உரைச் சித்திரம் : 11.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 11.

 

மழைக் காதலும் ; காதல் மழையும்…

 

காதலர் குழந்தைகள் போல் மழையில் நனைவர் .மழை கொட்டும் போது ஏதாவது கொறித்துக் கொண்டே கதை பேசும் காதலர் கொடுத்துவைத்தவர் என்பர் .காதலுக்கும் மழைக்கும் இருக்கும் தொடர்பு சங்க இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது . ஒன்றிரண்டை இங்கு நாமும் கொறிக்கலாம்.

 

 “ உன் குவளை மலர் கண்ணுக்கு ஏன் இந்த வருத்தம் ? அணிகலன் அணிந்த அல்குலின் வரிவனப்புக்கு ஏன் இந்த வாட்டம் ? கருணை இல்லாமல் உன்னை இப்படி கண்ணீரில் தவிக்கவிட்டு மலை காடென நெடுந்தொலைவு சென்றுவிட்டாரே உன் காதலன் ! வருந்தாதே தோழி ! வெகு சீக்கிரம் வந்துவிடுவார்….” என தலைவியை தேற்றினாள் தோழி .

 

 “ தோழி ! நானறிவேன் .என் வருத்தமோ வேறு .அதோ பார் காலையிலேயே  கொண்மூக் கிளை எனப்படும் மழை மேகம் வருகிறது. அலை எழுப்பும் பாட்டொலி அடங்கி பனியில் கிடக்கும் கடலில் இருந்து நீரை அள்ளிக் கொண்டு வருகிறது . கருவுற்றிருக்கும் யானைபோல் மழை மேகம் வானில் அங்கும் இங்கும் அலைகிறது . இது மழைக்காலம் முடியப்போகிறது பனிக்காலம் தொடங்கப் போகிறது . இக்காலத்தில் மலரும் பிடவம் பூ எங்கும் மணம் வீசுகிறது . இந்த ஊதல் காற்றும் குளிரும் அவரை வருத்துமே என நான் வருந்துகிறேன்.” என தலைவி தோழிக்கு மறுமொழி தந்தாள்.

 

அகநானூறில் கருவூர் கலிங்கத்தார் இப்படிச் சொல்கிறார் என்றால் குறுந்தொகையில் புலவர் பெருங்கண்ணார் இன்னொன்றை வரைந்து செல்கிறார் .

 

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு காம இச்சை உள்ளுக்குள் அலை மோதுகிறது .இதனை காமநோயென சங்க இலக்கியம் சொல்லும். இந்நோயில் அல்லலுறும் தலைவி தோழிக்கு சொல்கிறாள் ,

 

“ தோழி ! திங்கள் அதுதான் நிலவு வளர்பிறையில் நாளொரு மேனியாய் வளர்வதுபோல் என் காதல் நோய் பெருகுகிறது ;உடல் மெலிந்துவிட்டது ;கைவளை கழன்றுவிட்டது . இளம் தளிரைக் கசக்கிப் பிழிவதுபோல் நான் கவலையால் பிசையப்படுகிறேன். இது மழைக்காலமல்ல , ஆயினும் காலந்தவறிய மழை பெய்யத்துவங்கிவிட்டது .இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பே என்னவர் வந்துவிடமாட்டாரா என எண்ணுகிறேன் .வராவிடில் மழைக்காலத்தில் கூட இவளை தவிக்கவிட்டுவிட்டாரே என ஊரார் கவலைப்படுவதுபோல் வசை பொழிவாரே . நானும் அதை எண்ணியே கவலையில் மெலிகிறேன்….”

 

பொதுவாய் திருமண விழாக்களில் பேசுவோர் இந்தக் குறுந்தொகைப் பாடலைச் சொல்லாமல் விடுவதில்லை .ஆனாலும் பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே சொல்லுவார்கள் .ஒரு முறை கலைஞர் தலைமையேற்று நடத்துகின்ற திருமணத்தில் ஒருவர் இப்படிச் செய்ய , மனம் நொந்த கலைஞர்  “இந்த ஒரு குறுந்தொகைப் பாடலையாவது பிழையில்லாமல் தெரிந்து கொள்ளக்கூடாதோ!” என தன் பேச்சில் குறிப்பிட்டார்  .

 

அந்தப்பாடலை ஒட்டி ஓர் சித்திரம் : மழையில் முழுக்க நனைந்த காதலர் ஒரு மாடத்தில் ஒதுங்குகிறார் ; அப்போது தலைவிக்கு ஓர் சந்தேகம் எழுகிறது .மழை விடை பெறுவதுபோல் இவரும் விடைபெற்று விடுவாரோ என சந்தேகக் கண்ணோடு தலைவரை நோக்குகிறார் ; குறிப்பறிந்த தலைவர் சொல்லுகிறார் ,

 

“ என் தாயும் உன் தாயும் உறவினாரா ? இல்லை .என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா ? இல்லை . உறவின் வழியாகவா நாம் சந்தித்தோம், பழகினோம் , காதல் கொண்டோம் ? இல்லையே ?

 

[ இங்கே நீ என்ன சாதி , நீ என்னமதம் என கேட்டா காதல் கொண்டோம் ? என விரித்துப் பொருள் கொண்டாலும் பிழை இல்லை.]

 

செம்மண் நிலத்தில் மழை பொழிகிறது . செம்மண்ணும் மழைநீரும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்துவிடுகிறது .அதுபோல் நாம் அன்பால் கலந்துவிட்டோம் .”

 

இதனைப் பாடியவர் பெயரைக்கூட செம்புலப்பெயல்நீரார் என்றே சங்க இலக்கியம் பதிவு செய்து கொண்டது .

 

ஆம் காதல் சாதி ,மதம் ,எல்லாவற்றையும் மீறி இதுபோல் அன்பால் கலக்கச் செய்யும் .ஆகவேதான் சாதி ,மத வெறியர் காதலுக்கு எதிராய் கத்தியைத் தூக்குகின்றனர் .

 

நாம் காதலைத் தூக்கிப் பிடிப்போம் !

மானுடத்தை வாழவைப்போம் வான்மழைபோல்….

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 “குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று

5

பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரே மாலைக்

10

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

15



  [கருவூர்க் கலிங்கத்தார் , அகநானூறு 183.]

 

 

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

 

புலவர் பெருங்கண்ணார் ,குறுந்தொகை 289.

 

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

 

 [ புலவர் :செம்புலப் பெயல்நீரார் ,குறுந்தொகை :40.]

 

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/5/2022.

 

ஒவ்வொரு மரணச் செய்தியும்

Posted by அகத்தீ Labels:

 

ஒவ்வொரு மரணச் செய்தியும்

ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்கிறது .

 

நண்பர்கள் தோழர்கள் வட்டம்

விரிந்துகொண்டே சென்ற காலம் ஒன்று இருந்தது

தோளில் கைபோட்டபடி அளவளாவிய கதைகளின்

எண்ணிக்கையை சொல்லி முடியாத காலம் அது.

 

அப்போதும் இதயத்தை பகிர்ந்து கொண்டவர்கள் சொற்பமே

ஒவ்வொருவராய் அவர்களும் விடைபெற

அடுத்து யார் எனும் கேள்வியோடு

தூங்கச்  செல்லும் முதுமையின் துயரத்தை

கவிதையில் சொல்லிவிட முடியாது !

 

சுபொஅ.

ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…

Posted by அகத்தீ Labels:

 

 

ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…

 

 



ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுவது அசாதாரணமானது . அதுவும் மார்க்சுக்கு பிறகு மோடிவரையிலான தத்துவம் ,கோட்பாடு,அரசியல் சார்ந்து உரையாடுவது மிகவும் நுட்பமானதும் ஆழமானதும்கூட. ஆழந்த புலமைமிக்க இருவரின் உரையாடலாக இந்நுல் அமைந்துள்ளது .

 

ஏற்கனவே இத்துறையில் ஞானம் உள்ளோருக்கு இந்நூல் மறுவாசிப்பாகவும் புத்துணர்வு ஊட்டுவதாகவும் அமையும் . புதிய வாசகர் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து பல செய்திகளை தகவல்களை உள்வாங்கலாம். தெளிவடையலாம்.

 

சர்வதேச அரசியல் தத்துவப் போக்குகளூடே இலக்கிய கலாச்சாரப் போக்குகளையும் விரவி உரையாடும் இருவரும் மிகவும் பரந்த வாசிப்பும் கூர்ந்த ஞானமும் உடைய செயல்பாட்டாளர்கள். இந்நூலில் அய்ஜாஸ் அஹ்மத் உடன் விஜய் பிரசாத் உரையாடுகிறார் .

 

அய்ஜாஸ் இந்தியாவில் உத்திரபிரதேசம் முஷாபர் நகரில் 1941 பிறந்து ,பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு குடிபெயர்ந்து ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்து ,மீண்டும் இந்தியா வந்து இங்கு பல காலம் வசித்துவிட்டு ,அமெரிக்காவில் இவ்வாண்டு [2022] மார்ச்சில் தன் இறுதி மூச்சை விட்டவர் . உலகின் சிறந்த மார்க்சிய அறிஞராக வலம் வந்தவர் .  இடது ,வலது என எல்லா சார்பு நூல்களையும் தேடித்தேடி வாசித்தவர் . மார்க்சியத்தை தொடர்ந்து வந்த பல்வேறு தத்துவக் கூறுகளை விமர்சன நோக்கில் ஆய்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் . உலகெங்கும் இவரது கட்டுரைகள் அறிவுப் புலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. .இந்தியச் சூழல் குறித்து நுட்பமாக பேசியவர் .இவை அனைத்தின்  சாரத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

 

இவரோடு உரையாடிய விஜய் பிரசாத் நல்ல மார்க்சிய அறிஞர் .பரந்த வாசிப்புக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் . இதில் அய்ஜாஸை பல கோணங்களில் பேச வைத்துள்ளார் விஜய் பிரசாத் .அதன் மூலம் அறிவார்ந்த செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் . பதினெழு பகுதிகளாக இந்த உரையாடல் நீண்டிருக்கிறது .

 

 “… மொத்த உருது இலக்கியத்திலும் எங்கேயும் புனைவாகக்கூட ,இலக்கியத்துவமாகக்கூட,பாகிஸ்தான் உருவாக்கத்துக்கான கொண்டாட்டத்தைப் பார்க்க முடியாது .அது எப்போதுமே துயராகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும்.” என அய்ஜாஸ் சொன்னதை வாசித்த போது ஒரு நிமிடம் உறைந்து போனேன் .எவ்வளவு ஆழமான அவதானிப்பு .

 

 “ ஒரு கட்டத்தில் லெனினைப் பற்றிய உருது மொழி எழுத்துகள் என்னை அலுப்பு கொள்ளச் செய்தன .எனவே மாஸ்கோவிலிருந்து வந்த லெனின் எழுத்துகளை நான் அமர்ந்து திருத்திச் சரியான உருது வார்த்தைகளில்  எழுதினேன்..” என்கிற அய்ஜாஸ் அஹ்மத் அனுபவம் நம் அனுபவமாகவே உள்ளது .

 

 “ பிராமணியம் மரபாக இல்லாமல் ஆசாரமாக நெஞ்சில் இருக்கிறது” என்கிற சுவிரா ஜெய்ஸ்வாலுடன் உடன்படும் அய்ஜாஜ் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது ,

 

“பாகிஸ்தானில் அதிக காலத்துக்கு வாழ்ந்துவிட்டு ,அற்புதமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாலும் - காந்தி ,நேரு போன்றோர் இருப்பதாலும் -மதச்சார்பின்மை முதலிய அம்சங்கள் இருப்பதாலும் ஆர்வத்துடன் இங்கு வந்த எனக்கு , ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கீழ்ப்படியும் தன்மையைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது .என்னால் உடனடியாக சாதியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது .இங்கு உயர்சாதியினர் பேசுவதுபோல் பாகிஸ்தானில் பேசினால் அடிவாங்குவார்கள். பாகிஸ்தானில் உங்கள் பாலினத்தை வைத்தே அடையாளம் கொள்வீர்கள் . உங்கள் வர்க்கம் ,சாதி ,மதத்தைக் கொண்டு அல்ல. இரண்டு ஆண்கள் சந்தித்தால் அணைத்துக் கொள்வார்கள் .தில்லிக்கு வந்த பிறகு பல உயர்சாதிக் குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சாதியில் நம்பிக்கைகூட இருக்காது .இடதுசாரிகளாகக் கூட இருப்பார்கள்.ஆனால் நண்பர்கள் மத்தியில்கூட இடைவெளியையைக் கடைப்பிடிப்பார்கள்.அனைப்பது என்பது வரவேற்புக்கான விஷயமாக அவர்களுக்கு இருப்பதில்லை .அத்தகையத் தன்மையை என்னால் உடனடியாக சாதியுடன் பொருத்த முடிந்தது.”

 

இதைத் தொடர்ந்து அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது ஓரிடத்தில், “ இந்தியாவில் வர்க்கப் புரட்சி ஏற்பட சாதி ஒழிப்பு முன் நிபந்தனை எனத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

 

தோழர் இஎம்எஸ் ,பி.டி.ரணதிவே ஆகியோர் சாதியைப் பற்றி பேசியதை பாராட்டுகிறபோதே ,கட்சி நடவடிக்கைகளில் அது பிரதிபலிக்கவில்லை என தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார் .இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஒப்புக் கொள்கிற அவர் இன்னும் போக வேண்டியது நெடுந்தொலைவு எனச் சுட்டிக்காட்டுகிறார் .

 

லெனினுக்கு பிறகான உலகில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் ஏற்பட்ட மாற்றங்களும் குழப்பங்களும் ,பின் நவீனத்துவம் ,கட்டுடைத்தல் , கிராம்ஸியின் பார்வை ,ஐரோப்பாவில் உருவான பல்வேறு போக்குகள் குறித்து  இந்நூல் நெடுக விமர்சனபூர்வமாக ஆழமாக உரையாடுகிறார் அய்ஜாஸ் . சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் தற்போதைய போக்கு உள்ளிட்ட எதுவும் அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை .

 

இன்னும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் இருப்பதும் , இன்னும் அமெரிக்க கரன்சி உலகில் தனி இடம் பெற்றிருப்பதும் , உலகெங்கும் கலாச்சாரத்தில் அமெரிக்க ஆதிக்கம் நீடிப்பதும் , ராணுவம் சார்ந்த அமெரிக்க பொருளாதாரம் , உட்பட பலவற்றை சுட்டி அமெரிக்க வல்லரசின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மிகச் சரியாகச் சொல்லுகிறார் .

