ஏமாற்றப்படும் 85 சதவீதத்தினர் ....
-
சு.பொ.அகத்தியலிங்கம
“
சமூகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்று உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் [
பிராமணர்கள் , சத்திரியர்கள் , வைசியர்கள் ] அரசியல் பிரதிநிதித்துவத்தில் 66.5
சதவீதத்தையும் ,கல்வியில் 43 சதவீதத்தையும் ,வேலைவாய்ப்பில் 87 சதவீதத்தையும் ,
வணிகத்தில் 97 சதவீதத்தையும் , நில எஸ்டேட்களில் 94 சதவீதத்தையும் எவ்விதமான சட்ட
ஒதுக்கீடுகளும் இல்லாமலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் ; ஆனால் அதே
சமயத்தில் மக்கள் தொகையின் இதர பகுதியினர் சூத்திரர்கள் , தலித்துகள் மற்றும்
பழங்குடியினர் , முஸ்லீம்களுடன் சேர்த்து , மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதமாக
இருப்பவர்கள் மீதமுள்ளவற்றை மனிதாபிமானமற்ற சமத்துவமின்மையுடன் மிகவும் நம்பிக்கை
இழந்த நிலையில் பங்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்”
என ,
“மோடி அரசாங்கம் : வகுப்புவாதத்தின் புதிய அலை ” நூலின் தமிழ் பதிப்புக்கான
முன்னுரையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளது பொருள்
பொதிந்தது.
இட
ஒதுக்கீட்டால் மேல்ஜாதியினர் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர் என்றும் ;
தகுதியற்றவர்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிவிட்டனர் என்றும் ;சமூகநீதி
காலாவதியாகிப்போனத் தத்துவம் என்றும்; ஓயாமல் உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும்
அதிமேதாவிகள் வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை மேலே உள்ள கூற்று நிரூபிக்கும் .
அந்த
வாக்கு மூலத்திலுள்ள சொற்றொடரை நன்கு கவனியுங்கள் . “எவ்விதமான சட்ட
ஒதுக்கீடுகளும் இல்லாமலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் ” அப்படியாயின்
இடஒதுக்கீடும் கைவிடப்படுமாயின் அல்லது பொதுத்துறையை ஊற்றி மூடி அனைத்தையும்
தனியார் மயமாக்கினால் அங்கே இடஒதுக்கீடு தானாக மடிந்துவிடுமே ! அதன் பின்னர்
இந்தியா என்பது மேல்ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே என்கிற சூழல் உருவாகிவிடும் . ஆர்
எஸ் எஸ் சங்பரிவார் விரும்பும் இந்துராஷ்டிரம் அதுவல்லவோ !
இதையறியாமல்
தன் தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்ளலாமா என இந்த 85 விழுக்காட்டினரை நோக்கி
உரக்க கேட்கவேண்டாமா ? இந்த 85 விழுக்காட்டினர் விழிப்படையாமல் ஒருவருக்கொருவர்
சாதிய பேதம் பேசி - தலித்துகள் மற்றும் சிறுபான்மையோருக்கு எதிராக முட்டிமோதி
அழியவேண்டும் என்பது சங்பரிவாரின் திட்டம் . அவர்கள் கைக்கருவியாய் ராமதாசின்
பாமகவும் இதர சாதிசங்கங்களும் நிற்பதும் செயல்படுவதும் தற்செயலானதா ? “ நாடகக்காதல்”
என ராமதாஸ் வகையறாக்களும் , “ லவ்ஜிகாத்” என இந்துத்துவ கும்பலும் பேசுவதின்
பின்னால் உள்ள சூழ்ச்சி 85 விழுக்காட்டினரை மோதவிட்டு 15 விழுக்காட்டினர் ஆதாயத்தை
ஆதிக்கத்தை கெட்டிப்படுத்துவது என்பதைத் தவிர வேறென்ன ?
அதிலும்
வேடிக்கை என்ன தெரியுமா ? தீண்டாமையே இந்துமதத்தில் கிடையாதாம் ; அது முஸ்லீம்
மதம் கொண்டுவந்து சேர்த்த நோயாம் ;புதுக் கரடி விடுகிறது இந்த ஆர் எஸ் எஸ் கூட்டம்
. இதனை மேற்படி நூலின் முன்னுரையில் சீத்தாராமும் சுட்டிக்காட்டியிருக்கிறார் .
பேராசிரியர் அ.மார்க்ஸ் தன் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து பதிந்துள்ளவற்றை இங்கே
நெடிய மேற்கோளாய்த் தருவது தவிர்க்க இயலாதது .
“ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இரு மாதங்களுக்கு முன்னர் முதன் முதலாக பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆதரித்துப் பேசியுள்ளது. ஓகே.
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் இதைச் சொல்லியுள்ளார். அவர் வெளியிட்ட மூன்று நூல்களும் விஜய் சோன்கார் சாஸ்திரி என்கிற முன்னாள் பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர் (உ.பி) எழுதியவை.
வால்மீகி, கதிக், சர்மகர் எனும் மூன்று தலித் சாதிகளின் "வரலாறுகள்" தான் அம் மூன்று புத்தகங்களும். அவற்றின் சாரம் இதுதான்:
வேத காலத்திலும் பின் வந்த இந்து மன்னர்கள் ஆட்சியிலும் தீண்டாமை இருந்ததில்லை. "முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்களின்" காலத்தில்தான் தீண்டாமை இங்கு புகுத்தப்பட்டது!
