கனிந்த மொழிப்புலமையால் கவியும் நவரசம் செய்குதம்பி பாவலருக்கே “ தங்க ஆசனம்”

Posted by அகத்தீ Labels:

 


கனிந்த மொழிப்புலமையால் கவியும் நவரசம்

செய்குதம்பி பாவலருக்கே “ தங்க ஆசனம்”

 

 


 “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று”

 

செய்குதம்பி பாவலரின் நீதிவெண்பா நூலில் இடம்பெற்ற கவிதை இது . கல்வியின் பெருமையை சாற்றும் கவிதை இது .

 

பள்ளி பாடபுத்தகத்தில் இந்தப்பாடலை படித்திருப்போம். சதாவதானி செய்குத்தம்பி பாவலர் எழுதிய பாடல் எனவும் வாசித்திருப்போம். மனப்பாடம் செய்திருப்போம். மறந்திருப்போம். எழுதியவரை நினைத்துப் பார்த்தோமா ?

 

 “வானுமில்லை நீருமில்லை
வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை
நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை
பாரமதி யோடுவெளி
தானுமில்லை ஏகமென்ற
தத்துவத்தை நத்தேமோ

தருமநபி நாயகமே
தத்துவத்தை நத்தேமோ!விண்ணுமில்லை மண்ணுமில்லை
மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லே
பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை
சார்ந்தகர ணுதிகளின்
கண்ணுமில்லை ஏகமென்ற
கத்தநிலை நத்தேமோ


கருணைநபி நாயகமே
கத்தநிலை தத்தேமோ!

 

என எளிய சொற்களில் நபிகளின் ஏக இறைக் கொள்கையை சொன்ன செய்குதம்பி பாவலரை  நாம் அறிவோமா ?  “நபிகள் நாயக மான்மிய மஞ்சரி”  நூலில் இடம் பெற்ற கவிதை இது .

 

இப்பாடல்கள் செய்குதம்பியின் சொல்லாட்சிக்கு சாட்சி சொல்லும் .

 

சதாவதானி செய்குதம்பி பாவலர் பற்றி நாம் அறிந்தது குறைவு .அறிய வேண்டியது அதிகம்.

 

முதலில் சதாவதானி என்றால் என்ன ?

 

கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணைகள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த , கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடுகிறது.

 

சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர்.

 

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொகைகளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர்.

 

இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.

 

செய்குத் தம்பிப் பாவலர் 115 ஆண்டுகளுக்கு முன் 1907 ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

 [ தகவல் ஆதாரம் : தினமணி தமிழ்மணி பகுதி]

 

ஞானியார் அப்பாவின் மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு, வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு, தேவலோகத்துக் கிரிமினல் கேசு மூன்று நூல்களைப் பதிப்பித்தார்

 

சீறாப்புராணம் நூலுக்கு சிறப்பான  உரை எழுதினார்

நபிகள் நாயக மான்மிய மஞ்சரி,திருக்கோப்பற்றுப் பதிஞ்சம்,பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி,கோப்பந்துக் கலம்பகம்,கோப்பந்துப் பிள்ளைத்தமிழ்,கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதிவெண்பா, ஷம்சுத்தாசின் சேவை என ஒண்பது கவிதை நூல்கள் யாத்தார் .

 

தேவலோக பழிக்குள்ள வழக்கு , வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு, எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டுக்கிரிமினல் கேஸ் என மூன்று உரைநடை நூல்களை எழுதியவர் .

சரி ! திடீரென்று சதவதானி செய்குதம்பி பாவலர் மீது என்ன பாசம் என வினவுவீர் ஆயின் , ஆகஸ்ட் 13 -15 குமரி மாவட்டத்தில் தமு எ க ச மாநாடு நடைபெறுவதையொட்டி கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ,சதாவதானி செய்குத்தம்பி பாவலர் , பொதுவுடைமை போராளி ப.ஜீவானந்தம் மூவரையும் நினைவு கூர்ந்து எழுத யோசித்தேன் .