 

ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிடும் போக்கை விமர்சிக்கிறார் ; அதே நேரம் காலகதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இணைத்தே பார்க்கிறார் .சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் செயல்பாடுகள் இவற்றின் பின்னணியில் ஒருங்கிணைந்த பார்வையை நோக்கி நகர்த்துகிறார் .

 

நவதாராளமயத்துக்கும் உலகெங்கும் வலதுசாரி அரசியல் மேலோங்குவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் ,இடதுசாரிகளின் தோல்வியையும் தயக்கமின்றி விவாதிக்கிறார் . இங்கு சங்பரிவாரின் எழுச்சியையும் மோடியின் வருகையையும் இதனோடு இணைத்துப் பார்த்தும் இதன் தனிக் கூறுகளை உரசிப்பார்த்தும் அய்ஜாஸ் சொல்லும் கருத்துகள் ஆழ்ந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவையே !

 

கேரளாவில் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் இடதுசாரிகளுக்கு தந்த தோல்வியையும் சுட்டுகிறார் . இதைப் படித்த போது என்னுள் எழுந்த கேள்வி ; மதவாதம் சூழ்ந்துள்ள நாட்டில் ஒரு மாநில அரசு மதச்சார்ப்பற்று செயல்படுவதில் உள்ள சங்கடங்களும் சவால்களும் முக்கியமானவை . “ஓரடி முன்னே இரடி பின்னே” என்கிற லெனின் சொற்களைத்தான் இங்கும் சொல்ல வேண்டுமோ ?

 

 “பிராமண முறையிலோ சமூக சமத்துவத்துக்கான கொள்கையே கிடையாது . சாதிய முறையின் அடுக்குகள் அத்தகைய கொள்கை இருக்கும் வாய்ப்பையே இல்லாமலாக்கி விடுகிறது” என்கிற அய்ஜாஸ் தன் உரையாடல் போக்கில் அம்பேத்கரின் சரியான பார்வைகளை சுட்டிக்காட்டுகிறார் . மேலும் , “இந்து மதவாதம் குறிப்பிட்ட வலிமையுடன் எதிர்க்கப்பட வேண்டும் என்கிற நேருவின் வாதத்தை நான் ஏற்கிறேன்.” என்கிறார் அய்ஜாஸ் .

 

மொழிப் பிரச்சனை தவிர்த்து வேறெதுக்கும் தமிழகம் பக்கமோ தென் இந்தியா பக்கமோ தன் பார்வையை பொதுவாக அய்ஜாஸும் திருப்பவில்லை . பொதுவாய் தில்லியில் மையம் கொள்கிற அறிவுப் புலமை வட இந்தியாவை மட்டுமே மையம் கொண்டே இருப்பது தற்செயலானதா ? இடதுசாரிகளுக்கும் இந்த விபத்து ஏற்படுகிறதே என்கிற காத்திரமான கேள்வி என்னுள் எழுகிறது .

 

ஜோதிபாசுவை பிரதமராக முன் மொழிந்த விவகாரத்தை அவர் நோக்கில் பேசவும் தவறவில்லை . பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து பின் வெளிவந்த தான்  அதன் பிறகு வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகவில்லை எனினும் அவர்களோடு நெருக்கமாக இருந்தேன் . சிபிஎம் ,சிபிஐ இருபக்கமும் தனக்கு நண்பர்கள் உண்டு என்பவர் ஜோதிபாசு விவாதத்துக்கு பிறகு சம்மந்தமில்லாமல் தானும் கோஷ்டிவாதத்தில் இழுத்துவிடப்பட்டது குறித்து வருந்துகிறார் .

 

இறுதியாக . “ இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் உங்களை அதன் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறது.” என்கிற விஜய் பிரசாத்தின் கூற்றை அங்கீகரித்து அய்ஜாஸ் சொல்கிறார் ,“ நிச்சயமாக .அதுதான் சரியும்கூட .எனக்கு அது ஆச்சரியம் அளிக்கவில்லை . ஏனெனில் அது எனக்கு சந்தோஷம் தரக்கூடிய உண்மை.”

 

இந்த நூலில் பல்வேறு அறிஞர்களின் பெயர்களும் ,அவர்களின் வாதமும் விமர்சனபூர்வமாக இடம் பெற்றுள்ளது .நான் அவற்றை எல்லாம் இந்த நூலறிமுகத்தில் சொல்லி புதிய வாசகர்களை மிரட்ட விரும்பவில்லை .அவை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளே ! ஆகவே ,இந்த புத்தகத்தை ஒருவர் தனியே வாசிப்பதைவிட கூட்டாக வாசிப்பதும் விவாதிப்பதுமே பயன் தருவதாக அமையும் என பரிந்துரைக்கிறேன்.

 

கடினமான நூலை தமிழாக்கம் செய்த ராஜசங்கீதனுக்கு வாழ்த்துகள் .

 

மானுடத்துக்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல,

அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் உரையாடல் ,தமிழில் : ராஜசங்கீதன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,Email : bharathiputhakalayam@gmail.com , www,thamizhbooks.com தொடர்புக்கு 044 -24332934 / 24332424 /24330024 / 9498062424 .பக்கங்கள் :272 , விலை : ரூ.260 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/5/2022.

உரைச் சித்திரம் : 9

Posted by அகத்தீ Labels:

