ஐரோப்பாவை விட இந்திய நிலப்பிரபுத்துவம் கருணை மிக்கதா ?

Posted by அகத்தீ Labels:





ஐரோப்பாவை விட
இந்திய நிலப்பிரபுத்துவம் 
கருணை மிக்கதா ?

சு.பொ.அகத்தியலிங்கம் .

கேள்வி பதில் - 19


* அடிமை வியாபாரம் என்கிற மனிதத்தன்மையற்ற கொடுமை ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்பதிலிருந்தே இந்தியா எப்போதும் மனித உரிமையைப் போற்றுகிற நாடென உரக்கச் சொல்லலாமே ; இதிலென்ன தயக்கம் ?
* ஐரோப்பிய நிலப்பிரபுக்கள் போல அல்ல, இந்திய நிலப்பிரபுக்கள் தம் பண்ணையாட்களைப் பெறாத பிள்ளைகளாகக் கவனித்துக் கொண்டனர் என்பதனால்தான் இங்கு நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான கலகங்கள் எழவில்லை என்பது மெய்யில்லையா ?
அடிமை வியாபாரம் என்கிற மனிதத்தன்மையற்ற கொடுமை ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்பதிலிருந்தே இந்தியா எப்போதும் மனித உரிமையைப் போற்றுகிற நாடென உரக்கச் சொல்லலாமே; இதிலென்ன தயக்கம் ?
முதலில் அடிமைச் சமூகம் எப்படி கருக்கொண்டது என்பதைப் பார்க்கவேண்டும். வேட்டையை மட்டுமே பிரதான வாழ்நிலையாகக் கொண்ட சமூகத்தில் வறுமையைப் பங்கு போட்டுக்கொள்ளும் சூழலே நிலவியது; அன்றைய உற்பத்திக் கருவிகளான உழுவடைக் கருவிகள் வளர்ச்சியடைந்ததும்; மேய்ச்சல், மீன்பிடித்தல் என விரிந்ததும்; நிலம் பிரதான உற்பத்திக் கருவி என்றானபோது; நிலத்தில் உழைக்க நிறைய உழைக்கும் கைகள் தேவைப்பட்டன. இச்சூழலில் மற்றவர்களை அடிமையாகப் பிடித்து வசக்கி வேலைவாங்கும் வழக்கம் தொடங்கியது. இது புவியியல் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் ஏற்ற இறக்கமாகவே பரவியது .
இந்தியாவில் அடிமைத்தனம் பற்றி கேள்வியாளர் சொல்வது ஒருவிதமான சமாதானம். அடிமை முறை கிரேக்கத்தில் இருந்ததற்கும் இந்தியாவில் இருந்ததற்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு. பாபிலோன் மன்னன் ஹமுராபி தொகுத்த சட்டத் தொகுப்பும், எகிப்தின்பாப்ரிபோன்ற ஆவணங்களும், கல்வெட்டுகளும், புராண வர்ணனைகளும் பண்டைய எகிப்து, பாபிலோன், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் தாண்டவமாடிய அடிமைத்தனத்தின் கொடூரத்தை பறை சாற்றும். அடிமைகளை விற்கலாம்; பரிசளிக்கலாம்; கொல்லலாம்; சூடு போடலாம். அடிமைக்கு சொத்துரிமை மட்டுமல்ல சாதாரண அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டது. அடிமைகள் எதிர்க்கும் போது அவர்களை சிலுவையில் அறைந்து மற்றவர்கள் பார்வைக்கு வைத்து மிரட்டினர். சிலுவை அடிமைகளுக்கான தண்டனைக் கருவியே. ஏசுவை அதில் அறைந்த பின்னர் அது புனிதச் சின்னமாகிவிட்டது என்பது தனிக்கதை. ‘ஸ்பார்ட்டகஸ்திரைப்படம் பார்த்தவர்கள் அடிமைத்தனத்தின் குரூரத்தை அறிவர். 18 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.இந்தியாவில் தஸ்யூக்கள் என்பது அடிமைத் தனத்தைக் குறிக்கும் சொல்லே. இந்தியா என்பது அப்போது ஒரு நாடாக இல்லை .
சனாதன தர்மம் இங்கு சாதிவழி அடிமைத்தனத்தை கட்டியது. மற்ற நாடுகளில் அடிமைத்தனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு நாளில் உணர முடியும். ஆனால் இங்கோ இது பிறப்பின் வழி வந்தது என்பதால் அதற்கு தலைவணங்குவதே கடமையாக்கப்பட்டது. மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் அது நியாயப்படுத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மனிதர் தன்னை உணரவோ விழிக்கவோ முடியாத அளவு இழிவு செய்த இந்திய அடிமைத்தனம் வன்மமானது.இங்கு இஸ்லாமியர் வருகைக்கு முன் அடிமைத்தனம் இல்லை என்பது வடிகட்டிய புளுகு. சாதியத்தோடு பிணைந்த வஞ்சகமான அடிமைத்தனம் இங்கு வேர்விட்டது என்பதே உண்மை. தமிழ்நாட்டில் அடிமைத்தனம் இருந்ததில்லையா? இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள் . ஆரல்வாய் கணவாய் வழி அடிமைகள் கடத்தப்பட்டதை தன் சிறுகதை ஒன்றில் விவரிப்பார் சு. சமுத்திரம். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். “தமிழகத்தின் அடிமை முறைஎன்ற அரிய நூலில் . சிவ சுப்ரமணியன் ஆணித்தரமாக ஏராளமான ஆதாரங்களோடு விரிவாக இது குறித்துப் பேசியிருக்கிறார்.
