 


“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

Posted by அகத்தீ Labels:

 



“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

 

நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்திருந்த இந்த புத்தகம் இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது .  தாமதமாகவேனும் சரியான புத்தகத்தை வாசித்த மனநிறைவு .

 

“ காகஸி ஹை பைரஹன்” எனும் உருதுமொழியில் சுக்தாயால் எழுதப்பட்ட சுயசரிதை ; ஆங்கிலம் வழி தமிழுக்கு தந்திருக்கிறார் சசிகலா பாபு .

 

ஒரு நாவலைப்போல் விரியும் இந்த சுயசரிதை இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னுமாக வாழ்ந்த சுக்தாயின் சொந்தக் கதை மட்டும் அல்ல ; அன்றைய இஸ்லாமிய குடும்பத்தில் பெண்களின் வாழ்க்கை வலியையும் உரிமை வேட்கையையும் ஒருங்கே சொல்லும் ஒரு வரலாற்று பதிவு எனினும் மிகையாகாது .

 

உருது இலக்கியங்களில் கவிதைக்கு தனி இடம் உண்டு . இந்நூலும் உணர்ச்சி கொப்பளிக்கும் கவித்துவத்தோடு நெய்யப்பட்ட உரைநடையே .இதனை ஆங்கிலம் மூலம் தமிழுக்கு கொண்டு வந்த பின்னும் இதனை உணர முடிகிறது எனில் ; உருது மொழியிலேயே வாசித்தால் சொக்கிவிடுவோம் போல. மொழிபெயர்த்தவருக்கு பாராட்டுகள் .

 

”படிப்பெதற்கு பணம் சம்பாதிக்க வழி காண்பீர்!” என இப்போதும் சில மூளைவீங்கிகள் உளறிக்கொண்டிருக்கும் நேரத்தில் , கல்வி கற்கவே பெண்கள் எவ்வளவு போராட வேண்டி இருந்தது , அதிலும் இஸ்லாம் சமூகத்துக்குள் இருந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் கல்விக்காக சுக்தாய் நடத்திய போராட்டம் நிச்சயம் நாம் அறிய வேண்டிய செய்தி .

 

இந்த நூலின் சாரம் என்ன ? ஆரம்பத்திலேயே ஒரு பத்தி வருகிறது , “ எப்படியோ பால்யத்தைக் கடந்துவந்தேன்.ஏன் பால்யத்தின் மீது இத்தனை புகழ்ச்சிப் பாடல்களை இயற்றுகின்றனர் என எனக்குப் புரிவதில்லை . [இஸ்மத் சுக்தாயின் சிறுகதையான ‘பச்பன்’ அதாவது ‘பால்யம்’ ,பால்யத்தின் மீதான வறண்ட உணர்ச்சியற்ற பார்வையைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும்.] தடைகளையும் இடர்பாடுகளையும்தான் பால்யம் இயம்புகின்றது . ஒருவர் வளர்ந்து பெரியவராகும் போதுதான் அநீதிக்கு எதிராகப் போரிடக்கூடிய தகுதியை அடைகிறார் .எட்டு சகோதர சகோதரிகளின் அன்பையும் நேசத்தையும் அனுபவித்ததாலேயே ,நான் பெரியவளாக வளர மிகவும் ஆர்வமாயிருந்தேன். உடன் பிறந்தோருக்கு மகன்களும் மகள்களும் பிறந்த போது எனக்கு கிடைத்த புது மூப்பு நிலையால் நான் அதீத மகிழ்வுற்றேன் .ஏற்றதாழ்வுகளும் பணக்காரர்களுக்கும் இடையே இருப்பது மட்டுமல்ல ; ஆண்களுக்கு பெண்களுக்கு இடையே உள்ள அதிகார உறவில்தான் அதீத வேறுபாடு நிகழ்கிறது.”

 

இந்நூல் நெடுக இந்த அடிசரட்டிலேயே நகர்கிறது .

 

 “ …… ……. எத்தகைய பெரிய அறிவுஜீவியாகவே ஒருவர் இருந்த போதும்,எதிர்க்கும் ஒரு பழக்கம் எனக்குள்ளது .எத்தகைய ஒரு கெட்ட பழக்கம் இது . அவருடைய கோட்பாடுகளில் உள்ள ஓட்டைகளைத்தான் நான் முதலில் காண்கிறேன். ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கும் முன்னர் அதிலுள்ள உடன்பாடற்ற விஷயங்களைத்தான் ஒருவர் ஆராய வேண்டும் . ஒன்றிற்கு பெயரளவில் இருக்கும் மதிப்பைக் கொண்டு என்னால் அதனை உடனடியாக ஒப்புக் கொள்ள முடியாது .நான் வளர்ந்து பேசத்துவங்கியதும் உதிர்த்த முதல் சொல் ‘ஏன்?” இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

 

அன்றைய கெடுபிடியான காலகட்டத்தில் எல்லாவற்றையும் “ ஏன்” என்று கேள்வி கேட்ட சுக்தாய் வீட்டில் சமூகத்தில் எவ்வளவு பெரிய சவாலை எதிர் கொண்டிருப்பாள் ? கல்வி கற்க அவள் விடாப்பிடியாக போராடி படித்தது என்பதே இந்நூலின் முழுக்கதை எனச் சொல்லிவிடலாம் .

