இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதன் தோன்றுகிறான்?

Posted by அகத்தீ Labels:இப்போது எங்கே குரங்கிலிருந்து 
மனிதன் தோன்றுகிறான்?

 சு .பொ.அகத்தியலிங்கம் .

§  நம்பிக்கையைக் காயப்படுத்துவதில் உடன்பாடில்லை எனச் சொல்லிக்கொண்டே இந்து புராணங்களை இழிவு படுத்துவதை பற்றி ஒன்றும் சொல்லாமல் நழுவுவதுதான் முற்போக்கா?

§  குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது அறிவியல் பார்வை என்கிறீர்கள், இப்போது குரங்கிலிருந்து எங்கே மனிதன் தோன்றுகிறான்?

§  பகுத்தறிவு பகுத்தறிவு என்று கூவுகிறீர்களே, பகுத்தறிவு என்றால் என்ன விளக்குவீர்களா? ஏட்டிக்குப் போட்டியாய் சொல்வதுதான் பகுத்தறிவா?

§  பண்டிகைகள் சடங்குகள் கொண்டாடுவதில் தவறென்ன? பண்டிகைகளை உங்களால் ஒழித்துவிட முடியுமா? பண்டிகைகள் குறித்த உங்கள் பார்வை என்ன?

§  நம் முன்னோர்கள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் அனுபவத்தில் கண்டறிந்து சொன்னவற்றை ஏற்க மறுத்துக் குதர்க்கம் பேசலாமா?இப்படியாகப் பல கேள்விகளை முற்போக்காளர்களை நோக்கி ஆன்மிகவாதிகள் வீசுகிறார்கள். எந்தக் கேள்வியைக் கண்டும் நமக்கு தயக்கமும் இல்லை, அச்சமுமில்லை.  விடை தெரியாதெனில் விடை தெரியாதெனச் சொல்லவும் செய்வோம்.


நம்பிக்கையைக் காயப்படுத்துவதில் உடன்பாடில்லை எனச் சொல்லிக்கொண்டே இந்துப் புராணங்களை இழிவு படுத்துவதை பற்றி ஒன்றும் சொல்லாமல் நழுவுவதுதான் முற்போக்கா ?


இந்துப் புராணங்களை மட்டுமல்ல எந்தப் புராணத்தையும் இழிவு படுத்துவதிலோ, கொளுத்த வேண்டும் என்பதிலோ எமக்கு உடன்பாடில்லை. இதிகாசங்களையும் புராணங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும், ஆனால் குருட்டுபக்தியோடு படிக்கக்கூடாது. இலக்கியச் சுவைக்காகப் படிக்க வேண்டும். அன்றைய  காலத்தின் சமூகத்தை, பண்பாட்டை, அன்றைய கருத்தோட்டங்களை, அரசியலைத் தெரிந்துகொள்ளப் படிக்கவேண்டும். அவற்றின் ஆபாச புளுகுப் மூட்டைகளை அம்பலப்படுத்துவதற்காக அவற்றின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும்போது அது அவற்றை நம்புகிறவர்களுக்கு ஒவ்வாமையையும் குமட்டலையும் ஏற்படுத்தும். அது சில நேரங்களில் பயன்பட்டிருக்கலாம், தேவைப்பட்டிருக்கலாம்.  ஆனால் அது நீடித்த பலன் தரவில்லை.  தரவும் செய்யாது .


மாறாக புராண இதிகாசங்களை மறுவாசிப்பு செய்வது மிக அவசியம். வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் அவற்றை ஆய்வு செய்வதும் அவசியம். அந்தந்த காலகட்டத்தோடு பொருத்திக்காட்டி , இன்றைய சமூக வளர்ச்சியில் அவற்றில் கூறப்பட்ட பல கருத்தோட்டங்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் எடுத்துக் கூறலாம் .