வேதகால இந்தியாவில்தயூஎன்ற சொல் முதலில் பகைவரையும், பின்னர் தாஸர் என்ற சொல் அடிமையையும் குறித்ததுஎன்கிறார். இதேபோல் தமிழகத்தைக் குறிக்க வந்த நூலாசிரியர், தமிழ்இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வெளிநாட்டுப்பயணிகளின் குறிப்புகள், கிறிஸ்துவ மிஷனரிகளின் கடிதங்கள், குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள் ஆகியவைகளில் அடிமைகளைப் பற்றிய செய்திகளும், குறிப்புகளும் காணக்கிடக்கின்றன என்கிறார்.சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வழக்கையைஆய்வு செய்து கீழ்க்கண்ட முடிவுக்கு வருகிறார் . சிவசுப்பிரமணியன்: அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது - அந்தணர்அடிமையாகும் வழக்கமில்லை. அடிமையாவோர் அடிமையாளருக்குஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு; இதற்கு ஆளோலை என்றுபெயர் - ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன்சாட்சிகளின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும் - தன்னைமட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக்கொடுக்கும் பழக்கம் உண்டு - அடிமை தன் பணியில் தவறினால்அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றங்களில் முறையிடலாம், தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையினை ஊரவை உறுதிப்படுத்தும் -வீட்டடிமையோடு, கோவில்களுக்கும், மடங்களுக்கும் கூட அடிமைகள் தானமாகவோ, விற்பனைக்கோ வழங்கப்பட்டார்கள்
-குழந்தைகள் கூட விற்கப்பட்டன. பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் - அடிமைகளுக்கு முத்திரையிடும் பழக்கமும்உண்டு - பரம்பரை வழி தகப்பன், அவனது மகன், மகனுக்குப்பின் பேரன் என அடிமை முறை நீடிப்பது உண்டு - அடிமைகள் தப்பித்து ஓடினால், பிடித்து வந்து தண்டித்த வரலாறும் உண்டு.இது மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் தமிழகத்தில் இருந்த அடிமைத்தனத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படி அடிமைகள் இருந்தாலும் அவர்கள் அடிமை சமூகமாக உணர இயலாத வகையில் சாதியப் படிக்கட்டுகளில் அமுக்கிவைத்து; ஆண்டவன் பேரால், மதத்தின் பேரால் அவர்களின் மூளையில் அறியாமைச் சங்கிலையைப் பிணைத்து வைத்து;
தீண்டாமைக் கொடுமைகளை அரங்கேற்றினர் என்பதே கசப்பான உண்மை. தீண்டாமையின் பேரால் சாதி அடிப்படையில்ஊர் - சேரிஎனப் பிரித்து வைத்திருக்கும் கொடுமை நம் அடிமைத் தனத்தின் நீளும் சாட்சி அல்லவா ?தனிப் புத்தகமே எழுதும் அளவு விரிந்த பொருள் இது . இடம் கருதி இத்தோடு முடித்துக் கொள்கிறோம் . மேற்குறிப்பிட்ட . சிவசுப்பிரமணியம் எழுதிய நூல் உள்ளிட்டு பல நூல்களை படித்து அறிக !
ஐரோப்பிய நிலப்பிரபுக்களைப் போல அல்லாமல் இந்திய நிலப்பிரபுக்கள் தம் பண்ணையாட்களைப் பெறாத பிள்ளைகளாகக் கவனித்துக் கொண்டனர் என்பதனால்தான் இங்கு நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான கலகங்கள் எழவில்லை என்பது மெய்யில்லையா?
சென்ற கேள்வியின் தொடர்ச்சிதான் இதுவும்.அடிமைகளின் கலகங்களைத் தொடர்ந்து இனியும் அடிமையாய் வைத்திருந்து வேலைவாங்க முடியாது என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடிமை என்பதற்குப் பதில் ஓரளவு சுதந்திரமுள்ள பண்ணையாட்கள் முறையை உருவாக்கினர். இதில் நிலத்தின் உரிமையும் மேலாண்மையும் நிலப்பிரபுக்கள் கையிலேயே இருக்கும். பண்ணையடிமைகள் இவர்களை அண்டி வாழவேண்டியவர்களாய் பொருளாதார நுகத்தடி பூட்டப்பட்டிருக்கும் . இந்த நிலப்பிரபுத்துவ முறை அதிகச் சுரண்டலுக்கு வழிசெய்தது .ஐரோப்பிய நாடுகளைப் போல் ஒரு சமூக அமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு இன்னொரு சமூக அமைப்பு என்பது இங்கில்லை .
