கோப்பை

Posted by அகத்தீ Labels:

விஷத்தை எந்தக் கோப்பையில் கொடுத்தாலும்
விஷம் விஷம்தான்.


ஆனால் அவர் சொல்லுகிறார் :
“காவிக் கோப்பையில் குடித்தால் அது அமுதம்
பச்சைக் கோப்பையில் குடித்தால் அது விஷம்”


நான் கேட்கிறேன் :


“குடிப்பது எந்தக் கோப்பையாயினும்
விஷம் கொல்லத்தானே செய்யும்”


அவர் பதிலிடுகிறார்:
“.பச்சைக் கோப்பையில் உள்ளது விஷமே . காவிக் கோப்பையில் இருப்பது அமுதம் என்பது எங்கள் நம்பிக்கை அதை கேள்வி கேட்க நீங்கள் யார் ?”


நான் சும்மா இருக்காமல் சொன்னேன் :
“ பூமி தட்டை என்பது நம்பிக்கையாக இருந்தது ஆனால் இன்று ? பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது இதுவும் நம்பிக்கையாகத்தான் இருந்தது ? ஆனால் இன்று ? அனைத்தையும் கேள்வி கேட்டு உடைத்ததே அறிவியல் ; நம்பிக்கைகளை கேள்வி கேட்பது காயப்படுத்த அல்ல ; மெய்விசாரணையே ..”


மீண்டும் சொல்லுகிறார் :
“ இது ஆசீர்வதிக்கப்பட்ட கோப்பை ; அதிகார கிரீடம் இருக்கிறது ; இதில் இருப்பதை விஷமெனச் சொல்வதே தேசவிரோதம்...”


நான் சொல்லுகிறேன் ;


“ நீங்கள் வழக்கமான ஆயுதத்தை எடுத்துவிட்டீர்கள் ! அதுதான் உங்கள் கடைசி புகலிடம் ... உண்மையைச் சொல்லுகிறவனும் ... கேள்வி கேட்பவனும் எப்போதும் உங்களுக்கு தேசவிரோதியே..”


அவர் அதிகார குரலில் சொன்னார்:
“ நீ தேசவிரோதியாக இருக்கப் போகிறாயா ?”


நான் சொன்னேன் :
“ நான் கேள்வி கேட்பேன் . விஷம் எந்தக் கோப்பையில் இருந்தாலும் விஷம் என்பேன் .காவி, ,பச்சை ,மஞ்சள், , என கோப்பையின் வண்ணம் எதுவாக இருப்பினும் என் எண்ணம் ஒன்றே. அதன் உள்ளே இருப்பது விஷமே...”


அவர் ஓங்கி குரலெடுத்தார்:
“ நீ தேசவிரோதிதான் சந்தேகமே இல்லை .


நான் புன்முறுவலுடன் ஒப்புக் கொண்டேன் . பொய்மைக்கு அடிபணிவதைவிட மெய்க்கு பலியாவது மேலானதல்லவா ?

1 comments :

  1. புலியூரான் ராஜா

    உண்மையை உரத்துசொல்லுவோம் ...உயிர் போவதாயினும் ....!

Post a Comment