 

“ நிக்காஹ் எனும் வைபவம் முக்கியத்துவம் வாய்ந்ததுதானா ?” இக்கேள்வி இன்றைக்கு ஓரளவு சுலபம் ,ஆனால் அன்றைக்கு துணிந்து கேட்டு ஓர் தனித்த பாதையில் பயணித்த சுக்தாய் நிச்சயம் ஓர் எடுத்துக்காட்டுதான். அதே சமயம் பந்த பாசம் அன்பு நேசம் எல்லாவற்றையும் உதறிவிட்ட தனிக்காட்டு சுயநலமியாக பயணித்த பாதை அல்ல ;  அனைத்திலும் மூழ்கித் திளைத்துக் கொண்டே தன் தனித்துவம் மிக்க பாதையை சமைத்தவள் சுக்தாய் .அதன் எதிர்ப்பும் போராட்ட வலியும் உணர்ச்சி பிரவாகமாகவும் அறிவார்ந்த விவாதமாகமவும் நூல் முழுக்க வியாபித்து இருக்கிறது .

 

சாதக் ஹசேன் மண்ட்டோவுக்கு எதிராகவும் இஸ்மத் சுக்தாய்க்கு எதிராகவும் ஒரே நேரத்தில் ஓர் வழக்கு நடந்தது .ஆபாசமாக கதை எழுதிவிட்டதாகவே அவ்வழக்கு . இருவரும் நிர்பந்தங்களுப் பணிந்து  மன்னிப்பு கேட்காமல் , அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றது சாதாரணமானது அல்ல . இன்றும் வழிகாட்டும் செய்தி அது.

 

அன்றைய இஸ்லாம் சமூகம் ,குடும்ப அமைப்பு , இந்து ,கிறுத்துவ உறவுகள் ,மதவெறியைத் தூண்டும் முயற்சிகள் , மதமாற்ற முயற்சிகள் ,மத வெறி பரவல் ,பத்தாம்பசலி வாழ்க்கை முறை ,குழந்தைத் திருமணம் , சாதியம் , ஸதி என உடன்கட்டை ஏற்றும் வழக்கம் ,நாவாப்பின் பொறுப்பற்ற ஆடம்பர நிர்வாகம் ,அதிகார வர்க்கம் , அனைத்தையும் மீறி மக்களிடையே மிளிரும் நல்லிணக்கம் , கிறுத்துவ கல்வி நிறுவனங்கள் தந்த ஜனநாயக வெளி ,காங்கிரஸ் ,முஸ்லீம் லீக் , புதிய சமூகப் பார்வை ,கம்யூனிசம் , உருது இலக்கியம் சந்தித்த சவால்கள்  , ஒரினச் சேர்க்கை ,எது ஆபாசம்  இப்படி போகிற போக்கில் சுயசரிதையோடே பொதிந்துள்ள சமூக அக்கறைமிக்க செய்திகள் வியக்க வைக்கின்றன .

 

நெகட்டிவ் அப்ரோச் ,நெகட்டிவ் கேர்ள் என சுலபமாக மேதாவிகள் கடந்துவிடக்கூடிய ஒரு பாத்திரமாகவே தன்னை அடையாளப் படுத்தும்  சுக்தாய் வாழ்வின் உள் பொதிந்துள்ள வெப்பமும் வினாக்களும் ஒரு பாசிட்டிவ் சமூகத்தை நோக்கிய முன்னெடுப்பே !

 

அலிகார் ,லாகூர், ஆக்ரா ,டெல்லி என பல நகரங்களின் பயணிக்கும் இந்நூல் ஒரு சமூகவியல் விவரிப்பையும் தருகிறது .

 

இஸ்லாமியர் சொல்லும் ‘தோசாக்’ எனும் நரகம் , இந்துக்கள் சொல்லும் ‘நரகம்’ ,கிறுத்துவர்கள் சொல்லுல் ‘ஹெல்’ எனும் நரகம் இவற்றை எல்லாம் சுக்தாய் பகடி செய்வது சுவையானது .அவர் நாத்திகரல்ல .அவருக்கு இறையன்பு இருக்கிறது . ஆனால் அச்சம் இல்லை . கேள்விகள் கேட்கும் உறுதி இருக்கிறது . பரந்த வாசிப்பு இருக்கிறது . அவர் எழுதுகோல் நிமிர்ந்து நின்றது .சவால்களை எதிர் கொண்டது .

 

இந்நூலை சுருக்கமாய் எழுதிவிட முடியாது .அந்த உணர்ச்சியையும் சுயமரியாதைக்கான கல்விக்கான அன்பும் உறுதியும் மிக்கஓர் பெண்ணின் போராட்டத்தையும் வாசித்து அறிவீர் !

 

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை , ஆசிரியர் : இஸ்மத் சுக்தாய் ,

தமிழில் : சசிகலா பாபு , வெளியீடு : எதிர் வெளியீடு ,

தொடர்புக்கு : 04259 226012 / 99425 11302 , பக்கங்கள் : 404 , விலை : ரூ.400/

 

 

சுபொஅ.

05/12/2023.