ஆளும் வர்க்கம் மிகவும் சாமர்த்தியமாக அதிகாரத்தையும் மதத்தையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறை மூலம் தம் மேலாண்மையை நிறுவிக் கொண்டது . பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு இன்னது நேர்ந்துள்ளது என்பதை அறிவதற்கு கூட வழியில்லாமல் கடவுள், மதம் , சாதி இவற்றால் வஞ்சிக்கப்பட்டார்கள் . இங்குள்ள சாதி அமைப்பே நிலப்பிரபுவுக்கு சமூகத்தில் மேல்சாதி அந்தஸ்தும், சேற்றிலிறங்கிப் பாடுபடும் பாட்டாளிக்கு சூத்திர, பஞ்சம அந்தஸ்தும் தந்தது. இந்தியா முழுவதும் இப்படி உருவான நிலப்பிரபுத்துவம் குறித்து நிறைய ஆய்வு நூல்கள் வந்துள்ளன.“தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும்எனும் நூலில் பேரா. சி.கே. காளிமுத்து நிறைய விவரங்கள் தருகிறார். காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய வேளாண் சமூகம் குறித்து ஒரு பின்புலத்தை சுட்டுகிறார்.
சோழப்பேரரசாயினும் விஜயநகர சாம்ராஜ்யமாயினும் பிரம்மதேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கும், தேவதானம் என்கிற பெயரில் கோவில்களுக்கும் அதன் மூலம் பிராமணர்கள், வேளாளர்கள் என மேல்சாதியினருக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தியைச் சொல்கிறார். நிலத்தில் நேரில் இறங்கி பயிரிடாத பிராமணர்களின் நிலத்தை வாரக்குத்தகையில் இடைப்பட்ட சாதியினர் பயிரிட்டதை எடுத்துக்காட்டுகிறார். வேளாண்மை செழிக்க மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியதையும் மறுபுறம் தேவையான உழைப்பு சக்தியை திரட்டி உறுதிப்படுத்தியதையும் கூறுகிறார். அதுவே பள்ளர், பறையர் என அடிமைத்தனம் சாதிய வடிவில் கெட்டிப்படுத்தப்பட்டதையும்;
அதன் பொருட்டு அச்சாதியினர் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டதையும் அழுத்தமாக கூறியுள்ளார். இடைப்பட்ட சாதியினர் வைத்திருந்த துண்டு துக்காணி நிலத்தையும் பிடுங்கி பிராமணர்களுக்கு தானம் வழங்கினான் ராஜராஜ சோழன். இவ்வாறுகுடிநீக்கம்செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என்கிறார். ஒன்று. நிலவுடைமையாளர்கள் யாரும் ஒரு துண்டு நிலங்கூட உழைத்து சம்பாதித்ததில்லை. அவர்கள் நிலம் அனைத்தும் தானமாகப் பெற்றதும் அபகரித்ததும்தான். இரண்டு, தமிழகத்தில் அடிமைத்தனம் இருந்தது.
அது பள்ளர், பறையர் என சாதியாய் கெட்டிப்படுத்தப்பட்டது. மூன்று, வரிக்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் கலகங்கள் செய்துள்ளனர். அரசன் அதிகாரத்தை கேள்வி கேட்க கோவில் சுவரையே இடித்துள்ளனர். எல்லா கலகமும் ரத்தச் சகதியில் மூடி மறைக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்தின் முன்னும் பின்னும் தஞ்சை மாவட்டத்தில் வீறுகொண்டெழுந்த விவசாயிகள் எழுச்சி நிலப்பிரபுத்துவதின் கோரமுகத்தைப் படம் பிடிக்கும். வெண்மணி சம்பவமே நிலப்பிரபுத்துவம் இங்கு கருணையோடு இருந்ததில்லை என்பதை பறை சாற்றும். இந்தியா முழுவதும் இன்னும் நீடிக்கும் கொடூர தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, பின்தங்கிய நிலைமை தொடர நிலப்பிரபுத்துவம் நீடிப்பதே பெரிதும் காரணம் . ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தின் சாம்பல் மேட்டில் முதலாளித்துவம் பூத்தது போல் இங்கு பூக்கவில்லை; முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் சமரசம் செய்து கொண்டன. சாதிய தாண்டவத்துக்கும், மதவெறி பேயாட்டத்துக்கும் இது காரணமானது.
மன்னர் காலந்தொட்டு இன்றுவரை இடைத்தட்டு சாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்வதின் பொருளாதார வேர் நம் நாட்டில் நிலப்பிரபுத்துவம் உருவாக்கப்பட்டதில் உறைந்துள்ளது . ஆம் கடுமையான விவசாய வேலைகளைச் செய்ய தேவையான உழைப்பு சக்தியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள - அடிமைத்தனம் சாதிய முறையில் - தீண்டாமை வடிவில் இங்கு எல்லாகாலத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ள வரலாற்றை புரிவது தீண்டாமையை எதிர்த்துப் போராட மேலும் வலு சேர்க்கும்.