அதே நேரம்  சமூக அறிவியல் ரீதியான ஆய்வுகளையும் விமர்சனங்களையும் நிராகரிப்பது மிகமிகத் தவறு. எடுத்துக்காட்டாக,  இராமாயணம் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவிதமாக உள்ளது. கம்பனின் ராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. வியாசரின் மகாபாரதத்துக்கும் வில்லிப்புத்தூரார் பாரதத்துக்கும் நிறைய வேறுபாடுண்டு. தமிழகத்தில் ராமாயணம் தெருக்கூத்தாக நடத்தப்படுவதில்லை. ஆனால் மகாபாரதம் தெருக்கூத்தாக காலங்காலமாய் நடந்து வருகிறது. அதன் கதையிலும் மாவட்டந்தோறும் வேறுபாடு காணலாம். ராமயணமும் மகாபாரதமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன. அவற்றின் கதைகளிலும் பாத்திரச் சித்தரிப்பிலும் வேறுபாடுகளும் உண்டு, முரண்பாடுகளும் உண்டு.  இது ராமாயணத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதாகவே அமையும்


ஆயினும் மதவெறிக்கூட்டம் இந்த சமூக வரலாற்றியல் ரீதியான ஆய்வைக்கூட அனுமதிக்க மாட்டோம் என ரகளை செய்து கல்லூரி பாடநூலில் இருந்து நீக்கச்செய்தது. இது கண்ணெதிரே உள்ள உண்மையைக்கூட பார்க்க மறுக்கும் அடாவடித்தனமே. இதுபற்றிப் பேசினால் மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகக் கூக்குரலிடுவது உண்மைக்கு மாறானது. கருத்து சதந்திரத்துக்கு வைக்கப்படுகிற வேட்டு.


பெரியார் புராண ஆபாசங்களையும் புளுகுகளையும் பற்றி உரக்கப் பேசினார். அது அன்றைக்கு தேவைப்பட்டது. தூக்கத்தைக் கலைக்க உதவியது. அதே பாதையும் பயணமும் இன்று நிச்சயம் எதிர்விளைவையே ஏற்படுத்தும். சிங்காரவேலர் அதே புராணங்களை தத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் விமர்சித்தார். அதையும் அப்படியே இன்று திருப்பிச் சொல்வது பயன்தரது. இன்னும் கூர்மையாக இன்னும் விசாலமாக மறுவாசிப்பு செய்யப் பழகவேண்டும். மறுவாசிப்பு அடிப்படையில் பல நாவல்கள் , சிறுகதைகள் தமிழிலும் பிறமொழிகளிலும் வந்துள்ளன. அவற்றின் பரப்பு மேலும் விரிவாக வேண்டும். எதுவாயினும் கருத்தைக் கருத்தாகவே பார்க்க, எதிர்கொள்ள மதவெறியற்ற ஜனநாயக அணுகுமுறை தேவை .


குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது அறிவியல் பார்வை என்கிறீர்கள் இப்போது குரங்கிலிருந்து எங்கே மனிதன் தோன்றுகிறான் ?


சமூக வலைத்தளங்களில்  இது மாதிரியான கேள்விகளும் மதரீதியான விமர்சனங்களும் மலிந்து கிடக்கின்றன. “உங்கள் பாட்டனோ முப்பாட்டனோ குரங்காக இருந்தார் எனச் சொல்வதை நம்புகிறீர்களா”  என ஒரு மதப்பிரச்சாரகர் கேள்வி எழுப்பியிருந்ததைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். மனித முகத்தோடு ஆடு குட்டி போட்டது, ஆட்டு வாலொடு ஆண் குழந்தையைப் பெற்ற பெண்... என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. அவை விதிவிலக்கான சில சிதைவுகள். நம் கற்பனையோடு அத்தகைய செய்திகள் உலாவரும். அது போல் ஒரு குரங்கு போட்ட குட்டி மனிதன் என்று தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே இந்தக் கேள்வி


குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதன் பொருள் பரிணாம வளர்ச்சி எனப்படும் படி மலர்ச்சியில் ஒரு செல் உயிரிலிருந்து தொடங்கிய பயணம். அதாவது இன்றைய குரங்கு இனத்திற்கும் மனித இனத்திற்கும் பொது மூதாதையர்கள் தாம் என்பது தான். எடுத்துகாட்டாக எனது மகளுக்கும், எனது அண்ணன் மகனுக்கும் எனது தாய் தந்தையர் பொது மூதாதையர் என்பதாகும். இந்த பொது மூதாதையர் இன்றைய குரங்குகள் அல்ல,  குரங்கு போன்ற ஒரு உயிரி.


