சிரமறுத்தல் வேந்தனின் கருணை...

Posted by அகத்தீ Labels:







புரட்சிப் பெருநதி  - 4

சிரமறுத்தல் வேந்தனின் கருணை...


சு.பொ.அகத்தியலிங்கம்

அவரின் கற்பனைத்தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது . தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கை-கால்களை பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன.



இது ஒரு நூலின் அட்டைப் படம் . 1516 ல் லத்தீன் மொழியில் முதன்முதலாக வெளிவந்தது . இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு 1551ல் வெளிவந்தது .இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வருவதற்கு 16 வருடங்கள் முன்பே 1535லேயே இதை எழுதியவர் கொல்லப்பட்டு விட்டார் .

அவரை சித்ரவதை செய்து கொல்லும் முடிவை மறு பரிசீலனை செய்து கருணை அடிப்படையில் சிரத்தைக் கொய்து கொல்ல ஆணையிட்டாராம் மன்னர் .அந்த நூல் தான் ‘கற்பனைத்தீவு’ ; அதை எழுதியவர் தான் புனித தாமஸ்மூர் .

லண்டனில் வசதியான கத்தோலிக்கக் குடும்பத்தில் 1478 பிப். 7ஆம் நாள் பிறந்தார். 13 வயதிலேயே கத்தோலிக்க மதகுரு மார்ட்டனின் உதவியாளரானார்.புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் லத்தீன், கிரேக்க இலக்கியங்களில் புலமைபெற்றார். 1497ல் எராஸ்மஸ் டெஸிடெரியஸ்- ஸிடம் நட்பு பாராட்டத் தொடங்கினார். இந்நட்பு தாமஸ்மூரின் மனிதநேயப் பார்வையை கூர்மையாக்கியது.

‘பொய்மையின் விலை’ எனும் புகழ்மிக்க நூலை தாமஸ்மூரின் வீட்டிலிருந்தபடி தான் எராஸ்மஸ் எழுதினார். கத்தோலிக்க மத இலக்கியங்களிலும் நடைமுறைகளிலும் மிகவும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட போதிலும் தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார் தாமஸ்மூர் . தன் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு மகிழ்ந்தார்.

1504ல் தன் 26 வயதில் தாமஸ்மூர் காமன்ஸ் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார் .அங்கு இளவரசர் ஆர்தரின் கேளிக்கை மற்றும் பொழுது போக்குக்காக அதிக மானியம் கோரிய மன்னர் ஹென்றியின் தீர்மானத்தை தாமஸ்மூர் கடுமையாக எதிர்த்தார் . இதனால் பதவி பறிக்கப்பட்டு மடலாயத்தில் இருக்கும்படி தண்டிக்கப்பட்டார் . எனினும் அரசரின் திடீர் மரணத்துக்குப்பின் 1510ல் மீண்டும் காமன்ஸ் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார் .

ஏற்கனவே எராஸ்மஸின் நட்போடு டச்சு மனிதாபிமானி பீட்டர் ஏகிடியஸின் நட்பும் தாமஸ்மூரின் இதயத்தை மேலும் விசாலமாக்கியது; பார்வையைக் கூர்மையாக்கியது.இந்தத் தொடர்பால் விளைந்த விவாதத்தை ‘கற்பனைத்தீவு’ எனும் நூலாய்ப் படைத்தார். அந்நூல் மூன்று பேரின் உரையாடலாய் விரியும். தம் நண்பர் ஏகிடுயஸோடு நடத்தும் உரையாடலில் ராபேல் ஹாத்லோட்டேய்ஸ் எனும் போர்ச்சுகீசிய மாலுமி எனும் கற்பனைப் பாத்திரத்தையும் இணைத்திருப்பார். அவர் மூலம் ஒரு கற்பனைத்தீவு ஒன்றைப் படைத்துக்காட்டுவார்.