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13-08-2015


கட்டுடுடையும் ஆகமப் புதிர்கள்

Posted by அகத்தீ Labels:





கட்டுடையும் ஆகமப் புதிர்கள் 

சு.பொ.அகத்தியலிங்கம்.

“ஆகம விதிப்படி…..” என்கிற சொல் ஏதோ கட வுளே நேரில் வந்து கட்டளையிட்டது போன்ற தோற்றம் தமிழக பொதுபுத்தியில் முயன்றுதூவப்படுகிறது . ஆகமும் , வேதமும் ஒன்றல்ல என்கிற விளக்கம்கூட பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரியாது . தமிழில் வழிபட உரிமை வேண்டும் , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் எனக்கருதுவோர் ,கோருவோர் பலரும்கூட ஆகமம் பற்றிய குறைந்த பட்ச விவரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை .இதுதான் பிராமணிய சமஸ்கிருத ஆதிக்கத்தை திணிக்க விரும்புவோருக்கு சாதகமான அம்சமாகிறது.இந்தக் கையறு நிலையைப் போக்கஒரு விவரக் கையேடாக “ ஆலயமும்ஆகமும்” என்ற நூலைத் தந்திருக்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன் .

கோயில் கட்டும் முறை , வழிபடும் முறை , திருவிழா நடத்தும் முறை போன்றவற்றை வரையறுத்துச் சொல்லும் நூலே ஆகமங்கள் . இதனை சிவனே அருளியதாக சைவர்கள் நம்பிக்கை.மொத்தம் 28 ஆகமங்களென்றும் அதில் இப்போது மூன்றோ , நான்கோதான் நடப்பில் உள்ளதென்றும் நூலாசிரியர் விவரம் தருகிறார் .

“சிவன் ஆகமங்களை வெளியிட்டபோது தன்னுடைய கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும் என்றுதானே சொல்லியிருக்க முடியும் ? தமிழ்நாட்டில் சிவன் வணக்கத்திற்கு முன்னாலேயே இருந்த முருகன் வணக்கத்திற்கு எப்படி ஆகமத்தைக் கூறியிருக்க முடியும்? பிள்ளையார் வணக்கம் சிவன் வழக்கத்திற்குப் பின் ஏழாம் நூற்றாண்டில்தானே ஏற்பட்டது. அதற்கும் சிவன் ஆகமம் கூறியிருக்க முடியுமா ?” என நூலாசிரியர் எழுப்பும் கேள்விகள் பல பொய்மைகளைக் கட்டுடைக்கிறது .

