வள்ளுவன் தமிழ் மையம்

Posted by அகத்தீ Labels:

 





 

 


 “இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”   ( திருக்குறள் : 621)

 

துன்பங்களைக் கண்டு கலங்காதிரு ! முகமலர்ச்சியோடு எதிர்கொள் ! அதுவே அதனை வெல்வதற்குத் தக்க வழி . அடுத்து இன்பம் காத்திருக்கும் .

 

இன்று என் மனம் ஏனோ இதில்  நிலைகுத்தி நிற்கிறது .  

 

 சனிக் கிழமை [ 31/05/25 ] வர்ஜீனியாவில் எமது நாள் அப்படித்தான் நகர்ந்தது சற்று எதிர்மறையாக . இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே !

 

ஆம். அன்று காலை எழுந்தது முதல் இரவு உணவு வரை . ஒரே உற்சாகம் .மகிழ்ச்சி . அடுத்தூர்ந்தது .. ? கடைசியில் பார்ப்போம். அது சொந்தக் கதை .

 

இங்கு ஓர் புகைப்  படத்தில் ஏடுகள் தொங்கிக் கொண்டிருக்கும் . அது எழில் கொஞ்சும் “திருக்குறள் ஆலமரம்” . அதில் தொங்கும் 1330 திருக்குறள்களையும் தம் கையால் வரைந்தவர்கள் மாணவச் செல்வங்கள் . ஆசிரியர்களும் இதர தன்னார்வலர்களும் கூடி வடிவமைத்த இந்த திருக்குறள் ஆலமரத்தை வ.த.மை ஆம் வர்ஜீனியாவில் உள்ள  “வள்ளுவன் தமிழ் மையம்”  சாதித்திருக்கிறது .

 

15 ஆண்டுகளுக்கு முன் 15 மாணவர்களுடன்  துவக்கப்பட்ட  வள்ளுவன் தமிழ் மையம் எனும் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளி இன்று முதல் நிலை முதல் எட்டாம் நிலை வரை 700 மாணவர்களுடன் ஆலமரமாக வளர்ந்துள்ளது . சனிக்கிழமை தோறும் நடக்கும் இப்பள்ளியில் முழுக்க முழுக்க ஊதியமின்றி உழைக்கும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் தன் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டும் தமிழ் மக்களின் பேராதரவு இவையே அடிஉரம் .

 

இப்பள்ளியின் 15 வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . அமெரிக்க தேசிய கீதம் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்ந்து என  எடுத்த எடுப்பிலேயே தன் பண்பாட்டு முத்திரையை வலுவாய் பதித்தது . நிகழ்வின் கருப்பொருள் வள்ளுவமே . வள்ளுவமும் தமிழுமே நிகழ்வு நெடுக ஓங்கி ஒலித்தது .

 

மாணவ மாணவிகளின் ஒவ்வொரு கலைநிகழ்வுக்கும் இடையில் மாணவர் இருவரின் அறிமுக உரையாடலும் வள்ளுவம் சார்ந்தே அமைந்தது . மாணவர் பங்கேற்கும் ஓர் ‘மினி பட்டி மன்றமும் ‘ இடம் பெற்றது .அதுவும் வள்ளுவம் சார்ந்ததே .

 