அவரின் கற்பனைத் தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கை-கால்களை பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன. அந்த தீவில் நிலம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமாக இருக்காது.
அனைவரும் தினசரி ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அனைவரும் உண்ண வேண்டும் . அந்த தீவில் அடிமைகளும் கிரிமினல்களும் கூட இருந்தனர். அவர்கள் கடுமையாக உழைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துவதாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லைமாதோ’ என்கிற கம்பனின் காவியக் கனவு தாமஸ்மூரின் கற்பன்னைத் தீவின் லட்சியக்கனவாக ஆகிப்போனது.ஏதோ கனவு கண்ட வரல்ல தாமஸ்மூர் ஒரு லட்சிய பொதுவுடைமை சமூக அமைப்பை மனிதகுலம் பெறவேண்டும் என அவா மிகுந்தவராகவே தாமஸ்மூர் விளங்கினார் .
கற்பனைத் தீவு நூலில் மட்டுமல்லாது ; மூன்றாம் ரிச்சர்ட் மன்னனின் வரலாறு, லத்தீன் மொழியில் கவிதை வடிவில் தீட்டிய கட்டுரை என அனைத்திலும் முடி மன்னரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்களுக்கு அதிகாரம், சமத்துவம் ஆகிய கருத்துகளை முன்வைத்தார் . எட்டாவது ஹென்றியின் முடி சூட்டுவிழாவினை ஒட்டி தீட்டிய கட்டுரை கூட மனிதநேய அரசியல் திட்டமாகவே அமைந்தது .ஹென்றி மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்த்தார் . மன்னரின் கவுன்சில் உறுப்பினரானார். அரசருக்கு வரும் மனுக்களைப் படித்து அரசரின் கவனத்துக்கு கொண்டு போய் ஆணைகள் பிறப்பிக்கச் செய்யும் பணியை சக அதிகாரிகளின் மனப் புகைச்சலுக்கிடையேயும் திறம்படச் செய்தார். 1529ல் இங்கிலாந்தின் லார்டு சான்ஸலர் என்ற உயர் பதவியைப் பெற்றார் .
இந்த பதவி ஏற்புக்கு முன்னர் மன்னர் ஹென்றியிடம் ஒரு வாக்குறுதி கேட்டார். ‘முதலில் கடவுளுக்குப் பணிந்து நடப்பேன் ; பின்னரே மன்னருக்கு பணிவேன்’ என்பதே அந்த உறுதிமொழி.இந்த நட்பும் அதிகாரமும் நீண்டநாள் நிலைக்கவில்லை . மன்னரோடு தாமஸ்மூர் முரண்படலானார் . மன்னர் ஸ்பெயின் நாட்டு இளவரசியை மணமுடிக்க ஒப்பந்தம் செய்தார் . பின்னர் ஆனிபெளலின் எனும் பேரழகியைச் சந்தித்தார் . அவரை மணமுடிக்க தோதுவாக ஸ்பெயின் இளவரசியுடனான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய கத்தோலிக்க மதபீடமான போப்பிடம் விண்ணப்பித்தார் . ஸ்பெயினோடு உள்ள நட்பு கருதி போப் அதற்கு சம்மதிக்கவில்லை . இதனால் வெகுண்டெழுந்த மன்னர் .
கத்தோலிக்க உறவையே துண்டித்து இங்கிலாந்து கிறுத்துவ சபைக்கு தன்னையே தலைவராக பிரகடனப் படுத்திக் கொண்டார் . இன்று வரை இங்கிலாந்து கிறுத்துவ சபை போப்புக்கு கட்டுப்பட்டதல்ல .

மன்னனின் கத்தோலிக்க எதிர்ப்பை தாமஸ்மூர் ஏற்கவில்லை . மன்னனின் திருமணத்தையும்; ஆடம்பர வாழ்க்கை முறையையும் எதிர்த்தார். இதனால் பதவி பறிக்கப்பட்டு; சித்ரவதைசெய்து கொல்லும் ஆணைக்கு உள்ளானார்; எனினும் மன்னர் இவரின் நீண்ட நாள் நட்பு கருதி சித்ரவதை செய்து கொல்லுவதற்குப் பதில் தலையை வெட்டிக் கொல்ல ‘கருணைஆணை’ பிறப்பித்தார்.

