2012 ஜூன் 15-ல் அகவை அறுபதில் நான் அடியெடுத்து வைக்கிறேன். இந்த இனிய பொழுதில் உங்கள் எல்லோருக்கும் என் அன்பு வணக்கம்.நன்றி. மகிழ்ச்சி. எல்லாம்....எல்லாம்..
அறுபதாண்டு என்பது தனி மனித வாழ்வில் குறுப்பிடத்தக்க பயணம்தான்.தற்காலத்தில் சராசரி வயது 67.8ஆக உயர்ந்திருப்பதால் அறுபதாண்டு என்பதற்கு முந்தைய காலத்தைப்போல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.அதே சமயம் இந்த 59 ஆண்டுகள் வெறுமே ஒடிஅடையவில்லை. காலம் நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பக்குவப்படுத்தியிருக்கிறது.பட்டை தீட்டியிருக்கிறது.பழிவாங்கியிருக்கிறது.பாடம் சொல்லியிருக்கிறது.பயணத்தை தொடர நம்பிக்கையையும் சிந்தனைத் திறனையும் அளித்திருக்கிறது.காலத்திற்கு நன்றி..நன்றி.
என்னால் காயப்பட்டவர்கள் யாராயிருப்பினும் எக்காரணம் பற்றியிருப்பினும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் பணிந்து மன்னிப்புக் கோருகிறேன்.என்னால் யாரேனும் ஊக்கம் பெற்றிருப்பின் அவர்களிடமும்- யாதோ காரணம் பற்றியோ காரணமின்றியோ என் மீது அன்பையும் தோழமையையும் பொழியும் அனைவரிடமும் என் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பிறந்த நாள் பரபரப்பு சென்ற ஆண்டு முதல்தான் தொற்றிக்கொண்டுள்ளது.அது குறித்தும் “ஓய்வெனப்படுவது யாதென..””என்கிற சிந்தனையையும் சென்ற ஜூன் 15 ஆம் நாள் என் வலைப்பூவில் பதிந்திருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சில செய்திகளைச் சொல்ல விழைகிறேன். [சென்ற ஆண்டு பதிவை மீண்டும் வாசிக்க இந்த கொழுகியை சொடுக்கவும் http://akatheee.blogspot.in/2011/10/blog-post.html ]
"என் தகுதியைத் திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்குபெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான் விரைவில் ஓய்வுபெற விழைகிறேன். முன்னர் என் இச்சையினால் பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின் அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில் எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து
கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்
உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்”” என ஒரிடத்தில் சென்றாண்டில் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
என் வேண்டுகோளைத் தோழமையோடு ஏற்றுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பிப்ரவரியில் நாகையில் நடைபெற்ற மாநிலமாநாட்டில் மாநிலக்குழுவிலிருந்து சுயவிருப்பினடிப்படையில் நான் விடுவிக்கப்பட்டேன்.27 ஆண்டுகாலம் கட்சியின் மாநிலக்குழுவில் பணியாற்றும் பெரும் பேற்றினை எனக்கு அளித்த கட்சித்தலைமைக்கு தோழமைமிகுந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.கட்சி உறுப்பினர் என்கிற ஆகப்பெரிய தகுதி வாழ்வின் மூச்சடங்கும் வரை தொடர வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.