உரைச் சித்திரம் : 9 இசையும் அன்பும் இயற்கையோடு … அந்த காட்டில் இயற்கை ஓர் இசைக் கச்சேரியையே நடத்திக் கொண்டிருக்கிறது … அதோ ! புல்லாங்குழலின் மென்மையான இசை நெஞ்சை வருடுகின்றதா ? அது வேறொன்றுமில்லை . அசைந்தாடும் மூங்கிலை வண்டுகள் துளைத்துவிட்டன .அந்தத் துளையில் காற்று புகுந்து வெளியேறுகிற ஓசையே இசையாகிறது . அதோ ! தேர்ந்த கலைஞர்கள் ஏராளமான மத்தளங்களை கேட்பவர் தாளமிட வாசிக்கின்றனர் . அதுவா ? வேறொன்றுமில்லை . அருவி மேலிருந்து கீழே ஒசை நயத்தோடும் தாள லயத்தோடும் கொட்டும் இன்னொலிதான் அது. இதோ !யானைத் தும்பிக்கை போல் வளைந்த - நாதஸ்வர வகை சார்ந்த இசைக்கருவி பெருவங்கியத்தின் உரத்த அழுத்தமான இசை காற்றில் மிதந்து வருகிறதே ! அதுவா ? வேறொன்றுமில்லை ,கலைமான்கள் கூட்டமாக குரல் எழுப்புகிறது ; தாள லயத்தோடு அக்குரல் இசையாய் மிதந்து வருகிறது . இதயத்தை வருடும் யாழின் இசை காதில் தேனாய்ப் பாய்கிறது . அதுவும் வேறொன்றுமில்லை .பூக்களைச் சுற்றி ரீங்காரமிடுகிறது வண்டுகள் .அந்த ரீங்காரமே யாழின் இசையென நெஞ்சை குளிர்விக்கிறது . இந்த அற்புதமான இசைக் கச்சேரியில் மந்திக்கூட்டம் மயங்கி நிற்கிறது . அடர்ந்த மூங்கில் தோப்பருகே மயிலொன்று தோகை விரித்து ஆடுகிறது .இசை கேட்டு விறலியர் நாட்டியப் பெண்கள் நடனமாடுவதுபோல் இருக்கிறது . இவ்வளவு அற்புதமாக எழில் கொஞ்சும் சேர நாட்டில் . தன் அகன்ற மார்பில் மாலை சூடிய சேரமன்னர் ,தன் கூர்மையான அம்பை யானை மீது ஏவுகிறார் .அந்த யானை காயத்தோடு பிழிறிக்கொண்டே வனத்தில் செல்கிறது . அந்த யானையைப் பார்த்தீரா பார்த்தீரா எனக் கேட்டுக்கொண்டே மன்னர் வருகிறார் .தினைப் புனத்தில் வாயில் அருகிலும் நின்று கேட்டார் . “ ஆம் ,எல்லோரிடமும்தான் கேட்டார் .ஆயின் அவரைப் பார்த்ததும் காதல் கொண்டு மயக்கத்தில் தோள் மெலிந்து நான் மட்டும் துவண்டு கிடப்பதேன் ?” எனத் தோழியிடம் நாயகி கேட்டாளாம். இப்படி ஒரு அற்புத இயற்கை காதல் சித்திரத்தை அகநானூறில் வரைந்து காட்டி இருக்கிறார் கபிலர் . கிட்டத்தட்ட இது போன்றதொரு எழில் காட்சியினை கம்பரும் வரைந்து காட்டியிருப்பார் . சோலைகளில் தோகை விரித்து மயில்கள் ஆடிக்கொண்டிருந்தன , விளக்குகளை ஏந்தி ஓர் மங்கை நிற்பது போல் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின, மழை மேகங்கள் மத்தளம் போலொலித்தன , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப் பார்த்தன, நீர்நிலைகள் தம் அலைகளையே திரைச்சீலையாய் விரித்து காட்டின , தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாடின, அங்கே மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது மருத நிலம் என்பார் கம்பரும் .… அகநானூற்றிலிருந்து ஒரு பெரும் சித்திரம் இதோ , ஒரு காட்சி : அது ஏரியா கடலா என பார்ப்பவர் வியப்பர் ? அவ்வளவு பரந்த ஏரிக்கரையில் ஓமைமரம் அடர்ந்து வளர்ந்திருக்கிறது .மரப்பட்டைகள் முதலைத் தோல் போல் கனத்து இருக்கும். கிளைகள் கருத்து விரிந்திருக்கிறது . அக்கிளையில் ஆந்தை ஒன்று குஞ்சு பொரித்திருந்தது . அப்போதுதான் வெளிவந்த குஞ்சுகளை தாய் ஆந்தை பேணி வந்தது . ஆந்தையின் இணை பொறுப்போடு வெளியே சென்று இரைதேடிக் கொணர்ந்து தன் இணைக்கும் குஞ்சுகளுக்கும் கொடுத்து மகிழ்ந்தது . இன்னொரு காட்சி : நெருப்பைப்போல் சிவந்த நீண்ட செவியினை உடைய எருவை சேவல், பனங்கிழங்கைப் போன்ற தன் கால்களை கொண்டு மேட்டினை கிளறிக்கொண்டிருந்தது . விரும்பிய இரை கண்டவுடன், உற்சாகம் பீறிட கொத்தி விழுங்கி விட்டு மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மலை உச்சியை நோக்கி ஓடியது .அந்த மலை உச்சியோ வானை உரசுவதுபோல் ஓங்கி உயர்ந்திருந்தது . காட்சி மூன்று : அந்த மலைச்சரிவில் மரையா மானை அடித்து இரத்தத்தைக் குடித்த புலி ஒன்று , தான் ஏற்கெனவே அடித்து வீழ்த்தி குருதி ஒழுக புலால் நாறிக் கிடக்கும் விலங்கை கொள்ளையடிப்பவன் போல் வேகமாக இழுத்துச் சென்றது . இலைகள் குறைவாக உடைய மரா மரங்களை அடர்ந்த கானகத்தினூடே பொன்னும் மணியும் ஈட்ட வேண்டும் என தலைவன் செல்கிறான் .அவனை அப்படி விரட்டியது தலைவியின் நெஞ்சமே ! ஏனெனில் தலைவின் எண்ணம் அவனை விரட்டுகிறது . முள் முருங்கைப் பூவினைப் போன்ற சிவந்த இனிய வாய் ,அதினின்று கொட்டும் இனிய சொற்கள் , தேர்ந்தெடுத்து அணிந்திருந்த கனகட்சிதமாய்ப் பொருந்திய அணிகலன்கள் , காதிலே கம்மல் வளைந்து அழகு செய்கிறது ,பார்வையும் அதைப் போன்றே இருக்கிறது ; இப்படியாக தலைவியின நினைப்பு அவனை சீக்கிரம் பொருள் ஈட்டி ஊர் திரும்ப விரட்டிக் கொண்டே இருந்ததாம். மணம் முடித்துவிட்டான் . வாழப் பொருள் வேண்டும் ஓடுகிறான் , இளம் மனைவியின் நினைப்பும் வாட்டுகிறது ; அவனை விரைவு படுத்துகிறது . எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பவர் எழுதிய அகநானூற்றுப் பாடல் இப்படி விவரிக்கிறது . காதலைப் பேசும் போதும் , பிரிவைப் பேசும் போதும் ,நாட்டை வர்ணிக்கும் போதும் இயற்கையைப் பேசாமல் தமிழ்ச் சங்கப்புலவனால் பேச இயலாது . இயற்கை எனில் வெறும் மரம் செடி கொடி மட்டுமல்ல ; அங்கு வாழும் உயிரினமும்தான் . இசையை ,அன்பை ,வாழ்க்கையை இயற்கையோடு இயைந்து கற்றார் எம் தமிழர். இசையும் அன்பும் இயற்கையோடு … “ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?” அகநானூறு 82 குறிஞ்சி – கபிலர் ”தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க, தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.” கம்பர் –கம்பராமாயணம் . “ இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட கொடு வாய் பேடைக்கு அல்கு இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் துளங்கு நடை மரையா வலம் பட தொலைச்சி ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய் அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம் நெடும் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே” அகநானூறு : 3 .பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார் இசையும் அன்பும் இயற்கையோடு … எம் தமிழருக்கு … சு.பொ.அகத்தியலிங்கம்.

