நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது……

Posted by அகத்தீ Labels:

 





 “ ’இந்து – இந்தி – பாஜக’ எனும் சூத்திரத்துக்குள் கெட்டிப்படுத்தபடும் மனிதத் திரள் என்பது எவ்வளவு ஆபத்தான நகர்வு என்பதை அழுத்தமாகச் சொல்கிறது…”

 

[ மிக முக்கியமான நூல் குறித்தது .கொஞ்சம் நெடிய கட்டுரையாகிவிட்டது . இன்றைக்கு தேவையானது . அருள்கூர்ந்து பொறுமையாய் முழுதாய் வாசிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.]

 

நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது……

 

நிதானமாக வாசித்தேன்.. சில பக்கங்களை ஒரு முறைக்கு இரு முறை வாசித்தேன் . கவலை ,கோபம் , அறச்சீற்றம் எல்லாம் ஒருங்கே பீறிட்டன . இந்நூலைப் படிக்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படலாம்.

 

நான் இந்நூலை கடந்த ஒரு வருடமாகக் கேள்விப்படுகிறேன் . விஜய்சங்கர் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதுமே “ கோணல் மரம்” என்ற சொல் சரியா என கேட்டு பொதுவெளியில் பதிந்தார் . பொருளாதார நூலென்றே எண்ணி இருந்தேன் .வாசித்தபின் அதிர்ந்தேன் . மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் ஸ்கேன் ரிப்போர்ட்டாக , பரகால பிரபாகர் எழுதிய நூலே  “ புதிய இந்தியா எனும் கோணல் மரம் “

 

நூல் முகப்பில் சொல்லப்பட்டுள்ள  “ கோணல் மரமான மனிதகுலத் திலிருந்து நேரான எதுவும் ஒரு போதும் உருவாக்கப்பட்டதில்லை” என்ற  இம்மானுவேல் காண்ட் பொன்மொழியில் இருந்தே தலைப்பு உருப்பெற்றுள்ளது .   

 

நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு பற்றிய கட்டுரைகள்” என்பது நூலின் துணைத் தலைப்பு மட்டுமல்ல ; நூலின் உள்ளடக்கச் சாறும் ஆகும் . எம் இனிய  தோழர் ஆர் .விஜயசங்கர் அலுப்புதட்டாத ஆற்றொழுக்கு நடையில் நன்கு தமிழாக்கம் செய்திருக்கிறார்.வாழ்த்துகள்.

 

“நம் ஜனநாயகம் ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது ;நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது ; நம் பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறது ; நாம் இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறோம். இதை வலுவாகவும் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவதும் , எச்சரிக்கை மணி ஒலிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை. என்னுடைய இந்தப் பத்திகள் ,பேச்சுகள் மூலமாகவும் ,இந்த நூலின் வழியாகவும் ,நானொரு குடிமகன் என்கிற முறையில் இந்தக் கடமையைச் செய்கிறேன்.” என்கிறார் அறிமுக உரையில் பரகால பிரபாகர் .

 

அறிமுகம் உட்பட 24 அத்தியாயங்கள்  கொண்டது. பத்து தளத்தில் விவாதிக்கின்றது . தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நம் சமூகம் ஆழ்ந்து கவலைப்பட வேண்டிய,சீறி எழ வேண்டியவை அவை .

 

 ‘மோடி vs மோடி ’ அத்தியாயம் தொடங்கி “ ஆன்மீக இந்தியா ,அரசியல் இந்தியா – ஓர் ஆய்வறிக்கை’ முடிய 64 பக்கங்களில் 6 அத்தியாயங்களில் சொல்லப்பட்ட செய்திகள் அதிமுக்கியமானவை . ’இந்து – இந்தி – பாஜக’ எனும் சூத்திரத்துக்குள் கெட்டிப்படுத்தபடும் மனிதத் திரள் என்பது எவ்வளவு ஆபத்தான நகர்வு என்பதை அழுத்தமாகச் சொல்கிறது . நூலறிமுகத்தில் அனைத்தையும் சொல்ல வாய்ப்பில்லை . ஒரு குறிப்பைச் சொல்கிறேன் ;

 