வர்ணாசிரமத்தைக் காப்பது வேதம். ஆகமம் அதற்கு எதிரானது.உண்மையில் ஆகமம் ஆரியருடையது அல்ல . திராவிடருடையது .இது போன்ற பல உண்மைகளை இந்நூலில் அலசிக்காட்டியுள்ளார் ஆசிரியர் .

“வர்ணபேதம் காட்டும் வேதவழியும் , அந்த பேதம் இல்லாத ஆகமவழியும் ஒன்றாக இணைந்ததால் ஏற்பட்டத் தீங்கைத்தான் இன்று ஆலயங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன” என்று வேதனைப்படுவதோடு நில்லாமல் ; அது குறித்த விழிப்புணர்வை நூல் நெடுக விதைத்துள்ளார் செந்தில்நாதன் .

தமிழர்களின் வேதம் அல்லது நான்மறை அறம் , பொருள், இன்பம், வீடு என்பன .ஆரியர்களின் வேதம் இதுவல்ல.” என்று நூலாசிரியர் வாதிட்டு புதிய சிந்தனைக்கு வழிகோலுகிறார் . மரத்தடியில்தான் வழிபாடு தொடங்கியது ; ஆகமத்தின் தொடக்கமும் அங்குதான் என்கிறார்,
குமார தந்த்ரம் எனும் வடமொழிநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .இது எப்படி ஆரிய புரட்டாக முருகவழிப்பாட்டில் கலந்தது என்கிறார் .
“சஷ்டி பர்வ நவம்யாம் சத்வாத்ச்யாம் ப்ரதிபத் த்யாயிமாதா பித்ரோச்ச திவஸே நாச ரேத்தந்த தாவாதம்!!”இதன் பொருள் “ சஷ்டி ,அமாவாசை ,பவுர்ணமி , நவமி ,துவாதசி , பிரதமை ,தாய் தந்தையர் சிரார்த்த தினத்திலும் பல் தேய்க்கக்கூடாது.”இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் எனத் தோலுரிக்கிறார் .

இராமானுஜர் மோட்சம் கிடைக்க அவருக்குச் சொல்லப்பட்ட மந்திரத்தை அனைத்து சாதியினருக்கும் சொன்னார் என்பது பரவலாக நம்பப்படுகிற பேசப்படுகிற செய்தி .இது மெய்யா ? சந்தேகத்தைக் கிளப்புகிறார் இந்நூலாசிரியர் . பிரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜர் எழுதிய ஸ்ரீபாஷ்யத்தில் பிராமணர்களுக்கு மட்டும்தான் மோட்சம் கிடைக்கும் என்று எழுதியிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் .

‘ஆலய நுழைவும் ஆகமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்’ என்ற அத்தியாயம் ஆகமம் தடுத்ததையும் நீதிமன்றம் உடைத்ததையும் எடுத்துக்காட்டுகிறது . புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி இது . அதுபோலவே அடுத்த அத்தியாயம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரத்தைச் சொல்லுகிறது .மகராஜன் குழு அறிக்கை , ராஜன் குழு அறிக்கை போன்றவை பயனுள்ள பின்னிணைப்பு.

இந்நூல் நாத்திக நிலையில் எழுதப்பட்டதல்ல ; மாறாக தமிழில்வழிபாடு , அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் போன்ற ஜனநாயக நோக்கங்களுக்காக ;கடவுள் நம்பிக்கையுள்ளோரையும் திரட்டும் பொருட்டு - தமிழக சைவ , வைணவமரபின் சில கூறுகளை முன்னிறுத்தியும் - அதனை மீறும் சிவாச்சாரியார் குறித்து விழிப்புணர்வு ஊட்டவும் எழுதப்பட்டதே !

“பொருளாதார ரீதியாக லாபம் இருந்தால் ஆகமவாதிகள் ஆகமத்தைத் தூக்கி புழக்கடையில் வைப்பார்கள் . அப்படி லாபம் இல்லை என்றால் ஆகமத்தைத் தூக்கி முன்வாயிலில் வைப்பார்கள்” என்று நூலில் ஓரிடத்தில் ஆசிரியர் சொல்லுகிறார் .

பிராமணியமும் சமஸ்கிருதமும் ஆதிக்கம் செய்ய பின்னப்பட்டுள்ள சதிவலையை அறுக்க இந்நூல் பெரிதும் உதவும் கருத்தாயுதமாகும் என்பதில் ஐயமில்லை .

