கம்பீரமான மீசை

Posted by அகத்தீ Labels:








- சு.பொ.அகத்தியலிங்கம்

கம்பீரமாீச
ிறுக
இவர் அவராக இருப்பாரோ?இருக்கலாம். அவரிடம் பேசிப்பார்ப்போமே... அவராக இருப்பினும், பேசுவதும் பழைய நினைவுகளைக் கிளறுவதும் சரியாக இருக்குமோ....

எந்த முடிவுக்கும் வரமுடியாமல் மூன்று நாட்களாய் தவிக்கிறேன். எங்கே போனாலும் காலை நடைபயிற்சியை விடக்கூடாது என்பதால் சில நாட்களாக இந்த விளையாட்டு மைதானத்திற்கு காலை வருகிறேன்.

இந்த இடம் மிகவும் ரம்மியமானது. சரவதி தேவி கோயில், பகத்சிங் சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் என மூன்றும் ஒரே வளாகத்தில் மரங்கள் சூழ பசுமையாய் விரிந்திருக்கிறது. மைதானத்தில் நடை பயில்வதும், கோயில்வளாகத்தினுள் பூங்கா பெஞ்சுகளில் அமர்ந்து இயற்கை காற்றை சுவாசிப்பதும்; சின்னஞ்சிறுசுகள் ரோலர் கேட்டிங் பயிற்சி பெறுவதைப் பார்ப்பதும் மனதுக்குள் சந்தோஷப் பூக்களை நிறைக்கிறது. காலையும் மாலையும் இங்கே வருவது இதமாக இருந்தது. ஆனால் மூன்று தினங்களுக்கு முன்பு நடைபயிற்சிக்கு சற்று தாமதமாகப் போக நேர்ந்தது. அந்த முதியவர் மெல்ல நடந்த போது அவரை எங்கோ பார்த்த ஞாபகம் என்னைத் துரத்தியது. அந்த மீசையை மறக்க முடியுமா? வெள்ளையானாலும் அந்த மீசையின் கம்பீரம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே!

ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன். என் மீசையை பார்த்து ம.பொ.சி. மீசை, திலகர் மீசை, தேவநேயப் பாவாணர் மீசை என அவரவர் அறிந்ததோடு ஒப்பிடுவது எல்லோருக்கும் வாடிக்கை. நான்தானே அறிவேன் என்னுள் இருக்கும் அந்த கம்பீரமான மனிதனின் மீசைதான் என் ரோல்மாடல் என்பதை.

பள்ளி நினைவுகள் சுழல்கிறது. அறிவியல் வகுப்பு இடிதாங்கி என்றால் என்ன? கேள்வி எழுப்புகிறார். மாணவர்கள் பதில் சொல்லுகிறார்கள். அவர் போகிற போக்கில் ஒரு செய்தியைச் சொன்னார்: கடவுள் சர்வவல்லமை பெற்றவர் என்கிறார்கள். அப்படியானால் அவரால் இடியைத் தாங்க முடியாதா? கோயில் கோபுரத்திலும், சர்ச் கோபுரத்திலும், மசூதி கும்பத்திலும் இடிதாங்கி எதற்கு? மாணவர்கள் திருதிருவென விழித்ததும் அவரே அறிவு வாசலைத் திறப்பார். அவரிடம் மாணவர்கள் பயமின்றி நண்பனைப் போல் பழகலாம். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி கேட்டாலும் அவருக்கு பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் கேள்வி கேட்கும் மாணவர்களை கொஞ்சுவார். கேள்வி கேட்க மாணவர்களைத் தூண்டுவார். அவரைப் பிடிக்காத மாணவர்களே இருக்க மாட்டார்கள். அவரும் எந்த மாணவரையும் ஒதுக்கியதே இல்லை. அவர் மகனும் அதே  வகுப்புதான். அவன் என் நெருங்கிய தோழனும் கூட ஆக எனக்கு அந்த ஆசிரியரோடு உறவு பள்ளிக்கு வெளியேயும் தொடர்ந்தது.

அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா? அந்த வயதில் என்னால் எதையும் உறுதி செய்ய இயலவில்லை. எங்களை கோயிலுக்கு அழைத்துப் போவார். அங்கு சிலைகளையும் சித்திரங்களையும் ரசிக்கச் சொல்லுவார்; சுவரில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் தேவாரம் திருவாசகமும் பாடலை பாடச் சொல்வார். அவரும் பாடுவார். ஆனால் சாமி கும்பிடச் சொன்னதில்லை. அவரும் கும்பிட்டதில்லை. சர்ச்சுக்கு அழைத்துப் போவார் அங்குள்ள அமைதியை நேசிக்கச் சொல்வார். பைபிள் வாசகங்களை படிக்கச் செய்வார். ஆனால் அவர் ஒரு போதும் மண்டியிட்டு பிரார்த்தித்துப் பார்த்ததே இல்லை. மசூதிக்கும் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்வார். அங்கு ஒழுங்குகளை விளக்குவார். அப்போது குரான் தமிழில் மொழி பெயர்க்கப்படாதது குறித்து வருந்துவார். கோயில் பூசாரி, பாதிரியார், முல்லா எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். அவர்களுக்கு இவரை மிக கவுரவமாக நடத்துவார்கள்.  அவர் பெயர் அந்தோணிராஜ்.  கிறுத்துவர் என்பது சொல்லாமலே விளங்கும். அவர் எல்லா மதத்தையும் மதித்தார். அதே சமயம் அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் பரிசீலிக்க வேண்டுமென எங்களைத் தூண்டுவார். அவரிடம் பயின்றவர்கள் பகுத்தறிவாளராக மாறுகிறார்களோ இல்லையோ ஒரு போதும் மதவெறிக்கு ஆட்பட மாட்டார்கள்.

அவரைப் பற்றிய நினைப்பு சிறகை விரிக்க அவரின் உயரம் கூடிக் கொண்டே போகிறது. திடீரென்று ஒரு அதிர்ச்சி. அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். வீட்டையும் விற்றுவிட்டார். ஊரை விட்டுப் போய்விட்டார். அவரது குடும்பமே இடம் பெயர்ந்து எங்கோ போய்விட்டது.  என்னோடு படித்த அருண்ராஜ் பாண்டிச்சேரியில் ஒரு சர்ச்சோடு இணைந்த பள்ளியில் பயில்வதாக கேள்வி. அவர் திடீர் முடிவின் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. பல விதமான கதைகள் றெக்கை கட்டிக் கொண்டு உலாவந்தன. அக்கதைகள் அவரை சிறுமைப்படுத்தின. அவரைப் பிடிக்காத சிலர் அவரை இப்போது எள்ளி நகையாடினர். ஆனால் என் மனதில் அவரது கம்பீரம் குறையவே இல்லை. மற்றவர்கள் சொல்வதை மனம் ஏற்க மறுத்தது.  எனது ஆசிரியர் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்திருப்பார் என்கிற குரு பக்தி என்னுள் ஆதிக்கம் செலுத்தியது.

அந்த பூங்கா பெஞ்சில் உட்கார்ந்திருப்பது அவர்தானே? நெருங்கிடத் தயக்கம். இரண்டுநாள் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட தூக்கமும் தொலைந்துவிட்டது.

மாணவப் பருவத்தில் நண்பனைப் போல் பழக முடிந்த எனக்கு இப்போது நெருங்கிக் கேட்க பேச எது தடை? ஒரு வேளை அவருடைய பிம்பம் என்னுள்ளும் சிறுத்துவிட்டதோ? ச்...சே... கூடாது.. பேசியாக வேண்டும்.

துணிந்து அன்று காலை அவர் முன்னால் போய் நின்றுசார் வணக்கம்’என்றேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு. என் மீசையைப் பார்த்தார். “ உங்களைப் பார்த்து வளர்த்த மீசை” எனக்கூறி என் பெயர் முதலிய சில விபரங்களைச் சொன்னேன். எழுந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். நான் உருகிப்போனேன்.  சிறிது நேரம் கனத்த மவுனம்.

