கொடக்கோனார் கொலை வழக்கு

Posted by அகத்தீ Labels:

 அன்புள்ள அப்பணசாமிக்கு ,

வணக்கம் .

 

 “ கொடக்கோனார் கொலை வழக்கு” எனும் தங்களின் நாவலை நேற்றுதான் [ 1/7/2023] வாசித்தேன் . தாமதமாக வாசித்ததன் காரணம் தாமதமாக எனக்கு கிடைத்ததுதான்.

 

முன்பும் என் வருவாய்க்கு புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவது சிரமம்தான்  ;ஆயினும் சென்னையில் இருந்த வரை எழுத்தாளர்களோ பதிப்பகமோ சுடச்சுட எனக்கு கிடைக்கச் செய்துவிடுவார்கள் . பெங்களூக்கு வந்தபின் வருவாயும் இல்லை . முகவரி தேடி அனுப்புவோரும் குறைந்துவிட்டனர் .ஆயினும் எப்படியோ புத்தகங்களைப்  பெற்று வாசிக்கிறேன் .தாமதமாகிறது அவ்வளவுதான். நிற்க !

 

மிகத் தாமதமானதால் இந்நூல் குறித்து பொதுவெளியில் எழுதாமல் தனிப்பட்ட கடிதமாக எழுதுகிறேன்.

 

நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ஒரு கட்டத்தில் துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிருந்தது . தமிழ்வாணனும் பின்னர் பெரிமேசனும் இன்னும் சிலரும் என்னை ஈர்த்தனர் . காலகதியில் என் ரசனை வேறுபக்கம் திரும்பியது .ஆயினும் புலனாய்வு எனக்கு பிடிக்கும் . அந்த ஆர்வமுடன்தான் இன்றும் இருக்கிறேன் . இந்நூலையும் எடுத்தேன்.படித்தபின்தான் அறிந்தேன் கொலை நடந்த சமூகத்தை சூழலைச் சொல்லும் கதை என்பதை .

 

சமூகத்தின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் சமூகச் சூழலையும் அது சார்ந்து ஊடாடும் மனிதர்களின் தனிப்பட்ட குண இயல்புகளையும் வாழ்நிலையையும்  மிக நுட்பமாக கிரகித்து இந்நாவலை எழுதியுள்ளீர்கள் .பாராட்டுகள் .

 

நாவலுக்குள் போகுமுன் ஓர் செய்தி . மக்களைத் தேடி சந்தை என்பதுதான் ஆசிய மாடல். நம் மாடலும் அதுவே . வீடு தேடி பொருள் விற்பனைதான் நம் வழிமுறை . வாரச்சந்தை ,கால்நடை ,சைக்கிள் ,மொபெட் ,குட்டியானை என அதன் கருவிகள் மாறி இருக்கலாம் ஆனால் உள்ளடக்கம் ஒன்றே .  ஐரோப்பிய மாடலில் பொருளைத் தேடிதான் மக்கள் செல்லும் நிலை .

 

உலகமய  தாராளமய தனியார் மய [ஜிஎல்பி]பொருளாதாரக் கொள்கை பேசப்பட்ட எண்பதுகளில் ஆசிய மாடல் வியந்து பேசப்பட்டு , மாடலாக பரிந்துரைக்கப்பட்டு , சந்தை வழி நுகர்வோரியத்தை கட்டவிழ்த்துவிட உலகவங்கியும் பொருளாதார நிபுணர்களும் ஆலோசனை சொன்னார்கள் . ஆன் லைன் வர்த்தகம் தலையெடுத்தது . இப்போது எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே வாங்கலாம் .மறுபக்கம் மெகா மால்கள் . ஒரே இடத்தில் எல்லாம் , பழைய சந்தை போல .

 

இந்த பொருளாதார மாறுதல்கள் ஒரே இரவில் நடந்துவிடாது ஆயின் அதன் வலியும் இழப்பும் எப்படி இருக்கும் ? அதுவும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்கள் பலபடிக்கட்டுகளாகவும் சாதிய வர்ண படிகட்டுகளாகவும் உள்ள சமூகத்தில் நிலைமை எப்படி இருக்கும் ?

 

இந்நாவல் அந்த களத்தை சித்தரிக்கிறது .

 

பேரம் பேசும் வாய்ப்புள்ள சிறிய ஜவளிக்கடை நடத்தும் ஏகாம்பர முதலியார் . அவரும் தலைச் சுமையாய் வியாபாரம் செய்தவர்தான் .அவர் கடையில் தினசரி கூடும் கொடக்கோனார் , அருணாச்சல நாடார் ,கோமணாண்டி நாயக்கர் , இவர்களோடு ஜவுளி தலைசுமை வியாபாரி உமர் சாயபு , கிழங்கனின் அப்பா மாடாக்கண்ணு ஆசாரி ,இவர்களையும் இவர்களின் குடும்பக் கதையையும் சுற்றியதே நாவல் .

 

எம்ஜிஆர் சாவு ,இந்திரா கொலை எல்லாம் வந்து போவதில் இருந்து இந்நாவலின் காலகட்டம் விளங்கும் .நான் மேலே சுட்டிய பொருளாதார காலகட்டம் சரியாகப் பொருந்தும்.

 

வியாபாரப் போட்டிக்காக எதையும் செய்யும் நிலை . “ஒம்பதே கால் ரூபாய்ச் சேலை.” நிகழ்வில்  இதனை சரியாகச் சித்தரிக்கிறது இந்aநாவல் .

