தாய் பிறந்த போர்க்களம்

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 31

தாய் பிறந்த போர்க்களம்


சு.பொ.அகத்தியலிங்கம்



30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை,
 பசி, நோயால் இறந்தனர். ஒவ்வொரு ஐந்து நாளிலும் 
நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


அறை கலகலப்பான நகைச் சுவையால் மூச்சுத்திணறியது ; ‘யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கள்’ என்கிற வேண்டுகோளோடு உரையை அவர் முடிக்க… இசைவெள்ளம் பெருக்கெடுத்தது.1905 நவம்பரில் வெளிநாட்டிலிருந்து ரகசியமாய் வந்து பீட்டர்ஸ்பர்க்கில் தலைமறைவாய் இருந்தபடியே லெனின் போராட்டங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார் .

டூமா எனப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜார் மன்னர் உத்தரவிட்டார். சட்டமியற்றும் அதிகாரமில்லாத வெறும் பேச்சுமடமாக டூமா கூட்டப்படும் சதியை சுட்டிக்காட்டி டூமாவைப் புறக்கணிக்குமாறு லெனின் வேண்டுகோள் விடுத்தார்.போராட்ட உணர்வு மேலோங்கும் சூழலில் பின்லாந்தில் டாமர்போர்ஸ் எனுமிடத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் போல்ஷ்விக், மென்ஷ்விக் ஒற்றுமை குறித்தும், டூமா பகிஷ்கரிப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் தான் லெனினை ஸ்டாலின் முதல் முறையாக நேரடியாகச் சந்தித்தார்.நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை ஜார் பிரகடனப்படுத்தினார். மாநாடு மாஸ்கோ பொது வேலைநிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. டிசம்பர் 7 ஆம் நாள் தொடங்கியது. 9 ஆம் தேதி ஆயுதபாணியாய் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதித்தடையரண்களை எழுப்பி உக்கிரமாய் போரைத் தொடங்கினர். கிரஸ்நயாபிரஸ்நாயா, கிரஸ்னோயார்ஸ்க், மோடோவிலிகா, கிரோன்ஸ்டாட், சோர்மோவோ என பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது.

கொன்றுக் குவிக்கத் துவங்கியது. டிசம்பர் 19 வரை நீண்ட இப்போர் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டது.ரயில்வே போக்குவரத்தை முடக்க முடியாததாலும் ,கிராமப்புறங்களை முழுமையாய் ஈடுபடுத்த முடியாததாலும் தோல்வி ஏற்பட்டது; எனினும் இன்னும் உறுதியுடன் தீவிரமாகப் போராட வேண்டுமென லெனின் சொன்னார். ஆயுதம் ஏந்தியதே தவறென்றார் பிளக்கனோவ். இப்படி இரு வேறு கருத்தை சொல்லிடினும் ஒற்றுமை முயற்சியும் சூடுபிடித்தது.மென்ஷ்விக்குகள், போல்ஷ்விக்குகள் இணைந்த மத்தியக்குழு உருவாக்கப்பட்டது. மென்ஷ்விக்குகளின் ’தீப்பொறி’ ஆசிரியர் குழுவும், போல்ஷ்விக்குகளின் ‘பாட்டாளி’ ஆசிரியர் குழுவும் இணைந்து ‘பார்ட்டினியே இஸ்வெஸ்தியா’ ஸ கட்சிச் செய்தி] எனும் ஏடு -1906 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் இரண்டு இதழ் வெளிவந்தன.1906 ஏப்ரல் 23 முதல் மார்ச் 8 வரை ஸ்டாக்ஹோமில் சமூக ஜனநாயகக் கட்சியின் நான்காவது மாநாடு ஒற்றுமை மாநாடாக நடைபெற்றது .57 குழுக்கள் பங்கேற்றன. மென்ஷ்விக்குகளே அதிகம்.

சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட இரண்டாவது டூமாவில் பங்கேற்பது என மாநாடு முடிவெடுத்தது மத்திய கமிட்டியிலும் அவர்களுக்கே பெரும்பான்மை . இம்மாநாடு குறித்து ஸ்வெர்த்தாலாவா என்ற புரட்சிக்காரி எழுதிய வரிகளையே ஆரம்பத்தில் பார்த்தோம். லெனின் வேண்டுகோளை ஏற்று பியானோ வாசித்து இவானவிச் பாட அனைவரும் சேர்ந்திசைக்க அரங்கம் அதிர்ந்ததை குறிப்பிட்ட அவர். புரட்சிக்காரர்கள் உம்மணாம் மூஞ்சியாகத்தான் இருப்பார்கள் என்பதை லெனின் சொல்லாலும் செயலாலும் மாற்றிக் காட்டினார். இசையை ரசித்தார். ஊக்குவித்தார், நகைச்சுவையால் கலகலப்பாக்கினார் என்றார்.கட்சியின் ‘சமூக ஜனநாயகம்’ ஏடு மென்ஷ்விக்குகள் கைக்கு போய்விட்டதால்; ’வோல்னா’ஸஅலை]எனும் தினசரி மே,ஜூன் மாதங்கள் வெளியிடப்பட்டது. ‘ முன்னேறு’, ‘எக்கோ’ ஸஎதிரொலி] எனும் இரு ஏடுகள் வெளிவரலாயிற்று.

லெனின் தொடர்ந்து எழுதலானார் .புரட்சி நசுக்கப்பட்டாலும்,1907 ஆம் ஆண்டு 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கு கொண்ட வேலை நிறுத்தங்கள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய கலகங்கள் வெடித்தன. 1905 பேட்டில்ஷிப் போத்தம்கின் கப்பற்படை எழுச்சிக்குப் பின் 1906 செப்டம்பர் வரை 230 சிறு போராட்டங்களும் 21 பேரெழுச்சிகளும் இராணுவத்தில் நடந்தன. சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றனர்.1907-1908 ஆண்டுகளில் மட்டும் அரசியல் குற்றங்களுக்காக 28,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் . 1905 -12 காலகட்டத்தில் 30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை, பசி, நோயால் இறந்தனர் .

ஒவ்வொரு ஐந்து நாளிலும் நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .பலர் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக ; ஸ்வெர்டுலோவ் மூன்று முறை கைது செய்யப்பட்டார், இரு முறை நாடு கடத்தப்பட்டார்; மொத்தத்தில் 12 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். ஆர்டுஜோனிகிட்ஷே கடுஞ்சிறை ,கடும் உழைப்பு முகாம் , நாடுகடத்தல் என 14 ஆண்டு வாடினார். இருமுறை கைது செய்யப்பட்ட டிஜெர்ஷின்ஸ்கி 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.

பட்டியல் பெரிது.ஜார் மன்னனின் ‘குண்டாந்தடிக் கொள்கை’ ஒரு புறம்; மறுபுறம் புரட்சிகர உறுதியை சிதற அடிக்க கறுப்பு நூற்றுவர் ,ரஷ்ய மக்கள் சங்கம் ,முடியரசு வாதிகள் ,ஐக்கிய பிரபுக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் சித்தாந்த தாக்குதல். ஒரு கணித மேதை பல்வேறு கணக்குகளைப் போட்டுக்காட்டி எப்படிக் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தாலும் ஜாரை முறியடிக்க முடியாதென வாதிட்டார். மென்ஷ்விக்குகள் சீர்குலைவு பிரச்சாரத்தில் மூழ்கினர். பிளக்கனோவ் மட்டுமல்ல டிராட்ஸ்கியும் எதிர்முனையில் நின்றார்.இந்தச் சூழலில்தான் மாக்ஸிம் கார்க்கி தன் புகழ் பெற்ற படைப்பான “தாய்” நாவலை எழுதினார். அந்நாவல் உந்துவிசையாய் மாறியது.