 எல்லா விஷயத்திலும் மோடி இரட்டை நாக்கோடு பேசுவதை நூல் நெடுக பரகால பிரபாகர்  தோலுரிக்கிறார் .மக்கள் தொகை பெருக்கம் என்பது குறித்து உண்மைக்கு மாறாக பிரதமரும் அவரது ஊதுகுழல்களும் பேசிவருகின்றனர் . சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பை ஊட்டுவதே இதன் அடிப்படை . இது குறித்து பரகால பிரபாகர் சொல்கிறார் ,

 

 “இந்தியாவில் கருவுறு விகிதம் கணிசமாகக் குறைந்து 2:2 என்கிற அளவை எட்டி இருப்பதாக ……… ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது கொள்கை .செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து சுதந்திர தினத்தன்று பிரதமர் பேசியது அரசியல் . தான் ஆளும் மாநிலங்களில் இது குறித்து பாஜக செய்வதும் அதே அரசியல்தான். ‘நாம்’ என்பதை ‘அவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் அரசியல். அதற்குப் பின் ‘நாம்’ ‘அவர்களை’நிராகரிப்போம். ‘நமக்கு’ அவர்கள்’ வேண்டாம் . ‘நாம்’ பாஜகவுக்கு வாக்களிப்போம் . அதாவது ‘நமது’மதத்துக்கு . ‘நாம்’என்கிற சொல்லுக்கு .’நாம் மட்டுமே’ என்கிற அடையாளத்துக்கு ! இதுதான் பாஜக அரசியல் .”

 

அலைபேசியில் ‘ ஆபாசக் காட்சிகளைப் பார்க்கிறீர்களா?” எனும் கேள்விக்கு ‘இல்லை’ என வேகமாகத் தலையாட்டிவிட்டு , யதார்த்ததில் அவர் அலைபேசியில் அதனைத் தேடித் தேடி ரசிப்பது போன்ற உளநிலை மதவெறி விஷயத்திலும் ஒரு பகுதி இந்தியருக்கு ஏற்பட்டிருப்பதை இந்நூலில் ஆசிரியர் விவரித்திருக்கிறார் . பெரும்பான்மையினரின் உளவியலில் மதவெறி நஞ்சு மெல்ல கலக்கப்பட்டு ஜனநாயம் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி இருப்பதை இப்பகுதிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன .

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதில் ‘ கண்டித்த வாய்கள்’ பல , அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மாற்றிப் பேசி ’ஜெய்ஸ்ரீராம்’ சொன்னதை இதோடு இணைத்துப் பாருங்கள் ஆபத்தின் விஸ்வரூபம் புரியும்.

 

“ ஸ்ரீ மோடியை வழிபாட்டுக்குரிய பிம்பமாக மாற்றியது அவரது கட்சி மட்டுமல்ல ; அவர் நடத்தும் அரசாங்கமும் அதை உருவாக்கிப் பரப்புவதற்கு இரவு பகலாக வேலை செய்தது.” இந்த விவரங்களை  “அசாதாரணமாக்கு அதைக் காட்சிப் படுத்து” என்ற அத்தியாயத்தில் 10 பக்கங்களில் சொல்லி இருப்பது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். ஐ நாவில் உரையாற்றிய ஒரே பிரதமர் , முதலமைச்சராக இருந்து பிரதமரான ஒரே தலைவர் மோடி போன்ற அப்பட்டமான பொய்களைக்கூட கூச்சமின்றி சொல்வது ; புராணக் கதைபோல் புளுகி பாலகன் மோடி குறித்து காமிக் வெளியிடுவது ; மோடி பிறந்த நாளில் தடுப்பூசி சாதனை என விளம்பரம் [ கடைசியில் உள்ள கொரானா பற்றிய பெரிய அத்தியாயம் இன்னும் சொல்லும் ] என ஒவ்வொன்றையும் பரகால  பிரபாகர் வேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார் .

