ரெளத்திரம்
பழகிக்கொண்டே இருக்கிறேன்……
நேற்று முழுவதும்
என் பிறந்த நாளுக்கு [15/6/1953] வாழ்த்துமழை பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என்
நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தோழமை அன்பில் திக்குமுக்காடிப்
போனேன். நன்றி ! நன்றி! நான் ஓர் கம்யூனிஸ்ட் என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [
மார்க்சிஸ்ட்] உறுப்பினர் என்பதுமே என் மகிழ்வும் பெருமையும்.
இந்த ஆண்டு
பிறந்த நாளை வர்ஜீனியாவில் பேரப்பிள்ளைகளோடு கழித்த பின்னார் 16 ஆம் தேதிதான் ஊர்திரும்பத்
திட்டமிட்டிருந்தோம் . எதிர்பாராவிதமாக கிழே விழுந்து என் இணையருக்கு இடது கை தோள்பட்டை
அருகே முறிவு ஏற்பட்டதால் அவசரமாக ஆறாம் தேதியே புறப்பட்டு பெங்களூர் வந்து அறுவை சிகிட்சை
செய்ய வேண்டியதாயிற்று . இப்போது நலம் மீண்டு வருகிறார். வாழ்வும் போராட்டமும் பிரிக்கவே
முடியாதது . இன்பமும் துன்பமும் இரவும் பகலுமாய் மாறி மாறி கடந்து போய்க்கொண்டே இருக்கும்
.இதுதானே வாழ்க்கை .
நாங்கள் அவசரமாக
ஊர் திரும்ப நேரிட்ட போதும் என் மகன் வழிப் பேரன் முகிலன் [ வயது 11 ]அவசர அவசரமாக
ஒரு மணி நேரத்தில் வரைந்து அளித்த ஓவியமே இப்பிறந்த நாளுக்கு நான் பெரிதும் மகிழும்
பரிசாகும் . இங்கே அந்த ஓவியத்தைப் பகிர்ந்துள்ளேன் மகிழ்வோடு . என் மகள் வழிப் பெயரன் சஞ்சை ஹஷ்மி பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸைப் பயிலத்
தொடங்கி இருக்கிறான் என மகள் சொல்லும் செய்தியைவிட எனக்கு இனிய பிறந்த நாள் பரிசு உண்டா ? பேத்திகள் சங்கமித்திரா
,மேகா சொன்ன வாழ்த்தினும் பெரிதுண்டோ !
என் ஒவ்வொரு
பிறந்த நாளின் போதும் முகநூலிலும் அலைபேசியிலும் என்னை வாழ்த்தி மகிழும் அன்புத் தோழர்
K.சின்னையா குரலை இனி கேட்கவே முடியாது என்பதே இந்நாளில் என் பெரும் துயரம் .என் பேரிழப்பு.
வயது ஒன்று
கூடிவிட்டது . அனுபவம் மேலும் பக்குவப்படுத்திவிட்டது . ஆனாலும் உலகிலும் இந்தியாவிலும்
நிலவும் சமூக அரசியல் சூழல் நெஞ்சம் பதைக்க வைக்கிறது . யுத்த வெறி ,சுரண்டல் வெறி
,மதவெறி ,சாதிவெறி,இனவெறி,நிறவெறி ,தேசியவெறி,மொழிவெறி ,பிரதேசவெறி ,என எந்தப் பெயரால்
வெறி கொள்ளினும் வெறுப்பு இருள் சூழும் ;அன்பு பலியாகும்;மானுடம் தேம்பி அழும். இதற்கு எதிராய் ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன். போரற்ற
உலகம் , சுரண்டல் எதிர்ப்பு , சமத்துவம் , அறிவியல் பார்வை ,சமூகநீதி ,பகுத்தறிவு,பாலின
சமத்துவம், மானுட அன்பு , ஆதிக்க எதிர்ப்பு ,மூடநம்பிக்கை எதிர்ப்பு , இவற்றை என்னால்
இயன்றவரை பேசிக் கொண்டே இருக்கிறேன் . எழுதிக் கொண்டே இருக்கிறேன் .இனியும் தொடரும்
. இதுவே என் பிறந்த நாள் செய்தி.
வாழ்த்திய
அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றி !
சு.பொ.அகத்தியலிங்கம்.
16/06/25.