ஆலயமும் ஆகமமும்,ஆசிரியர் :
சிகரம் ச. செந்தில்நாதன்,
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
புதிய எண் 77 , 53 வது தெரு ,9வது அவென்யூ,
அசோக்நகர், சென்னை- 600 083.
பக் : 224 , விலை: ரூ.195.


மார்ச் 8

Posted by அகத்தீ Labels:




மார்ச் 8
சர்வதேச உழைக்கும்பெண்கள் தினம்

ஒரு வேண்டுகோள்


னக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க...
துணிகள் இருக்கின்றன; தைக்க...
தரை கிடக்கிறது; துடைக்க...
தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற...
உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட...

ன்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!
என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே...
என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு...
இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு...

 - மறைந்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞர்  மாயா ஏஞ்சலோ எழுதியது. மொழியாக்கம் யாரெனத் தெரியவில்லை . பாரதி பாஸ்கர் கட்டுரையூடே கண்டெடுத்தது .


நான் !
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,


ன்னை,
போற்ற வேண்டாம்,
புகழ வேண்டாம்,
வர்ணிக்க வேண்டாம்,
ஆறுதல் மொழிகள் வேண்டாம்,
கொண்டாட்டம் வேண்டாம்,
கண்ணீர் வேண்டாம்,

நான்!
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,

னக்கு,
வாக்குறுதிகள் வேண்டாம்,
வாழ்த்துகள் வேண்டாம்,
பரிசுகள் வேண்டாம்,
பாராட்டு வேண்டாம்,
மாலைகள் வேண்டாம்,
மகுடங்கள் வேண்டாம்,




நான் !
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,

ன்னை,
தோளில் தூக்கி
சுமக்கவும் வேண்டாம்,
காலில் போட்டு
மிதிக்கவும் வேண்டாம்,


நான்!
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல ,





நீ !
மனிதன்.
நான்!
மனுஷி.
அந்த நினைவிருக்கட்டும் எப்போதும்,
அது போதும் !!

- சு.பொ.அகத்தியலிங்கம்.





வெற்றிடம் நிரப்ப ஆன்மீகமன்றி வேறு மார்க்கம் ஏது?

Posted by அகத்தீ Labels:










வெற்றிடம் நிரப்ப ஆன்மீகமன்றி 
வேறு மார்க்கம் ஏது?


சு.பொ. அகத்தியலிங்கம்

[ தீக்கதிர் வண்ணக்கதிரில் மாதமாதம் ஐந்து கேள்விகள் வீதம் இதுவரை 85 கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன் . இன்னும் 15 கேள்விகளே உள்ளன . வண்ணக்கதிர் வடிவம் மாறியதையொட்டி வாரம் இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கே இடம் கிடைக்கும் . வாரவாரம் தொடரும் . நூறு கேள்வி- பதிலோடு நிறையும் . அதாவது இந்தவாரக் கேள்வியும் சேர்த்து இன்னும் 15 கேள்விகளே ]

·         நீங்கள் நம்புகிற அறிவியல், கொள்கை, கோட்பாடுகள், தத்துவம் எல்லாம் ஏதேனும் ஒரு கட்டத்தில் உங்களைக் கைவிடலாம். இவை எல்லாவற்றிலும் உள்ள போதாமை அப்போது உங்கள் முன் பெருங் கேள்வியாகலாம். அப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆன்மீகத்தைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

·         முழுக்க முழுக்க ஒரு நாத்திகராய் உங்களால் வாழ்ந்திட முடியுமா? சவால் விட்டுக் கேட்கிறேன்.


கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் கேட்கிறார்கள் என்றபோதிலும் அவற்றை ஒதுக்கிவிட முடியாதுதான்.


நீங்கள் நம்புகிற அறிவியல், கொள்கை, கோட்பாடுகள், தத்துவம் எல்லாம் ஏதேனும் ஒரு கட்டத்தில் உங்களைக் கைவிடலாம். இவை எல்லாவற்றிலும் உள்ள போதாமை அப்போது உங்கள் முன் பெருங் கேள்வியாகலாம். அப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆன்மீகத்தைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