 

 “ஒன்று ,இணைய மேடைகளில் நாம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நசுக்கப் பார்க்கிறது . இரண்டு , நம் அனுமதி இல்லாமலேயே நம்முடைய தனிப்பட்ட தரவுகளை தொழில் நுட்ப நிறுவனங்கள் சேமித்து வைத்திருப்பது. மூன்று ,அரசாங்கமும் இந்த நிறுவனங்களும் வைத்திருக்கும் நம் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு .” இந்த மூன்று பிரச்சனைகளையும் அலசும் “ ‘தன்முனைப்பாட்சி’ .இணைய சுதந்திரம் .தரவுத் தனிஉரிமை” என்கிற ஆழமான  12 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை ஆழ்ந்து வாசித்து ஆபத்தை உள்வாங்க வேண்டும் . “ விதிமுறைகள் .நிபந்தனைகள் குறித்த நீளமான ஆவணத்தை நம்மில் எவராவது முழுமையாகப் படிக்கிறோமா என்பது சந்தேகமே” என்கிறார் நூலாசிரியர் . படித்தாலும் சிலவற்றை ஏற்க மறுக்க உங்களுக்கு வழி உண்டா  என்பது என் கேள்வி.

 

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்  இயக்கத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சமந்தமே கிடையாது ஆயினும் மரபுரிமையைத் திருட முயற்சிப்பதை , “ சுபாஷ் போஸும் ,புதிய இந்தியாவில் வேட்டையாடுபவர்களும் “ எனும் எட்டு பக்க அத்தியாயத்தில் நச்சென்று நெற்றிப்பொட்டில் அறைகிறார் . “….தேசபக்தி குறித்தான தன் தந்திரமான கதையாடலை நிலைநிறுத்துவதற்காக காந்திஜி ,பட்டேல் ,நேரு மற்றும் போஸுடன் தற்போது சாவர்க்கரையும் கோட்சேவையும் இணைத்து ஒரு புதிய நாட்டார் கதையை உருவாக்கி இருக்கிறது .இந்தியாவைக் குறித்து இந்த மனிதர்களின் சிந்தனைகளில் இருந்த முரண்பாடுகள் அதை உறுத்தவில்லை ; இவர்களின் தோள்களில் துப்பாக்கியை வைத்து ,நேருவைச் சுட வேண்டும் என்பதே நோக்கம் . ஏனெனில் நேரு அவர்களுடைய இந்து ராஷ்டிரம் ஏற்படுவதைத் தடுத்தார் என்பது மட்டுமின்றி ,அவருடைய பாரம்பரியம் தொடர்வதால் அதையேதான் மறுபடியும் செய்வார் என நினைக்கிறது .” என பரகால பிரபாகர் சொல்வது உண்மை .உண்மையைத் தவிர வேறில்லை .

 

  “அம்ரித்மகோத்ஸவ் ,ஐஎம்எஃப் இந்தியாவை மறுகற்பனை செய்தல்” அத்தியாயங்கள் எட்டே பக்கங்கள்தாம் ஆயின் பேசப்பேச விரியும் . மோடியின் முகத்தில் குத்தும் சில வரிகளையாவது இங்கு சுட்டாவிட்டால் நியாயம் செய்வதாகாது . “ தரவுகளைப் பார்ப்பதை விட முகங்களைப் பார்ப்பது அணுகுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் . அது நம் அரசியல் ,சமூக ,பொருளாதாரத்தை மனிதநேய மிக்கதாக்கும். அதனால்தான் காந்திஜி நமக்குக் கொடுத்த தாயத்து வலிமையானதாக இருக்கிறது . அந்தத் தாயத்து : ‘ ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழலை நீங்கள் எதிர்கொள்ளும் போது ,ஏழைகளிலேயே பரம ஏழைகளைக் கற்பனை செய்து பார்த்து அவர்களின் முகங்களில் உங்களின் முடிவு ஒரு புன்னைகையை வரவழைக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள் .’”  இங்கே நான் நினைத்துப் பார்க்கிறேன், ’தரித்திர நாராயண்கள்’ என காந்தி அவர்களை குறித்தது வெறுஞ்சொல் அல்ல. இறுதியில் பரகால பிரபாகர் சொல்கிறார் ,”மோடி அரசு அடையாளம் குறித்த சில்லறைத்தனமான கதையாடல்களைவிடுத்து ரமேஷ் , அஹமத் ,பீட்டர் ,குர்மீத் , லலிதா ,ஃபாத்திமா போன்றோரின் முகங்களைக் காணதவறிவிட்டது .அதற்கான முயற்சியைக் கூட செய்யவில்லை .”