முஸ்லிம் படைஎடுப்புகளுக்கு முன் கதிக் கள் பிராமணர்களாக இருந்தனர். வால்மீகிகளும் சர்மகர்களும் சத்திரியர்கள். போர்த் தொழில் புரிந்து வந்த இவ்விரு சாதிகளும் முஸ்லிம் மதமாற்றத்தை ஏற்காததால் தோல் மற்றும் துப்புரவுத் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு தீண்டத் தகாதவர்கள் ஆக்கப்பட்டனராம். இன்னுஞ் சிலர் போர்க் கைதிகளாக இருந்து இத்தகைய 'இழி' தொழில்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டனராம்.
சமர் என்றால் தோல் எனும் பொருள்படும் அரபிச் சொல்லாம். பழங்குடியினர் என ஒதுக்கப்பட்டுள்ளோர் இவ்வாறு முஸ்லிம்களின் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக சாமவெளிகளிலிருந்து ஓடி வனவாசிகளாகவும், மலைவாசிகளாகவும் ஆகிவிட்டனராம்.
பிரிட்டிஷ் ஆட்சி தன்னுடைய (இட ஒதுக்கீடு முதலான) நடவடிக்கைகளின் ஊடாக இந்தத் தீண்டாமைச் சாதிகளின் ஒதுக்கத்தை உறுதியாக்கியதாம்.
ஆக, தீண்டாமைக் கொடுமை இந்து மதத்திற்கு உரியதல்ல. அந்நியர்களான முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு கிறிஸ்தவர்களால் உறுதியாக்கப்பட்டதாம்.
பவுத்த சமண மதங்கள் இந்து மதத்தின் பிரிவுகள்தானாம். அவை என்றும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதில்லையாம்.
விஜய் சோன்காரின் நூல் இன்னொன்றையும் சொல்லி முடிக்கிறது. "சமத்துவம்" என்கிற கோட்பாடு இந்தியப் பண்பாட்டிற்கு உரியதல்லவாம். பாரதப் பண்பாடு பன்மைத்துவத்தின் அடிப்படையில் ஆனதாம். "இப்போது நமக்குத் தேவை சமத்துவம் (சமந்தா) அல்ல; நமக்குத் தேவை சமூக ஒற்றுமை (சமரஸ்தா)" என்கிறார் சோன்கார்.
#############
ஆக, ஆர்.எஸ்.எஸ் சொல்லும் 'பன்மைத்துவம்' மற்றும் 'சமூக ஒற்றுமை' என்பன பல்வேறுபட்ட மத, இன, மொழி மக்களிடையேயான ஒற்றுமை அல்ல; மாறாக இந்துச் சாதிகளுக்கிடையேயான ஒற்றுமை . அதாவது இங்கு பல்வேறு சாதிகள் இருக்குமாம். அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்குமாம்; இவர்கள் யாரும் சமத்துவம் கோராமல் ஒற்றுமையையும் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டுமாம். பெரியமனது பண்ணி தாமதமாகவேனும் இப்போது அவர்கள் தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
இதுதான் ஆர்.எஸ் எஸ் சொல்லும் சேதி.
நமக்குச் சில் கேள்விகள்: முஸ்லிம் படைஎடுப்பிற்கு முன்னதாகவே இங்கு தீண்டாமை இருந்ததே? புத்த பகவன் பார்ப்பன முனிவர்களுடன் "யார் தீண்டத் தகாதவர்?" என வாதிட்டாரே (வசல சூத்ரம்) அதற்குச் சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்தானே முகமது நபிகளே தோன்றினார்? வேதங்களில் காணப்படும் 'தாசர்'களும், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் 'இழிசனர்களும்' பின் யார்?
முஸ்லிம்கள்தான் தீண்டாமைக்குக் காரணம் எனில் அம்மதம் தோன்றிய இடங்களில் தீண்டாமை இல்லையே ஏன்?”
ஆம்
மார்கஸ் கேட்கிற எளிய கேள்வியை இன்னும் சற்று நீட்டினால் , “ இந்து மதம் எங்கெங்கு
நீண்டதோ அங்கே மட்டும்தானே சாதி எனும் பெருநோய் கவ்விப்பிடித்திருக்கிறது ; பிற
மதத்திலும் கூட மதம் மாறிய முன்னாள் இந்துக்களிடம்தானே சாதி வேற்றுமை மனோவியாதி
உள்ளது ; இதன் பொருள் சாதி என்பது இந்துமதத்தின் குரூரமுகம் என்பதே ; எவ்வளவு
பட்டுத்திரையிட்டு மூடினாலும் இந்த குரூர முகத்தை மறைக்க இயலாது என்பதுதானே ;
அப்படியிருக்க பெரியமலையை கைக்குட்டையால் மூடிமறைக்கும் இந்த வீணர்களை அடையாளம்
காணவேண்டாமா ?
அ.மார்க்ஸ்
இப்போதாவது இடஒதுக்கீடுக்கு ஒப்புக்கொண்டார்களே எனச் சந்தோஷப்படுகிறார் ; ஆனால்
அனைத்தையும் தனியார்மயமாக்க திட்டமிட்டுக்கொண்டே – அதன் மூலம் இட ஒதுக்கீட்டின்
ஊற்றுக் கண்ணை அடைத்துக் கொண்டே - இடஒதுக்கீட்டை ஒப்புக்கொள்வது சரியான
மோ[ச]டி வித்தையே !
மேல்ஜாதி
பிடியிலிருக்கும் ஊடகங்கள் இந்த உண்மையை பேசாது ; மாறாக திசைதிருப்பும் ; நாம்
தான் விழிப்போடிருந்து மக்களிடம் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும்
0 comments :
Post a Comment