கால ஓட்டத்தில் காயங்கள் காலடித் தடங்கள்

Posted by அகத்தீ Labels:

 


 “கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிப்போகும் .

காலடித் தடங்களை

வரலாற்றில் அழித்திட முடியாது .

நிலைத்து நிற்கும்….”

 

 


தோழர்களே ! வணக்கம்.

புரட்சி வாழ்த்துகள்!

 

1993 நவம்பர் 7 ,

நெடுநாள் கனவு கைக்கூடிய நாள்.

ஆம் .சென்னைப் பதிப்பு தீக்கதிர் தன் கம்பீர நடையை துவக்கிய நாள் .

ரஷ்யப் புரட்சியின் வெற்றி நாளில் சென்னைப் பதிப்பு துவக்கம் என்பது இரட்டை மகிழ்ச்சி அல்லவா ?

 

இன்று முப்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் . இது சிலருக்கு சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம் . இன்றைக்கு அச்சு ஊடகங்களை நடத்தவே முடியாமல் வணிக ஏடுகளே திணறுகின்றன .

 

ஆட்குறைப்பு ,பக்கங்கள் குறைப்பு ,சம்பளக் குறைப்பு என வெட்டரிவாள்கள் அங்கு வீசப்படுகின்றன. காகித விலை ஏற்றம் , செலவு அதிகரிப்பு மூச்சுத் திணற வைக்கிறது .சந்தா அதிகரிப்பும் இல்லை . இதனால் வணிக ஏடுகள் பிழைத்து நிற்கவே படாதபாடு படுகின்றன .

 

இச்சூழலில் தீக்கதிர் சென்னைப் பதிப்பு முப்பதாண்டில் அடியெடுத்து வைப்பது சாதாரண நிகழ்வல்ல. நாட்டுநடப்பை உணர்ந்த ; அரசியல் ஞானம் உள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள் .

 

 இன்ற இனிய பொழுதில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். நினைத்து நினைத்து மகிழத்தக்கவையும் நிறைய உண்டு .மறந்துவிட வேண்டிய நிகழ்வுகளும் சில உண்டு.

 

கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிப்போகும் .

காலடித் தடங்களை

வரலாற்றில் அழித்திட முடியாது .

நிலைத்து நிற்கும்.

 

நான் கல்லூரியில் அடியெடுத்து வைக்காதவன் . ஐ டி ஐ யில் டூல் அண்ட் டை மேக்கர் படித்தவன் அதாவது கொல்லன் . கொல்லன் பட்டறையில் கொசுவுக்கு என்ன வேலை என்பது போல் ஊடக இயந்திரத்தில் இந்த கொல்லனுக்கு என்ன வேலை ?

 

கட்சியில் பெற்ற பயிற்சியும் அனுபவமுமே என்னை இங்கு பொறுப்பாசிரியனாய் ,இணையாசிரியனாய் செயல்பட ஊக்கம் அளித்தது எனில் மிகை அல்ல.

 

இருபது ஆண்டுகாலம் [ 2013ல் விருப்ப ஓய்வு பெறும்வரை] நானும் இந்த மாபெரும் இதழில் சிறிதேனும் பங்களித்திருக்கிறேன் என மன நிறைவோடு வாழ்த்துகிறேன் .

 

பொறுப்பாசிரியர் ,மேலாளர் தொடங்கி தினசரி தீக்கதிரை வீடுவீடாய் கொண்டு சேர்க்கும் தோழர் வரை ஒவ்வொரு தோழரின் பங்களிப்பும் மிகமிக முக்கியமானது . அர்ப்பணிப்பு மிக்கது .

 

பாராட்டோ ,பதவியோ ,புகழ்வெளிச்சமோ கிடைக்காத ஒர் அரங்கில் அர்ப்பணிப்போடு செயல்படும் ஒவ்வொரு தோழரையும் நெஞ்சோடு இறுக அணைத்து பாராட்டுகிறேன்.

 

கோவையில் இப்போது தீக்கதிருக்கு மாபெரும் விழா எடுத்தார்கள் ; அது போல் சென்னையிலும் நடக்கும் என எதிர்பார்த்தேன். முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் நானறிவேன். ஏனோ கைகூடவில்லை ?

 

பரவாயில்லை . இது சென்னைப் பதிப்பின் முப்பதாவது ஆண்டின் தொடக்கம் தானே ; இன்னும் தீக்கதிர் அறுபதாவது பவளவிழா ஆண்டு நிறைவு இருக்கிறது , நம் முப்பதாண்டு நிறைவு இருக்கிறது … கொண்டாடுவோம் பன்மடங்கு உற்சாகத்துடன்.