 

வேலைவாய்ப்பற்றவர் குறித்த 10 பக்கங்கள் கொண்ட கட்டுரை  முந்தைய இரு கட்டுரைகளின் தொடர்ச்சிதான் எனலாம் . ஸ்கில் இந்தியா மற்றும் வேலையின்மை குறித்த அலசல் . வேலை வாய்ப்பற்றவர்கள் , வேலை செய்யத் தகுதியற்றவர்கள் , திறன் குறைந்தவர்கள் குறித்த விவாதம் பெருமளவில் நடத்தப்பட வேண்டும் . நான் ஐடிஐ தொழிற்கல்வி படித்த சிடிஐ பக்கம் அண்மையில் ஒரு முறை போயிருந்தேன் அதன் பெயர் பலகையில் ’ஸ்கில் இந்தியா’ என முத்திரை குத்தி இருக்கக் கண்டேன் .மோடி செய்தது முத்திரை குத்துகிற வேலைமட்டுமே .வேறெந்த மாற்றமும் இல்லை . அதை இந்த அத்தியாயம் ஆதாரத்தோடு சொல்கிறது . “ ஸ்ரேஷ்ட பாரதம் என்பதும் ஆத்மநிர்பார் பாரதம் என்பதும் உண்மையில் திறன் மிகு பாரதம்தான் ;அதற்கு அனைத்து மதங்கள் ,பிரதேசங்கள் ,மொழிப் பிரிவினரிடையே திறன் மிகுந்தவர்களை உருவாக்குவதுதான் இன்றையத் தேவை ; ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ,இந்துத்துவ ஆதரவாளர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கும் பிரதேசங்களுக்கும் , ஆதிக்க மொழி பேசுபவர்களுக்கும் மட்டுமான பாரதம் அல்ல அது .”என்கிறார் . இந்த சொற்களை நின்று நிதானித்து யோசித்தால் , வஞ்சிக்கப்படும் தெற்கும் , சிறுபான்மையோரும், ஒடுக்கப்பட்டோரும் ,பழங்குடியினரும் உங்கள் நினைவுக்கு வந்தால் யாம் பொறுப்பல்ல .

 

 “ போன்சாய் பல்கலைக் கழகங்களும் கிழிந்த ஜீன்ஸுகளும் “ ,”நமது பல்கலைக் கழகங்கள் : மிகச் சிறந்தவைகூட நல்லவை இல்லையோ ?”, ”ஜேஎன்யூ வழக்கத்துக்கு மாறான பல்கலைக்கழகமாகத் தொடர வேண்டும்”, ”ஹிஜாப் vs கழுத்து சால்வை” 34 பக்கங்களில் விரிந்திருக்கும் கல்வி குறித்த கட்டுரைகள் காத்திரமானவை ; ஜனநாயகம் சகிப்புத்தன்மை தொலைத்த கல்விச் சூழல் , இந்துத்துவ வெறிக்கூட்டம் சீரழிக்கும் கல்வி இவை பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன .” கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஐந்து நட்சத்திர போன்சாய் பல்கலைக்  கழகங்களில் ஒன்றுகூட முதல் பத்து இடங்களில் இடம் பெறவில்லை.”என்பதை ஆதாரத்தோடு நிறுவுகின்றது . மோடி அரசின் ’புதிய கல்விக் கொள்கை’ குறித்த தனித்த கட்டுரை எதுவும் இடம் பெறவில்லை .

