விசாலப் பார்வையால் விழுங்கும் ‘புரட்சி

Posted by அகத்தீ Labels:

விசாலப் பார்வையால் விழுங்கும்புரட்சி நதிரஷ்யப் புரட்சியின் பிந்தையகாலத்தையும், முந்தைய காலத்தையும் அறிந்து கொள்வதற்கும், புரட்சிக்கு திறவுகோலாக இருந்தவைகளை பற்றி அறிந்து கொள்வதற்கும் இளத்தலை முறைக்கு இது சிறந்த நூல் எனலாம். ஒரு நூலை வாசிக்கிற போது பல நூல்களைப் படிக்க தூண்டும் நூல்கள் குறைவே அந்த குறைவான நூல்களில் ஒன்று தான் இந்நூல். என்றும் ஊளைச்சதையற்ற வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ள் நூல் என்றும் “ புரட்சிப் பெருநதி” குறித்து தாமு எழுதிய நூல் மதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் .

இன்று [ 30/07/2018] தீக்கதிர் புத்தகமேசை பகுதியில் வந்துள்ள நூல் மதிப்புரை வருமாறு

1917 ல் நடந்தேறிய ரஷ்யப் புரட்சி மனிதகுல வரலாற்றில் நடந்திராத மாபெரும் புரட்சியாகும். ரஷ்யப் புரட்சியால் மனித குலம்பெற்ற நன்மைகள் ஏராளம். பல நூற்றாண்டுகாலமாக அறியாமை இருளில் மூழ்கடிக்கப்பட்டு எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு புதிய வாழ்வை அது வழங்கியது.

40 கோடி ஏக்கர் நிலத்தை நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது. அமெரிக்க தலைமையிலான ஒரு துருவ உலகமாக இருந்ததை இருதுருவ உலகமாக மாற்றி காலனி நாடுகளில் அடிமைச் சங்கிலியை அறுத்தெறியக் காரணியாக இருந்தது. விடுதலை வேண்டி போராடியவர்களுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. சிறைபிடிக்கப்பட்ட தேசிய இனங்களுக்குசுதந்திரத்தை வழங்கியது.

முசோலினியின் பாசிசமும், ஹிட்லரின் நாசிசமும் உலகை விழுங்க முயன்றபோது இரண்டு கோடி மக்களை பலி கொடுத்து உலகைக் காத்தது.இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சரிபாதிப் பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. போருக்குப் பின் இனி சோவியத் யூனியன்எழ வாய்ப்பில்லை என எள்ளி நகையாடியது அமெரிக்காவும், பிரிட்டனும்.

10 ஆண்டுகளில் பீனிக்ஸ் பறவையைப் போல் அமெரிக்காவிற்கு நிகராக எழுந்து நின்றது ரஷ்யா. உலகமே வியந்தது. எவ்வாறு முடிந்தது என்று ஸ்டாலினை பார்த்து கேட்ட போது, “சோவியத் யூனியன் முதலாளித்துவ உற்பத்தி முறை பாணி கொண்டதல்ல. சோசலிச பாணியிலான உற்பத்தி முறை கொண்டது. எனவே எங்களால் இழந்ததை மீட்டெடுக்க முடிந்ததுஎன்றார். ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ்,கம்பூச்சியா என பல நாடுகள் சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றன. உலக வரைப்படத்தில் சரி பாதி சிவப்பு நிறத்தால் நிரப்பப்பட்டது.

இவ்வாறு உலகின் திசை வழி மாற்றிஅமைத்த ரஷ்யப் புரட்சி மனித குலத்திற்கு செய்திட்ட நன்மைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் தீர்ந்தே போகும், அத்தகைய மகத்தான புரட்சியின் நூற்றாண்டை கடந்தஆண்டு உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டங்களோடு நிற்காமல் ரஷ்ய புரட்சியின் வரலாற்றை புதிய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் சு.பொ. அகத்தியலிங்கம் தீக்கதிரில் எழுதிய தொடர் கட்டுரைகளைபுரட்சி பெரு நதிஎன்கிற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.

ரஷ்யப் புரட்சி கருக்கொண்ட நாள் துவங்கி வெற்றி பெற்ற நாள் வரை நடந்த நிகழ்வுகளை, லெனினுக்குப் முந்தைய புரட்சியாளர்களை, இயக்கங்களைப் பற்றி மிகச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

1896 நடந்தேறிய வேலை நிறுத்தங்கள், அவை எவ்வாறு 1905ல் நிகழ்ந்த முதல் புரட்சிக்கு இட்டுச் சென்றது என்பதைப் பற்றியும், முதல் புரட்சியின் தோல்வியில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு லெனின் எவ்வாறு 1917 ல் புரட்சியை சாத்தியமாக்கினார் என்கிற நீண்ட வரலாற்றைப் பற்றியும், முதல் உலகப் போரில் லெனின் நிலையும், இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் திறனும், புரட்சிக்குப்பங்களிப்பு செய்தவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஊளைச்சதையற்ற வார்த்தைகளின் மூலம் 178 பக்கங்களுக்குள் திறம்படத் தொகுத்து வாசகர்களுக்குவழங்கியுள்ளார்

ஆசிரியர். மார்க்ஸை பற்றி ஏராளமான நூல்கள் இருந்தாலும், மார்க்ஸ்க்கு திறவுகோலாக இருந்தவர்களைப் பற்றியான பதிவுகொண்ட நூல்கள் குறைவே. குறிப்பாக மார்க்ஸ்க்கு திறவுகோலாக இருந்தவர்களான, கோபர்நிகஸ், கலிலியோ, நியூட்டன்,டார்வின், ஹெகல், ஃபாயர்பாக், பிரதௌன்,தாமஸ்மூர், தொம்மாசோ கம்பானெல்லா, ஜீன்மெல்லியத் என அறிவியல், தத்துவம்,அரசியல் என கோட்பாடுகளை உருவாக்கியவர்களை பற்றியும், மார்க்ஸ்க்குப் பிந்தைய புரட்சியாளர்கள் பற்றியான பதிவுகளையும் நிறைவாக புரிந்து கொள்ளும் வகையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.

கற்பனாவாத சோசலிசம் குறித்து ஏராளமாக நூல்கள் இருந்தாலும், கற்பனாவாத சோசலிசத்தை முன் வைத்தவர்களின் கருத்துகளை புதியவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் சுருங்கக் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் ரஷ்யப் புரட்சியின் பிந்தையகாலத்தையும், முந்தைய காலத்தையும் அறிந்து கொள்வதற்கும், புரட்சிக்கு திறவுகோலாக இருந்தவைகளை பற்றி அறிந்து கொள்வதற்கும் இளத்தலை முறைக்கு இது சிறந்த நூல் எனலாம். ஒரு நூலை வாசிக்கிற போது பல நூல்களைப் படிக்க தூண்டும் நூல்கள் குறைவே அந்த குறைவான நூல்களில் ஒன்று தான் இந்நூல்.

புரட்சிப் பெருநதி ,ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
பக்கங்கள் 176 ,விலை : ரூ 150 /


0 comments :

Post a Comment