1535 ஜுலை 6 ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட்டது. சாகும்முன் அவர் தன் கண்ணை தானே கர்ச்சிப்பால் கட்டிக்கொண்டு தண்டனையை முகமலர்ச்சியோடு ஏற்றார்.1517ல் ஜெர்மனியில்ஒருசீர்திருத்தஇயக்கம்தோன்றியது. இது நிலச்சீர்திருத்தம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தியது. இதில் கொஞ்சம் வன்முறை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதனை தாமஸ்மூர் ஏற்கவில்லை.
தம் கற்பனைத் தீவில் வன்முறைக்கோ அராஜகத்துக்கோ இடம்இல்லை. முழுக்க முழுக்க மனம் திருந்தி மனம் ஒப்பி செய்யப்படும் ஏற்பாடென சொன்னார் .19 ஆம் நூற்றாண்டில் காரல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் சோஷலிசத்தை அறிவியல் பூர்வமாக வார்த்தெடுக்கும் வரை அது உட்டோப்பியன் சோஷலிசமாகவே -அதாவது கற்பனாவாத சோஷலிசமாகவே இருந்தது. தாமஸ்மூரின் கற்பனைத்தீவு நூல் லத்தீன்மொழியில் ‘உட்டோப்பியா’ என்றே பெயரிடப்பட்டிருந்தது . அதிலிருந்தே உட்டோபியன் சோஷலிசம் என்கிற பெயர் பிறந்தது.

 மாஸ்கோ நினைவுத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள 19 பெயர்களில் இவரும் ஒருவர் என்பது தற்செயலானது அல்ல. லெனின் இவரை நினைவு கூர்ந்தது சோஷலிச சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியை இளைய தலைமுறை அறியவேண்டும் என்பதற்குத் தானே !

புரட்சி தொடரும்…



வர்க்கத்தை பிரசவித்த புரட்சி...

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி – 3




வர்க்கத்தை பிரசவித்த புரட்சி...
சு.பொ.அகத்தியலிங்கம்

பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை’ எனும் நூல் தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்திலுள்ள ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வெறும் கற்பனை அல்ல; அது கிட்டத்தட்ட ஒரு கள ஆய்வு.





காட்டு விலங்குகளைப் பழக்கியதும்; காட்டுச் செடிகளை வீட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததும் மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய பாய்ச்சல் வேகபுரட்சிகர மாற்றமாகும். அதன் பிறகான நெடிய வரலாற்றில், தொழிற்புரட்சியே மனித வளர்ச்சியில் நடந்த மிக முக்கிய புரட்சிகர நிகழ்வு என்பது வரலாற்று அறிஞர்கள் கருத்தாகும்.

1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் வேகம் பெற்றன. இதன் விளைவாய் உற்பத்தி பெருகியது. அதுவரை கிராமப்புறங்களில் எளிய பட்டறைகளில் செய்யப்பட்டு வந்த உற்பத்தி நகரங்களில் ஆலைகளில் பெருமளவில் நடக்கத் தொடங்கின. இதனை தொழிற்புரட்சி (ஐனேரளவசயைட சுநஎடிடரவiடிn) என்பர். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. இந்த உற்பத்தி முறைக்குத் தோதாக அரசியல், சமூக மாற்றங்களும் நிகழ்ந்தன. புரட்டஸ்டண்ட் மதத்தின் தோற்றமும் இதன் இன்னொரு விளைவு என்பர் சமூக ஆய்வாளர்கள்.

புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள் மூலம் வேகம் பெற்ற முதலாவது துறையாக நெசவுத் துறை விளங்கியது. 1733-ல் ஜான்கே ‘பறக்கும் நாடா’வைக் கண்டுபிடித்தார். இது துணி நெய்யும் வேகத்தை அதிகரித்தது. இதனால் நூல் தேவை அதிகமாயிற்று. 1764-ல் ஜேம்ஸ்ஆர்கீரிவ்சுவின் ‘நூற்கும் ஜென்னி’ மற்றும் 1779-ல் சாமுவேல் கிராம்டனின் ‘நூற்கும் மியூல்’ ஆகியவை நூலிற்கான அதிகத் தேவையை ஏற்படுத்தின.1785-ல் கார்ட்ரைட் கண்டுபிடித்த ‘விசைத்தறி’யினால் அதிக அளவில் துணி நெய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. எலிவிட்னி என்பவர் 1793-ல் பருத்தியிலிருந்து விதைகளைப் பிரிப்பதற்காகக் ‘காட்டன்ஜின்’ என்ற கருவியை கண்டுபிடித்தார். இதன் மூலம் அதிக அளவு கச்சாப் பருத்தி, துணி உற்பத்திக்குக் கிடைத்தது.1846-ல் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நீராவி இயந்திரமாகும். 1609ல் ஸ்பானிஸ் விஞ்ஞானி ஜெரோனிமா நீராவி இயந்திரம் குறித்து முயற்சியில் இறங்கினார். 1698ல் தாமஸ் சேவரி முயற்சித்தார். அடுத்து நியூகாமன் மேலும் முன்னேறினார்;

இப்படி நீராவி இயந்திரக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகளையும் முன்னேற்றத்தையும் படித்து உள்வாங்கி மேலும் முயற்சித்த ஜேம்ஸ்வாட் என்பவர் புதிய நீராவி இயந்திரத்தை 1769-ல் உருவாக்கினார். அறிவியலாயினும் வரலாறாயினும் பல முயற்சிகள், தொடர் தோல்விகள் இவற்றைத் தொடர்ந்தே வெற்றி கிட்டும் என்பது அனுபவம். நீராவி இயந்திரமும் அதைத் தான் சொல்லுகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பாய்ச்சல் வேக முன்னேற்றத்துக்கு விதையானது.இதனால் நெசவுத் தொழிற்சாலைகளில் குதிரை மற்றும் நீர் ஆற்றலுக்குப் பதிலாக நீராவி ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. ஜார்ஜ் ஸ்டீபன்சன் நீராவி ரயில் இயந்திரத்தை 1825-ல் கண்டுபிடித்தார். 1830-ல் முதல் பயணியர் தொடர் வண்டி மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே விடப்பட்டது.1814-ல் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி அச்சு இயந்திரத்தால், அச்சுப் பொருட்களின் விலை குறைந்தது. இதற்குப் பின்னர் மைக்கேல் பாரடே டைனமோவைக் கண்டுபிடித்தார். ஆபிரகாம் டெர்பி என்பவர் இரும்புத் தாது உருகுவதற்கு கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

1760-இல் ஜான்ஸ்மீட்டன் என்பவர் டெர்பியின் ஆய்வுடன் நீராற்றலை இணைத்து அதனை மேம்படுத்தினார்.ஹம்பிரிடேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கினால் சுரங்க வேலை செய்வோர் பாதுகாப்புடன் பணி புரிந்தனர். 1784-இல் ஹென்றிகார்ட் இரும்பைத் துண்டாக்க உருளையைப் பயன்படுத்தும் புதியமுறையை அறிமுகப்படுத்தினார். 1856-ல் பெர்ஸ்மர் இரும்பு எஃகு உற்பத்தி செய்யும் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காலம் முதல் நிலக்கரியும் இரும்பும் நீராவியுடன் இணைந்து செயல்பட்டதால் தொழில்மயமாதலுக்கு அடித்தளமாகியது.தொழிற்புரட்சி

நிகழ்ந்த காலப் பகுதியை வரலாற்றாளர்கள் வெவ்வேறு விதமாகக் கூறுவர். எரிக்ஹாப்ஸ்பாம் என்பவர், தொழிற்புரட்சி 1780இல் தொடங்கியது என்றும் 1830 அல்லது 1840களிலேயே முழுமையாக உணரப்பட்டது என்றும் கூறுவார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பொருளாதார, சமூக மாற்றங்கள் படிப்படியாகவே ஏற்பட்டன என்றும், நீடித்த காலத்தில் நடந்தவற்றை விளக்குவதற்குப் புரட்சி என்ற சொல் பொருத்தமற்றது என்றும் சொல்கின்றனர்.