விடுதலைப் போரில் தீவிரவாதியாய் களத்தில் நின்ற அரவிந்தர் பின்னர் ஆன்மீகத் துறவியாய் மாறினார். துறவியாய் நடைபயணம் புறப்பட்ட சுவாமி சகஜானந்தா உழவர்களின் துயர் கண்டு வருந்தி விவசாயிகள் சங்கத்தில் செங்கொடி ஏந்தி போராடினார். பீகாரில் அவரது போராட்டம் வலுவாயிருந்தது. புத்த துறவியாய் ஊர்சுற்றியாய்  உலகெங்கும் பயணித்த ராகுல சாங்கிருத்தியாயன் மார்க்சியத் தத்துவஞானி ஆனார். கேரளத்தில் நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாய் இருந்த பிலிப் எம் பிரசாத் பின்னர் சாயிய்பாபா பக்தரானார். கிறுத்துவ பாதிரியாராக முயன்ற எஸ்.ஏ. தங்கராஜ் தொழிலாளர் வேதனைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட் ஆனார்..... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 பயணம் தொடங்கிய திசையில் இல்லாமல் வேறிடம் போய் சேருவது பலர் வாழ்வில் நடக்கும். இதில் முன்னோக்கிப்  போனவர் பாதையும் பின்னோக்கிப் போனவர் பாதையும் ஒன்றல்ல.
தனிமனிதர்கள் என்கிற முறையில்  வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தின் தேவைகளும் தேடல்களும் சூழலும் அனுபவமும் வாய்ப்பும் சில கருத்தோட்டங்களை செதுக்கும்; அதுவும் மாறிக் கொண்டே இருக்கும். 

 வாழ்க்கைப் போராட்டத்தில் சலிப்பும் சோர்வும் ஏற்படும் வேளையில் அதுவரை நம்பிய அறிவியல், தத்துவம், கோட்பாடு எல்லாம் கைவிட்டுவிட்டதாகவோ – வாழ்வைப் புரிந்து கொள்ள அவை போதவில்லை என்றோ ஒருவர் கருதக்கூடும். இது இயல்பானது. அடுத்து அவர் ஆன்மீகத்துக்குத் திரும்பினால் அது அவரின் தனிப்பட்ட வீழ்ச்சி, அவ்வளவே.
 ஆன்மீகம் தீர்வா? அல்ல. அங்கேயும் புதிய புதிய கடவுளையும் சடங்குகளையும் தேடிக்கொண்டே இருப்பது ஏன்? அங்கேயும் ஏதோ வெற்றிடம் போதாமை இருப்பதால்தானே அவ்வாறு நிகழ்கிறது?

அந்த சுவாமி சன்னதிக்குப் போங்கள் அவர் சக்திவாய்ந்த பகவான்; இந்த அம்மன் கோவிலுக்கு போங்க அது பவர்ஃபுல். அந்த தர்காவில் வழிபட்டால் துயரம் நீங்கும், இந்த தேவாலயத்திற்குப் போனால் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் மடைமாற்றிவிட ஆட்கள் உண்டு. மாறிமாறிப் போயும் கண்ட பலன் ஒன்றுமில்லை.கடன் அதிகரித்ததுதான் மிச்சம். இப்போது ஏது வழி? தியானம், யோகா, பக்தி எல்லாம்கூட பிரச்சனைகளுக்குத் தீர்வு தந்துவிட முடியுமா?
 நிக்கோலாய் ஓஸ்ட்ரோவ்ஸ்கி  எழுதிய “வீரம் விளைந்தது” நாவலில் வரும் வார்த்தைகளை இங்கு நினைவு கூருவது சாலப்பொருத்தமே: 
 “மனிதரது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் மிகச் சிறந்தது வாழ்வாகும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிக்காத வகையில் அவர் நேராக வாழவேண்டும்.உலகின் தலைசிறந்த லட்சியத்திற்காக, மனித குலத்தின் விடுதலை என்ற பொன்னான மார்க்கத்துக்காக  நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்போது கூறும் உரிமை பெறும் வகையில் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால் மனிதர் தம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

-இந்நாவலை முழுமையாக வாசிப்பது தெளிவை தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
 குழந்தையாக இருக்கும் போது தைத்த சட்டை கொஞ்சம் வளர்ந்த பின் பொருந்துவதில்லை; புதிது தேவைப்படுகிறது. மனிதகுலமும் தான் குழந்தைப் பருவமாய் இருக்கையில் கொண்டிருந்த பல நம்பிக்கைகள், அனுமானங்கள்  அப்படியே தொடரவில்லை; தொடரவும் முடியாது. அனுபவமும் தேவைகளும் புதியன தேட உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும். அதே சமயம் அவற்றுக்குள் ஒரு தொடர்ச்சியும் இருக்கவே செய்யும்.