 

இப்போது ஓர் செய்தியை அசைபோட எண்ணுகிறேன்.

 

வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத பாரம்பரியம் தமிழ்நாட்டுக்கு உண்டு .திராவிட இதழியல் ,தேசிய இதழியல் ,பொதுவுடைமை இதழியல் . தலித்திய இதழியல் , என்றெல்லாம் பிரித்து ஆய்வு செய்யும் அளவுக்கு ஏராளமான அரசியல் ஏடுகள் வெளியிடப்பட்ட மாநிலம் இது . இப்போதும் வெளியிடுகிற மாநிலம் இது .

 

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் , பா.ஜீவானந்தமும் ,அப்புவும் ,கே . முத்தையாவும் ,இஷ்மத் பாஷாவும் ஏனைய தோழர்களும் முன்னெடுத்த  பொதுவுடைமை இதழியல் பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டது தீக்கதிர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள முடியும் .அதனை மேலும் செழுமைப்படுத்திடுவோம் ! முன்னேறுவோம் !

 

 

தீக்கதிர் நம் கை ஆயுதம் . உயர்த்திப் பிடிப்போம்.

 

மீண்டும் எல்லோருக்கும் வாழ்த்துகள் .

 

குறிப்பு :

பவளவிழா மலரில் இடம் பெற்ற என் கட்டுரை கீழே !

[ விருப்பம் உள்ளோர் வாசிப்பீர்]

 

அன்புத் தோழன்,

சு.பொ.அகத்தியலிங்கம் . 7/11/2022.

 

வலியும் புன்னகையுமாய்

தீக்கதிரில் என் 20 ஆண்டுகள் .

 

 

தீக்கதிரின் ஆதி பிறப்பு முகவரி சென்னைதான் . கால ஓட்டத்தில் மதுரையின் முகவரியாய்ப் போனது . சென்னையிலிருந்து ஓர் பதிப்பு வரவேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கை . 1993 நவம்பர் 7 ஆம் நாள் சென்னைக் கனவு கைகூடியது .

 

கட்சி மாநாடுகளில் தீக்கதிரைக் கடுமையாக விமர்சித்தவன் நான் . அதற்கு பதிலடியாகவோ என்னவோ சொல்லடிபடவும் , சில மறக்க முடியா தடம் பதிக்கவும் இருபது ஆண்டுகள் அதனோடு நான் பிணைக்கப்பட்டேன் . 2013 ல் விருப்ப ஓய்வில் விடை பெறும்வரை தீக்கதிரோடு நானும் பயணித்த அனுபவமே தனி .

 

 

செய்தியாளர்களே இல்லாமல் செய்திப் பத்திரிகை நடத்த முயன்ற அனுபவத்தின் கதை மட்டும் நூறுபக்கம் எழுதலாம் .

 

தீக்கதிரின் உள்ளடக்கம் 1993 க்கு முன்பு எப்படி இருந்தது இன்று எவ்வளவு மாறி இருக்கிறது என ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே வளர்ச்சி புலனாகும் .

 

தீக்கதிருக்கு ஓர் பக்க வாரி கொள்கை [ page policy ] க்காக நானே மூன்று முறை முயற்சித்து மாதிரி தயாரித்ததும் ,விவாதித்ததும் நினைவில் ஆடுகிறது .

 

ஆகவே ஒவ்வொரு சிறு முன்னேற்றமும்கூட பெரும் போராட்டத்திற்கு பின்னேதான் குதிர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

 

செய்தியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க நான் ,மயிலை பாலு , .குமரேசன் ,வி .பரமேஸ்வரன் , எஸ் பி ராஜேந்திரன் ஆகியோர் பாடதிட்டம் உருவாக்கி பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனலாம் .

 

சென்னை போன்ற பெருநகரங்களின் பத்திரிகை விநியோகம் என்பது பெரும் சவால் .இன்றுவரை பெரும் செலவை விழுங்கிவிட்டு திருப்தியை நெருங்க முடியாமல் திணறும் நிலைதான் .எல்லா சிறு பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான் .

 

அதேபோல் நிதி நெருக்கடி பல சோதனை முயற்சிகளுக்கு உந்தித்தள்ளின .பொங்கல் மலருக்கு அப்பால் , விளம்பரத்தை மட்டுமே மையமாக வைத்து தீபாவளி மலர் ,ரம்ஜான் மலர் , கிறுஸ்துமஸ் மலர் என கொண்டுவந்த முயற்சி சென்னைப் பதிப்புக்குரியது . இதனால் கடும் அரசியல் விமர்சனங்களை எதிரிகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பெற்றோம்.