அடிமரத்திலிருந்து கிளைகள் பிறப்பது போல இந்த குரங்கு போன்ற உயிரியிலிருந்துதான் மனிதனாக ஒரு கிளையும், இன்றைய குரங்காக இன்னொரு கிளையும் தோன்றின. லட்சம் ஆண்டுகளாக மாறி மாறி புழு, மீன், தவளை என பல படிநிலைகளைக் கடந்து குரங்கு போன்ற இனங்கள் தோன்றின.  மற்றவைகளும் தொடர்ந்தன. சுமார் 40 லட்சம் வருடங்களுக்கு முன்னால் இயற்கைச் சீற்றம், வறட்சி காரணமாக அந்த குரங்கு போன்ற இனம்  மரத்திலிருந்து இறங்கி இரைக்காகவும் உயிர் பிழைக்கவும் வேறு இடங்களை தேடலாயின. இப்போராட்டத்தில் முன்னங்கால்களைத் தூக்கி நடக்கவும்அவற்றைக்  கைகளாகப் பயன்படுத்தவும் முயன்றன


ஓரிரு நாளில் இது நடந்துவிடவில்லை பல ஆயிரமாண்டுப் போராட்டத்தில் இம்முன்னேற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தன. முன்னங்கால்கள் கைகளாகப் பரிணமித்தன. மனிதனுக்கு மட்டும்தான் செழுமையான கைகள் உண்டு. நமது கை கட்டைவிரலின்றி நம்மால் எதையும் உறுதியாகப் பற்ற இயலாது. அன்று காலப்போக்கிலும் உபயோகத்தின் காரணமாகவும் தொல் குரங்கினத்தின் ஒரு பகுதியினரிடம் இந்தக் கட்டைவிரல் வடிவம் பெற்றது. இது மிக முக்கியக் கட்டம். இதுவும் ஒரு நாளில் நடக்கவில்லை. கிட்டத்தட்ட 15 லட்சம் ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் கைக்கூடியது.


இப்போதுதான் மனிதக்குரங்கு எனச் சொல்லுகிற வடிவம் பரிணமித்தது. அதன் பிறகும் சுமார் 20 லட்சம் ஆண்டுகள் பல்வேறு மாறுதல்களுக்குப் பின் சுமார் 5 லட்சம் வருடத்திற்குப் முன்புதான் நியாண்டர்தால் எனப்படும் மனித இனம் உருப்பெற்றது. இந்த இயற்கைப் போராட்டத்தில் உயிரிகள் மொத்தமும் ஈடுபட்டதாகக் கூறமுடியாது. ஒதுங்கி நின்றவையும் உண்டு. அவற்றுக்கு வாய்த்த சூழல் அப்படி . அப்படி எஞ்சியவையே இன்றைய குரங்காக பரிணமித்தன.  இன்றைய குரங்குகள் முந்தைய தொல் குரங்கினத்திலிருந்து பரிணாமம் பெற்றவை. எனவே முன்பு நிகழந்தது மீண்டும் இந்த நவீன குரங்குகளுக்கு நிகழ வாய்ப்பே இல்லை.


இந்த லட்சம் வருடங்கள் என்றெல்லாம் சொல்வதும் வெறும் அனுமானம் தானே, அது எப்படி அறிவியலாகும் எனக் கேள்வி எழுப்புகின்றனர் . இந்த அனுமானங்கள் வெறும் கற்பனை அல்ல. பாரம்பரிய தொல்லெச்சம் முதல் நவீன மரபணு ஆய்வு வரை  பல ஆய்வுகள் இதைச் சுட்டுகின்றன. டார்வின் காலத்தைவிட இன்றைய அறிவியல் இன்னும் துல்லியமாக நெருங்கிவிட்டது.  இன்னும் தெளிவான சித்திரம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கலாம்.  


ஆனால் எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லாமல் எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் என நம்புவதைவிட படிமலர்ச்சிக் கோட்பாடு மேலானது, நம்பகமானது, சரியானது, அறிவியல் பூர்வமானது .


பகுத்தறிவு பகுத்தறிவு என்று கூவுகிறீர்களே, பகுத்தறிவு என்றால் என்ன விளக்குவீர்களா? ஏட்டிக்குப் போட்டியாய் சொல்வதுதான் பகுத்தறிவா ?


இந்தக் கேள்விக்கும் முந்தைய கேள்விக்கும் ஒரு இயல்பான தொடர்ச்சி உண்டு. பொதுவாக நன்மை-தீமைகளைப் பகுத்துப் பார்க்கும் அறிவே பகுத்தறிவென்று புரிந்து வைத்திருக்கிறோம். இதனை ஆறாம் அறிவென்பர். மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களால் அறியப்படுவதே ஐந்து அறிவுகள்.  அதற்கும் மேல் மூளையைப் பயன் படுத்துவதைக் கொண்டே ஆறாம் அறிவென விளக்குகின்றனர். ஆகவே மனிதனைச் சிந்திக்கத் தெரிந்த மிருகம் என்பர். இது முழுமையானதும் அல்ல . சரியானது மல்ல.  