தொழில் புரட்சி உற்பத்தி பெருக்கத்தை மட்டுமா கொண்டு வந்தது ?தொழிலாளி, முதலாளி என இரண்டு எதிரெதிர் வர்க்கத்தை வரலாற்று அரங்கில் நிறுத்தியது. கண்மூடித்தனமான சுரண்டலையும்; மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழலையும், குழந்தைத் தொழிலாளி எனும் கொடூரச் சுரண்டலையும் கொண்டு வந்து சேர்த்தது.

தொழிலாளிகள் தங்க எந்த சுகாதாரமும் அற்ற கொட்டடிகள், நவீன குடிசைப் பகுதிகள் என ஒரு அழுக்கின் ராஜ்யத்தை உருவாக்கியது எனில் மிகை அல்ல.இக்காலகட்டத்தை பிரதிபலிக்கும் சில புதினங்கள் வெளிவந்தன.

பிரான்சில் விக்டர் ஹியூகோ ‘ஏழை படும்பாடு’ ஸடநள அளைநசயடெந] என்ற புதினத்தை எழுதினார். குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர். அதில் ஹியூகோவின் படைப்பு காத்திரமானது. அன்றைய சமூகத்தைக் கண்ணெதிரே கொண்டுவரும். இதுவரை படிக்காதவர்கள் இனியேனும் படியுங்கள்.

பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை’ எனும் நூல் தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்திலுள்ள ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வெறும் கற்பனை அல்ல; அது கிட்டத்தட்ட ஒரு கள ஆய்வு என்று கூட சொல்லலாம். மேட்டுக்குடியில் பிறந்த ஏங்கெல்ஸ் தனது ஐரிஷ் நண்பியான மேரிபேர்ன்ஸ் என்கிற ஏழைப் பணிப் பெண்ணோடு அவரது குடிசைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கண்ணால் கண்ட உண்மைகளை பதிவு செய்த நூல் அது.

ஏங்கெல்ஸின் இந்தப் புத்தகத்தையும் ஹியூகோவின் ஏழை படும்பாடு நாவலையும் படித்தால் தான் தொழிற்புரட்சியின் இன்னொரு பக்கம் விளங்கும்.தொழிற்புரட்சி உற்பத்தி பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு மடைதிறந்து விட்ட போதே; முதலாளி வர்க்கத்தையும் அதற்கு எதிரான புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தையும் படைத்து விட்டது. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மார்க்ஸ் சொல்லும் வரை சரியாக உலகம் இனம் காணவில்லை.ஆகவே மக்களின் கோபம் பல்வேறு போராட்டங்களாக வெடித்த போதும்; வெற்றி இலக்கை கோட்டை விட்டு விட்டது.

‘…திமிறி எழுவது சகஜமானது; இயற்கையானதும் கூட. கோபுரங்கள் மண்மேடுகளாக மாறும். மக்களை மதிக்காத அரசாங்கங்கள் கவிழும்; மண்ணைக் கவ்வும்’ என்று ஹியூகோ சொன்ன வரிகள் வரலாற்றின் முன்னறிப்பாகும்.

