என்னோட காமாட்சி ஆச்சி !!!

Posted by அகத்தீ Labels:






என்னோட காமாட்சி ஆச்சி !!!


இன்று [ மார்ச் 8 ] சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் ; யாரெனும் ஒரு பெண்ணியப் போராளியை எழுதலாம்தான் . ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணியப் போராளிகள் இருப்பார்கள் . நாம் அவருக்கு வாயாடி ,பஜாரி ,அடங்காப்பிடாரி என பல பட்டங்கள் கொடுத்து திரைபோட்டிருப்போம் .


என் ஆச்சி . அதாவது அப்பாவின் அம்மா காமாட்சி அம்மாள் எனும் பெண்ணியப் போராளியை ; அதாவது மேலே சுட்டிய பட்டங்கள் வாங்கிய ஒரு பெண்ணை அறிமுகம் செய்யப் போகிறேன் .

என் காமாட்சி ஆட்சி சுமார் ஆறடி உயரம் இருப்பார் .திடகாத்திரமான உடம்பு . சிகப்பு நிறம் .பேரழகி . ஒரு வேளை அன்று அழகிப் போட்டி நடந்திருந்தால் ஐஸ்வர்யா என் பாட்டியிடம் தோற்றிருப்பார்.

என் ஆச்சிக்கு திருமணம் ஆகும் போது வயது பதினாறு . தாத்தாவுக்கு வயது அறுபது . தேவாங்கு உடம்பு .நாலரை அடி உயரம் . என் தாத்தாவுக்கு அது நான்காவது கல்யாணம் . அதன் பிறகு இரண்டு ஆசை நாயகி வேறு .அதை பிறகு பார்ப்போம் .

கோவில் தர்மகர்த்தா என்பதால் கோவிலுக்கு சொத்து இருக்கும் இடமெல்லாம் இப்படி மனைவியோ / ஆசை நாயகியோ அவருக்கு . பெண்களி விருப்பத்தை யார் கேட்டனர் ; எல்லாம் பணம் முடிவு செய்தது .

என் ஆச்சிக்கு இரண்டு மகன்கள் பிறந்தபின் அவர் வேறு ஆசைநாயகி பக்கம் போய்விட்டார் . அவர் எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

ஆச்சிக்கு கிடைத்த கொஞ்சம் வயலும் வீடும் அவரது அழகும் அவருக்கு பகையாளியை அதிகப்படுத்தின .அதிலும் உறவினர்கள் கழுகாய் வட்டமிட்டனர் .

என் ஆச்சி ஜாக்கெட் அணிந்து பார்த்ததில்லை . வெள்ளைப் புடவைத் தூக்கிச் சொருகியபடியே இருப்பார் . பாம்படம் அணிந்த காது . கழுத்தில் எப்போதும் ஒற்றைச் சங்கிலி அணிந்திருப்பார் .திருநீறு பூசிப் பார்த்ததே இல்லை .
தூங்கும் போதும் ; வயலுக்கு ஆற்றுக்கு போகும் போதும் வீச்சரிவாள் கூடவே இருக்கும் ; யாராவது வாயைத் திறந்தால் அவ்வளவுதான் காதுகூசும் வசவுகளால் துளைத்து எடுத்துவிடுவார் . என் ஆச்சி வாயைத் திறந்தால் எல்லோரும் காதை மூடிக்கொண்டு ஓட்டம் பிடிப்பர் .

என் ஆச்சி கோவிலுக்கு போகமாட்டார் ,சாமி கும்பிடமாட்டார் . சடங்கு ,சம்பிரதாயம் எதையும் மதிக்கமாட்டார் .அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது .பகுத்தறிவு ,நாத்திகம் எல்லாம் அறியமாட்டார் .தன் கணவரின் மீதான கோபம் . “ கொட்டை , பட்டை போடுற எல்லா பயலும் அயோக்கியன் ,” என்ற அனுபவத் தீர்மானம் .அடிக்கடி அதை சொல்லவும் செய்வார் ,

தனது சாதியோடு நெருங்கமாட்டார் .இயல்பாக வீடும் கடைக்கோடியில் இருந்தது .நாவிதர் ,வண்ணார் ,தாழ்த்தப்பட்டோர் வீடுகள் அடுத்தடுத்து ; அவர்களோடு மிக நெருக்கம் .அவர்கள் வீட்டில் சாப்பிடுவது ;தன் வீட்ட்டில் அவர்களுக்கு சாப்பாடு போடுவது என இயல்பான சமூகசீர்திருத்தம் செய்தவர் . அது அவருக்கு பெரும் பாதுகாப்பு வளையமும் ஆனது .


