ரயிலோடும்…… செங்கொடியோடும் …..

Posted by அகத்தீ Labels:

 




ரயிலோடும்……  செங்கொடியோடும் …..

 

[ தென்சென்னை சிபிஎம் மாநில மாநாட்டை யொட்டி வெளியிடப்படும் மலருக்கான கட்டுரை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

[ நினைவில் இருந்து எழுதுவதால் சில முக்கிய பெயர்கள்கூட விடுப்பட்டிருக்கலாம் . நிகழ்வுகள் குறித்த செய்தி காலவரிசையில் இல்லாமல் இருக்கலாம் .பொறுத்தருள்வீர்]

ழவந்தங்கலில் ரயில்வே நிலையம் அருகிலுள்ள எம் ஜி ஆர் நகரில் ஓர் குடிசையில் 1973 முதல் 1981 தாய் ,தந்தை ,அண்ணன் ,தம்பியோடு நான் குடியிருந்தேன் . எனது இடது சிந்தனை வலுப்பெற்றதும் நான் மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானதும்  ,ஊழியரானதும் ,என் குடும்பமே கட்சி சிந்தனைக்கு ஆட்பட்டதும் அக்காலகட்டம்தான் . ரயிலும் என் அன்றாட வாழ்வும் அரசியல் பயணமும் பின்னிப் பிணைந்தது . கட்சியோடு நான் கட்டுண்டதில் ரயிலுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

 

ரயிலில் நான் , தோழர்கள் குமாரதாஸ் , ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் , உ.ரா.வரதராஜன் ,விஸ்வம்பரன் ,முண்டன் , ராஜன் , கோபிநாத் ,தீனா ,கந்தன் என் சகோதரர் சு.பொ.நாராயணன் ,ஜெயலட்சுமி ,முஸ்த்திரி  ,டிரைவர் ராஜி ,சேகர் , விஜய ஜானகிராமன் .ராமச்சந்திரன் [ இவர் பின்னர் ஒதுங்கிவிட்டார் ] ஆகியோர் ரயிலில் பிரச்சாரம் செய்து கட்சிப் பிரசுரங்கள் விற்ற நினைவு இன்னும் பசுமையாய் உள்ளது .

 

பழவந்தங்கலில் புறப்பட்டு பீச் சென்று அங்கிருந்து தாம்பரம் அங்கிருந்து பழவந்தங்கல் என பிரசுரம் விற்றபடியே பயணிப்போம் . ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பெட்டி மாறுவோம் . வழியில் கே.எம். ஹரிபட் ,சி.பி.தாமோதரன் ,மைதிலி சிவராமன் ,டி.ஜானகிராமன் , வழக்கறிஞர் சிவாஜி , டி.லட்சுமணன் ,ஸ்ரீதர் உடபட பலரை ரயிலில் சந்திப்போம் .

 

ஒருவர் பேச மற்றவர்கள் பெட்டிக்குள் சுறுசுறுப்பாய் துண்டுபிரசுர விநியோகம் நிதி வசூல் என சுழல்வோம். நான் பிரசுர விற்பனைக்கும் என் சகோதரர் தீக்கதிர் விற்பனைக்கும் பொறுப்பு .ரயிலில் உரத்த குரலில் பேசுவது நானும் , உ.ரா.வரதராஜனுமே [அவர் அப்போது ஆர் பி ஐயில் பணியாற்றிய போதும்  துணிந்து செய்வார்]குமாராதாஸ் ஆகியோரே . உண்டி வசூலில் பத்மநாபன் ,ராஜன் ,முண்டன் கில்லாடிகள் .

 

இது முடிந்த பிறகு டீக்கடையில் டீ ,பட்டர் பிஸ்கெட் அதைத் தொடர்ந்து என் குடிசையிலோ பத்மநாபன்  குடிசையிலோ அரசியல் அரட்டை ,விவாதம் அந்த நாட்கள் மறக்க முடியாதவை .

 

பறங்கிமலையிலிருந்து மீனம்பாக்கம் வரை தீக்கதி விநியோகம் செய்வது என் சகோதரர் தோழர் சு.பொ.நாராயணுனும் நானுமே .