 

“சமத்துவமின்மை குறித்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் பிக்கெட்டியும் புதிய இந்தியாவும் “ , “ வறுமையின் தரவுகளும் தரவுகளின் வறுமையும்” , “ பொதுத்துறை மெகாவிற்பனையும் விசாகப்பட்டினத் திருட்டும்” 22 பக்கங்களில் 3 கட்டுரைகளில் பொருளாதாரப் பிரச்சனைகளை விவாதித்திருக்கிறார் . “உலக அளவில் பெருந்தொற்று காலத்தில் வறுமைக்குள் தள்ளப்பட்டவர்களில் 60 % இந்தியர்கள் .நடுத்தர வர்க்கம் என்ற நிலையிலிருந்து கீழே சென்றவர்கள் 60 % பேரும் இந்தியர்கள் .”  என சுட்டும் பரகால பிரபாகர் “ சமத்துவமின்மையே ஏழைகளுக்கு நன்மை பயக்கும்” என்கிற கார்ப்பரேட் குரலை எதிரொலிக்கும் மோடியை அம்பலப்படுத்துகிறார் . “எதார்த்ததை மறுக்கும் ,தரவுகளை மறைக்கும் இந்த நோய் 2019 ல் வேலைவாய்ப்பு குறித்து கிடைத்த தரவுகளை குப்பைத் தொட்டியில் வீசியபோது தெளிவாகத் தெரிந்தது .” என்பது கசப்பான உண்மை அல்லவா ?

 

 “பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியைக் கொன்றது யார் ? ” 10 பக்கங்களில் இக்கேள்வியை வலுவாக எழுப்பி உள்ளார் . இந்திரா காந்தி தொடங்கி மோடிவரை பயங்கரவாத சட்டம் எப்படி கொடூரமாய் வளர்க்கப்பட்டது என்பதோடு இணைந்தது அக்கேள்வி.

 

“ விவசாயச் சட்டங்கள் : ஒரு அகந்தையின் கதை”, “லக்கிம்பூர்கேரி” 22 பக்கங்களில் நீளும் இரண்டு அத்தியாயங்கள் விவசாயப் போராட்டங்களை முன்வைத்து வேளாண் பிரச்சனையை அலசுகின்றன . வேளாண் உற்பத்தி அதிகரித்து உணவுப் பஞ்சத்திலிருந்து மீண்ட காலத்தில் விவசாயிகளின் வருமானம் வீழ்ந்தது , கடன் அதிகரித்தது ,துயரமும் தற்கொலையும் அதிகரித்தன என நெடிய வரலாற்று உண்மையினை தொட்டுக் காட்டி ; தொடர்ச்சியாக மோடி தேர்தலில் சொன்னதிற்கு நேர் எதிராய் சென்றதால் வெடித்த விவசாயிகள் போராட்டத்தை கவனத்துக்கு கொண்டு வருகிறார் . அடக்குமுறைகளை அவதூறுகளை அநீதிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் . ஐஎம்எப் போன்ற நிறுவனங்களின் அலோசனையைக் கேட்கும் நமது அரசு  ஜப்பான் , சைனா , தென்கொரியா ,தைவான் ,வியட்நாம் என கிழக்கை ஏன் நோக்குவதில்லை எனக் கேள்வி எழுப்புகிறார் .  அங்கெல்லாம் குடும்பப் பண்ணைகளை உருவாக்கி - நில உரிமை வழங்கி - கடன் வழங்கி மேம்பட்ட உற்பத்திக்கு உதவி-  வேளாண் உற்பத்தி 50 % 60 % ம் உயர்த்தி- விவசாயிகள் வருமானத்தை 100 % 150 % அதிகரித்த காட்சியை எடுத்துக் காட்டி; நாம் ஏன் அந்தப் பக்கம் பார்வையை செலுத்தவில்லை என கேட்கிறார் பரகால பிரபாகர் .

 

“ பெருந்தொற்றின் பதிவேடு ,2021” என்கிற 64 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பிலேயே மிகப்பெரிய கட்டுரை இது . ஏற்கெனவே அறிந்த பல செய்திகளையும் அதிகாரபூர்வமான தரவுகளையும் வைத்து மோடி அரசு எப்படி தப்பும் தவறுமாய் பிரச்சனையைக் கையாண்டது ,குழப்பியது ,தோல்வியைகூட சாமர்த்தியமாய் சாதனைபோல் காட்டியது ,பொய் சொன்னது எல்லாவற்றையும் விவரிக்கிறார் .