“காலத்துக்கேற்ற மிகவும் முக்கியமான புத்தகம்” என லெனின் உச்சிமோந்தார்.முதல் டூமா புறக்கணிப்புக்கு பின்னர் லெனின் சுயவிமர்சனமாகச் சொன்னார்,” 1906 இல் டூமாவைப் புறக்கணித்ததானது சிறிய, சுலபத்தில் நிவர்த்தி செய்யக்கூடிய தவறாகும் .தனி நபர்களுக்கு எது பொருந்துகிறதோ அது அவசியமான திருத்தங்களுடன் அரசியலுக்கும் பொருந்தும் .புத்திசாலி என்பவன் ஒரு தவறும் செய்யாமலிருப்பவனல்ல ; அத்தகைய மனிதர்கள் யாருமில்லை; இருக்கவும் முடியாது ;மிகப் பெரும் தவறுகளைச் செய்யாதிருப்பவனும்; செய்த தவறுகளை விரைவாகவும் சுலபமாகவும் திருத்திக் கொள்பவன்தான் புத்திசாலி.” “முதல் டூமா கலைக்கப்பட்டபோது லெனின் எழுதிய “டூமா கலைப்பும் பாட்டாளி கடமைகளும்” என்ற பிரசுரமும்;

இரண்டாவது டூமாவில் பங்கேற்க வேண்டி அவர் ஆற்றிய உரைகளும் “ சமூக ஜனநாயகவாதிகளும் தேர்தல் உடன்பாடும்” என்ற பிரசுரமும் முக்கியமானவை .முதல் டூமாவில் 18 பேர் இடம் பெற்றனர். இரண்டாம் டூமாவிற்கு தேர்வான 65 பேரில் 18 பேர் மட்டுமே போல்ஷ்விக்குகள். ஒரு வேடிக்கை பீட்டர்ஸ்பர்க்கில் மென்ஷ்விக்குகள் சீர்குலைவாளர்களோடு செய்த ரகசிய உடன்பாட்டை அம்பலப்படுத்தி “ பீட்டர்ஸ்பர்க் தேர்தலும் 31 மென்ஷ்விக்குகளின் மாய்மாலமும்” என எழுதிய கட்டுரை பிரச்சனையானது. லெனின் மீது விசாரணைக் கமிஷனைக் கட்சி அமைத்தது. லெனில் தக்க ஆதாரங்களோடு வாதிட அந்த விசாரணை அப்படியே முடங்கிப்போக விடப்பட்டது.

புரட்சி தொடரும்...
நன்றி ; தீக்கதிர் . 05/06/2017.

மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 30



சு.பொ.அகத்தியலிங்கம்


மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...


போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர
1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து
“ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி” உருவானது.
வெயிலண்ட் அதன் தலைவரானார்

அவரை 1872 இல் கைது செய்தனர் . விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படாமலே தீர்ப்பு வழங்கப்பட்டது . சாதாரணச் சிறைத் தண்டனை அல்ல ; மரணதண்டனையே விதிக்கப்பட்டது.அவர்தான் மேரி எட்வர்ட் வெயிலண்ட் .1840 ல் பிரெஞ்சு நாட்டில் வியர்ஸான் நகரில் பிறந்தார் .மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட தாய் மகனுக்கு மேரியின் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மேரி என்று பெயர் சூட்டினார் .தந்தை ஆவணச் சான்று அலுவலர் . பாரீஸுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது .அங்கு செயிண்ட் பார்ப் கல்லூரியில் பயிலும் போது கட்டுப்பாட்டை மீறியதாய் பலமுறை வெயிலண்ட் தண்டனை பெற்றார் .