விலங்குகள் கூட தமக்கு எது தீங்கானது என புரிந்து வைத்துள்ளனவே. அதற்கொப்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனவே. பயிற்சி மூலம் சில விலங்குகளை  மனிதனாற்றும் பலகாரியங்களை செய்யவைக்க முடிகிறது.  மோப்ப நாய் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அவற்றிற்கும் மூளை இல்லை எனக் கூற முடியுமா? யானைக்கு மனித மூளையைப் போன்ற மூளையே அமையப் பெற்றுள்ளதாக அண்மை ஆய்வுகள் உறுதி செய்கின்றன .


தேனீயும் கூடுகட்டுகிறது. மனிதனும் வீடு கட்டுகிறான் ஆயினும் தேனீக்கள் தாங்கள் கட்டும் கூட்டை முன் கூட்டியே கற்பனை செய்ய இயலாது; மனிதர்களால் தாங்கள் கட்டும் வீட்டை முன் கூட்டியே கற்பனை செய்து பார்க்க இயலும் . ஆக சிந்தனா சக்தியை பகுத்தறிவெனச் சொல்லலாமா ?


இதுவும் முழுமையான பார்வையாகாது. தேனீ  இயற்கையாக கிடைக்கும் பொருட்களாலேயே கூடு கட்டுகிறது. குருவியும் அப்படித்தான். எந்த விலங்கும் இயற்கையைச் சார்ந்தே வாழும். மனித இனம் மட்டுமே வீடு கட்டுவதற்கும் வேறு எதைச் செய்வதற்கும் கருவிகளை உருவாக்குகிறது. பயன்படுத்துகிறது. இயற்கையோடு மோதி மோதி முன்னேறுகிறது. முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றத்தின் அடிப்படை கருவிகளே.
ஆக கருவிகளை ஆக்கியதே மனிதர்களை ஏனைய ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.


இவ்வாறு கருவிகளை ஆக்குவதும் பயன்படுத்துவதும் அது தொடர்பான உறவுகள், பரிமாற்றங்கள், புரிதல்கள், தேடல்கள் இவையே பகுத்தறிவின் அடிப்படையாகும். ஆக ஆறாம் அறிவெனப்படுவது கருவியை உருவாக்கியதால் கிடைத்த அறிவே. அதே சமயம் இந்த பகுத்தறிவு கருவிகளோடு மட்டும் சுருங்கி விடுவதில்லை . அது சமைத்த விசாலப்பரப்பில் மேலும் தழைத்து கிளைவிடுகிறது. கருவிகளோடு வளர்ந்த சமூக வரலாற்று வளர்ச்சியின் படிநிலையோடு பின்னிப் பிணைந்தது. மனிதகுல வளர்ச்சியில் இயற்கையிடம் மண்டியிட்டதும் உண்டு. மல்லுக்கட்டியதும் உண்டு. இந்த மோதலிலும் முன்னேற்றத்திலும் கருக்கொண்டது பகுத்தறிவு .


கடவுள் மறுப்பை மட்டுமே இதன் கூறாகப் பார்ப்பது பெரும்பிழையே! மனிதகுல முன்னேற்றத்திற்கு எதுவெல்லாம் முட்டுகட்டையாக இருக்கிறதோஅவற்றை எல்லாம் நொறுக்கி  முன்னேற முனையும் ஒவ்வொரு செயலும் பகுத்தறிவு சார்ந்ததே .


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பகுத்தறிவு குறித்து தந்த விளக்கம் இன்றைக்கும்  தேவையான வழிகாட்டுதலாகும்: “ பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லாவிஷயத்திலேயும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகின்றதோ, அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்தியாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும்.  எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கேயும் பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவி புரிந்து நிற்கும்.”
-இவைதான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம். மற்றவை எல்லாம் போலிப் பகுத்தறிவே. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். அதுவே இயற்கையானது. இயல்பானது. பகுத்தறிவு குறித்த பார்வையும் மேலும் விசாலமாய் மேலும் கூர்மையாய் மாறிக்கொண்டிருக்கிறது


பண்டிகைகள்  சடங்குகள் கொண்டாடுவதில் தவறென்ன? பண்டிகைகளை உங்களால் ஒழித்துவிட முடியுமா? பண்டிகைகள் குறித்த உங்கள் பார்வை என்ன?


பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆனால் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையா என்பது அடிப்படையான கேள்வியே! அதனை இறுதியில் பார்ப்போம் .


மனிதகுலம் கூட்டுவாழ்க்கையில் ஆடிப்பாடி கொண்டாட பல விழாக்களை கொண்டாட்டங்களை ஏற்படுத்திக்கொண்டது. .அறுவடை , பருவகால மாறுதல், வெற்றி , தோல்வி, இன்பம், துன்பம் என ஒவ்வொன்றையும்  ஏதோ ஒரு வகையில் நினைவு படுத்தவே பல நிகழ்வுகளை மனிதகுலம் காலகதியில் உருவாக்கியது. ஆரம்பத்தில் இதில் மதமோ புராணக்கதையோ எதுவும் கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நிறுவனமயப்பட்ட மதங்கள்  இந்தக் கொண்டாட்டங்களை தன்வயப்படுத்தி பண்டிகைகளாக்கின. அவற்றைச் சுற்றி பல புனைவுகள் பின்னப்பட்டன.


கால ஓட்டத்தில் அந்தக் கொண்டாட்டங்களின் மெய்ப்பொருள் மறக்கப்பட்டு சடங்குகளுக்குள் சிறைப்பட்டது. அதிலும் பொருளாதாரச் சுழற்சியோடு தொடர்புள்ள பண்டிகைகள் மட்டும் வியாபார நோக்கில் பெரிதுபடுத்தி நிலைநிறுத்தப்பட்டன. எடுத்துக்காட்டு தீபாவளி. தங்க வியாபாரிகளின் லாபவெறியில் தற்போது அட்சய திரிதிகை பிரபலமாக்கப்படுவது கண்கூடு.


நீங்களும் நானும் விரும்பினாலும் விரும்பாவிடினும் இந்தப் பண்டிகைகள்  தொடர்ந்து கொண்டாடப்படும். ஒரு சிறு பகுதியினர் வேண்டுமானால் ஒதுங்கி இருக்கலாம். அவர்களும்கூட முழுமையாக விடுபட்டு வாழ்வது சிரமம். சமூக நிகழ்வின் எதிரொலிகள் நிச்சயம் வீட்டில் எதிரொலிக்கும். ஆயினும் வெறும் கொண்டாட்டமாகப் பார்க்க  -கொண்டாட -  சமூகத்தை பழக்க முடியும்.


இந்தப் பண்டிகைகளின் மூலவேரை அறிய முயலவேண்டும். அது நிச்சயம் மதங்களுக்கு முன்னே தோன்றியதாக இருக்கும். அதனடிப்படையில் பண்டிகைகளுக்குப் புதிய பார்வை அளிக்க முயலலாம். ஆனால் அவ்வளவு சுலபமல்ல. அதே சமயம் மதம் சாதி கலக்காத எளிய கொண்டாட்டங்களை வளர்தெடுக்கவேண்டும். பண்பாட்டுப் போர் நெடியது. பொறுமையும் சமூக அக்கறையும் தேவை.


இங்கே பொங்கல் உள்ளிட்ட உழவு மற்றும் உழைப்பு சார்ந்த விழாக்களை முதன்மைப்படுத்த வேண்டும். இதர பண்டிகைகளின்போது பல்வேறு மதச்சார்பற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ஆடிப்பெருக்கின்போது நீர்நிலைகளின் தூய்மையை முன்னிறுத்தலாம்;  புத்தகச் சந்தை,  அறிவியல் கண்காட்சி,  மருத்துவ விழிப்புணர்வு முகாம், விளையாட்டுப் போட்டிகள், முற்போக்கான கலை இலக்கிய நிகழ்வுகள்... இப்படி பல வழிகள் நம்முன் உள்ளன.


சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவை குறித்து பொதுவாகக் கூறுவது சாத்தியமில்லை. எடுத்துக்காட்டு வளைகாப்பு - – இது மகப்பேறு காலத்தில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உரிய கவனிப்பையும் வேண்டி செய்யப்படுவது. அந்த நோக்கில் தொடர்வது சரியே. அதே சமயம்சீமந்தம்என அதனை மாற்றி மந்திரம் பூஜை என சிதைப்பதைத் தவிர்க்கவேண்டும். பூப்புனித நீராட்டு போன்ற பெண்களை தலைகுனிய வைக்கும் சடங்குகள் கூடவே கூடாது . திவசம், திதி, கருமாதி போன்ற அறிவுக்குப் பொருந்தா செயல்கள் தவிர்க்கப்படவேண்டும். நீத்தாரை நினைவு கொள்ள குடும்ப சந்திப்புகள் மேற்கொள்ளலாம் .


சடங்கோ, சம்பிரதாயமோ,  பண்டிகையோ எதுவாயினும் உழைப்பைப் போற்றுவதாக , பாலின சமத்துவத்தை உரக்கப் பேசுவதாக, சமூக ஒற்றுமைக்கு உரம் சேர்ப்பதாகக் , மூடத்தனங்களை புறந்தள்ளுவதாக கொண்டாடுவதில் தவறில்லை. இக்கருத்தினை இடம் காலம் சூழல் கருதி மென்மையாய் முன்னெடுக்க வேண்டும். முரட்டு நிராகரிப்பும் , வறட்டு விமர்சனமும் எதிர்வினையாகிவிடும்.


நம் முன்னோர்கள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் அனுபவத்தில் கண்டறிந்து சொன்னவற்றை ஏற்க மறுத்துக் குதர்க்கம் பேசலாமா?


நிச்சயமாக நம்முன்னோர்கள் முட்டாள்களல்ல. அறிவாளிகளே! சக்கரத்தையும்  நெருப்பையும் கற்களாலான ஆயுதங்களையும்  கண்டுபிடித்தவர்களை முதல் விஞ்ஞானிகள் என்றே கூறவேண்டும். விவசாயத்தை நுட்பமாக வளர்த்தெடுத்த நம் முன்னோர்களின் அறிவை யார் குறைத்து மதிப்பிட முடியும்? நெடிய அனுபவத்தில் பல்வேறு மருத்துவ முறைகளை  கண்டறிந்து வளப்படுத்திய முன்னோர்களை வியக்காமல் இருக்க முடியுமா?


சோதனைச் சாலைகளில் செயல்படுகிறவர் மட்டுமே விஞ்ஞானி அல்ல; சமூக வரலாற்றில் முட்டி மோதி விழுந்து எழுந்து பல கருவிகளை ஆக்கிய நம்முன்னோர்கள் எப்படி முட்டாளாவார்கள்? அறிவு என்பதே தலைமுறை தலைமுறையாக சேகரிக்கப்பட்ட அனுபவங்களின் சாரம்தானே!


அனுபவம்  முடிந்துபோன ஒன்றல்ல. அது ஒரு தொடர் வினை . நேற்றை விட இன்று புரிதல் மேம்பட்டிருக்கிறது. நாளை இதனைவிட மேம்படும்.
நேற்றிலேயே வாழாதே இந்த நொடிவரை பெற்ற அறிவை உரசிப்பார் என்பது எப்படித் தவறாகும்? லட்சக்கணக்கான மானுட வாழ்வின் அனுபவ சேகரிப்பில் வந்து சேர்ந்தவை எல்லாமே சரியானவை என்று எப்படி உறுதிகூற முடியும் ? தவறானவைகளும் குப்பைகளும் கூட சேகரித்ததில் இருக்குமே! நம் வீட்டில் தினசரி பயனுள்ள பொருள்களிலிருந்து குப்பை சேரவில்லையா? ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுக்கணகில் சேர்ந்த உதவாத குப்பைகள்  இருக்குமே! அது போலத்தானே சமூகமும். அதனை அலசிப் பார்க்கவேண்டாமா ? பிரித்தறிய வேண்டாமா? கொள்வன கொண்டு தள்வன தள்ளென சொல்வது எப்படி முன்னோர்களை அவமதிப்பதாகும் ?


அணு என்பது பிளக்க முடியாதது என்று ஒரு காலத்தில் அறிவியல் கூறியது. பின்னர் அறிவியல் வளர்ச்சியில் அந்த அணுவை பிளந்து அளப்பெரும் சக்தி வெளிப்படச் செய்யமுடியும் என நிரூபித்ததும் அறிவியலே! தவறுகளை ஒப்புக்கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம். அறிவியல் அத்தகையதே. ஆனால் போதுமான விளக்கம் கிடைக்காத காலத்தில்விவரங்கள் தெரியாத காலத்தில் நம் முன்னோர்கள் கருதியனவும் நம்பியனவும் செய்தனவும் தவறென அறிவியல் நிரூபித்துவிட்டபின்னும் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழலாமா? இதுவே அடிப்படைக் கேள்வி.


நன்றி : தீக்கதி , வண்ணக்கதிர்  23-11-2014.

0 comments :

Post a Comment