 

கிராமங்கள்  சூழ்ந்த சிறிய கரிசல் நகரில் அக்காலகட்டத்தில் ஏற்பட்டு வந்த சமூக பொருளாதார மாறுதல்கள் நாவலின் ஊடும் பாவுமாய் நிரவி இருக்கிறது.அதிலும் கடைத்தெருவைச் சார்ந்தே கதை மாந்தர்கள் இயங்குகின்றனர் . இந்நாவலின் பலம் அதுதான் .ஆகவேதான் இந்நாவலில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பெண்பாத்திரங்கள் அமையவில்லை .

 

குடும்பம் சார்ந்த பெண் , ஊர் பேச்சுக்கு பயந்து தற்கொலை செய்யும் பெண் ,பாலியல் கவர்ச்சி இந்த வட்டத்துக்குள் பெண்பாத்திரங்கள் அடங்கிவிட்டன .அப்பணசாமியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை.

 

ஆடு ,மாடு வியாபாரி கொடக்கோனார் கொலை முயற்சி முதல் அத்தியாயத்தில் பேசப்பட்டாலும் கடைசிப் பகுதியில்தான் கொலை செய்யப்படுகிறார் .காரணம்  தவறான உறவுகூட அல்ல உறவு இருக்குமோ என்கிற ஐயமும் சமூகத்தின் கோணல் பார்வையுமே .

 

எந்த புதிய வரவையும் மாறுதலையும் எதிர்மறையாகவே பார்க்கும் அருணாச்சல நாடாரின் உரையாடல்கள் நாம் இன்றும் கேட்கும் ரகம்தான் . சினிமா தூக்கம் இவை மட்டுமே அறிந்த கோமணாண்டிகள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு .  

 

உமர் சாயபு போல் வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் சோகம் ,சொத்துச் சண்டை எல்லாம் உண்டு . உமர் சாயபின் சகோதரன் சிறுவயதிலேயே காணாமல் போகிறான் . அனாதையாக வந்து சேர்ந்த ஐந்து வயது பையனை ஒரு தலைசுமை ஜவளி வியாபாரி முதலியார் எடுத்து வளர்க்கிறார் . அவன்தான் ஏகாம்பர முதலியார் ஆகிறார் . தான் சாகும் வரை உமர் சாய்பு அதைப் பற்றி ஏகாம்பர முதலியாரிடம் பேசவே இல்லை.

 

முதலியார் கடை முன்பு கொடக்கோனார் கொலை நடக்கிறது .கடை மூடப்படுகிறது .ஏகாம்பர முதலியார் வாழ்வு நசிகிறது . கொலையாளி யார் இறுதிவரை கண்டுபிடிக்கப்பட வில்லை .

 

ஏகாம்பர முதலியார் போலீஸ் நெருக்கடியால் வழக்கால் நொடிந்து போகிறார் ,வாழவிடாமல் கடையை தவிட்டு விலைக்கு முடிக்கும் வியாபாரிகள் .ஏகாம்பர முதலியாரின் மூன்று பிள்ளைகள் . நடுவன் ஓடிப்போய் சென்னையில் பத்திரிகையாளராகிறான். சின்னவன் உடல் பசி உள்ளவனாகவே சித்தரிக்கப்பட்டவன், யாருக்கும்  சொல்லாமல் தான் விரும்பிய மலம் அள்ளும் ஒரு பெண் தொழிலாளியோடு  மும்பை போகிறான் . ஏகாம்பர முதலியார் மனைவியை கட்டாயப்படுத்தி காசிக்கு அனுப்பிவிட்டு வீட்டை அடைத்து வடக்கிருந்து உயிர் துறக்கிறார் .

 

உமர் சாய்பின் தாத்தா வாப்பிச்சட்டப்பா குடும்பம் ஓஹோ என வாழ்ந்த குடும்பம் . அந்த கடலாங்குடி வம்சம் உட்பகையாலும் மாறிய பொருளாதாரச் சூழலாலும் நொடிந்து நொறுங்கியது . ஒரு வகையில் ஏகாம்பர முதலியாரும் அதன் வம்சம்தானே !

 

கடைசி பகுதி முழுவதும் சோகம் .பொதுவாக  துன்பியல் புதினம் . பாம்படம் செய்வதிலும் மோசடி செய்வதிலும் வல்லவரான மாடாக்கண்ணு ஆசாரி குடும்பம் மட்டுமே கீழ்நிலையில் இருந்து மேல் நிலைக்கு வந்தவர்கள். மாடாக்கண்ணுவின் முதல் மனைவியும் வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்தாம். . மேலும் மேல்நிலைக்கு ஒன்றிரண்டு குடும்பங்கள் இதுபோல் காட்டப்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் இவர்தாம். அதுபோல் நாடார் சமூக ஒதுக்கப்பட்ட சமூகமாய் இருந்து வியாபாரத்தால் தலைநிமிர்ந்ததையும் சொல்லிச் செல்கிறது நாவல் .

 

கொடக்கோனார் கொலையாளியைக் கண்டுபிடிக்க இப்புதினத்தின் இரண்டாம் பாகம் வரகூடுமோ ?

 

கதைக்களத் தேர்விலும் கதை மாந்தர் குணவியல்புகளைச் சித்தரிப்பதிலும் அப்பணசாமி பாராட்டு பெறுகிறார் . அடுத்தடுத்த நாவல்களில் இன்னும் முன்னேறுவார் என எதிர்பார்ப்போம்.

 

நுகர்வெனும் பெரும்பசி படுத்தும் பாட்டை அப்பணசாமி நாவலாக்கலாமே என இந்நாவலைப் படித்ததும் எனக்குத் தோன்றியது .

 

வாழ்த்துகள் அப்பணசாமி !!!

 

 

தோழன்,

சு.பொ.அகத்தியலிங்கம் .

2/7/2023.

 

 


0 comments :

Post a Comment