 

 [கவிமணி குறித்து ஏற்கனவே எழுதி பதிவிட்டுவிட்டேன் . செய்குத்தம்பி பாவலர் குறித்து விவரங்கள் சேகரித்துக் கொண்டிருந்த போது சாஹுல் ஹமீது அவர்களின் பதிவைக் கண்டேன் . கொஞ்சம் புதிய சேர்மானங்களுடனும் என் கருத்துகளுடனும் அதைப் பெரிதும் பயன் படுத்திக்கொண்டேன்.]

 


அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில், இப்போதைய குமரி மாவட்டத்தில் கோட்டாறு, இடராயக்குடி(இப்போது இடலாக்குடி)என்ற ஊரில்,1874ம் ஆண்டு, ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தார்.பக்கீர் மீரான் , ஆமினா அம்மையார் தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

அன்றைய வழக்கப்படி,திண்ணை பள்ளிக் கூடத்தில் மலையாள மொழியில் கல்வி கற்றார்..கற்பதில் அவருக்கிருந்த ஆற்றல், இவரை ஒரே ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் கொண்டு சென்று சேர்த்தது... இத்துடன் மலையாள கல்வி முடிவுக்கு வந்தது.

 

ஆனால், தொடர்ந்து சங்கரநாராயண அண்ணாவி என்ற தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்று தேர்ந்தார். தனது 16வது வயதில் இரண்டு அந்தாதிகளை எழுதி வெளியிட்டார் இளைஞர் செய்குதம்பி.கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றார்! தமிழில் ஆழ்ந்த புலமையை கைவரித்துக கொண்டார் சேகுத்தம்பி அவர்கள்.

 

இட்டா பார்த்தசாரதி என்பவருக்கு, சென்னையில் மெய்ஞானியார் #பாடல்திரட்டு
என்ற நூலை,சரி பார்க்க(Proof Reading) ஒரு தமிழ் அறிந்த இஸ்லாமியர் தேவைப்பட்டார்.
அதற்காக சென்னை சென்றார் செய்குதம்பி.ஶ்ரீ பத்ம விலாசம் பதிப்பகத்தில் பாவலர்
வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு கிடைத்தஊதியம் 60ரூபாய். அந்த காலத்தில் இந்த ஊதியம் மிகவும் அதிகமான ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது அவருக்கு வயது21.

 

பதிப்பக வேலையோடு, சீறாப்புராணத்திற்கு உரையும் எழுதினார் செய்குதம்பி அவர்கள்..வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு, தேவலோகத்துக் கிரிமினல் கேசு போன்ற நூல்களை எழுதி பதிப்பித்தார்.. .திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் குறித்த இலக்கிய உரைகளையும் தொடர்ந்து நிகழ்த்திய செய்குதம்பி அவர்களுக்கு,இட்டா பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற விழா ஒன்றில் பாவலர் என்ற பட்டம் வழங்கப் பட்டது.அப்போது அவருக்கு வயது 27.இதே காலகட்டத்தில் ,இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்று கூறுவது கூடாது என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் கூறி வந்தார்.அத்தோடு நிற்காமல், கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஆறுமுக நாவலர்.ஆனால் வழக்கில் இவர் தோல்வி அடைந்தாலும் கூடஅருட்பாவா? மருட்பாவா?என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது.

 

ஆறுமுக நாவலர் இறந்த பிறகு கூட அவரது சீடரான கதிர் வேல் பிள்ளை என்பவர் இந்த விவாதத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்! கதிர் வேல் பிள்ளையின் வாதத்திற்கு எதிராக பாவலர் களமிறங்கி, வள்ளலார் பாடல்கள் அருட்பா தான் என்பதை, தனது ஆழமான வாதத் திறமையால் நிறுவினார்.ஒரு இஸ்லாமிய அறிஞர், சைவ சமய
விற்பன்னர்களோடு வாதம் செய்ததோடு வள்ளலார் பாடல்களை அருட்பாவே என்று
நிறுவியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல, பாவலரின் புகழும்
ஓங்கி வளர காரணமாக அமைந்தது.