அங்கு இளங்கலையும் , ஐ ஈகோஸ் பல்கலையில் பொறியியல் பட்டமும் , பின்னர் மருத்துவமும் பயின்றார். ரசாயன ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் . மெல்ல சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1866 இல் ஜெர்மன், ஆஸ்திரியா என பயணித்த போது சோஷலிச உலகக் கண்ணோட்டம் வலுவானது .கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜெர்மன் கிளையோடு இணைந்தார் . அகிலத்தின் மாநாடு லாஸோனில் 1867 இல் நடைபெற்றபோது பங்கேற்றார் .பாரீஸை பிரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட போது மீட்க வீறுகொண்ட தேசியப் பாதுகாப்புப் படையில் வெயிலண்ட் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அப்போது வெளியிடப்பட்ட ஆவணத்தில் ஜூல் வால்ஸ்ஸோடு இணைந்து கையெழுத்திட்டவர் வெயிலண்ட். 37 ஆண்டுகாலம் வெஞ்சிறையில் வதைபட்ட சோஷலிஸ்ட் தலைவர் பிளாங்குயி மீது ஈர்ப்பு கொண்ட வெயிலண்ட், அவரது சகா குஸ்டாவ் ட்ரீட்டோனுடன் தோளிணைந்தார்.1871 பாரீஸ் கம்யூன் எழுச்சியில் பங்கு கொண்டார் . உள்துறை அமைச்சகப் பிரதிநிதியாய் தேர்வு செய்யப்பட்டார் ;கல்விக் கமிஷனுக்கும் தலைமை ஏற்றார். வெயிலண்ட் மட்டுமல்ல டியூவல், மியோட், புரேட்டோட், ராண்வியர், ரீகால்ட், ட்ரீடோன், ஃபெர்ரீ, ப்ளோரென்ஸ், சார்ட்டோன், இயூட்ஸ் போன்ற பல பிளாங்குயிஸ்டுகள் பாரீஸ் கம்யூனில் பங்குபெற்றனர். இவர்களின் எஃகு போன்ற உறுதியையும் ,கட்டுக் கோப்பான செயல்பாட்டையும் ஏங்கெல்ஸ் பாராட்டினார்.

வெயிலண்ட பாரீஸ் கம்யூன் கல்வி கமிஷன் தலைவராக சாதாரண மக்களுக்கு கல்வி அளிக்க விரைந்து செயல்பட்டார். திட்டமிட்டார். அவர் கனவு கைகூடவில்லை. இது அவர் குற்றம் அல்ல; பாரீஸ் கம்யூன் அற்ப ஆயுளில் முடிந்து போனதே காரணம். பாரீஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட கதையை முன்பே கண்டோம். கடைசி வரை போர்க்களத்தில் நின்றவர் வெயிலண்ட்.கம்யூன் தோற்கடிக்கப்பட்ட பின் தலைமறைவான வெயிலண்ட்; நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் ஆயினும் கைது செய்யப்பட்டார். முதலில் குறிப்பிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது அப்போதுதான். 1880 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது அதன் பலனாய் வெயிலண்ட்டும் மரணதண்டனையிலிருந்து தப்பினார்.அகதிகள் கழகம், புரட்சிகர கம்யூன் இவற்றில் பணியாற்றிய வெயிலண்ட்டும் இதர பிளாங்குயிஸ்டுகளும் தொடர்பை விட்டுவிடாமல் அரசியலில் செயல்படலானார்கள். பிளாங்குயி மறைவுக்கு பின் சோஷலிஸ்ட் கட்சித் தலைமைக்குத் தேர்வு செய்யப்பட்டார். “பிளாங்குயிசம் வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் ஒரு சித்தாந்தமாகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மூலம் அல்லாது மிகச் சிறுபான்மையினான அறிவாளிகள் தீட்டும் சதித்திட்டங்கள் மூலம் மனித குலம் விடுவிக்கப்படும் என பிளாங்குயிசம் எதிர்பார்க்கிறது” என்பார் லெனின்.வெயிலண்ட் அதிலிருந்து மாறுபட்டு மார்க்சியப் பார்வையோடு சோஷலிச பார்வையை கட்டமைக்க முயன்றார்.நகர் மன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். கியூஸ்ட் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட துண்டு துக்காணியாய்க் கிடந்த சோஷலிச சக்திகளை ஒன்றிணைக்க பெரு முயற்சி மேற்கொண்டார். அதே சமயம் சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மில்லரண்ட்டின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை கடுமையாக விமர்சித்தார். 1897 இல் நகர் மன்ற டெபுடி ஆனார். அப்போது அவர் ஆற்றிய பணிகள் மக்களைக் கவர்ந்தது.