‘என் பயணத்தில் தொழிற்புரட்சியின் எந்த நன்மையையும் காண முடியவில்லை. அது இயற்கையை முற்றும் முழுவதுமாக சிதைத்து விட்டது. இனி வரும்காலத்தில் மனிதர்களுக்கு சுவாசிக்க நல்ல காற்று கூட இருக்காது. எங்கும் பச்சையம் இருக்காது... இயற்கையை மட்டும் சிதைக்கவில்லை. இந்த தொழிற்புரட்சி மனித பண்புகளையும் சிதைத்துவிட்டது. பணம் அற மதிப்புகளை இல்லாமல் செய்துவிட்டது... இந்த தொழிற்புரட்சி குறித்து எதுவுமே தெரியாமல் கிராமத்தில் வாழும் ஒரு எளிய மனிதன், இன்னும் இயற்கையுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு இருக்கிறான்’ என்றார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். ஆம் என்கிறது வரலாற்று அனுபவம்.

புரட்சி தொடரும்…




விழிப்புணர்வு தந்த தோல்விகள்

Posted by அகத்தீ Labels:






புரட்சிப் பெருநதி -2





விழிப்புணர்வு தந்த தோல்விகள் 

சு.பொ.அகத்தியலிங்கம்

கசை’ தான் அந்நாட்டின் சின்னம் என்பர் வரலாற்றாளர்கள்; அடிமைகளின் முதுகுத் தோலை உரிப்பது ஜார் மன்னனின் பொழுதுபோக்கு! இதனால் அங்கு அடிக்கடி விவசாயிகள் கலகம் செய்து வந்தனர்.


அங்கு ரஷ்யாவில் ஒரு வழக்கம் இருந்தது. யாரைத் தூக்கிலிட்டாலும் ஒருமுறை தான்தூக்கிலிட வேண்டும். ஏதாவது எதிர்பாராத வகையில் தூக்கு இறுகாமல் ஒருவர் உயிர் தப்பிவிட்டால் அவரை மீண்டும் தூக்கிலிடக் கூடாது. ஆனால் அந்த ஐவரை தூக்கிலிட்ட போது, அதில் ஒருவர் கழுத்தை தூக்குக் கயிறு சரியாக இறுக்கவில்லை.அவர் உயிர் தப்பிவிட்டார். வழக்கத்தை – பலநூற்றாண்டு பாரம்பரியத்தை மாற்றி மீண்டும் தூக்கிலிட்டுக் கொல்ல ஆணையிட்டார் ஜார்மன்னன். அப்படியாயின் அந்த நபர் ஜார்மன்னனின் தூக்கத்தைக் கெடுத்தவனாகத் தானே இருக்க முடியும் ?

உலகில் படுபிற்போக்கான நாடாகவும் கொடுமையும் வறுமையும் தாண்டவமாடும் தேசமாகவும் பத்தொண்பதாம் நூற்றாண்டில் இருந்த தேசமே ரஷ்யா. அந்நாடு தன்னை ‘பரிசுத்த ரஷ்யா’ என அழைத்துக் கொண்டது. ஜார் அரசரோ தம்மை ‘குட்டிவெண்பிதா’ ஸலிட்டில் ஒயிட்பாதர்] என அழைக்கச் செய்தார்.மதபீடமும் அரசும் கைகோர்த்து மக்களை வேட்டையாடிய காலம் அது.

‘கசை’ தான்அந்நாட்டின் சின்னம் என்பர் வரலாற்றாளர்கள்; அடிமைகளின் முதுகுத் தோலை உரிப்பது ஜார் மன்னனின் பொழுது போக்கு! இதனால் அங்கு அடிக்கடி விவசாயிகள் கலகம் செய்து வந்தனர்.