 “இன்னும் என்மீது அதே மரியாதை வைத்திருக்கிறாயா?” என அவர் அழுத்தம் கொடுத்து கேட்ட கேள்வி என்னை உசுப்பிவிட்டது. “ சார்! நீங்கள் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வீர்கள். இது என்னுன் அசைக்க முடியாத நம்பிக்கை” என்றேன். சிரித்தார். அதில் ஆயிரம் செய்தி புதைத்திருந்தது.

 “நீங்க என்ன செய்றீங்க.எத்தனை பிள்ளைங்க..”. என அவர் கேட்க நான் என் கதையை விலாவரியாக சொல்லி முடித்தேன்.

“வகுப்பில் கேள்விக்கு பதில் சொல்லும் அதே வேகம் குறையவில்லை” என்றவாறு முதுகைத்தட்டிக் கொடுத்தார்.  “என் மாணவர்களில் நீங்கள் சமூகப் பணியில் இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலம் வாழணும்னு வாழ்த்துகிறேன்” அந்த வார்த்தைகள் அவரின் இதயத்திலிருந்து வெளிபட்டு நேரடியாக என் இதயத்தை ஆசீர்வதித்த உணர்வு.

     என் பால்ய சிநேகிதன் அருள்தா பற்றிய விசாரணையையைத் தொடங்கினேன். அவர் மவுனம் காத்தார்.  “ சரி நீங்கள் எழுத்தாளர் உங்களிடம் சொல்வது நல்லதுதான்,” என பீடிகை போட்டு மனம் திறந்தார். காலம் பின்னோக்கி நகர்ந்தது.

 “அன்று மதியம் நீங்களும் அருள்தாஸ்சும் பிற மாணவர்களோடு கல்விச் சுற்றுலா போயிருந்தீர்கள். நான் வழக்கத்துக்கு மாறாக மூன்று மணிக்கே வீடு திரும்பினேன்...”

 “உங்களுக்குத் தெரியுமே, என் மனைவி இறந்து 5 வருடங்கள் மறுமணம் செய்யாமல் இருந்ததும் சில மாதங்கள் முன்புதான் திருணம் செய்ததையும் அறிவீர்கள் அல்லவா...? வீட்டுக்குச் சென்றபோது கண்ட காட்சி என்னை நிலை குலையவைத்துவிட்டன. அப்படியே இடித்துபோய் முற்றத்தில் உட்கார்ந்துவிட்டேன்.”

சற்று நேரம் நிறுத்தினார்... மீண்டும் மவுனம்... பெருமூச்சு...  “யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லதுதான். நீ என் நம்பிக்கைக்குரிய மாணவன்” (நீங்கள் என கூறி இடைவெளிவிட்டு நின்று அவர் சட்டென இறங்கி நீ என நெருங்கியது அவருக்கும் எனக்கும் இடையே இறுக்கத்தைத் தளர்த்தது)

 “நீ சமூக ஊழியனும் கூட... என் கதை பிறருக்கு உதவலாம் இல்லையா?..”. இப்படிக் கேட்டுவிட்டு சிரித்தார். மீண்டும் மவுனம்... அப்புறம் பேசத் தொடங்கினார்.

 “என் மனைவி காத்ரீன்... இப்படிச் சொல்றது இப்போது தப்பு... காத்ரீன் ஆடைகளை சரி செய்தபடி அவசர அவசரமாக பதறி அடித்து எழுந்திருக்க முயல என் வருகையை கவனிக்காத என் மூத்த மகன் அவளை பிடித்து இழுத்து அணைக்க... அதைப்பார்த்த என் இதயம் வெடித்துவிடும் நிலை. செய்வதறியாது திடுக்கிட்டு உட்கார்ந்து விட்டேன். அவர்களும் அதிர்ச்சியால் உறைந்து நின்றனர். அப்பனும் மகனும் பேச்சற்று நின்றோம்... காத்ரீன் மயங்கிச் சரிந்தாள்...”

 “நடிப்பு.. கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு தப்பிக்க நாடகம்...” என நான் இடையிலேயே வார்த்தையை வெடிக்க அவரின் மவுனப்பார்வை சாந்தப்படுத்தியது.” பதறாமல் கேள்.”