அவர் ஆற்றுக்கு போகும் போது ஒரு இடுப்பில் நானோ என் அண்ணனோ இருக்க இருக்க இன்னொரு இடுப்பில் அவர்கள் வீட்டு பிள்ளைகளை இடுக்கிக் கொள்வார் .இதன் காரணமாக சாதி சொல்லி என் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைகூட வரும் .அப்போதும் ஆச்சி மிரட்டிவிடுவார் .


அவா பொம்பளையா போக்கிரி பஜாரி !” என ஊரும் உறவும் வசை பாடும் .

ஆனால் அவரின் துணிச்சலும் கம்பீரமும் போர்க்குணமுமே அவரையும் அவர் சொத்தையும் காக்கவும் உதவின . பிள்ளைகளை வளர்க்க உதவின . வயலைக்கூட குத்தகைக்கு விடாமல் அவரே பயிர் செய்தார் .உழைப்பாளிகள் இவரின் உற்ற துணையாய் இருந்தனர் ; சொந்த சாதியினரோ வன்மம் காட்டினர் .

நான் கட்சிக்கு வந்த பின்னரே என் அம்மா சாதியைப் பார்க்காமல் எல்லோரும் பழக ;இரண்டறக் கலக்க பழகினார் .

என் ஆச்சியைப் பற்றி எதிர்மறை பிம்பத்தையே என் அம்மாவும் அம்மாவழி ஆச்சியும் ஏற்படுத்தியிருந்தனர் . குமரி மாவட்டத்தில் அம்மாவழி வீட்டில்தான் குடியிருக்கும் வழக்கம் இருந்ததால் அப்பா வழி ஆச்சி மீது ஆசை இருப்பினும் ,லீவு நாட்களில் போனாலும் அம்மா வழி ஆச்சி சொன்னதே படிந்தது .

கொஞ்சம் வளர்ந்த பிறகு பழைய செய்திகளை விவரமாக அறிந்த பின்னர் காமாட்சி ஆட்சி பெண்ணியப் போராளியாய் என் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் . என் அம்மாவும் பின்னாளில் இதனை உணர்ந்து உறுதி செய்தார் . என் அம்மாவிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன . என் ஆச்சி நிச்சயம் ஒரு இயல்பான பெண்ணியப் போராளியே !

ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வசை மொழி வாங்குவோரை , பேய் பிடித்தோரை ,சாமி வருவோரை அலசிப் பாருங்கள் ஒரு பெண்ணியப் போராளியின் கண்ணீர்க் கதை அதற்குள்ளிருக்கும் .

பெண்ணியம் மேற்கிலிருந்து வந்ததோ அந்நியக் கருத்தோ அல்ல ; ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சாம்பல் பூத்த நெருப்பாய் கனந்து கொண்டிருப்பதாகும் .

உற்று அறிவீர் ! உரக்கப் பேசுவீர் ! இதுவே என் பெண்கள் தினச் செய்தி !

[ எவ்வளவு முற்போக்கு ,புரட்சி பேசினும் ஆணாதிக்க உணர்வின் மிச்ச சொச்சம் பேச்சிலும் நடைமுறையிலும் இருக்கத்தான் செய்யும் ; நானும் விதிவிலக்கல்ல . நீங்களும் விதிவிலக்கல்ல .ஆயினும் பாலின சமத்துவத்துக்கான போராட்டம் உள்ளுக்குள்ளும் வெளியும் சமரசமின்றி தொடர்வதன்றி வேறுவழி ?}

- சு.பொ.அகத்தியலிங்கம் .





0 comments :

Post a Comment