தோழர் எஸ் கே டி என அன்போடு எல்லோராலும் அழைக்கப்படும் எஸ் .குமாரதாஸ் அவர்கள் எண்பதாவது வயதில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவரின் பிறந்த நாள் அழைப்பு [தோழர் பாரதி செல்வா விடுத்த அழைப்பு ] கிடைக்கப்பெற்றேன் .மட்டில்லா மகிழ்ச்சி .
நான் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டிய நிகழ்வு . தற்போது அமெரிக்காவில் வர்ஜீனியாவில் மகன் வீட்டில் முகாமிட்டிருப்பதால் வரயியலாத நிலை உள்ளது . என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
எனக்கும் குமாரதாஸுக்கும் இடையே ஆன உறவுக்கும் , எனக்கும் சிபிஎம் கட்சிக்குமான உறவுக்கும் கிட்டத்தட்ட சம வயது . அவசரகாலத்திற்கு முந்தைய வருடங்களில் முகிழ்த்த உறவு .என்னைக் கட்சியில் துணைக்குழு உறுப்பினராக சேர்த்தவன் . அப்போது அவன் தான் கிளைச் செயலாளர் . கட்சி உறுப்பினராகியதும் அந்தக் கிளையில்தான். என் முதல் கட்சிச் செயலாளர் அவன் தான் .அவன் என்னைவிட ஏழு வயது மூத்தவன் .ஆயினும் இன்றுவரை வாடா போடா என அழைத்துக் கொள்ளும் அந்நியோன்யம் தொடர்கிறது .
கோஷம் போடவும் , உண்டியல் குலுக்கவும் , பிரசுரம் விற்கவும் ,கொடி பிடிக்கவும் இவன்தான் என் குரு
பழவந்தங்கல் ,ஆலந்தூர் ,கிண்டி ,ஆதம்பாகம் ,மீனம்பாக்கம் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க அவன் அரும்பாடு பட்டவன் .அவன் நிர்வகித்த மார்க்ஸ் மன்றம் [ பரங்கி மலை ரயில் நிலையம் அருகில் ] எம் பாடிவீடானது . பழவந்தங்கல் எம் ஜி ஆர் நகர் என் வீடும் , பறங்கிமலையில் உள்ள குமாரதாஸ் வீடும் எம் சந்திப்பு மையமானது . புத்தகக் காதலன். இன்குலாப் கவிதை புத்தகம் முதன் முதல் அவன்தான் எனக்குத் தந்தான் . அவனிடம் இருந்து நான் பல புத்தகங்களைச் சுட்டதுண்டு .கேட்டால் சீக்கிரம் தரமாட்டான். அவசரகாலத்தில் முதன் முதல் அவன் புத்தக சேகரிப்பு பெட்டியைப் பார்த்த போது அதுமாதிரி நானும் செய்ய வேண்டும் என ஆசை கொண்டேன்.
மாதர் சங்கத்தை பழவந்தங்கலில் உருவாக்க அவன் பட்ட பாட்டை அருகிருந்து பார்த்தவன் . போராட்ட களத்தில் முகிழ்த்த காதலில் வனஜாவை கைப்பிடித்தவன் . வனஜா இன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் . தன் இணையரின் வளர்ச்சியில் பெரிதும் மகிழ்ந்து துணை நிற்பவன் .அதுமட்டுமல்ல தன் கிளையில் / பழவந்தங்கலில் இருந்த நான் , உ.ரா.வ , து.ஜானகிராமன், சேகர் ,ராஜன் ,விஜயா ஜானகிராமன் என ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவன் . தன்னோடு இருப்பவர்கள் வளர்ச்சியில் மனநிறைவு கொள்கிறவன் .
சிபிஎம் கட்சியில் பார்ப்பனர்கள் உறுப்பினராக தலைவராக நிறைய உண்டு . தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் , எம் .ஆர் . வெங்கட்ராமன் ,உ.ரா .வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,எல் ஐ சி கே.என்.ஜி ,ஏ.கே.வீரராகவன் [ டெலிகிராப் / தீக்கதிர்] போன்ற பலர் பூணுலை மட்டுமல்ல பார்ப்பணியத்தையும் முற்றாகத் தூக்கி எறிந்தவர்கள் ; சாதிய சனாதன தடம் அற்றவர்கள் .அந்த வழியில் குமாரதாஸும் அடங்குவான் . “இவனை பார்பனர் என்று சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள் .” என்று அடிக்கடி ராஜன் [ தற்போது பி.சி அலுவலக ஊழியர் ] கூறுவார் . அந்த அளவு சாதிய மனோநிலையை முற்றும் துறந்தவன் . ஒடுக்கப்பட்ட மக்களோடு இரண்டறக் கலந்தவன் . பல்லாவரம் குவாரி போராட்டமும் ,தோல்பதனிடும் தொழிலாளர்கள் போராட்டமும் ,கல்குட்டை மக்களின் போராட்டமும் இவனின் இயல்பைப் பறை சாற்றும். அடிப்படையில் இவன் ஒரு கூலித்தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கியவன்தான்.
பல்லாவரம் குவாரித் தொழிலாளர் போராட்டம் ஒன்று போதுமே அவனின் உறுதியையும் மனிதத்தையும் போற்ற ; அப்போராட்டத்தில் அவனோடு நானும் இருந்தேன் என்பது என் மகிழ்ச்சி .அப்போராட்டத்தில் நான் எழுதிய பாடல் சிகரம் ஏட்டிலும் வெளியானது .
அவன் சில நேரங்களில் வருத்தமும் மனத்தாங்கலுமாய் புலம்புவான் . நானும் சின்னையாவும் உரிமையுடன் கடுமையாகத் திட்டுவோம் .அவன் புலம்பல் கட்சி வளர்ச்சியில் அக்கறை கொண்டது என்பதையும் அறிவோம். வயதுக்கும் உடல்நிலைக்கும் மீறி அவன் உழைப்பதை கொஞ்சம் குறைக்கச் சொல்லி வற்புறுத்துவோம் .கேட்க மாட்டான்.
விடாப்பிடியான தொழிலாளிவர்க்கப் போராளி. எண்பது வயதிலும் மார்க்சிஸ்ட் கட்சி மீது மாளாக் காதல் கொண்டவன் .இன்றும் கட்சிக்காக தன்னால் இயன்ற பணிகளை மட்டுமல்ல சற்று அதிகமாகவே செய்கிறவன் . அவனது கட்சி விசுவாசம் அளவிடற்கரியது .
குமாரதாஸ் – வனஜா இணையர்கள் கட்சியின் பொக்கிஷம் .அக்குடும்பமும்தான் .
குமாரதாஸை அலைபேசியில் நேரில் எப்படி வாழ்த்துவனோ அப்படியே உரிமையோடு இப்போதும் வாழ்த்துகிறேன் !
” வாழ்க பல்லாண்டுடா ! வயது எண்பதிலேயும் ஆக்டீவா இருக்கே சந்தோஷப்படு ! உன் உழைப்பு வீண்போகாதுடா ! நேரில் வர இயலவில்லை மன்னிச்சிடு ! வாழ்க வனஜா குமாரதாஸ் ஜோடி !”
சுபொஅ.
09/04/25.வர்ஜீனியா .
குறிப்பு : நான் புகைப்பட ஆர்வலன் அல்லன் .எந்த புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை . முகநூலில் தேடி இரண்டு படங்கள் பதிந்துள்ளேன்.
0 comments :
Post a Comment