 “நான் பலவிதமாய் யோசித்தேன்... குழம்பினேன். அதே சமயம் பதறுவதால் பலன் என்ன?... அவள் முகத்தில் நீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன்.”

 “தப்பு அவர்களுடையது அல்ல. என்னுடையதுதான். திருமண வயதில் உள்ள மகனை மறந்து நான் திருமணம் செய்தது பெரிய தப்பு. ஐந்து வருடம் மறுமணம் வேண்டாம் என வைராக்கியமாக இருந்த நானே அவள் அழகிலும், பார்வையிலும தடுமாறி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன் எனில் அவன் வாலிபன் என்னை செய்வான்? அவனுக்கு அவள் நாலய்ந்து வயது மூத்தவள்தான். என்ன செய்வது, காமத்துக்கும் காதலுக்கும் வயது எல்லைகளும் இல்லையே...!”

 “சார்! தப்பு செய்தது அவங்க நீங்க உங்களை வருத்திக் கொள்வது சரியா...?” என இடையில் என கேள்வியை வீசினேன். பத்திரிகையாளர் புத்திபோகாது அல்லவா?

 “ஆம்! சரிதான்... ஆனால் யார் குற்றவாளி? யாருக்கு யார் என்ன தண்டனை வழங்குவது? இதையெல்லாம் விட முக்கியம் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, அதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதுதானே கேள்வி”

 “நீங்க... சொல்றது சரிதான்...”

 “நான் ஆத்திரப்பட்டு அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றிருக்கலாம். விளைவு நான் சிறையில் வாட வேண்டும். அருள்தாஸ் கொலைகாரனின் மகனாக வாழவேண்டும்”.

 “வேறு வழி இல்லையா?”

 “நானும் யோசித்தேன் நான் ஓடிப்போகலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம்... காத்ரீனும் தற்கொலை செய்து கொள்ளலாம். யாருக்கு என்ன பயன்? தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது. தற்கொலை ஒரு போதும் தீர்வாகாது. தவறுதான், ஆனால் அதிலிருந்து மீள வேண்டும்...”

”நான் சூழ்நிலையை சற்று தளர்த்தி மகனிடம் பேசினேன். அருள்தா டூர் முடிந்து மறுநாள்தான் வருவான். ஆகவே அன்று விடிய விடிய பேசினோம். அழுதோம். குழம்பினோம் உடைந்தோம். யாரும் உயிரைப் போக்கிக் கொள்ளக்கூடாது என மீண்டும் மீண்டும் சொன்னேன். என் பேச்சும் செயலும் அவர்களை சற்று ஆகவாசப்படுத்தியது. நான் அன்று எடுத்த முடிவு சரியா? தவறா? என்னால் கூற முடியாது. ஆனால்..”.

 “அவனுக்கு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு ஆர்டர் கிடைத்த சமயம் அது. அவனை சென்னையில் குடி அமர்த்தினேன். காத்ரீன் அவனோடு வாழச் செய்தேன். அதற்கு சம்மதிக்க வைக்க நீண்ட தர்க்கம் செய்ய வேண்டி இருந்தது.”

 “ஆமாம் மன்னித்து காத்ரீனை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் மகனுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்?” என குடைந்தேன். ஒருவேளை வரம்பு மீறுகிறேனோ என்று ஐயத்தோடு தடுமாறியபோது...

 “சரியாகத்தான் கேட்டாய்... அவள் என்னிடம் எதிர்பார்த்து கிடைக்காததால்தானே அவனை நாடினாள். யார் தவறைத் தூண்டினார் என்பது பிரச்சனையே அல்ல.காமமும் பசியைப் போல் இயற்கைத் தேவை அல்லவா?இனியும் சேர்ந்து வாழ்ந்தால் நெருடல் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு எங்களால் வாழமுடியாது என நினைத்தேன். ஆகவே நான் விட்டுக் கொடுப்பதே சரி என்று ஒருதலைப்பட்சமாக நானே முடிவெடுத்தேன்”

