முதுமை

Posted by அகத்தீ Labels:
முதுவலி
என்னமோ தெரியவில்லை
மனசுக்குள் ஒரு பாறாங்கல்
இறக்கிவைக்கவும் இடமில்லை !
சுமந்துகொண்டே
எவ்வளவு நாள் வாழ்வது ?

எல்லாவற்றையும் பேசிவிட முடியும் என்பதும்
ஒருவகையில் அறியாமைதான் போலும் ;
எல்லாம் சரியாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது
என்பது சரியும்தான் ;சரியில்லையும்தான்

மற்றவர்கள் சுமையென
நினைக்கத் தொடங்கும் போதே
விடைபெற்றுவிடும் பாக்கியம்
வாய்க்கப்பெறுவதே
முதுமையின் கொடையாகும் !

தாமரை இலைத் தண்ணீராய்
வாழ்வது சுலபமில்லை !
வேறுவழியுமில்லை !

செவிக்கொரு வடிகட்டி
வாய்க்கொரு வடிகட்டி
நினைவுக்கொரு வடிகட்டி
கிடைக்குமெனில்
முதுமையின்
வலி குறையுமோ ?


சு.பொ.அகத்தியலிங்கம் .
0 comments :

Post a Comment