 

ஆலந்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடியில் இருந்த ஓர் அறையில் அவசரகாலத்தில் பல தோழர்கள் சந்திப்போம் . நான் ,அண்ணாமலை ,வி.பா.கணேசன் , ஹரிபரந்தாமன் , சூணாம்பேடு வரதராசன் , செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் ,சி.மணி, போஸ்டல் சின்ராஜ் ,ராஜன்மணி இன்னும் பலர் . ரகசிய கடிதம் செய்திகள் பரிமாற தலைமறைவுத் தலைவர்களோடு உறவு கொள்ள அது ஒரு தகவல் மையம் போல் இயங்கியது . தோழர் ஏ.கே.பத்மநாபன் அடிக்கடி வந்து தகவல் பரிமாறிச் செல்வார்.

 

பழவந்தங்கலில் தோழர் குமாரசாமி அறையில் தலைமறைவாக இருந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் ,வே.மீனாட்சிசுந்தரம் போன்றோர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வர் .தோழர் து .ஜானகிராமன் ,கே.எம்.ஹரிபட் , சிவாஜி மிசாவில் கைதாகிவிட்டனர் .தோழர் சி.பி.தாமோதரனும் இறுதியில் கைதாகிவிட்டார்.

 

ரயில்வே லைனை ஒட்டி பறங்கிமலையில் மார்க்ஸ் மன்றம் இயங்கியது .பின்னர் பழவந்தங்கலில் வெண்மணிப் படிப்பகம் திறந்தோம் . சைதையில் தோழர் வை.கிருஷ்ணசாமி தட்சிணாமூர்த்தியின் அறை இன்னொரு சந்திப்பு மையம் .

 

சேத்துப்பட்டில் செபாஸ்டின் , க.மாதவ் வடபழநியில் கல்யாணசுந்தரம் உடபட பலர் ரயில் மூலம் தினசரி இணைந்து பணியாற்றியவர் ஆவார். சைதையில் உத்தண்டராமன் ,சிவகுமார் [சினிமா பேராசிரியராகிவிட்டவர்] தாம்பரம்தேவப்பிரகாஷ் ,ஸ்டாலின் மணி என பட்டியல் நீளும்.

 

பழவந்தங்கலில் 1976 ல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கினோம் . நான் அதன் செயலாளர் .மாவட்ட அமைப்பும் அவசரகால பேயிரிட்டில் உருவாக்கினோம். 1977 முதல் மாவட்ட மாநாட்டில் நான் செயலாளர் ஆனேன் .

 

அப்போது சென்னை பீச்சுக்கு இடையே மின்சார ரயில் மீட்டர் கேஜ் ரயில்தான் .நாலு பெட்டி தான் .கூட்டம் நிரம்பி வழியும் . சிலநேரம் எட்டு பெட்டி இணைக்கப்படும்.  மீட்டர் கேஜை அகலரயில் பாதை ஆக்க வேண்டும் .பெண்களுக்கு தனிப் பெட்டி இணைக்க வேண்டும் . முதலிய கோரிக்கைகளை இணைத்து தினசரி மாலை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .கையெழுத்து இயக்கமும் நடத்துவோம் . எங்கள் போராட்டம் பெரும் அறிமுகமானது .பேராதரவு பெருகியது .

 

இந்த ஆர்ப்பாட்டங்களில் நான் பேசும் போது , “ நாங்கள் நெரிசலில் பயணிக்கும் போது  சொகுசு பயணத்துக்கு முதல் வகுப்பு பெட்டி ஏன் ?” என கேட்டேன் .ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தோழர் என் .சங்கரய்யா என்னை அழைத்து .தினசரி ஆர்ப்பாட்டம் நல்லது .கோரிக்கைகள் நல்லது .பேசும்போது ஜாக்கிரதையாக இருங்கள் .முதல் வகுப்பில் பயணிப்போரை எதிரியாக்க வேண்டாம் . இப்படி சில யோசனைகளைச் சொன்னார் .