 “அவர்கள் சென்னையில் வாழ்ந்தனர். அருள்ராஜை பாதிரியார் காபிரியேல் வசம் ஒப்படைத்தேன் சொத்தை விற்றேன். வேலையை உதறினேன். கிடைத்த பணத்தை மூன்றாக பங்கிட்டு ஒரு பகுதியை பாதிரியார் காபிரியேல் பொறுப்பில் இளையவனை வளர்க்க அளித்தேன். ஒரு பகுதியை மூத்தவனுக்குக் கொடுத்தேன். நான் ஒரு பகுதியோடு மிஜோராம் சென்றேன். பாதிரியார் காபிரியேல்தான் உதவினார். அவருக்கு எல்லாம் தெரியும். அங்கு பழங்குடி மக்களிடையே கல்விப்பணி ஆற்றினேன். வயதாகிவிட்டது. சொந்த மண்ணுக்கு வரும் ஆவலில் வந்தேன் ஆனால் தமிழ்நாட்டுக்கு வரவிரும்பாமல் திருவனந்தபுரத்தில் பாதிரியார் ஜெயராஜ் உதவியோடு இங்கு ஒரு இல்லத்தில் வசிக்கிறேன்.”

 “நீ! ஒன்றை யோசித்துப்பார்! நாம் வெள்ளைக்காரனை - வெளிநாட்டுக்காரனை தேவையில்லாததுக்கெல்லாம் காப்பி அடிக்கிறோம். நல்லதுக்கு பின்பற்றினால் என்ன? ஒருவனுக்கு ஒருத்திநல்ல வாழ்க்கை நெறிதான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிலருக்கு வாழ்க்கை தப்புத்தாளமாகிவிடுகிறது. இதற்கு தற்கொலையா தீர்வு? கொலையா தீர்வு? விருப்பம் இருக்கிறவரை சேர்ந்து வாழ்வது, இல்லையேல் பிரிந்து அவரவர் வாழ்வை மறு நிர்ணயம் செய்து கொள்வது. இந்த ஐரோப்பிய வாழ்க்கை நெறியில் என்ன தவறு? சாவதைவிட உயிரைப் பறிப்பதைவிட இது மேலானதுதானே! காதல் தோல்வியில் தற்கொலை என்கிறார்கள். கொலை என்கிறார்கள் முட்டாள்தனம். ஒருவருக்குகொருவர் விசுவாசமாக இருப்பது மிக மிக அவசியம். கசப்பும் குரோதமும் வந்தபின் ஏன் சேர்ந்து வாழ வேண்டும். நட்பாக பிரிவது நல்லது. இதனால் பண்பாடு கெட்டுப் போகிறது என்பது முட்டாள்தனம் தற்கொலையைவிட கொலையைவிட வாழ்வது முக்கியம்... நான் சொல்வது சரிதானே?”

அவரின் பார்வை விசாலமாக மானுட அன்பை மழையாய்க் கொட்டுகிறது. அவரது பிம்பம் என்னுள் விவரூபமெடுக்கிறது.

விடைபெற வேண்டிய நேரம் நேரம் நெருங்கியது. ”சார் ஒரு சந்தேகம், மீண்டும் யாரையும் சந்திக்கவில்லையா...?”

 “இல்லை. சந்திக்க விருப்பவில்லை. சந்திக்கிறபோது என்னுள் தூங்கும் மிருகம் எழுந்துவிடக் கூடாதல்லவா? நானும் மனிதன்தானே. தவிர்த்தேவிட்டேன். ஆனால்...” அவர் நிறுத்திய நொடியில் மீண்டும் ஏதோ அதிர்ச்சியோ என விழித்தேன்.

 “சில வாரங்கள் முன் ஒரு இளைஞனும் அவனது மனைவியும் குழந்தையும் பாதிரியார் ஜெயராஜை பார்க்க வந்தார்கள். நான் அங்கிருந்தேன். குழந்தைக்கு என் மீசை பிடித்துவிட்டது. திருகி விளையாடியது. வரும் ஓணம் பண்டிகைக்கு அவர்கள் வீட்டுக்கு பாதிரியாருடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களின் பெற்றோர்கள் சித்தப்பா குடும்பம் எல்லோரும் ஒன்றாக சந்திக்கிறார்களாம்..”