 

ஒருநாள்கூட தீக்கதிர் மீதான புகார் ,விமர்சனம் ,கண்டனம் இவை இன்றி  பொழுது விடிந்ததாய் எனக்கு நினைவு இல்லை . ஆயினும் தீக்கதிரின்

 

அரசியல் விமர்சனப் பெட்டிச் செய்திகள் பெரும் ஈர்ப்பைப் பெற்றது நிறைவானது .அதுவும் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் விவாதம் சுவையானது . அதே போல் தீக்கதிரில் வரும் எக்ஸ்போசர்களுக்கு உரிய மதிப்பளித்து காலையிலேயே கலைஞர் விசாரிப்பது கூடுதல் பரபரப்பாகும். அதிமுக ஆட்சி எனில் கண்டுகொள்ளாது .

 

சாய்பாபா சென்னையில் கருணாநிதியைச் சந்தித்தது குறித்து நான் ஒரு செய்தி அலசல் எழுதினேன் .மறுநாள் காலை தோழர் என் .வரதராஜனும் டி கே ரெங்கராஜனும் கலைஞரைப் பார்க்கச் சென்றுள்ளனர் .அந்த செய்தி அலசலைச் சுட்டிக்காட்டி கலைஞர் பேசியதுடன் ,அதனை மறுநாள் முரசொலியில் வெளியிடப்போவதாகவும் துரைமுருகன் , தயாநிதிமாறன் குறித்து கிண்டலடித்து எழுதி இருப்பது சற்று ஓவர் என்றும் ஆயினும் அப்படியே பிரசுரிப்பேன் எனவும் சொன்னார் . ஆம் அப்படியே பிரசுரமானது.

 

கவனக் குறைவினாலோ , சில தொழில் நுட்ப சிக்கலாலோ  பிழை திருத்தம் சரி செய்யப்படாமல் அச்சாகி பெரும் அவமானங்களை கொண்டு வந்ததுண்டு .தீக்கதிரில் நான் மிகுந்த வேதனைப்பட்ட நிகழ்வுகளும் நிறைய உண்டு .

 

ஒரு முறை தினமணி ஆசிரியர் ஞானசம்மந்தம் உரையாட என்னை அழைத்திருந்தார் . பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார் .அப்போது நான் அவரிடம் தீக்கதிரில் வரும் பிழைகளைத் தவிர்க்க ஆலோசனை சொல்லுங்கள் என்றேன் .

 

அவர் சொன்னார், பக்கத்துக்கு ஆறு பேர் பணி செய்யும் எங்களாலேயே பிழை இல்லாமல் கொண்டுவர முடியவில்லை . நாலய்ந்து பேர் மொத்த பக்கங்களையும் கொண்டுவருவதை எங்களால் யோசித்துப் பார்க்கக்கூட முடியாது . தொடர்ந்து பேசுகையில் அவர் சொன்னார் ,

 

 “ எங்கள் வாசகர் ஓர் பிழையைப் பார்த்தால் .அது தனிப்பட்டதாகப் போய்விடும் . ஒற்றைத் தீக்குச்சியாய் அணைந்து முடிந்து போகும் .வாசகர் கடிதமாய் வருவது மிகக்குறைவு . ஆனால் நீங்கள் அமைப்பாய் உள்ளதால் சின்ன பிரச்சனையும் சீக்கிரம் வலுவாய் ஒலித்துவிடும். கட்சிப் பத்திரிகைகளுக்கு இது ஓர் சவால் என்றார்.

 

இன்றும் பிற ஊடகங்களில் பணியாற்றும் பலர் தீக்கதிரில சில மாதங்களாவது பணியாற்றி அனுபவம் பெற்றவராய் இருக்கக் காணலாம் . இதில் வேடிக்கை என்னவெனில் , சிலர் அங்கு நேர்காணலுக்குப் போயிருப்பார் , அங்கிருந்து ஆசிரியர் போண்போட்டு என்னை அழைத்து கேட்பார் . நானும் நல்லபடியாகச் சொல்லி தோழரை அனுப்பி வைப்பேன் .

 

இது ஒரு புறம் . இன்னொரு புறம் ஒருவர் கட்சிப் பத்திரிகையில் பணியாற்றும் போது உரிய அங்கீகாரமோ ,பாராட்டோ எதிர்பார்க்கவே முடியாது .கடும் விமர்சனங்களே கிடைக்கும் .  ஒரு சிலர் பத்திரிகையைவிட்டு வெளியேறி இன்னொரு ஊடகத்தில் சேர்ந்த நொடிமுதலே அவரைப் பாராட்டுவதும் உறவாடுவதும் அன்றும் இன்றும் தொடர்கதையே .சென்னைப் பதிப்பில் இதன் பாதிப்பு அதிகம்.  