 

இந்த விவாதத்தில் பாவலர் வெற்றி பெற்றதை பாராட்டி காஞ்சிபுரத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.. கூட்டத்தில் "தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்"என்ற பட்டம் வழங்கப்பட்டது!

 
காஞ்சிபுரம் நிகழ்வு தமிழறிஞர் திரு. வி. அவர்களை மிகவும் கவர்ந்ததோடு,பாவலரை தனது குருவாகவும் அறிவித்தார் திரு. வி. ! இலக்கிய பணிகளின் ஊடே, பாவலரின் கவனம் அவதானம் நோக்கி சென்றது.

 

இதற்கிடையில் ஓர் நிகழ்வு , ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
கந்தசாமிக் கவிராயர் ஆகியோர இலக்கிய உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.

 

பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறைநோக்கஎன்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,

 

கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில்உடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.”

என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

இது பாவலரின் நினைவாற்றலைத் தெளிவுறக் காட்டியது .

 

 எட்டு/பத்து/பதினாறு அவதானங்களை நிகழ்த்திய அவதானிகள் அப்போது உண்டு..
ஆனால்... எதிலுமே உச்சம் தொடும் ஆளுமை பாவலர், நூறு அவதானங்களை நிகழ்த்த வேண்டும் என்ற ஆர்வம் மேலிட அதையும் பயிற்சி செய்து கற்றுக்கொண்டார் பாவலர்!

1907ம் ஆண்டு, மார்ச் மாதம் 10ம் தேதி,சென்னை விக்டோரியா மன்றத்தில், திரு. வி.
ரசிகமணி டி. கே. சி, இந்து ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யர் உட்பட பல்வேறு அறிஞர்கள் சாட்சியாக பாவலர் தனது, நூறு அவதானங்களை நிகழ்த்திக் காட்டினார்.

 

இந்நிகழ்வில் ,திடீரென ஒர் நடுவர் எழுந்து, “கடவுள் வணக்கப் பாடலை சிலேடையாகப் பாடுவீராக?” என்று பாவலரைப் பார்த்து சொன்னார், உடனே அந்த  பாவலர் பாடினார் ;


சிரமாறுடையான் திருமாவடியைத்,
திரமாநினைவார் சிரமே பணிவார்,
பரமாதரவா பருகா ருருகார்,
வரமாதவமே மலிவார் பொலிவார்.”

 


இந்தப்  பாடலில் வரும்சிரமாறுடையான்என்ற சொற்றொடர்  அந்து வித கருத்துகளை தன்னகத்தே அடிக்கியுள்ளது என்பதே பெருஞ்சிறப்பு .

 

1] சிரம் ஆறுடையான்-சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
2] சிரம்மாறு உடையான்-இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
3] சிரம் ஆறுடையான்-ஆறுதலைகளை உடைய முருகன்,
4] சிரம்ஆறுஉடையான்-திருவரங்கத்தில் தலைப்பாகத்தில் காவிரியாறு ஓட(பாம்பு படுக்கையில்) பள்ளிகொண்ட திருமால்,
5] சிரம் ஆறு உடையான்-தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் - என்பனவே அவை.

 

அவையோர் பெரும்கையொலியால் அரங்கை அதிரவைத்தனர் .

இட்டா பார்த்தசாரதி அவர்கள், பாவலருக்கு தங்க தோடாக்கள் அணிந்து மகிழ்ந்தார். விழா தலைவராக இருந்த கண்ணபிரான் அவர்கள் பாவலருக்கு, மகாமதி சதாவதானி என்ற பட்டத்தை வழங்கினார்.பாவலருக்கு முன்பு நூறு அவதானங்களை செய்த சதாவதானிகள் இருந்தார்களா என்பது தெரியவில்லை; ஆனால் பாவலர் செய்குதம்பி அவர்களுக்கு பிறகு இன்று வரை
நூறு அவதானங்களை செய்த சதாவதானி தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

 