 

லட்சம் கையெழுத்துகளுடன் மூர்மார்கெட்டில் இருந்து ரயில்வே தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றோம் .டிஜிஎம் கோவில் பிள்ளையை சந்தித்து மனு கொடுத்தோம் .தோழர் அய்யலுதான் அதற்கு ஏற்பாடு செய்தார் .எங்கள் கோரிக்கையை வலுப்படுத்த ஆதாரங்கள் ,புள்ளி விவரங்கள் அவர்தான் தந்தார் .ஆகவேதான் எங்களின் துண்டுப் பிரசுரம் எல்லோரையும் ஈர்த்தது .போராட்டம்  விளைவாய் முதலில் ஒண்பது பெட்டி கோரிகையும் பெண்களுக்கு தனிப்பெட்டி கோரிக்கையும் நிறைவேறியது .பின்னர் அகல ரயில்பாதையும் வந்தது .இதற்கான போராட்டத்திற்கு விதை போட்ட மகிழ்ச்சி நமக்கு இருப்பது இயற்கை .ஆனால் வெற்றியின் உரிமையை வலுவாக பதிவு செய்யத் தவறிவிட்டோம். இதயம் பேசுகிறது இதழில் தோழர் க.சின்னையாவும் ,சரஸ்வதி வரதராஜனும் அளித்த பேச்சியே முக்கிய பதிவு . ராணி மைந்தன் பேட்டி எடுத்திருப்பார் .

 

தூக்குமேடை பாலன் பல்லாவரத்தில் குடியிருந்தார் .அவரை ரயிலில் சந்தித்ததும் அதன் பின் அவரோடு பல நாட்கள் கலந்துரையாடியதும் என் நினைவில் இன்றும் உள்ளது .மலையாள மொழி பெயர்ப்பு நாவல்கள் மீது எனக்கு  அவர் ஈர்ப்பை ஏற்படுத்தியதை மறக்க முடியுமா ? குறிப்பாக  “நூறுபூக்கள் மலரட்டும்” என மலையாளத்தில் உன்னிபுத்தூர் கிருஷ்ணன் எழுதியது என நினைவு. அதுபோல் கேசவதேவ் எனும் எழுத்தாளர் தேசப்பிரிவினையை மையமாக வைத்து எழுதிய பைத்தியக்கார உலகம் போன்றவை புதிய இலக்கியத் தேடலை ஊக்குவித்தன .

 

அவசரகாலத்தில் ஒவ்வொரு ரயில் நிலையச் சுவரிலும் , “கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை” , “ காலந்தவறாமையே வெற்றியின் முதல்படி” “நாமிருவர் நமக்கிருவர்” இப்படி எண்ணற்ற வாக்கியங்களை மத்திய அரசின் ஆணைப்படி எழுதி வைத்திருப்பார்கள் .நாங்கள் இரவு போய் அதன் கீழே பகடி செய்யும் வார்த்தைகளை எழுதிவிடுவோம் . சுவரெழுத்தில் குமாரதாஸ் நல்ல ஸ்பீடு . தெளிவு . கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை  என்ற வாசகத்தின் கீழ் ஆமாம் ஈடான ஊதியமும் இல்லை ; இணையான போணசும் இல்லை என்று எழுதி வைத்தோம். இப்படி பல .

 

அவசரகாலம் பிரகடனபடுத்தப்பட்ட மறுநாள் முரசொலியில்  இந்திரா முகம் ஹிட்லராக மாறுவதாய் ஒரு கார்ட்டூன் வந்தது .நாங்கள் அதை காப்பி அடித்து பல போஸ்டர்கள் கையால் தயார் செய்து ரயில்களின் உள்பகுதியில் ஒட்டிவிட்டோம். மறுநாள் பரபரப்பானது . படங்கள் வரைவதில் என் இளைய சகோதரர் சு.பொ.ஐயப்பன் கைவண்ணம் உண்டு .

 

பழவந்தங்கலில் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கூட்டங்கள் குறிப்பிடத் தக்கன.  “ ஜனநாயகமும் சட்டமும் “ என்ற தலைப்பில் தோழர் சந்துருவும் [ பின்னர் நீதிபதியானவர் ] , “ வியட்நாம் வீரகாவியம்” குறித்து மைதிலி சிவராமனும் நடத்திய  வகுப்புகள் குறிப்பிடத்தக்கன . செந்தில்நாதன் , இளவேனில் பங்கேற்ற தமுஎச கூட்டங்களும் அவசரகாலத்திலும் இயங்கிய பாங்கிற்கு சாட்சி .