 “வேடிக்கை என்ன தெரியுமா? என் மீசையைப் பிடித்து விளையாடியது  என் கொள்ளுப்பேரன்!”

 “நீங்கள் விருந்துக்குப் போகப் போகிறீர்களா?”

 “இல்லை. மீண்டும் மிஜோராம் போகிறேன். என் பேரனுக்கே கொள்ளுப்பேரனுக்கோ அவர்கள் பெற்றோர்கள் மீதான மரியாதை எந்த விதத்திலும் பட்டுப் போகக்கூடாது. நான் அங்கு போனால் ஒருவேளை யாரேனும் வெடித்து பழைய நினைவுகளை கிளறிவிடக்கூடுமே. எல்லோரும் மனிதர்கள் தானே. நான் நாளை பெங்களூர் போகிறேன். அங்கிருந்து மிஜோராம் போகிறேன்.”

 “எல்லாம் சரிதான் சார்.ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சமாக என் மனதில் இருக்கிறது. ஒரு குற்ற உணர்வோடு அவர்கள் இருவரும் இருந்த தருணத்தில் உங்கள் முடிவை ஒருதலைபட்சமாக அவர்களை ஏற்கவைத்து விட்டீர்களே? இன்னும் சற்று ஜனநாயகப் பூர்வமாக கலந்துபேசி கால அவகாசம் எடுத்து முடிவு எடுத்திருக்கலாமே?”

 “உண்மை. நீ அடுத்த தலைமுறை மனிதன். இன்னும் நன்றாக யோசிக்கிறாய். நான் போன தலைமுறை மனிதந்தானப்பா..”

 “சார்... வருகிறேன்.” என்றவாறு குனிந்து காலைத் தொட்டு வணங்கினேன்.

”நீ யார் காலையும் தொட்டு வணங்கமாட்டாயே...!”

”ஆம்! உங்களை வணங்கத் தோன்றியது”

 “சரி! போய் வா! நன்றாக வாழ்க! ஒரே ஒரு வேண்டுகோள் எப்படியும் இதை கதையாக எழுதுவாய். நீச்சயம் எழுது ஆனால் யார் உள்ளமும் காயப்பட்டு விடாமல் எழுது. தப்புத்தாளங்கள் சரியல்லதான். ஆனால் கொலையோ தற்கொலையே தீர்வல்ல. யதார்த்தத்தை அங்கீகரிக்க மனிதகுலம் பழக வேண்டும் அதற்கு உன் எழுத்து பயன்படட்டும். அவர் வாழ்த்தி அனுப்பினார்.

கொள்ளுப்பேரனுக்கும் அந்த மீசை பிடித்தது ஆச்சரியமில்லைதான். அது கம்பீரமான மீசை அல்லவா?

நன்றி ; செம்மலர்  ,  ஜனவரி 2013

7 comments :

  1. ஸ்ரீரசா

    கதையின் கரு நன்று. ஆனால் கதைத்துவம் சற்றுக் குறைவு. எனினும் முதல் கதைக்கு வாழ்த்துக்கள். கதைக்குள் அகத்தியலிங்கத்தின் அறிவுக் கொழுந்துகளே நிறையத் தலை நீட்டுகின்றன. என்றாலும் முரணற்று எழுத்துக்கள் நகர்கின்றன. கம்பி மேல் நடக்கும் சாதுர்யம் வாய்த்திருக்கின்றது. கதைக்குள் நிகழும் கதைக்குள் இருந்து கதை செய்திருந்தால் அதன் வடிவமும் அடர்த்தியும் வேறு கதையாய் இருந்திருக்கும். என்றாலும் வாழ்த்துக்கள் அகத்தி. அடுத்த கதைத்துவம் நிறைந்த அழகான வித்தியாசமான கதைக்கரு கொண்ட கதைக்காகக் காத்திருக்கிறேன்.