மொத்தம் 44 நிகழ்வுகள் இடம் பெற்றன ஒவ்வொன்றும் தமிழ் தமிழ்  என முழங்கின .தமிழ் பண்பாடு மிளிர்ந்தது .பறை , ஒயில் ,கும்மி , முளைப்பாரி ,காவடி , பொய்க்கால்குதிரை ,சிலம்பம் , வாய்ப்பாட்டு ,சேர்ந்திசை ,பரதநாட்டியம் ,கர்நாடக இசை , அறிவியல் விழிப்புணர்வு என கலக்கி எடுத்தனர் . சாதி ,மத வண்ணம் எங்கும் பூசிக்கொள்ளாத தமிழ் உணர்வாக வள்ளுவன் உணர்வாக மொத்த நிகழ்வும் எம்மைக் கட்டிப் போட்டது . ஏதேனும் ஒன்றை மட்டும் தனியே குறித்தால் நிகழ்வின் ஊடும் பாவுமாய் இருந்த மனிதமும் பண்பாடும் முழுதாய் பிரதிபலிக்காது என்பதால் பொதுவாய்ச் சொன்னோம். ஆயினும் நிகழ்வு முழுக்க நாட்டுபுறவியலும் தமிழும் தமிழ் பண்பாடும் நீக்கமற நிரவி இருந்தது குறிபிடத்தக்கது . ஆகவேதான் இறுதிவரை கைதட்டலும் ஆரவாரமும் அரங்கில் நிரம்பி வழிந்தோடியது .

 

என் பேரன் முகிலன்  காவடி ,பொய்க்கால்குதிரை ஆடியதும் ; என்  பேத்தி மேகா பறை இசைக்கு ஆடியதும் எமக்கு பெரு மகிழ்ச்சி . மிகுந்த மனநிறைவு.

 

 

அமெரிக்க செனட் உறுப்பினர் . நாடாளுமன்ற உறுப்பினர் . தூதுரக அதிகாரி உட்பட பலர் சிறப்பு விருந்தனராக வந்து கலந்து கொண்டதும் ; செனட் சார்பாக வள்ளுவன் தமிழ் மையத்தைப் பாராட்டி பட்டயம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது .  எட்டாம் நிலை தேர்வு பெற்றவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது . தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலோடும் பாடதிட்டங்கள் , தேர்வு எல்லாம் வடிவமைக்கப்படுவதால் அமெரிக்க கல்வித்துறையும் இங்கு பெறும் சான்றிதழை அங்கீகரிக்கிறது . தனிப்பட்ட யாரையும் முன் நிறுத்தாமல் குழுவாக அனைவரும் இயங்கியதும் வெளிப்பட்டதும் அந்த அமைப்பைப் பாராட்டத் தோன்றியது .

 

வர்ஜீனியாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இதுபோல் தமிழ் கற்பிக்க பலவேறு பள்ளிகள் நடத்தப்படுவதாக அறிகிறோம்.

 

வள்ளுவன் தமிழ் மையம் போல் மற்றவைகளும் இயங்குமெனில் நிச்சயம் மகிழ்ச்சியே !

 

காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்வுகள் இரவு 7 மணிக்குத்தான் நிறைவுற்றது [ இடையில் மதிய உணவு , மாலை சிற்றுண்டி  இரவு உணவும் அங்கேதான் ஏற்பாடு]

 

இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

 

காலை முதல் மாலைவரை வர்ஜீனியாவில் இருக்கும் உணர்வே யாருக்கும் இல்லை .தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் கூடிக் கொண்டாடிய மன நிறைவு .

 

########################

 

இரவு உணவை முடித்து அரங்கிலிருந்து புறப்படும் போது என் இணையருக்கு சின்ன விபத்து . உடன் மருத்துவ சிகிட்சையின் பொருட்டு எம் பயணத்தை பத்துநாட்கள் முன்நகர்த்த [ ஜூன்5 , 6 ]வேண்டியதாகிவிட்டது . ஜூன் 6 இரவு பெங்களூர் வந்து சேர்வேன் .ஆபத்தொன்றும் இல்லை . பயப்படத் தேவை  இல்லை . அமெரிக்க மருத்துவத்துறையின் கோரமும் கொடூரமும் பகற்கொள்ளையும் புரிந்தது .பிறகு எழுதுவேன்.   

 

ஆரம்பத்தில் சுட்டிய குறளுக்கு மீண்டும் செல்கிறேன்.

 

சுபொஅ.

02/06/26

வர்ஜீனியா .

 



0 comments :

Post a Comment