தன் சகோதரனை அரண்மனை புரட்சியில் ஒழித்துக்கட்டி ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த ஜார்நிக்கோலஸ் மிகப்பெரும் கொடூரனாயும் வஞ்சகனாயும் இருந்தான்.ரஷ்ய தேசிய இனத்தைத் தவிர இதர தேசிய இனங்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்களுக்கு எதிரான வெறுப்பு விஷம் ஊட்டப்பட்டது. யுதர்கள் பெரும் தாக்குதலையும் உயிர்ப்பலியையும் எதிர் கொண்டனர்.மக்களிடம் கோபம் இருந்தது. விடுதலை மார்க்கமும் தெரியவில்லை. நம்பிக்கை வறட்சியில் சுருண்டு கிடந்தனர்.
ஆனால் சில அதிகாரிகளும், படித்த பிரபுக்கள் சிலரும் சகிக்க முடியாத இந்த நிலையை மாற்றத் திட்டமிட்டனர். பாவேல் பெஸ்டல், நிக்கிட்டாமுர்னேவ், எஸ்பிதிரோலோஸ்கி உள்ளிட்ட அதிகாரிகளும் பிரபுக்களும்,1816ல் மீட்பர் சங்கம் அமைத்து ஜார்ஆட்சிக்கு எதிராய் போராடினர். ரகசியமாய் படை திரட்டினர். 1825 டிசம்பர் 26 ஆம்நாள் 3000 பேர் புனித பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள செனட் சதுக்கத்தில் கூடினர். ஆனால் ஜாரின் ராணுவம் வெறி கொண்டு தாக்கி அவர்களை விரட்டியது.

பலர் கைது செய்யப்பட்டனர்.பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் கடும் தண்டனைக்கு ஆளானார்கள். பலர் நாடு கடத்தப்பட்டனர். உறை பனி பிரதேசமான சைபீரியாவுக்கு கடத்தப்பட்டனர். டிசம்பர் மாதம் நடந்ததால் இவர்களை வரலாறு ‘டிசம்பரிஸ்ட்டுகள்’ என அழைக்கப்பட்டனர்.

கட்டுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சம்பவம் இந்த டிசம்பரிஸ்ட் எழுச்சி அடக்கப்பட்டு தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றும் போதுதான் நிகழ்ந்தது. இந்த கலகம் ஜாரை மிகவும் மிரளச் செய்து விட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!ரஷ்யாவில் ஜார் மன்னன் பகீரங்கமான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இருந்ததால் இரகசியசங்கங்கள் மூலமே இந்த டிசம்பர் எழுச்சி உருவாக்கப்பட்டது என்பது முக்கியமானது.
பிரெஞ்சு நாட்டில் கனந்த புரட்சி கர எழுச்சி படித்த உயர்வர்க்கத்தினரிடையே உசுப்பிவிட்ட சுதந்திரக்கனலே இந்த டிசம்பரிஸ்ட் எழுச்சிக்கு உந்து சக்தியானது எனில் மிகை அல்ல .1848 –ல் தான் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது. ஆனால் அதற்கான கொதி நிலை உலகெங்கும் உருவாகிக் கொண்டிருந்த பின்னணியில் தான் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது . எனினும் அதன் புரட்சிகர உள்ளடக்கமும் திசைவழியும் எல்லா இடத்துக்கும் சென்றடையாத காலம்.

ரஷ்யாவின் நிலைமை என்ன? ‘நிக்கோலஸ் மன்னன் ஆட்சியின் கீழ் ரஷ்யா’ எனும் நூலின்ஆசிரியர் மார்கிஸ் அஸ்டால்ப் சொல்லுவார் ‘கொழுந்து விட்டெரியும் தீயில் – இறுக மூடப்பட்ட கொதிகலனுள் கொதித்துக் கொண்டிருந்தது ரஷ்யா’ என்பார்.
1825 ல் நிகழ்ந்த முதல் வெடிப்பு தாங்க முடியா கொடுமையின் எதிர்வினை எனில் மிகை அல்ல. ‘ருஷ்யாவில் முதன் முதல் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது இக்கலகத்தில் தான்’ என்பார் பண்டிட் ஜவகர்லால் நேரு.இக்கலகம் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் ரஷ்யப் புரட்சி வெடித்தெழ முதல் அஸ்திவாரக் கல்லாய் இந்நிகழ்வை லெனின் பார்த்தார்.