  1. venu's pathivukal

    அன்பின் தோழர் சு பொ அகத்தியலிங்கம் அவர்களுக்கு


    உங்களது சிறுகதையை வாசித்தேன்....
    உண்மை நிகழ்வு போலவே சொல்லப்பட்டிருக்கும் கதையின் கரு உண்மையில் வித்தியாசமானது, சிக்கலானது.....
    மிகவும் நேர்மையாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை...
    நிஜ வாழ்வின் சங்கடங்கள் குறித்த கேள்விகளுக்கும் பெருமளவு விடை வைத்து நீங்கள் செய்திருக்கும் இந்தப் படைப்பு உண்மையில் சிந்திக்கத் தூண்டுவது தான்..
    கதையின் அழகியல் பற்றி யோசிக்கவிடாமல், கதையின் போக்கு இழுத்துச் செல்வது படைப்பாளியின் வெற்றி..
    கதையை வேறிடத்தில் தொடங்கி இருந்தால் ஒருவேளை மேலும் அழுத்தமான கதையாக வாய்த்திருக்கக் கூடும்..
    அது பிரச்சனையல்ல...வாழ்த்துக்கள்...

    எஸ் வி வி

  1. Unknown

    சிக்கலான பிரச்னையை கதை கருவாக கொண்டு துணிச்சலாக யதார்த்த நடைமுறைகளிளிருந்து மாறி தீர்ப்பு சொல்லியிருக்கின்றீர்கள்.ஆதரவும் எதிர்ப்பும் வருகிற சாத்தியப்பாடு உள்ள கதை.

  1. அருணன் பாரதி

    புத்தாண்டு வாழ்த்துகளும், புதுப் பொங்கல் வாழ்த்துகளும் தோழர். சிக்கலான கருதான். ஆனால் கதை லகுவாக, எவ்வித இடறலும் இன்றி நகர்ந்தது. துணிந்து இக்கதையை எடுத்து எழுதியமைக்கு பாராட்டுகள்.இக்கதையின் காணலை, உணர்வை எழுத நிறைய ஆளுமைத் திறனும், மனம் புண்படாமல், விரசமில்லாமல, வார்த்த்தைகளைக் கோர்க்கும் லாவகமாய வந்தால்தான் எழுத முடியும். இக்கதையைக் கையாள தங்களின் மார்க்சீய உணர்வும், மூளைத்திறனும், உதவிஇருக்கின்றன.தோழர்.வாழ்த்துகள்.வாழ்வில் அனைத்தும் எதார்த்தம் தானே. ஆனால் இதே போல கரு உள்ள கதையை ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். கரு கொஞ்சமே மாறுபட்டது.வாழ்த்துகள் மீண்டும்.

  1. pennkural@gmail.com

    இன்றைய நிலையில் இருந்துகொண்டோ நாளைய வற்றை பற்றி நினைக்காலாம், நடத்திவிட முடியாது...

    நீங்கள் இங்கு சொல்லுவது காமம் மட்டுமே..காதல் அல்ல...

    காதலில் காமத்திற்கு நிச்சயம் இடம் உண்டு ..
    ஆனால் காமத்தை காதல் என்று நினைத்து.. அதையே... கதை கருவாக மாற்றி உள்ளீர்கள்...

    காமத்தால் கரு உருவாகலாம், காதலுக்கும் அதுவே.. கருவாகுமோ....?

  1. Unknown

    எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை.உண்மை ஒருசார்புடையது என்பதால் ஒருவரை பாதித்தும் இன்னொருவரை மகிழ்விக்கவும் செய்கிறது.கதை பேசும் பொருளுக்கே சிக்கல் இல்லை எனும்போது இது சிக்கலான கதையில்லை என்றாகிறது.ஆனபோதிலும் பொதுவெளியில் இந்திய சமூகம் நம் மனங்களில் ஏற்றிவைத்திருக்கும் ஒழுக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இது நீங்கள் சொல்வதுபோல் சிக்கலான கதையாக பிரதிபலிக்கிறது என்றபோதிலும் எதார்த்தம் எதார்த்தம் தானே.அமரகவி பாரதி சொல்வதைப்போல் உண்மை புதிதள்ளவே!

  1. vimalavidya

    Rare story but true incidents may happen some places..It is an exceptional story...The broad mind set up is important to understand and judge the situations rarely occurred in life...I felt sympathy with the man...life is miracle..

Post a Comment