 

இந்தியாவில் போலியோ உட்பட  தடுப்பூசிகள் போட்ட வலுவான நோய் தடுப்புக் கட்டமைப்பும் அனுபவமும் கோவிட்டிலும் பயன்பட்டது எனப் பில் கேட்ஸே  பாராட்டும் போது ; யாரும் இதற்கு முன் செய்யாததை தான் மட்டுமே ஒற்றையில் சாதித்ததாய் மோடி வெட்டி ஜம்பம் அடிப்பதை  மிகச் சரியாக இடித்துரைக்கிறார். இதை தனிப் பிரசுரமாகக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்யலாம். நெடிய கட்டுரையை மீண்டும் வாசித்து மோடியின் முகவிலாசத்தை அறிவீர் !

 

“ வெறுப்பின் அடிப்படையிலான செயல் திட்டம் தரும் போதையினால் அதன் அரசுடைய தோல்விகளை அந்த சமூகம் கண்டு கொள்வதில்லை .களத்தில் கண்ட விஷயத்தை வைத்து இதை விளக்குகிறேன்.” என்கிறார் முடிவுரையில். ஆம் இந்த கொடூர உண்மையை உள்வாங்க இந்நூல் நமக்கு ஓரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக இருக்கிறது . குடிஉரிமைச் சட்டம் , புதிய கல்விக் கொள்கை ,மாநில உரிமைகள் மறுப்பு , மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் ,பெண்கள் தலித்துகள் பழங்குடியினர் வாழ்வுரிமை போன்ற வேறுபலவும் இந்நூலில் போதிய இடம் பெறாவிட்டாலும் அவற்றையும் இணைத்தே பார்க்க வேண்டும். இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கி வேகமாக முன்னேறும் பாசிச கூட்டத்தை தேர்தல் களத்திலும் தத்துவக் களத்திலும் எதிர்கொண்டு முறியடிக்க இந்நூலை ஆயுதமாக்குவீர் !

 

இந்நூலாசிரியர் சிறந்த அறிஞர் . அவரே சொல்வது போல் ”அவருக்கோ அல்லது இவருக்கோ எதிரியுமல்ல ஆதரவாளருமல்ல” .இவர் மனைவி நிர்மலா சீத்தாராமன் ஒன்றிய நிதியமைச்சர் என்பது அவர் தனிப்பட்ட தேர்வு .அவ்வளவுதான் .

 

நூல் வாசித்தபின் என் இதயத்தையும் மூளையையும் கசக்கிக் கொண்டிருக்கும் பரகால பிரபாகரின் ஓர் வாக்கு மூலத்தோடு நிறைவு செய்கிறேன்.

 

“பெரும்பான்மைவாதத் திட்டத்திற்கு எதிரான அரசியல் சக்திகள் இவ்வளவு கடினமாகவோ அல்லது தெளிவான கொள்கையுடனோ அல்லது அவர்களின் நம்பிக்கையில் பாதியை வைத்தோகூட உழைத்ததில்லை . கடந்த பல ஆண்டுகளாக நகர ,மாவட்ட ,கிராம அளவுகளில் பொறுமையுடனும் கடுமையாகவும் தொடர்ந்தும் தத்துவார்த்தப்  பணி செய்யும் ஊழியர்கள் இடதுசாரிகள் ,காங்கிரஸ்  மற்றும் பிற கட்சிகளில் இல்லை . இக்கட்சிகள் ஒரு தேர்தலில் இருந்து மறுதேர்தலுக்குத் தூக்கத்தில் பயணிப்பதைப் போல் நடக்கிறார்களே தவிர  ,இடைப்பட்ட காலத்தில் உறுதியான ஒருமுகப்பட்ட தத்துவார்த்தப் பணிகளைச் செய்வதில்லை.”

 

ஆம் .நம் துன்ப துயரத்தின் மூலவேர் இதுவன்றோ !

 

 

புதிய இந்தியா எனும் கோணல் மரம்,

நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு பற்றிய கட்டுரைகள் ,

ஆசிரியர் : பரகால பிரபாகர் , தமிழில் : ஆர் .விஜயசங்கர் ,

வெளியீடு : எதிர் வெளியீடு , தொடர்புக்கு : 04259 226012 / 9942511302

E mail : ethirveliyedu@gmail.com  , www.cthirveliyedu.com

பக்கங்கள் : 320 . விலை : ரூ.399/

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/2/2024.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment