யோகா பில்டப்பும் மரக்கறி உணவு கித்தாப்பும் .

Posted by அகத்தீ Labels:

 

 


யோகா பில்டப்பும் மரக்கறி உணவு கித்தாப்பும் .

 

ழுபதுகள் ,எண்பதுகளில் நங்கநல்லூர் இலக்கிய வட்டத்தில் நண்பரான சிலபேர் இன்னும் என் தொடர்பில் இருக்கின்றனர் .எதிரெதிர் சித்தாந்த முகாம்களில் இருந்த போதும் ; அவ்வப்போது  மோதிக்கொண்ட போதும் அது எம் தனிப்பட்ட பகையாய் மாறவில்லை .அப்படிப்பட்ட ஓர் நண்பர் சில தினங்கள் முன்பு அலைபேசியில் அழைத்தார் .

 

 “ என்ன தோழா ! நான் காலையில் புள் மீல்ஸ் சாப்பிட்டுவிடுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் . மாலை மூன்று மணிக்கு ஏதாவது இட்லி /தோசை தேடி அலைகிறேன் .எங்கும் பீப் பிரியாணியும் சிக்கன் பிரியாணியும்தான் நிறைந்து கிடக்கிறது . சைவ ஹோட்டலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் . இனி என் போல் சைவ பட்சிணிகள் அருகிவிடு வார்களோ ? அபூர்வ ஜந்துவாகிவிடுவார்களோ ?” என அங்கலாய்த்தார்.

 

 “ அதுவும் உண்மை ‘அக்கிரஹார ஹோட்டல் ; சுத்த சைவம்’ [ சென்னையில் ஓர் ஹோட்டலின் பெயர்] என இயங்குவதையும் பார்க்கிறோம். ஏ2பி போன்ற ஹோட்டல் ஏழைக்கு அல்ல என்றாகிவிட்டது . கையேந்தி பவன்கள் ,சாலையோர உணவங்கள், இட்லி கடைகள் , தள்ளுவண்டி பீப் பிரியாணி ஸ்டால் ,சிக்கன் மட்டன் பிரியாணிக் கடைகள். இவை எல்லாம் இல்லாவிடில் சாதாரண மக்கள் திண்டாடி விடுவார்களே ?” என்றேன்.

 

“அதுவும் சரிதான் .. சைவம் அசைவம் இரண்டிலும் மலிவு விலை உணவங்களும் உண்டு ; மணி [பணம்] இருப்பவருக்கான உணவகங்களும் உண்டு . இதுதான் இந்தியா…” என்றார் .

 

 “ ஆமாம் .. ஆனால் சோறு இல்லைன்னு யாரும் வருந்த வேண்டாம் .. அப்படி பிரச்சனையே இல்லை … சுவிக்கில ஆர்டர் பண்ணினா எங்கிருந்தாலும் எந்த மூலையில் இருந்தாலும் உணவு வரும்னு பொறுப்பற்று பேசின ஸ்மிருதி ராணி  நம்ம மந்திரி…” இதை பேசி முடிக்கும் முன் நண்பர் குறுக்கே பாய்ந்தார் , “ அரசியல் வேண்டாம் பிளீஸ் … சைவ உணவு பழக்கம் அருகிவருகிறதே ..!!!” என புறப்பட்ட இடத்திற்கே வந்தார் .

 

நான் சொன்னேன் , “ இந்தியாவில் புலால் உண்பவரே அதிகம் , அதிலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு ,கேரளாவில் முக்கால் பங்குக்கு மேல் அவங்கதான் …இங்கும் வீட்டில் சைவம் வெளியில் அசைவம் என்கிற உத்திராட்சப் பூனைகள் அதிகமாகிறது.”

 

 “ அது …அது … மெய்தான் ஆனால்… “ என இழுத்தார் .

 

 “சைவம் திணிக்கப்படுகிறது . பீப் எதிர்க்கப்படுகிறது .விளைவு பீப் உண்போர் சதவிகிதம் அதிகரிக்கிறது . சைவம் பெருமைக்கு பீற்றுவதாக ஒரு புறம் ;மறுபுறம் நடைமுறையில் புலால் ஈர்ப்பு …”

 

அவர் வழக்கம் போல் யோகா ,தியானம் எனத் தாவினார் ; உரையாடலின் சாரம் .

 

 “பள்ளி சிறார்கள் ,பணிக்கு செல்லும், இளம்பெண்கள் , ஆண்கள் என கணிசமானோர் கையில் கக்கத்தில் யோகா மேட் [ yoga mat ] கிடுக்கியபடி திரிந்ததை பெங்களூரில் 2015 காலகட்டம் முதல் பார்த்திருக்கிறேன் . எங்கள் அடுக்ககத்தில் இல்லத்தரசிகளுக்கு யோகா பயிற்சி என ஒரே பில்டப் .எங்கள் அடுக்ககம் மட்டுமல்ல வளாக குடியிருப்புகளில் [ gated community ] எல்லாம் இதே நிலைதான் . மரக்கறி உணவு அதுதான் சைவ உணவே ஆகச் சிறந்தது என ஆரோக்கிய உடுக்கையடி வேறு.”என்றேன்.

 

 “ அது ஒரு நல்ல முன்னெடுப்பு ஆனால் அமல் படுத்தும் போது சில பிழைகள் நேர்ந்து இருக்கலாம் …” என்று இழுத்தார் சோகமான குரலில் .

 

 “ பெரும்பாலான மத்தியதர வீடுகளில் டிவி சானல்களில் யோகா பயிற்சிதான் காலை நேர நிகழ்வானது . சைவ உணவு போதனை ஃபுள் கியரில்  முடுக்கிவிடப்பட்டது .யோகா செய்தால் மருத்துவ செலவே கிடையாது .சர்க்கரை ,இரத்தக் கொதிப்பு அண்டாது .சிறுநீரக நோய் ,இதய நோய் ,வயிற்று நோய் ,சுவாச நோய் ,புற்று நோய் வரவே வராது . தன்னம்பிக்கை ஓங்கும் ..கோபமே வராது .ஆத்திரம் பொங்காது ,கெட்ட எண்ணம் தோன்றாது. பாசிட்டிவ் என்ர்ஜி கிடைக்கும் . வாழ்வில் இன்பம் பொங்கும் . அப்பப்பா …. அவிழ்த்துவிட்ட ரீல்கள் இப்போது அறுந்து தொங்குகின்றன .” என மீண்டும் நான் யதார்த்தத்தை விவரிக்க நண்பர் கடுப்பானார் .

 

 “யோகா மேட்”கள் பெரும்பாலான வீடுகளில் பரணுக்கு போய்விட்டன . சிறார்கள் ,இளம்பெண்கள் ,ஆண்களுக்கு யோகா மீதான ஈர்ப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன் அதனால் யோகாவே தவறு என சொல்ல முடியுமா ?” எனக் கேட்டார் நண்பர் .

 

 “யோகா மூச்சு பயிற்சி . அது உடற்பயிற்சியின் ஒரு கூறு. என்பதுவரை சரி ! அந்தவகையில் அதற்கு ஓர் இடம் என்பதும் சரி ஆயின் ,அதற்கும் மேல் அதன் மீது சுமத்தப்பட்ட தெய்வீக , புனித , சர்வரோக நிவாரணி போன்ற பில்டப்புகள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன . நொறுக்கப்பட வேண்டும் . ! ஏன்  நீச்சல்கூட சிறந்த மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் ஆகுமே !.. அதைப் பேசலாமே….”

 

நண்பன் சொன்னான் , “யோகா ,தியானம் ஓவர் பில்டப்பால் மதிப்பிழந்து கொண்டிருக்கிறது .சைவ கித்தாப்பு முகமூடி கழன்று விழுந்து கொண்டிருக்கிறது .நல்லவற்றைகூட ஓவர் பில்டப்பு கெடுத்துவிடும்…” என அவர் பார்வையில் சமாதானம் சொன்னார் .