 

ரயில் மூன்று நான்கு தோழர்கள் உட்கார்ந்து கொண்டு எதிரும் புதிருமாய் பேசத்தொடங்கி சூடான  அரசியல் விவாதத்தை செய்வோம் . கட்சிப் பிரச்சாரம் இப்படி நடக்கும். ரயிலில் அரசியல் பேசுவதில் மெயில் சுப்பாராவ் , டெலிகிராப் ஊழியர் ஏ.கே.வீரராகவன் தனி முத்திரை பதிப்பார்கள் .

 

அவசரகாலத்தின் போது பல்லாவரம் கல்லுடைக்கும் குவாரி போராட்டம் மிக முக்கியமானது . தோழர் எஸ் .குமாரதாஸின் பங்கு அதில் மிக முக்கியமானது . கிட்டத்தட்ட பலமுன்னணி தோழர்கள் அங்கு செல்வோம் .அப்போது திரிசூலம் ஸ்டேஷன் கிடையாது .மீனம்பாக்கத்திலோ பல்லாவரத்திலோ இறங்கி ரயில் லைன் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் .மைதிலி சிவராமனை பலமுறை அவ்வாறு அழைத்துச் சென்றுள்ளோம் .

 

மேதினம் ,கட்சிக்கூட்டங்களுக்கு ஏழெட்டு பேர் சிவப்புக் கொடியுடன் ரயிலில் பிரச்சாரம் செய்தபடியே பயணிப்பதும் ; ரயிலின் உட்புறத்தில் தொடர்ந்து கையெழுத்து சுவரொட்டிகள் ஓட்டுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது .

 

இப்படி என் நினைவலைகள் முன்னும் பின்னும் காலக்கிரமமின்றி அலைபாய்ந்து  பழைய நினைவுகளை முன்னுக்கு கொண்டு வருகிறது .மின்சார ரயிலும் நாங்களும் கட்சியும் பின்னிப் பிணைந்திருந்த நாட்கள்.

 

என்னை கட்சி முழுநேர ஊழியராக கட்சி தேர்ந்தெடுத்த செய்தியை முதன் முதல் ரயிலில் மின்சார ரயிலி பயணித்துக் கொண்டே தோழர் கே.எம்.ஹரிபட் சொன்னபோது நம்ப முடியாமல் திணறிய நொடிகள் மறக்க முடியுமா ?

 

கட்சி முழுநேர ஊழியர் என்றால் , “ அமைப்புக்குள் இயங்குவது ; அமைப்பைக் கட்டுவது , போராடுவது  ;போராடத் திரட்டுவது , தத்துவத்தை இடைவிடாது கற்றுக்கொள்வது ; கற்றுக்கொடுப்பது , படிப்பது படிக்கச் செய்வது ,பயணிப்பது பயணிக்கச் செய்வது , முன்னுதாரணமாய் வாழ்வது ; ஏனையோர் வாழத்தூண்டுவது  ” வேறொன்றுமில்லை என தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன்  அன்று சொன்னது இன்றும் பசுமையாய்.

 

நெஞ்சில் கனல் மணக்கும் நினைவுகளை அசைபோட அசைபோட நீளும்.

குறிப்பு : கட்டுரை அனுப்பிய பிறகும்  பல செய்திகளும் தோழர்கள் பலரும் நினைவில் வந்து போக இரவு முழுவதும் தூக்கம் கெட்டது .அதிகாலை  கொஞ்சம் கண்ணசந்த நேரம் ஒரு கனவு சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே மூத்த மலையாளித் தோழர் பத்மநாபன் வெற்றிலைபாக்குக் கடையில் நிற்கிறேன். இன்னொரு மூத்த மலையாளித் தோழர் டாக்சி டிரைவர் வருகிறார் . என்ன வாலிபரே என அவரை கேலி செய்கிறார் தோழர்கள் செபாஸ்டினும் மாதவும் . அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை . தூக்கம் கலைந்து விட்டது . அவசரகாலத்திலும் அதன் பின்னரும் தோழர்கள் தகவல் பரிமாறவும் சந்திக்கவும் அது ஒரு உயிர் மையமாக இருந்தது அல்லவா ?

 

சு.பொ..

 


0 comments :

Post a Comment