தீக்கதிர் நாளிதழ் இணையாசிரியர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்குமாறு நான் முன்வைத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது. தீக்கதிர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற கம்பீரத்தோடு எழுத்துப்பணியைத் தற்போது தொய்வின்றி தொடர்கிறேன்.வருகைப் பதிவேட்டிலிருந்தும் ஊதியப்பட்டியலில் இருந்தும் என் பெயர் முழுமையாக நீக்கப்பட்டு தீக்கதிரில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு மட்டும் பெறவேண்டும் என்பதே என் பேராசை. உடலும்,சிந்தனை வலுவும் உள்ள வரை கட்சித் தொண்டாய் இப்பணியைத் தொடர விரும்புகிறேன்.என் மகன் குடும்பப் பொறுப்பையும் பணப்பொறுப்பையும் ஏற்கும்வரை-கடன் தொல்லையிலிருந்து மீட்கும் வரை ஊதியம் பெறும் ஊழியனாக இருக்கவேண்டியவனாக உள்ளேன் என்பது மட்டுமே என் இப்போதைய தனிப்பட்ட கவலை.ஆயினும் அடுத்த ஆண்டு இதே நாளில் என் விருப்பம் கைகூடும் என நம்புகிறேன்.ஆம் மகனும் மகளும் அத்தகு நம்பிக்கை அளித்திருக்கின்றனர்.நினைவலைகள் பின்னோக்கிக் குமிழியிடுகின்றன.
நான் சிகப்பு பட்டு நூலில் உத்திராட்சக் கொட்டையை கழுத்தில் கட்டிக்கொண்டு-தேவாரம் திருவாசகம் பாடிக்கொண்டு-உடம்பு முழுக்க பட்டை தீட்டிக் கொண்டு கோவிலைச் சார்ந்து வாழ்ந்த இளமைப் பருவத்தை அசைபோடுகிறேன்.அந்த கோவிலும் அதன் செயல்பாடுகளும் என்னை நாத்திகனாக்கியது.பெரியார் சிந்தனை நோக்கித் தள்ளியது.பள்ளி இறுதித் தேர்வை முடிக்கிறபோது சிகப்பு-கறுப்பு கூட்டத்தில் ஒருவரானேன். இலக்கியம் எப்போதும் என் விருப்பத்தேர்வாக இருப்பினும் பிழைப்பு நிமித்தம் ஐடிஐ படிக்கவேண்டிய வாழ்க்கை நிர்பந்தம் எழுந்தது.தொழிலாளியாக பணியாற்றத் தொடங்கினும் என் இலக்கிய ஆர்வமும் சமூகக்கோபமும் என்னை சிகப்பு நோக்கி திருப்பியது. வாழ்க்கை திசை மாறியது.இலக்கியத்தைவிட அரசியல்பணி முன்னுரிமை பெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கட்டியெழுப்பப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் கடைக்கால் அமைக்க உழைத்தவர்களில் நானும் ஒருவன்-அதிலும் முன் நின்றவன் என்கிற திருப்தி வாழ்வின் கடைசித் துளிவரை இருக்கும்.தமிழகம் முழுவதும் ஊர் ஊராய் கிராமம் கிராமமாய் பயணித்து வாலிபர் சங்கப் பணியாற்றிய பொழுதுகள் ஒருபோதும் மறக்க முடியாதவை.வாலிபர் சங்க மாநில பொதுச்செயலாளராய்,தலைவராய் பொறுப்பேற்று சுழன்ற 15 ஆண்டுகள் தந்த களஅனுபவம் காலத்துக்கும் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.ஆயிரம் நினைவுமலர்கள் பூத்துக்குலுங்கும்.
பின்னர் கட்சிப்பணி , தீக்கதிர் பணி என கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் [ ஒரு வேடிக்கை, வாலிபர் சங்கத்தில் பணியாற்றுகிற காலத்திலேயே தீக்கதிர் நிருபராகவும் செயல்பட்ட அனுபவமுண்டு]உருண்டோடிவிட்டன.நான் வாழ்க்கையில் பெரும் படிப்பினைகளைப் படித்தது இக்காலத்தில்தான்..காயங்கள், ரணங்கள்,வடுக்கள் ஏராளம் பெற்றேன்.சுயமரியாதை பெருமளவு காயபட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால், அவை என்னை செதுக்கின.உளிக்கு தப்பியதுதானே சிலை.மனிதர்களின் உள்ளும் புறத்தையும் புரிந்துகொள்ள வைத்ததும் இக்காலமே.தீக்கதீர் சென்னைப் பதிப்புப் பணிதுவக்கிய காலம்தொட்டு அதனோடு இணைந்து பணியாற்றியவன் என்கிற முறையில் மகிழ்கிறேன்.அன்றைய இதழோடு ஒப்பிடுகையில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பெருத்த மாறுதல்களைக் கண்டுள்ளது என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது.அதில் என் பங்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதே.தீக்கதிர் பொன்விழா ஆண்டில் [ஜுன் 29 ] கம்பீரமாக நுழைகிறது.இந்தப்பயணத்தில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பயணித்தேன் என்கிற பெருமிதம் உண்டு.அதுபோதாதா?