எனவே தான் இவ்வெழுச்சி நடைபெற்ற புனிதபீட்டர்ஸ் பர்க்கிலுள்ள செனட் சதுக்கத்துக்கு’ ‘டிசம்பரிஸ்ட் சதுக்கம்’ எனப் பெயர் சூட்ட விரும்பினார். லெனினின் விருப்பம் அவர் மறைவுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டது. சோவியத் யூனியன் சிதைவிற்குப் பிறகு இப்பெயர் பழையபடி ‘செனட் சதுக்கம்’ என 2006ல் மாற்றப்பட்டது. இப்போதும் அந்த டிசம்பர் கலவரக் கங்கின் அனலைக் கண்டு ஆட்சியாளர் நடுநடுங்குவதின் குறியீடே இந்த சதுக்கத்தின் பெயரை மாற்றியது எனலாம்.
இந்தக் கலவரம் தோற்கடிக்கப் பட்டாலும் அதன் அனல் அடங்கவில்லை; பல ரகசியக் குழுக்கள் முளைவிடவும் செயல்படவும் வழிவகுத்தது எனில் மிகையல்ல.கடும் அடக்குமுறையின் விளைவாய் சற்று அமுங்கியது போல்காட்சி அளித்த கொந்தளிப்பு 1840-1860 வரை வேறுவடிவம் எடுத்தது. மேல்தட்டு கனவான்களின் தலைமையில் டிசம்பரிஸ்ட் கலகம் நடந்ததெனில், இப்போது விவசாயிகள், கீழ்மட்ட மதகுருமார்கள், விவசாயிகள்,வியாபாரிகள், சாதாரண மத்திய தரத்தினர் கைக்குமாறியது. இவர்களை ரஷ்ய மொழியில் ரஸ்னொசிண்ட்ஸி என்றழைப்பர்.விஸோரியோன் பெலின்ஸ்கி, அலெக்சாண்டர், நிக்கோலாய் தோப்ரோலியுபோவ் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் முன் நின்றனர். அவர்கள் கற்பனாவாத சோசலிஸ்டுகளாய் இருந்தனர்.
இவர்கள் விவசாயிகள் புரட்சியை முன்னிறுத்தினர். அப்போது தொழில் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாய் இல்லாததால் தொழிலாளி வர்க்கமும் பெரிதாய் இல்லை.1861ல் கிரிமிய தீபகற்பத்தில் நடந்த போரில் ஜார் மன்னன் படுதோல்வியடைந்தான். இச்சூழலில் பண்ணையடிமைகள் கலவரம் செய்யக் கூடும் என அஞ்சினான். எனவே பண்ணை அடிமைத் தனத்தை ஒழித்து ஆணையிட்டான். சிறிய அளவில் நிலச் சீர்திருத்தமும் மேற்கொண்டான். ஆனால் பலனை வேறுவழியில் அறுவடை செய்ய நிலப்பிரபுக்கள் சூழ்ச்சி செய்தனர்.
அநியாய குத்தகை, இலவச உழைப்பு, கடும் வரி என நீண்டது. முதுகொடிய பாடுபட்டும் முழு வயிறு காணா நிலைதான். இது அதிருப்தியை வேகமாக விசிறிவிட்டது. தொழில் வளர்ச்சியும் மெல்ல தலைதூக்கத் தொடங்கியது.இப்பின்னணியில் 1870-ல் ரஸ்னொசிண்ட்ஸி இயக்கம் சூடு பிடித்தது. ரஷ்யப் புரட்சியின் அடுத்த அடிவைப்புக்கு தயாரிப்பு களமானது. லெனின் மூத்த சகோதரர் அலெக்சாண்டர் உல்யானோவ் இலியெச் தீவிரவாதியாய் மாறிய காலகட்டம் துவங்கியது.அதற்குள் நுழையும் முன் உலகை ஈர்த்த வேறு சில புரட்சிகர நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்.
புரட்சித் தொடரும்…