“ மனிதகுல அறிவு என்பது – ஒரு நேர் கோட்டுப் பாதை அல்ல மாறாக வளை கோடாகும்; அது வட்டங்களின் தொடராக அதாவது உயரமாக முடிவின்றிச் செல்லும் வட்டச் சுழற்சியை ஏறத்தாழ ஒத்திருக்கும்,” என்பார் லெனின்.

 ஆகவே மனித குலம் என பொதுமைப்படுத்திப் பார்க்கும்போது அதன் சிந்தனை திருப்தி அடைந்து முடங்கிவிட முடியாது; முட்டி மோதி முன்னேறிக் கொண்டேதான் இருக்கும்.

முழுக்க முழுக்க ஒரு நாத்திகராய் உங்களால் வாழ்ந்திட முடியுமா? சவால் விட்டுக் கேட்கிறேன். …

 “... ‘ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி’ என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (விவிலியம்; மத்தேயு 27:46).

“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று இதற்குஅர்த்தமாம். 
ஏசு நாதரே தேவன் மீது நம்பிக்கை இழந்து நாத்திகர் போல் கூப்பிட்டிருக்கிறார். இதனையும் மேலும் சில காட்சிகளையும் முன்வைத்து ஏசு ஒரு நாத்திகர் என வாதிடுவோர் உண்டு. அப்படி ஒரு புத்தகமே படித்த ஞாபகம். நான் அப்படிக் கருதவில்லை.

ஒருவர் முழுக்க நாத்திகராக வாழ விரும்பினாலும் சுற்றுச்சூழல் , பொதுமரியாதை, குடும்பச்சூழல் இவற்றால் சிலருக்கு சில சமரசங்கள் தவிர்க்கவே இயலாமல் போகலாம். மேலும் பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டு வாழ்வோடு ஊடாடிக் கொண்டிருக்கும் மதம் சார்ந்த, சடங்குகள் சார்ந்த கருத்தோட்டங்கள் சில நேரங்களில் நாத்திகரிடமும் எதிரொலித்துவிடக்கூடும்.

இந்தியச் சூழலில் நாத்திகராய் இருப்போரிடையே சிலரிடம் அவ்வப்போது சாதிய உணர்வு தலைதூக்கக் காணலாம்; ஆணாதிக்கம் மேலோங்கக் காணலாம். “மேடையில் புரட்சிகரமாய் முழக்கமிடும் பலர் வீட்டில் இந்துக் கணவனாய் மனைவியை  அடக்கி ஆள்வதைக் காண்கிறோம்” என்பார் கம்யூனிஸ்ட் தோழர் பி.டி. ரணதிவே.
ஆக, முழு நாத்திகராக, பகுத்தறிவாளராக, கம்யூனிஸ்டாக முழுமையாய்ப் பரிணமிப்பது கடும் போராட்டமே.

 வியட்நாம் புரட்சியின் நாயகன் ஹோசிமின் ஒரு முறை சொன்னார், “நான் கம்யூனிஸ்ட்டாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.” இதனை மேற்கோள் காட்டி இ.எம்.எஸ். இவ்வாறு சொன்னார்: “ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிவிட்டதாலேயே அவர் கம்யூனிஸ்ட் ஆகிவிடமாட்டார். கம்யூனிஸ்ட் என்பவன் புதிய வார்ப்பு. நானும் கம்யூனிஸ்ட்டாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பாட்டாளி வர்க்க கருத்தோட்டத்துக்கு மாறாக அந்நிய வர்க்க கருத்தோட்டங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்; அதை எதிர்த்து ஒவ்வொருவரும் தன்னுள் போராட்டம் நடத்துவதன் மூலமே மெய்யான கம்யூனிஸ்ட்டாக மாறமுடியும். நானும் அவ்வழியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார். சரிதானே !
 ஆயினும் ஒப்பீட்டளவில் நாத்திகர், பகுத்தறிவாளர், கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோர் ஏனையோரைவிட தமது லட்சியத்துக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றுகொண்டே இருப்பார்கள் என்பதே உண்மை .
அதே போல் முழு ஆத்திகர் என்று சொல்பவர் நடை முறையில் அறிவியல் சாராமல் வாழவே இயலாது; அவரது நடைமுறை வாழ்க்கை மேலும் மேலும் அறிவியலொடு பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும். ஆனால் அவரின் சிந்தனையோ அதற்கு நேர் எதிரான மூடநம்பிக்கைகளோடும் மத உணர்வோடும் பின்னியிருக்கும். இந்த முரண்பாடு பளிச்செனத் தெரியவும் செய்யும்.


நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் 6-03-2016.