ஒரு பகுதியினரை ஒருங்கிணைத்து பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியை அமைத்தார். பத்திரிகைகள் துவங்கி தொழிலாளி வர்க்கத்தவரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்ல பெரிதும் முன்னுரிமை அளித்தார். 1904 க்குள் கட்சிக் கட்டுப்பாட்டில் 22 செய்தி ஏடுகள் வெளிவந்தன . 1902 இல் மேலும் ஒரு சோஷலிஸ்ட் கட்சி உதயமானது. பல அமைப்புகளும் இந்த இரண்டு கட்சியின் கீழும் அணிவகுக்க ஒரு விரிவான இணைப்புக்கு வழி வகுக்கப்பெற்றது.போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர 1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து “ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி” உருவானது. வெயிலண்ட் அதன் தலைவரானார்.1905 ரஷ்ய புரட்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார். 1913 இல் பிரெஞ்சு குடியரசுத் தேர்தலில் வெயிலண்ட் போட்டியிட்டார். அப்போது லெனின் எழுதினார்; “வெயிலண்டை ஆதரித்து வாக்களிப்பது என்பது; பாரீஸ் கம்யூனை கவுரவப்படுத்துவதாகும் .

ஏனெனில் வெயிலண்ட உயிரோடு உலவும் பாரீஸ் கம்யூனின் நினைவாலயம் ஆவார். அந்த வெள்ளை முடி கொண்ட வெயிலண்ட் வெற்றி பெற வேண்டும்; பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் வீர வரவேற்பு அளிக்க வேண்டும்.”ஆசை நிறைவேறுவது அவ்வளவு சுலபமா என்ன ? 1871 ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியை நசுக்குவதற்காக பிஸ்மார்க்கிடம் நாட்டையே விற்ற வெர்ஸேல்ஸில் - 45 வருடங்கள் முன்பு ஒரு மன்னனுக்காக ஏங்கி நிலப்பிரபுக்கள் ஊளையிட்ட அதே வெர்ஸேல்ஸில் - அதே மண்டபத்தில் தொழிலாளி வர்க்க டெபுடிகள் வெயிலண்ட்டுக்கு வாக்களித்ததையே மகிழ்ச்சி பொங்க லெனின் வருணித்தாரெனில் பார்த்துக் கொள்ளுங்கள் .பிரெஞ்சு ஆளும் வட்டாரத்தின் காலனி ஆதிக்கக் கொள்கையினை –போர் அச்சுறுத்தலை - ராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து முழக்கமிட்டார். இது தொடர்பாக அவர் எழுதிய பிரசுரம் மிகவும் முக்கியமானது.

போருக்கு எதிராக முழங்கிய வெயிலெண்ட் முதல் உலகயுத்தம் துவங்கிய போது “பிரெஞ்சு நாட்டுக்காக - குடியரசுக்காக - மனிதகுலத்துக்காக” எனக் கூறி யுத்தத்தை ஆதரித்தார். லெனின் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதிலும்; உழைக்கும் வர்க்க நலன் காப்பதிலும் வெயிலெண்ட இறுதி மூச்சு உள்ளவரை போராடியதை வரலாறு பெருமையுடன் பதிவு செய்கிறது.1915 டிசம்பர் 18 ஆம் நாள் பாரீஸ் கம்யூனின் தளபதிகளில் ஒருவரும் - பிரெஞ்சு சோஷலிஸ்ட்டுமான வெயிலெண்ட் மரணமடைந்தார்.இவர் பெயரை மாஸ்கோ நினைவுத் தூணில் லெனின் பொறித்தார்; இளைஞர் கற்க வேண்டிய வரலாற்று பாடத்தில் இவரையும் இணைத்தார்.

புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 29/05/2017