மேலும் என்னை எழுத்தாளனாய் செதுக்கியதும் இக்காலமே.இளைஞர் முழக்கம் ஆசிரியனாக முன்பே பணியாற்றியிருப்பினும் - சிறுபிரசுரங்களும்,படைப்புகளும் வெளிவந்திருப்பினும் குறிப்பிடத்தக்க நூல்கள் படைத்தது இக்காலமே. விடுதலைத் தழும்புகள்,மனித உரிமை வரலாறும் அரசியலும்,சாதியம் வேர்கள் விழுதுகள் சவால்கள்,கீதை தரும் மயக்கம்,பொதுவுடைமை வளர்த்த தமிழ்,கோடிக்கால் பூதமடா..ஜீவாவின் கவிதைப் பயணம்,காதலும் வாழ்வும்[பழந்தமிழ்ப் பாடல்களில்],சிந்திக்கும் வேளையில் குறள், என் கேள்விக்கு என்ன பதில்[சிறுவர் அறிவியல் படக்கதை],ஆப்கான் வரலாறும் அமெரிக்க வல்லூறும்,பார்வை புதிது பயணம் நெடிது[ஆர்.உமாநாத வாழ்க்கை],சு,சமுத்திரத்தின் படைப்புலகம்,சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை பயில்வோம்,பாசிசம் பழசும் புதுசும்[மொழியாக்கம்] உட்பட பலமுத்திரை பதித்த நூல்களும்; எது மூட நம்பிக்கை ,தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம் உட்பட பல சிறுபிரசுரங்களும்,தொடர்ந்து தீக்கதிரில் எழுதும் வரலாற்றுச் சுவடுகளும்,நூல் மதிப்புரைகளும்.இன்னபிறகட்டுரைகளும் மனநிறைவைத் தருகிறது.என் எழுத்தாயுதத்தை நன்கு கூர்தீட்டிய தீக்கதிருக்கு நன்றி.நன்றி.
மேலும் சில புத்தகங்கள் எழுத தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.குறிப்பாக மார்க்ஸ்சிய தத்துவத்தை குட்டிக்கதைகளும் உரையாடலுமாய் எளிதில் அனைவரும் வாசிக்கத்தக்க விதத்தில் எழுத யோசித்துக்கொண்டிருக்கிறேன்.தொடராக எழுதினால் அவ்வப்போது வரும் கேள்விகள் விமர்சனங்களுக்கேற்ப திருத்தம் செய்ய இயலும்.புத்தகமாக நேரடியாக வரும்போது அதன் தன்மைவேறு.எப்படியிருப்பினும் ஒராண்டுக்குள் அதனை நிறைவேற்ற விருப்பம்.காலமும் களமும் எப்படி அமையுமோ அதற்கொப்பவே எண்ணம் நிறைவேறும்.காலகாலத்துக்கும் பயன்தரும் ஒன்றிரண்டு படைப்புகளையேனும் தந்தவன் என்கிற பெருமிதம் இப்போதே உண்டு.அதன் எண்ணிக்கையை ஒன்றிரண்டாவது கூட்டவேண்டும் என்கிற எண்ணம் உள்ளத்தில் வேர்பாய்ச்சி நிற்கிறது.வகித்த பதவிகளும் பெற்ற பட்டங்களுமா மரணத்திற்குப்பின் எச்சமாக நிற்கப்போகிறது?படைப்புகளைத் தவிர நம் பெயர் சொல்லப்போவது எது?ஆம் எழுத்துத் தவமே இனி முழுநேரப் பணியென வரித்ததில்.தவறுண்டோ சொல்வீர்.