நான் கம்யூனிஸ்ட் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .மத நம்பிக்கை இல்லை .ஆனால் செய்குதம்பி பாவலரின் “நபிகள் நாயக மான்மிய மஞ்சரி” படித்த போது பரவசமாகிவிட்டேன் . கட்டுரையின் தொடக்கத்தில் அதிலிருந்து சிலவரிகள் இடம் பெற்றிருக்கிறது . தேவாரம் ,திருவாசகம் ,திவ்வியப் பிரபந்தம் போன்றவற்றைப் படிக்கும் போது அதன் கனிமொழியில் நான் கரைந்ததைப்போல் இதிலும் கரைந்து போனேன் . மொழியின் சுவையில் சொக்கிவிழ மதம் ஓர் தடை அல்ல ; இதன் பொருள் அவை சொல்வதனைத்தையும் ஏற்கிறோம் என்பதும் அல்ல .

 

காய்சீர்களால் நடக்கும் கனிப்பாடல்களின் கம்பீரம் :

யாப்பு நட்டுவாங்கத்துக்குத் தவறாமல்

அடிகளில் ஒலிக்கும் சந்தச் சலங்கையின் ஓசை ;

இழுத்த இழுப்பிற்கு எதுகை மோனைகளை

ஏவல் கேட்கச் செய்யும் எஜமானத்தன்மை ;

ஆராய்ந்து தேர்ந்த வார்த்தை மணிகளின்

அலங்கார அணிவகுப்பு ; கனிந்த மொழிப்புலமையால்

கவியும் நவரசம் ; அருட்தூதர் மீது

பொங்கியெழும் அன்பு உணர்வு வரையும்

அழகுக் கோலங்கள் – இவை எல்லாம்

இஸ்லாமிய தமிழ்ப் புலவர்க்கிடையே

பாவலருக்கு “ தங்க ஆசனம்” தந்துவிடுகின்றது.”

 

என  செய்குதம்பி பாவலரின் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி” நூலுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான்  பாராட்டிப் பொழிந்த கவிமொழி பொய்யில்லை .

 

 

சதாவதானி மட்டுமல்ல சேகுத்தம்பி பாவலர் அவர்கள்.. தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். சாகும் வரை கதராடை அணிந்தவர் .

 

குமரி எல்லைப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! ப.ஜீவானந்தம் ,கவிமணி ,பாவலர் ,நேசமணி என சிறந்த ஆளுமைகள் எல்லைப் போரில் பங்கேற்றனர் என்பது அடிக்கோடிட வேண்டிய செய்தி அன்றோ !

 1950
ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் தேதி, தனது தோழர் மகாமதி சதாவதானி
செய்குதம்பி பாவலர் மரணமடைந்தார்.

 

"ஒரும் அவதானம் ஒரு நூறும் செய்திந்தப்

பாரில் புகழ் படைத்த பண்டிதனைச் – சீரிய

 

சீரிய செந்தமிழ்ச்செல்வனை, செய்குத்தம்பி பாவலனை

எந்நாள் காண்போம் இனி"”

 

என்று, இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இரங்கற் கவி வாசித்தார் .

 

செய்குதம்பி இஸ்லாமியர் . அல்லாவை முகமது நபியை போற்றிப் புகழ்ந்தவர் . தேன் தமிழால் அறநெறிகள் சொன்னவர் . ஆயின் மதவெறியோ ,வெறுப்போ அண்டாத ஞானச்சுடர் எனவே அவரை போற்றுவது நம் கடனே . மதவெறியர் கைப்பொருளாகாமல் காப்பது நமகடன் . இஸ்லாமிய சமூகம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றியிருக்கும் பணியை மறக்கக்கூடாது .

 

[ அவர் பிறந்த நாஞ்சில் மண்ணில்  “தனித்துவம் நமது உரிமை .பன்மைத்துவம் நமது வலிமை.” என்ற முழக்கத்துடன் தமுஎகச மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 13 -15 தேதிகளில் நடைபெறும் வேளையில் சதாவதானி செய்குதம்பி பாவலரை நினைவு கூர்வது நம் காலத்தின் தேவையன்றோ ! ]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

2/8/2022.

 0 comments :

Post a Comment