போராட்ட களத்தில் பூத்த நெருப்பு மலர்

Posted by அகத்தீ Labels:

. எப்போதுமே போராட்டக் களங்களில் உயிர்ப்பான கவிதை பூக்கும் . இந்திய விடுதலைப் போராட்டமோ ,ரஷ்யப் புரட்சியோ , சீனப்புரட்சியோ ,வீரவியட்நாம் எழுச்சியோ எதுவும் விதிவிலக்கல்ல . 381 நாள் இந்திய நாட்டையே உலுக்கிய விவசாயிகளின் உறுதியான போராட்டம் இலக்கியத்திலும் வேர்விட்டது . நா.வெ.அருளின் “ பச்சை ரத்தம்” கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய போராட்ட தளபதிகளில் ஒருவரான தோழர் ஹன்னன் முல்லா தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் . “ பஞ்சாபில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயக்கத்தின் வெவ்வேறு அத்தியாயங்களைச் சித்தரிக்கும் வகையில் இயற்றப்பட்டதாக அறிகிறேன். பல இளைஞர்கள் பாடல்கள் எழுதினார்கள் .மாநிலத்தில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பாடி வருகிறார்கள் .ஹரியானாவில் பல நாடுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டன . பஞ்சாப் மற்றும் ஹரியானா மட்டும் இல்லை ; பல மொழிகளில் பல இலக்கியங்கள் கிளர்ந்து வந்தன.”என்கிறார் . தமிழிலும் பலர் பாடல் எழுதினர் ;கவிதை புனைந்தனர் .அவற்றை தொகுக்க வேண்டும் . இந்த போராட்ட களத்தில் உயிரோவியமாய் உதித்ததுதான் நா.வெ.அருளின் “பச்சை ரத்தம்” இரத்தமும் ,சதையும் ,கோபமும் ,அறமும் கொப்பளிக்கும் கவிதைகள் . “உதிரமும் உழவர்களும் ஒன்று உயிரணுக்களை வாழவைக்கும் உதிரத்தைப் போலவே உலகத்தை வாழவைக்கும் உழவர்கள்.” என மிகச் சரியாய் குறிக்கிறார். “ ஒரு கட்டளையில் பசியின் குறைந்தபட்ச உத்திரவாதம் நீக்கப்படுகிறது. மறு கட்டளையில் வயல் வெளிகள் முழுவதும் பணத்தாள்கள் நடப்படுகின்றன. மூன்றாம் கட்டளையில் வயல் வெளிகளே சொந்தமில்லாமல் போய்விடுகின்றன.” மோடியின் கொடூர வேளாண் சட்டங்களை இதைவிட எளிதாய் அழகாய்ச் சொல்ல சொற்கள் ஏது ? “ போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள் மந்திரத் தனமையாக மாறிவிடுகின்றன. அவ்வெலும்பு மஜ்ஜைகளில்தாம் கல் இதய மனிதர்களுக்கான வாய்க்கரிசி தயாராகின்றன .” வெறும் கோவம் மட்டுமல்ல ; அறச்சீற்றம் ; தொலை நோக்கு . “விவசாயிகளுக்காக எழுதப்படும் ஒவ்வொரு கவிதையும் ஆன்மாவில் எழுதி தோலில் மிளிர்கிறது.” என நா.வெ.அருளின் கவிதை வரிகள் அவரின் இந்நூல் முழுமைக்கும் அப்படியே பொருந்திப் போகிறது . “ கவிதைக்கு உவமை அழகு .அந்த உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும் . இந்தக் கவிதைத் தொகுப்பில் “ ருத்திர தாண்டவம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை ஒரு புதிய கவிப்பார்வையைத் தருகிறது .”என த.உதயச் சந்திரன் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது மிகையன்று. விவசாயிகளுக்கு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பெ.சண்முகம். “ வெளியே தெரிவதில்லை எனினும் விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல அவன் ரெளத்திரம் பிரமாண்டமானது .” அவற்றை கவிதையாய் யாத்திருக்கும் நா.வெ.அருளின் பச்சை ரத்தமும் பிரமாண்டமானதே ! இப்போதும் பலர் சொல்லுகின்றனர் கவிதை நூல் விற்பதில்லை .மெய்தான் .ஆயின் இது கவிதை நூலல்ல ;அதற்கும் மேல் “ ஓர் நல்ல கவிதை எங்கே பிறக்கும் ; எப்படிப் பிறக்கும்” என்பதன் நேரடி சாட்சியான - இலக்கணமான நூல் . இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளிவந்திருப்பது மகிழ்வான செய்தி . இதனை வாங்கி வாசிப்பது நம் கடமை . வாழ்த்துகள் அருள் ! தொடர்க உம் கவிதைப் பயணம் ! சு.பொ.அகத்தியலிங்கம். 10/5/2022.

சிங்காரவேலரின் அறிவியல் பார்வையே இன்றைய தேவை

Posted by அகத்தீ Labels:

 

சிங்காரவேலரின் அறிவியல் பார்வையே 
இன்றைய தேவை 


—-சு.பொ.அகத்தியலிங்கம் 

‘விடைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல, வினாக்களை எழுப்புவதும் அறிவியலின் பணியே’ என்பார் அறிவியல் அறிஞர்  ஐன்ஸ்டீன். 

தமிழ்ச் சமூகத்தை நோக்கி ஓயாது கேள்வி களை விதைத்து, பகுத்தறிவுச் சிந்தனையைத் 
தூண்டி யவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர்.

“உலகில் மனிதன் அறியாமையில் நிறைந்திருந்த காலை, கல்லிலும் தூணிலும்,  துரும்பிலும்,  செடி யிலும், நிலத்திலும், நீரிலும், பாழ்வீட்டிலும்,  குட்டிச் சுவர்களிலும், பருத்தியிலும், பட்சியிலும், நோயாளி யிடத்திலும்,    வைத்தியம் கொண்டவர்களிடத்திலும்  பேயோ?  பிசாசோ?  காற்றோ?  கருப்பனோ? அண்ணன்மாரோ? கன்னிமாரோ? சாத்தானோ? சனியனோ? வசிப்பதாக கற்பனை செய்துவந்தான்

.’  ‘‘விஞ்ஞானம் பரவப்பரவ இந்த பேய், பூத கோஷ்டியெல்லாம் பறந்தோடிப் போகின்றன. ஆனால் அந்தகார இருளடைந்த இந்த நாட்டிலோ ஒவ்வொரு வீட்டிலும் இந்த பொய் தேவதைகள் வாசம் செய்யும் இடமாகத் துர்ப்பாக்கிய வசமாகி விட்டது. இந்த இருளைப் போக்கி மெய்ஞானத்தை நாட்டில் அறிந்து நடக்கும் காலம் எக்காலமோ?” 

என சிங்காரவேலர் வேதனைப்பட்டதன் விளைவு. 
1935 ல் தள்ளாத வயதில்-76 வயதில் அறிவியல் ஞானத்தைப் பரப்ப  ‘புதிய உலகம்’ என்ற ஏட்டைத் துவக்கினார்.

சுமார் 87 ஆண்டுகளுக்கு முன்னர் வேதனைப் பட்டாரே, அதே நிலையா இன்று. இல்லையே!. 

இன்று விஞ்ஞான ஒளி எளிதில் கிடைக்கிறது. இருபத் தோராம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் இதுவரையிலும் அறிவியல் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது

. தகவல் தொழில் நுட்பம் உலகை விரல் நுனியில் அடக்கிவிட்டது. பட்டனைத் தட்டினால் அறிவியல் தகவல்கள் கொட்டுகின்றன. 

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் கருவிகளும் இல்லாமல் நம் வாழ்வில் ஒரு நொடிகூட நகரவில்லை. 

ஆனால் அந்தகார இருள் போய் விட்டதா? மூட நம்பிக்கை முடை நாற்றம் அகன்றுவிட்டதா?  “மெய்ஞான முறையைப் பெரும்பான்மை மக்க ளுக்குத் தெரிவிக்காமல் அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும் தினசரி பழக்க வழக்க ஒழுக் கங்களிலும் அறிவுடையோரும் தங்கள் பகுத்தறிவை உபயோகப்படுத்தாமல் மூடப்பழக்கங்களுக்கும் மூட எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர். தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு இந்த அறி யாமையே முதற்காரணம்.”