வாழ்வின் பெரும்பகுதி பணத்தின் மதிப்பை சட்டை செய்யாமல் - குடும்ப பொறுப்பை மனைவி சுமக்க - விட்டாற்றியாய் அரசியல் பணிகளில் ஒடி ஒடி திரிந்து விட்டு - மனைவி உடல் நலிவுற - கடன் அழுத்த - குடும்பச்சுமை இன்னதென வாழ்க்கை உணர்த்த - இளமையில் பொறுப்பின்றி திரிந்தது உறுத்த-இப்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரமாய் மனைவி மீதும் குடும்பம் மீதும் அக்கறை வலுக்க-பாசம் மேலும் சுரக்க- குடும்பம் என்னுள் இப்போது முன்னுரிமை பெற்றது. அறுபதாண்டு அனுபவம் சும்மாவா?
நான் பயணிப்பது ஒய்வுநோக்கியா?ஒய்வெனப்படுவது யாது?நான் சமூகமாற்றத்துக்கான அரசியலை,இலக்கியத்தை வாழ்வின் இலக்காய் வரிந்துகொண்டவன்.அதற்காக என் சக்திக்கு உட்பட்டு நேற்றும் உழைத்தேன்.இன்றும் உழைக்கிறேன்.நாளையும் உழைப்பேன்.
ஒய்வெனப்படுவது...... பதவியிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் நிச்சயம் ஒய்வு தேவை.இதில் என் கருத்து மாறாது.உறுதியாக இருக்கிறேன்.ஆனால் உழைப்புக்கு ஒய்வில்லை.மனமகிழ்வோடு..சமூகமாற்ற அரசியலுக்காக..குடும்பத்தார் நலம் பேணிக்கொண்டே..புதுத்தடத்தில்... முன்னிலும் உறுதியாய்..முன்னிலும் நேர்த்தியாய்... பயணம் போக.... உறுதியேற்கிறேன்;எழுத்தாயுதம் என்னிடம் உண்டு என்கிற கர்வத்தோடு..
மீண்டும் நன்றி.
தோழமைமிகு
சு.பொ.அகத்தியலிங்கம்.
15 ஜூன் 2012.
தோழர் வீடு,
3/1492/ D தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,
திரூர் கிராமம் & அஞ்சல்,
திருவள்ளூர் மாவட்டம் 602 025.
அலை பேசி:9442202734.
தொலைபேசி[வீடு]:044 27620132.
மின்னஞ்சல்:agathee2007@gmail.com
வலைப்பூ:akatheee.blogspot.com
6 comments :
அன்பு சு பொ அவர்களுக்கு
ஆன்றவிந்தடங்கிய சான்றோராய் உங்கள் எழுத்து,
உங்களது சொந்த வாழ்வின் மதிப்பு மிக்க காலங்களை அசை போட்டிருக்கிறது. அது இயக்கம் சார்ந்த அனுபவத்தின் பதிவுமாக வெளிப்படுகிறது. அந்த இயக்கத்திற்கான பங்களிப்பின் கம்பீரம் அதில் ஒலிக்கிறது.
என்றும் போல் தேடல் நிரம்பிய சிந்தனை நதி உங்களுக்குள் பெருகி ஓடட்டும். அதன் தெள்ளிய நீரை வாசகத் திரள் அள்ளி அள்ளிப் பருகட்டும். அதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து உருவாக்கட்டும் உங்களது முனைப்பு மிக்க எழுதுகோல்.
