ஒரு கொலையினூடே சமூக விசாரணை...

Posted by அகத்தீ Labels:













பொதுவாய் நம் சமூகத்தில் அம்புகள்தானே தண்டிக்கப்படுகின்றன .வில்லும் ஏவிய கரமும் சமூகச்சூழலும் குரூரப் புன்னகையோடு அடுத்த கொலைக்கு தயாராய்விடுகிறதே!


ஒரு கொலையினூடே சமூக விசாரணை...


ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் , மேட்டிமை இலக்கியத்திற்கும் இடையே சீன நெடுஞ்சுவர் எதுவும் கிடையாது.” என்பார் அந்தோனியா கிராம்ஷி . துப்பறியும் நாவல், சாகசக் கதைகள் போன்ற வடிவங்கள் மக்களிடம் பெரிய ஈர்ப்பைப் பெற்றுள்ளவை. அவற்றை நிராகரிக்க முடியாது என்பதும் சில சமூகக் கேடுகளை அதன் மூலமும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் அவரின் கருத்தாக இருந்தது .ஆயினும் நம் தோழர்கள் பொதுவாய் அத்திக்கில் போகாமலிருப்பது ஏன் என்பது எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது. அந்த வகையில் செம்புலம் ஓரடியை மெதுவாய் ஆனால் வலுவாய் வைத்துள்ளது. அதற்காக முதலில் பாராட்டுகிறேன்.






கதை என்னமோ பாஸ்கர் எனும் இளைஞனின் மர்ம மரணத்தில் தொடங்கி விசாரணையின் போக்கில் அது கொலை என்பது தெரிய குற்றவாளிகள் யாரென தேடல் வழியே நகர்கிறது . ஆனால் வழக்கமான துப்பறியும் நாவலில் கொலைக்கான காரணம் ; பகை என சுட்டப்படுவதற்கும் மேல் இந்நாவல் சமூகத்தை ஊடறுத்து, புலன் விசாரணை செய்கிறது .






அதன் குறுக்கு வெட்டுப் பார்வையில் கொங்கு மண்ணின் சாதிச் சங்கத்தின் வளர்ச்சி, அது கட்சியான கதை, அதற்கான பின்புலமாய். விவசாய வீழ்ச்சி, விசைத்தறியின் இருபுற சிக்கல், நவீன கொத்தடிமைத்தனம் மிக்க பஞ்சாலைகள், தலித் மக்களின் வாழ்க்கை அவலமும் எழுச்சியும் என பெரும் சித்திரம் வரைந்து காட்டப்படுவதில்தான் முருகவேளின் படைப்பு தனித்த முத்திரை பதிக்கிறது.



வெள்ளியங்கிரியும், மனோகரனும் உருவாகும் அரசியல் சமூகப் பின்னணியும் அமராவதியும் அமுதாவும் கையறு நிலையில் வாழ்வைத் தக்கவைக்க படும்பாடும் யதார்த்தமானவை.



பாஸ்கர் யார் ? நல்லவரா ? கெட்டவரா ? இக்கேள்விக்கான விடை தேடலினூடே பொதுப் புத்தியில் தலித்துகள் பற்றி பதியவைக்கப்பட்டுள்ள சமூக பிம்பம் மெல்ல நொறுங்கி கம்பீரமான தோற்றம் எழுவது கதையின் உயிர்ச் சரடு .



கவுரவக்கொலை அல்லது ஆணவக் கொலை இந்நாவலில் நேரடியாக இல்லை. ஆனால் ஒரு கிளைக்கதையாக செலம்பா -கருப்பன் காதலும் ஆணவக்கொலையும் வந்து போயினும் தமிழ்ச் சமூகத்தில் உக்கிரமாகிவரும் சாதியத்தின் கோரமுகத்தை வலுவாய் பதிவு செய்கிறது .