இவ்வாறு அடித்துக் கூறும்போது அவர் `தினசரி பழக்க வழக்க ஒழுக்கங்களிலும்’ எனக் கூறுவதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். ஏனெனில் அவர் மெய்ஞானம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறபோது, அது, ஏதோ அறிவு ஜீவியாக எல்லோரும் பின்னால் ஒளிவட்டத்தோடு திரிய வேண்டும் என்கிற கற்பனை மயக்கத்தினால் அல்ல. மேலும்; எந்த ஞானம் எல்லா ஞானத்தையும் விட சிறந்தது என்ற கேள்விக்கு,” சயன்ஸ் (அறிவியல்) ஒன்றே என்று மாபெரும் ஞானியாகிய ஹெர்பர்ட்ஸ் பென்ஸர் தெரிவித்ததை நாம் நம் தமிழ் மக்களிடம்  அறி முகம் செய்கிறோம்” என்கிறபோதும் அன்றாட வாழ் வோடு உரசிப்பார்க்கும் பார்வையையே முன் வைக்கிறார். 

அவர் இந்தப் பார்வையை எங்கிருந்து பெற்றார்? 

அவர் சைவ சமய நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், இளமையில் பௌத்த சிந்தனையால் கவரப்பட்டு படிப்படியாக மார்க்சிய சிந்தனைக்கு உயர்ந்தவர். அதனையே தன் வாழ்நாள் முழுக்க  பிரச்சாரம் செய்தவர். அவர் பௌத்த மரபின் தொடர்ச்சியாக நாத்திக சிந்தனைக்குத் தாவினார் என்பதையே பொதுவாக பலரும் வழிமொழி கின்றனர். 

ஆனால் பேராசிரியர் வீ. அரசு வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்.

“தோழர் சிங்காரவேலர் ஐரோப்பிய புத்தொளி மரபை உள்வாங்கித் தமிழ் மண்ணில் செயல் பட்டவர். இங்கிருந்து பகுத்தறிவுக்கு முரணான அனைத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர்” என்று சுட்டிக்காட்டுகிறார். 

சிங்காரவேலர்  நாத்திகம் மற்றும் பகுத்தறிவை முன்வைக்கும்போது அன்றைக்கு தமிழகத்தில் வலுவாக இருந்த சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவை எள்ளி நகையாடவில்லை. மாறாக அதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தினார். 

பெரியார், சாதி இழிவை துடைத்தெறிய வெறி யோடு செயல்பட்டார். சாதி இழிவை ஒழிக்க அதனை நியாயப்படுத்திய சாஸ்திரம்,  சம்பிரதாயம், சடங்குகள், வேதங்கள், பிராமணியம், மனுநீதி என அனைத்தையும் தர்க்க வாதங்கள் மூலம் தகர்த் தெறிந்தார். அதன் மூல ஆதாரமான மதத்தை - அந்த மதத்தின் இருப்புக்கு ஆதாரமான கடவுளை நிராக ரித்தார். 

ஆகச் சமூக அடித்தளத்திலிருந்து கடவுள் மறுப்பைக் கைக்கொண்டார். பின்னர் பரிணாமக் கோட்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆயினும் புராண சாஸ்திர எதிர்ப்பே பெரி யாரிடம்  கூர்முனையாக இருந்தது. 

ஆனால் சிங்காரவேலர், சமூக அடிமைத் தனத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வேரறுக்கச் சிந்தித்தார், செயல்பட்டார். எனவே அறிவியலை ஆயுதமாக்கினார். மதத் தத்துவங்கள் மீது அறிவியல்பூர்வமான கேள்வி எழுப்பினார். 

பரிணா மக்கோட்பாட்டை அதாவது -படிமலர்ச்சி கோட் பாட்டை –புவியின் தோற்றத்தை – பிரபஞ்சத்தின் சுழற்சியை, இதர அறிவியல் நிரூபணங்களை  அடிப்ப டையாகக் கொண்டு கடவுள் - மத மறுப்பில் ஈடுபட்டார்.

வரலாற்று ஆய்வாளர் செந்தில்பாபு, ‘சிங்கார வேலரின் அறிவியல் பார்வையும் சுயமரியாதை இயக்கத்தினரின் பகுத்தறிவுப் பாதையும்’ என்ற தன் கட்டுரையில் ஒப்பிட்டுக் கூறுகிறார். ‘மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தான்; அதே மனி தன்தான் இப்போது அறிவியல் சாதனை கள் அடிப்படையில் கடவுளை மறுக் கிறான். 

இந்தச் சிதைக்க முடியாத அடித்தளப் பாறையின் மீதே, நாத்தி கப்போராட்டத்திற்கான கோட்டையைக் கட்ட வேண்டும்” என்று சிங்காரவேலர் சொன்னதை மேற்கோள்காட்டி இறுதியில் முடிவுக்கு வருகிறார் செந்தில் பாபு:

“அறிவியல் வெளிப்பாட்டுப் பணியை ஒரு  புரட்சிகர கம்யூனிஸ்ட் எவ்வாறு அரசியல் நட வடிக்கை ஆக்கியுள்ளார் என்பதை நாம் காண முடியும். சிங்காரவேலரின் பிந்திய ஆண்டுகள் அன்றைய கொந்தளிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலினூடே அறிவியலைப் பரப்பும் பணிக் காகவே செலவழிக்கப்பட்டது.’’ அதுவும் யாரை நோக்கி என்பது அடிப்படை யானது. 

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முதல் நாத்திகர் மாநாட்டில் உரையாற்றும் போது சிங்காரவேலர் குறிப்பிட்டார். ‘இங்கே இருக்கும் கூட்டத்தவர்கள் முதலாளிகளாகவும் சிறு முதலாளிகளாகவும் இருக்கின்றீர்கள். ரிக்‌ஷா இழுக் கின்றவன் எங்கே? வண்டி இழுக்கின்றவன் எங்கே? இங்கே உங்கள் வேலை இல்லையா? ஏன்?  எங்கள் மீன் பிடிக்கும் குப்பங்களிலும் சேரிகளிலும் நுழைந்து, ஏன் அங்கிருப்பவர்கள் மூடத்தனத்தை போக்கலாகாது?”

அவர் கேள்வியின் நியாயம் ஆழமானது. 

இந்தியா முழுமையும் நாத்திக அமைப்புகளும் நாத்திக ஏடு களும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவா யின. அதில் பெரும் பங்கு தமிழ் நாட்டுக்குரியது எனில் மிகை அல்ல.  

1875 வாக்கில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு கருத்து களைப் பரப்ப ‘ இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ உருவானது. பின்னர் இது ‘சென்னை லெளகீக சங்கம்’ எனப் பெயர் பெற்றது. 

1882 ல் முதல் பகுத்தறிவு ஏடான ‘தத்துவ விவே சினி’ துவங்கப்பட்டது. பு.முனுசாமி நாயக்கர், அமரம்பேடு முத்துசாமி முதலியார், எம்.மாசிலா மணி ஆகியோர் இவ்வேடு வெளிவர காரணமா யினர். அப்போது பகுத்தறிவு இயக்கம் படித்தவர்க ளின் குறுகிய வட்டத்திலேயே இருந்தது.

இது முதற்கட்டம். 

1920க்கு பிறகு பெரியார் வருகைக்கு பிறகே பகுத்தறிவு மக்கள் இயக்கமானது.

இது இரண்டா வது கட்டம். 