நமது மரபு, அறுபது வயது நிறைவடைந்தோரை அவரது வாழ்க்கைத் துணையோடு சேர்த்து வாழ்த்துவது...அந்தப் பெருமிதத்தோடு உங்கள் இருவருக்கும் எனது அன்பும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்றென்றும் உண்டு..
எஸ் வி வேணுகோபாலன்
அன்புள்ள தோழர் சு.பொ. அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிலரிடம் பேசத் தயக்கம் வரும். சிலரிடம் பேச துணிச்சல் வரும். இவரிடம் பேசினால் உரிமையோடு பேசலாம். நாம் தவறாகப் பேசினாலும் பெருந்தன்மையோடு பொருத்து, தோழமை தொய்வின்றி தொடரும் எனற நம்பிக்கை வெகு சிலரிடம் ஏற்படும். அவர்களில் ஒருவராய் நீங்களும் என்னுள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்துப் பணி எனக்கு தூண்டுகோலாக இருக்கிறது, எழுதாதபோது பொறாமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே!
அவசர நிலை பேயாட்சி முடிவுக்குப்பின் அழுந்திக் கிடந்த போக்குவரத்து தொழிலாளிகள் போர்கோலம் பூண்டனர், "சக்கரங்கள் நிற்கட்டும்" என கவிதை வடித்து நமது ஆசான் தோழர் VPC அவர்களின் பாராட்டுதலை பெற்றவன் நீ! அன்றே உன்னை அறிந்தது நமது இயக்கம். தோழர் AB என்னை அழைத்து " நல்லா எழுதுறான், நல்லா பேசுறான்" அவனை முழுமையாக பயன்படுத்த வேண்டும், RR இடம் பேசியுள்ளேன், நீ அவனிடம் சொல்லி வை " என்றார். அது, வாலிபர் அமைப்பின் மாநிலப் பொறுப்புக்கு முன் அறிவித்தல் என்பதை பிறகுதான் நாம் அறிந்தோம். துவக்கத்திலேயே மோதிரக் கரங்களால் குட்டுப்பட்டவன் நீ! என்றும் அழியா தடங்களை படைக்க உன்னால் முடியும். முடியும் நீ ஏந்திய பேனா ஆயுதம் உன்னை அடையாளப்படுத்தும்,தொடரட்டும் எழுத்துப் பணி!
I had marked your birth day in my calender...Morning I actually wanted to send a mail..But before that I saw u r mail and u r full article...Heart became full of weight..Regarding your article I had a long hours discussion with a former BSNL EMPLOYEES UNION STATE LEADER..In the discussion your first article also joined..
I am not happy...Any how I wish you a happy birth day comrade..Long live with good health with your wife..
The trade union movements-CITU Particularly-put a wonderful demand>>>""Pay minimum salary Rs 10,000/= to all workers and contract labourers""...
We have to pay Rs 10,000/= to our whole timers...Full time workers...If it was implemented earlier we would not have missed many comrades...This is my simple thoughts on your birth day...WRITE the truths only...vimalavidya@gmail.com
//காலகாலத்துக்கும் பயன்தரும் ஒன்றிரண்டு படைப்புகளையேனும் தந்தவன் என்கிற பெருமிதம் இப்போதே உண்டு.அதன் எண்ணிக்கையை ஒன்றிரண்டாவது கூட்டவேண்டும் என்கிற எண்ணம் உள்ளத்தில் வேர்பாய்ச்சி நிற்கிறது//.உங்களிடம் இன்னும் நிறைய பயனுள்ள படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.அதை செவ்வனே செய்வீர்கள் என நம்புக்கிறோம்.சிந்தனைக்கும் எழுத்துக்கும் ஓய்வு என்பது இல்லை...எழுதுங்கள் வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்...
தேடலை சுமந்திருக்கும் சிந்தனைக்கும் அதை பதிவாக்கிட ஒத்துழைக்கும் எழுத்துக்கும் ஓய்வென்பது இல்லை....தொடர்ந்து எழுதுங்கள்....
Post a Comment