நாவல் நெடுக சமூகத்தில் சாதிய ஆதிக்க வெறி ஊட்டப்படுவதை கதைப்போக்கில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் .பாஸ்கரனின் நண்பன் ஆசிரியர் இளங்கோ தன் வாழ்க்கையிலேயே மிகக் கேவலமான போட்டோவாக தான் தலித் அல்ல என்பதை நிறுவ கட்டாயச்சூழலில் பதிந்த படத்தை சொல்லுகிறார். இது ஒரு சம்பவம் அல்ல ; தலித் உரிமைக்கு குரல் கொடுக்க முன்வருவோர் சந்திக்கும் சவால்களின் சாட்சி.



பாஸ்கரை கொலைசெய்தது யார் ? அது எப்படி வன்கொடுமைச் சட்டகத்துக்குள் வந்து சேர்கிறது ; மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் எப்படி செயல்படுகின்றன ? உண்மை அறியும் குழுக்களின் பங்கு என்ன ? ஒரு நாவலுக்குள் இத்தனை கேள்விகளுக்குமான தேடலா ? வியப்பாக இருக்கிறது! ,






ஹ்யூமன் ரைட்ஸ் புரொபஷனல்ஸ் ,” அதாவது , “ மனித உரிமையைத் தொழிலாகக் கொண்டவர்,” என்ற சொல் உணர்த்தும் பெரிய அரசியல் ,ஷீலா போன்ற மனச்சாட்சி மிக்க தன்னார்வ தொண்டர் எதிர் கொள்ளும் சிக்கல் அடடா ! ஒவ்வொன்றையும் உற்று நோக்கு என்பது இதைத்தானோ ?



நாவலூடே பிசையப்பட்டுள்ள நாட்டார் கதைகளும் பாடல்களும் கதைக்கு வலுவும் மெருகும் தந்துள்ளன.



குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாதித்தலைவர் மனோகரின் மனைவி பூரணி வாயால் கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மக்கை எதுவென கோடிட்டுவிட்டு, கொலையின் உண்மையான காரணத்தையும் ஏவியோர்களையும் நாம் யூகிக்கச் சொல்லிவிட்டு கதை முடிந்து போகிறது.



பொதுவாய் நம் சமூகத்தில் அம்புகள்தானே தண்டிக்கப்படுகின்றன .வில்லும் ஏவிய கரமும் சமூகச்சூழலும் குரூரப் புன்னகையோடு அடுத்த கொலைக்கு தயாராய்விடுகிறதே! இதுதானே நடப்பு.






இந்நாவல் சமூகத்தின் அடித்தட்டிலும் இடைமட்டத்திலும் மாறிப்போயுள்ள சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை இன்னும் கூர்மையாய் ஆய்ந்து இடதுசாரிகள் தங்கள் வியூகத்தை வகுக்காவிட்டால் விடிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதை அழுத்தமாய் சொல்லியுள்ளது.



ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் முருகவேளின் பொழிபெயர்ப்பு நூலும்; எரியும் பனிக்காடு மொழி பெயர்ப்பு நாவலும் இதர நூல்களும் முருகவேளோடு என்னை நெருக்கியது.முகிலினி படித்த பின்பே மிளிர்கல் படித்தேன். இப்போது செம்புலம். எதையும் நன்கு திட்டமிட்டு விவரங்கள் சேகரித்து நுட்பமான அரசியல் சமூகப் பார்வையோடு படைக்கும் முருகவேளிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!செம்புலத்தை படியுங்கள்; உங்கள் ஊரின் மாவட்டத்தின் அரசியல் சமூக அடித்தளத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சிக்கல்களை திறந்த மனதோடு உள்வாங்கி மாற்றத்துக்கான விதையைத் தூவுங்கள்!



செம்புலம் (புதினம்) , ஆசிரியர் : இரா.முருகவேள் , வெளியீடு :பொன்னுலகம் பதிப்பகம், பாரதி நகர் 3 ஆம் வீதி , 4/413 ,பிச்சம் பாளையம் (அஞ்சல்), திருப்பூர் - 641 603.பக் : 320 , விலை : ரூ.250 /



சு.பொ.அகத்தியலிங்கம்



நன்றி : தீக்கதிர் , புத்தகமேசை . 4/01/2018.



0 comments :

Post a Comment