இந்த இரண்டாவது கட்டம் பெரியார்  சிங்காரவேலர் கூட்டுறவால் நிகழ்ந்தது. அதற்கு அந்த சர்வதேசிய,தேசிய நிலைமைகள் அப்போது நிலவின என்பார் தேவ.பேரின்பன் தன் கட்டுரை ஒன்றில். 

1931 நாத்திகர் மாநாட்டில் சிங்காரவேலர் எழுப்பிய  கேள்வி செயலுக்கான விதையானது. இன்னும்  சொல்லப்போனால் “மக்களுக்கான அறிவியல்” என்பதை முன்னெடுத்தவர் சிங்கார வேலர். இன்றைக்கு அதை மேலும் வலுப்படுத்த வேண்டி யதல்லவோ தொழிலாளி வர்க்க வரலாற்றுக் கடமையாகும். 

இதே காலகட்டத்தில் சிறையிலிருந்த பகத்சிங் “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற புத்தகத்தை ஜீவா மொழிபெயர்க்க பெரியார் வெளியிட்டார்.  அந்தப் புத்தகம் தர்க்க ரீதியாகவும் அறிவியல் ரீதியா கவும் கடவுளை மறுத்தது. 

பெரியார் தன் பாணியில் கடவுளை மறுக்கிறபோதும் சிங்காரவேலர், பகத்சிங் போன்றோரின் அறிவியல்பூர்வமான 
ஆக்கங்க ளையும் துணைக்கொண்டார். சிங்காரவேலர் அறிவியல் ரீதியாக மதத்தையும் கடவுளையும் விமர்சித்த பாங்கே தனி. 

சிங்காரவேலர் தன் கட்டுரைகளில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பேசுவனாக அமைந்தன.ஆயின் அதனை முழுதாக வாசித்தால் அறிவிய லையும் மதச்சிந்தனையும் ஒப்பிட்டு பகுத்தறிவை தூக்கிப் பிடிப்பதாகவே அவை அமைந்திருப்பதைக் காணலாம். அதுவும் அவரது எழுத்து அறிவுஜீவி நடையில் சிக்கல் சிடுக்குள்ளதாக அமையாமல் எளிமையானதாக அழுத்தமானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி வர்க்கத்தை தத்துவ ரீதியாக தயார் செய்யும் அரசியல் கடமையாகவே அதனைச் செய்தார்.

 “சென்ற 25 வருடங்களாகச் செய்துவரும் ஆராய்ச்சியில்;அணுக்களும் அணுத்திரள்களாகிய நாமும் ; இழுக்கும்(ஈர்ப்பு ) சக்தியால் (அட்ராக்ஷன்) கட்டுண்டு தனிப்பொருளாக இருந்து வருகின்றோம். ஆதலின் தமது தேகமும்[உடலும்] அதற்கு கீழே உள்ள அணுக்களும் அணுத்திரள்களும் இவை களுக்கு மேலே உள்ள சூரிய,சந்திர, நட்சத்திரக் கூட்டங்களும் ஈர்ப்பால் கட்டுண்டு பிரபஞ்சத்தில் உலவுகின்றன. 

இதைத்தவிர, வேறெந்த அறிவோ, மனசோ, சைதன்யமோ, சத்தோ,சித்தோ? ஆன்மா வோ? கடவுளோ? தெய்வமோ? நம்மையும் நமக்கு மேலும் கீழுமுள்ள பொருட்களை நடத்துவதை மனி தர்களாகிய நாம் அறியோம்.” 

ஆம், அறியவில்லை. இப்படி அறிவியல் உண்மைகளின் மீது நின்று கேள்வி எழுப்பினார்

. “அறிவியல் தகவல் அறிவு” வேறு, “அறிவியல் பார்வை” வேறு. அறிவியல் பார்வையைத்தான் சிங்காரவேலர் வலியுறுத்தினார்.  

அறிவியல் பார்வை என்பது சாதாரண வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கிற ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்படுத்தி பரிட்சித்துப்பார்ப்ப தும் அப்படிப் பார்ப்பதன் மூலம் உண்மை யை அறிய முயற்சி செய்வதும் என்பதே சிங்காரவேலரின் திடமான நம்பிக்கை. 

பொதுவாக சிங்காரவேலர் நம்பிக்கையை இரண்டு வகைப்படுத்துவார். 

ஒன்று சரியான நம்பிக்கை. மற்றொன்று சரியற்ற நம்பிக்கை

“காற்றால் புயலடிக்கின்றது என்பது முதல் நம்பிக்கைக்கு திருஷ்டாந்தம் [சாட்சி]. வாயு தேவனால் புயலடிக்கின்றது என்பது சரியற்ற நம்பிக்கை” என அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் எடுத்துரைத்தார்.

கடவுள், தலைஎழுத்து,முன்வினைப் பயன்,மோட்சம்,நரகம்,மறுபிறப்பு,ஜோதிடம்,ஜாதகம்,சகுனம்,ரேகை பார்ப்பது,சகுனம் பார்ப்பது,குறி சொல்வது, பேய்,பிசாசு,பில்லி சூனியம்,மந்திரம்,தந்திரம்,தீ மிதிப்பது,அலகு குத்துவது,சாமி ஆடுவது, மெஸ்மரிசம்,ஹிப்பனாட்டிசம்,டெலிபதி என சிங்காரவேலர் தொடாத விசயமே கிடையாது. 

ஒவ்வொன்றையும் கேள்விகளால் குடைந்தார். அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அம்பலப்படுத்தினார். 

புவியின் தோற்றம்,பிரபஞ்சத்தின் இயக்கம்,பரிணாமக் கொள்கை என இவர் எழுதிய அறிவியல் செய்தி களுக்கு கணக்கே கிடையாது.இன்றல்ல சுமார் 85 வருடங்களுக்கு முன்பே தமிழில் இவற்றை எழுதி னார் என்பதே சிறப்பு. 

மதநம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாக அவர் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க முடியாது. மத ஆபாசங்களை பெரியாரைப்போல பச்சையாக பேசியவரல்ல சிங்காரவேலர். பெரியார் பாணி அன்றைய தேவைகளில் உருவானது என்பது வேறு சங்கதி.   

இந்துமதம்,கிறிஸ்துவம்,இஸ்லாம்,பெளத்தம்,சமணம்,நாட்டுப்புற சமயம் என எதையும் விட்டுவைக்கவில்லை. கூர்மையாக விமர்சித்தார். 

முற்போக்கான சமயம்,திராவிட சமயம்,தமிழ்ச் சமயம் என தேடி அலையவில்லை. மத அபினி போதை தெளிவதற்கு பகுத்தறிவு கஷாயத்தை ஓயாது புகட்டியவர் சிங்காரவேலர்.

அப்படிப் புகட்டும் போது மத உணர்வைப் புண் படுத்திவிட்டனர்,மத நிந்தனை என குறுக்குச் சால் ஓட்டுவோரை சிங்காரவேலரும் எதிர் கொண்டி ருக்கிறார். 