 

எதிர்மறை அனுபவம் மட்டுமல்ல நேர்மறை அனுபவமும் உண்டு . விடுதலைத் தழும்புகள் தீக்கதிரில் கிட்டத்தட்ட ஓராண்டு வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது . பிற ஏடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது எனில் மிகை அல்ல . கிட்டத்தட்ட என் ஐந்து நூல்கள் தீக்கதிரில் தொடராக வந்தவை என்பது கூடுதல் மகிழ்ச்சி .அதற்காக தீக்கதிருக்கு இந்த வேளையில் நன்றி தெரிவிப்பது என் கடமை !

 

தீக்கதிர் நூல்விமர்சனம் பெரிதாக வரவேற்பைப் பெற்றது . தீக்கதிர்  புத்தக மேசைக்கு பதிப்பகங்கள் போட்டிபோட்டு புத்தகங்கள் அனுப்பின .வைக்க இடமின்றி திணறினோம். ஆசிரியர் குழுவினர் மொத்த பேரையும் நூல்கள் வாசிப்பிலும் நூல்விமர்சனத்திலும் ஈடுபடுத்தியது சென்னைப் பதிப்பின் வலுவாக அமைந்தது .வண்ணக்கதிர் அறிமுக எழுதாளர்களுக்கு வாசலை அகலத்திறந்துவைத்தது . இதனை பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம்.

 

சென்னைப் பதிப்பு துவங்கிய போது ,யதார்த்தத்தை மீறிய கனவுகளோடும்,எதிர்பார்ப்புகளோடும் களத்தில் குதித்தோம் .சிராய்ப்புகளோடும் காயங்களோடும் தாக்குப் பிடித்து நின்றோம்.நிற்கிறோம். .

 

முழுக்க முழுக்க செய்திப் பத்திரிகையாகக் கொண்டுவர முயன்றோம் .மற்ற ஏடுகளுக்கு இருக்கும் அடிப்படை கட்டமைப்பும் ; மனித வளமும் இல்லை . திணறி முயற்சியில் தோற்றோம்.

 

வெறும் கட்சி ஏடாய் சென்னைப் பதிப்பு வாசகர்களைத் திருப்திப் படுத்த முடியவில்லை .இன்னும் இந்த பார்வைக் கோளாறு நீடிக்கிறது .

 

 உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.“உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மைஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறதுநடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமாவேண்டும்அவரிடம் அமைப்பும் இருந் ததுபிரச்சாரமும் இருந்ததுஇரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது. [ பொன்விழா ஆண்டில் நான் எழுதியது ] .இந்த அனுபவம் இப்போதும் பொருந்துமே!

 

 

இன்று எந்த ஊடகமும் செய்தி என்கிற வட்டத்துக்குள் மட்டும் இல்லை . செய்தி வழி கருத்துத் திணிப்பு செய்து கொண்டே இருக்கிறது . இது இன்றைய ஊடக சொல்நெறியாகிவிட்டது . இச்சூழலில் கட்சியின் நவீன பிரச்சார வாகனமாய் தீக்கதிரைச் செதுக்க இன்னும் கூடுதல் முயற்சியும் படைப்பூக்கமும் தேவைப்படுகிறது .

 

இதுதான் நமது ஏட்டின் பாதையும் தேவையும் என நம் அணிகளை பயிற்றுவிக்காமல் தீர்வு சாத்தியம் இல்லை.ஆக தீக்கதிரின் எதிர்காலம் வாசகர் தீக்கதிர் இருமுனை முன்னெடுப்பு . புரிதல் , ஒத்துழைப்பைச் சார்ந்ததே . பொன்விழா ஆண்டில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து ஓர் எச்சரிக்கை ;

 

உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் பிற ஏடுகள் ; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்லவா? இதை நாம் உணர்ந்தாக வேண்டாமா?

 கட்சிப் பத்திரிகையை படிப்பதும் விற்பதும்தானே ஒரு கட்சி உறுப்பினரின் முதன்மைப் பணிகளில் ஒன்றாக இருக்க முடியும்? என்கிற கேரள மேநாள் முதல்வர் தோழர் கே நாயனாரின் அறிவுறுத்தலை ஒரு கணமும் மறக்கவே கூடாது

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 


0 comments :

Post a Comment