 

 “கோபம் ,வன்மம் ,வெறுப்பு அரசியல் ,வன்புணர்வு ,கூட்டுவன்புணர்வு ,கும்பல்கொலை , சகிப்பின்மை போன்ற போன்ற அனைத்து மனிதவிரோத கொடுஞ்செயல்களிலும் கடந்த பத்து ஆண்டுகளில் ஈடுபடுவோர் யாரென பட்டியலிட்டால்  “யோகா ,தியானம் ,பக்தி,சைவ உணவு ” என வாய்ப்பறை கொட்டுவோர்  ஈடுபட்டுள்ளதையும்  அவதானிக்கலாம். மகாத்மா படுகொலை தொடங்கி இன்றுவரை அதுவே மெய் . ஆக யோகாவோ தியானமோ பக்தியோ சைவ உணவோ ஒழுக்கத்தை மனிதத்தை நிலைநாட்டிவிடாது . மனிதம் போற்றும் சமத்துவம் ,சமூகநீதி ,பாலின பேதமற்ற வாழ்க்கைமுறை போன்ற உயர் விழுமியங்களும் ; சமூகத்தை வாழ்வைக் குறித்த அறிவியல் பார்வையும் மக்களின் மூளையில் விதைக்கப்படும் போது மட்டுமே நல்ல பயிர் வளரும்.”

 

நான் பேசி முடிக்கும் முன் டக்கென நண்பர் அடுத்ததுக்குத் தாவினார் .

 

 பேலியோ டயட் உணவுகள் [ Paleo Diet ] , மரச் செக்கு எண்ணை , ஆர்கானிக் புட்ஸ்  இப்படியெல்லாம் பேசப்படுபவை நல்லது இல்லையா ? இவைகூட அந்தந்த காலத்தி வந்து காணாமல் போகும் பேஷன்களாகி விட்டனவே . உயர் மத்தியதர டிரெண்டாகிவிட்டதே… ஏன் ?”இதுவும் நண்பர் வினாதான் .

 

 

 “ முதலில் போலி அறிவியல் மூலம் தூக்கி நிறுத்தப்படும் எதுவும் நிலைக்க முடியாது . வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் பிஎச்டி வாங்கினாலும் வாழ்க்கை யதார்த்தத்தோடு அது நெருங்கவே இல்லை . மிகப் பெரிய மக்கள் தொகைக்கு மிகக்குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும் எல்லோராலும் பின்பற்றத்தக்க உணவும் உடையும் வீடும் தருவது எப்படி ? இதுவே ஆதாரமான கேள்வி .இதனை விடுத்து தாவிதாவிச் செல்லும் எதுவும் வேலைக்கு ஆகாது .” என்றேன்.

 

” நீங்கள் சொல்வது சரிதான் … பில்டிங் ஸ்டிராங் பேஸ்மட்டம் வீக்ன்னா எப்படி தாக்குப் பிடிக்கும் …? என்னுள்ளும் இந்த கேள்வி இப்போது எழத்தான் செய்கிறது …” என்றவர் மீண்டும் தாவினார்  ; “ கோடிக்கோடியாய் கொட்டி யழுதும் ஸ்வச்ச பாரத் ,தூய்மைத் திட்டம் மகா தோல்வியாகிக் கொண்டிருக்கிறதே … இதிலாவது மக்கள் விழிப்பற்று இருக்கிறார்கள் என ஒப்புக் கொள்வீர்களா ?” என முடித்தார் .

 

இக்கேள்வியை வைத்து நாங்கள் உரையாடியது பின்னர் …

 

சுபொஅ.

31/5/2023.

 

[ தனிப்பட்ட உரையாடலை கட்டுரை ஆக்குதல் நாகரீகம் அல்ல ; நானும் அறிவேன் .அவரிடம் சொல்லிவிட்டு பேச்சில் பலவற்றை எடிட் செய்தே பதிகிறேன் .அவருக்கு ஒரு நாள் முன்பே அனுப்பிவிட்டேன் . அவரிடம் நோ அப்சக்‌ஷன் சர்ட்டிபிகெட் வாங்கிவிட்டேன்.]

 

 

 

 


0 comments :

Post a Comment