அவர் எழுதினார், “ சிசுக் கொலையை நிறுத்திய போதும்,உடன் கட்டை ஏறுவதைக் குற்ற மாக்கிய போதும்,‘மதம் அழிந்துவிட்டது, மதங்க ளுக்கு ஆபத்து’ என சில பத்திரிகைகள் ஊளை யிட்டன. 
சாரதா சட்டம் நிறைவேற்றிய போதும் எத்தனை பத்திரிகைகள் அதற்கு எதிராய்க் கூச்ச லிட்டன.” இன்றும் அதுதானே நிலை

. “விசுவாசி,” “ஐயுறாதே” என்பது மதங்களின் பாதையாகவும் “கேள்வி கேள்,” “சந்தேகி” என்பது அறி வியல் பாதையாகவும், பார்வையாகவும் உள்ளது. 

மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச் சூழல் இன்று நிலவு கிறதே ஏன்? 

ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும் பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்: “துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதா ரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” 

கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.

இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர்வாதம்

. “திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதை யையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது” என்றார் ராஜாஜி.  

இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை  கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப் படுகிறது.  அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது. 

அறிவி யலைப் பற்றி நின்று உண்மையைச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. அறிவியல் என்பது இத்தகைய சோத னைகளைக் கடந்து வெற்றி பெறவே என்பதறிக ! 

“அறிவியல் பார்வை” எனில் எதையும் யாரை யும் கேள்வி கேட்கவும் விமர்சன ரீதியாக அணுகவும் தயங்கக்கூடாது. இன்று அப்படிப்பட்ட சூழல் உள்ளதா? 

இல்லைதான்,ஆயினும் நாம் மதவெ றியர் முன்பு மண்டியிட முடியாது.

இப்போதும் பொற்கால மாயைகளும் கனவு களும் தொலையவில்லையே! நம்மைத் துரத்து கின்றனவே! 

சிங்காரவேலர் கேட்டார்: “ இந்திய நாடு எந்தப் பொற்காலத்தில் தற்காலத்தை விட 
சிறப்புற்றி ருந்தார்கள் என்று சொல்லக்கூடும், கேட்கின்றோம். 

வேதகாலத்திலா? பிராமண காலத்திலா? சூத்திர காலத்திலா? ஸ்மிருதிகள் காலத்திலா? எனக் கேட்கின்றோம். 

லங்கேஸ்வரனாகிய  ராவணனைக் கொன்ற காலமா? அல்லது குருச்சேத்திரக் காலமா என்று கேட்கின்றோம். அல்லது சேர, சோழ, பாண்டிய ராஜ்ய காலத்திலா என்று கேட்கின்றோம்? 

எந்தக் காலத்தில் 16 ஆயிரம் சமணர்களை 
கழுவ லேற்றிய காலத்திலா எனக் கேட்கின்றோம். எந்தக் காலத்தில் எங்கள் சிவன் உங்கள் பெருமாள் என சண்டை நடந்தனவென்று கேட்கின்றோம். 

பண்டைக் கால ஜனசமூக வாழ்க்கையை உணராமல் வேத ராஜ்யமென்றும், ராமராஜ்யமென்றும், தர்மராஜ்ய மென்றும் பிதற்றுவதில் யாது பிரயோசனம் என்று கேட்கின்றோம்.” 

இப்படி அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் கேள்வி எழுப்பிய மரபு தமிழகத்தில் தொடராமல் போனது எப்படி?

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. 
இது சிங்காரவேலர் வாதம். 

உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்

. “பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா 
விஷ யத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். 
எங்கே சுதந்தி ரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்து கின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். 

இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையா ளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே” என்றார். 

இதனை தமிழ்ச் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா? ஆக உலகச் சூழலும், தேசச் சூழலும், தமிழகச் சூழலும் இன்றைக்கு  மிகவும் கவலை அளிப்பதா கவும்,கடினமாகவும் மாறிப்போயுள்ளன. 

தனிமனித வாழ்வின் வெற்றி, தோல்வி, பிரச்சனை கள், ஒழுக்கம் எதுவாயினும் சமூகம் அரசியல் எதுவாயினும், வரலாறு, தத்துவம், அறக்கோட்பாடு எதுவாயினும் எல்லா இடத்திலும் அறிவியல் பார்வை புறந்தள்ளப்பட்டு வெறும் குருட்டு நம்பிக்கையும் சுயலாபமும் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது.  

இத்த கைய சமூகச் சூழலில் நாம் இன்று சிங்காரவேலரை புதிய அறிவியல் கோணத்தில் மீண்டும் மீண்டும் பேச வேண்டியுள்ளது.

“அரசு என்பதைப் பற்றி பொதுவான கருத்தில் உள்ள அம்சங்களை சிவில் சமுதாயம் என்ற பொது வான கருத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும். இந்தப் பொருளில் சொல்லப்போனால் அரசு = அரசியல் சமுதாயம் + சிவில் சமுதாயம். பலவந்தத்தால் பாதுகாக்கப்படுகிற மேலாண்மைதான் என்ற அந்தோனியோ கிராம்ஷியின் கூற்றை இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும்

.” சிவில் சமூகத்தைக் கைப்பற்றுவதே எமது இறுதி இலக்கு” என இந்துத்துவ தலைவர்கள் அடிக்கடி பிர கடனம் செய்வதையும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதவாதிகள் சிவில் சமூகத்தின் மீது தங்க ளின் பழமைவாத நுகத்தடியை வலுவாக பிணைக்க முயலுவதையும் இங்கே நினைத்துப்பார்த்தால் நாம் பயணம் செய்ய வேண்டிய தூரமும் பரப்பும் தேவையும் அவசர அவசியமும் புலப்படும்

. “அரசியல் நடத்தவும் குடும்பம் நடத்தவும் அறிவியல் பார்வை தேவை” என சிங்காரவேலர் சொன்னதின் ஆழமும் விரிவும் இப்போது துலக்க மாகிறது. 

பேசப் பேச நீளும். 

சிங்காரவேலர் 1931ல்  “பொதுவு டைமை முழக்கம்” எனும் கட்டுரையில் எச்சரித்த ஓர் செய்தியோடு நிறைவு செய்வோம்.

“நமது நாட்டில் முதன்மையான மூன்று தீமை கள் பரவியுள்ளதைக் காணலாம். 

இந்த மூன்று தீமைகளும் இந்திய தேசம் முழுமையும் பரவியுள்ள தைக் காணலாம்.இம்மூன்று தீமைகளும் இந்திய தேசம் முழுமையும் குடி கொண்டிருக்கின்றன. 
அவை யாவன. மதபேதம்,ஜாதிபேதம்,பொருளாதார பேதம் என்றே காணப்படும். 
இந்திய தேசத்தில் மாத்திரமே இம்மூன்று தீமைகளும் நிலைபெற்றுள்ளன. 

ஆதலில் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தி யாசத்தைப் போக்குவது மட்டும் போதாது. இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசம் ஒழிவதோடு சாதி,மத வித்தியாசங்களும் ஒழிய வேண்டியது மிக அவசியம் ஆகும்.”

“ஆயிரம் ஆயிரம் அறிவியல் கருத்துகளை
முத்து முத்தாகஓயாமல் கொட்டிய சிங்காரவேலரை
விடுமுறை போடாத
காலம் அறியும்
வீடுதோறும் இருக்கும்
தமிழர்கள் அறிய வேண்டாமா?”

என்கிற ஈரோடு தமிழன்பனின் கவிதை எழுப்பும் கேள்வியை எல்லோரும் எழுப்புங்கள்.
விடை தேடுங்கள் ! 

சிங்காரவேலரின் அறிவியல்பார்வை இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை.

அறிக ! பின்பற்றுக!