புதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”

Posted by அகத்தீ Labels:





புதிய சிந்தனையை 

முன்வைக்கும் ‘முகிலினி’


சட்ட மன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்தினூடே இரா.முருகவேள் எழுதிய “ முகிலினி” 488 பக்க நாவலைப் படித்து முடித்தேன் . “சமகால அரசியல் சமூக வரலாற்றோடு பிணைந்த இந்நாவல் குறித்த நூல்விமர்சனம் விரைவில் எழுதுவேன் . இங்கே இப்போது இந்நாவலில் ஒரிடத்தில் படித்த வரிகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்”என்ற குறிப்புடன் கீழ்கண்ட இரண்டு பத்தியையும் பதிவிட்டேன்

.“…….. தமிழ் எனக்குத் துணையிருக்கும் என்ற ராஜூ ,செங்கொடி வெல்லும் என்று போராடிய ஆரான். எப்படி எல்லோரும் தோற்க முடியும் ? அரை நூற்றாண்டுக்குப் பின் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுகின்றன .போராடிப் பெற்ற உரிமைகள் பேப்பரில் இருக்க முதலாளித்துவம் தன்னை மாற்றிக் கொண்டது . சிறை போன்ற ஆலைகளில் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறது .தங்கள் போராட்டம் என்ன வாகும் ? எந்த திசையில் நகரும் ? இன்னொரு ஆரானையும் ராஜூவையும் உருவாக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் ? இதுவரை நடந்தது எல்லாம் தோல்விதான் என்று சொல்ல முடியாது .பல நூறு சின்னஞ்சிறிய வெற்றிகள் மக்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துதானிருக்கின்றன .ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இது அல்ல” (பக்கம் 315 ) 

இதனை பதிவிட்டுவிட்டு மேலும் குறிப்பிட்டேன் , “ தேர்தல் இன்னும் பத்துநாட்களில் கடந்து போய்விடும் ; புது ஆட்சி வந்துவிடும். ஆனால் தேர்தலோடு பிரச்சனைகளும் அரசியலும் முடிந்து போகுமோ ? அப்புறம்தான் சவாலான வேலை காத்திருக்கிறது” அந்த சவாலைச் சந்திக்க அறுபதாண்டு தமிழக சமூக –அரசியல்-பொருளாதார வரலாறு நமக்குத் தெரிந்தால் நல்லது; இந்நாவல் அந்தப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளதால் இப்போது இதனை வாசிப்பது மிக அவசியமாகிறது என்று சொல்லலாம். 

கண்ணம்மா நாயுடு ,கஸ்தூரி நாயுடு, கிருஷ்ணகுமார் என மூன்று தலைமுறை முதலாளிகளோடும் டெக்ஸ்டைல் தொழில்வளர்ச்சி மற்றும் அதன் பிரச்சனைகளோடும் பின்னப்பட்டுள்ளது இந்நாவல் .பண்ணையாளுக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத கண்ணம்மா நாயுடுவின் அடக்குமுறையால் தொழிலாளர்கள் பட்ட அடி , வலி,இழப்பு அதிகம் .செங்கொடி முன் அவர் பணிய நேர்ந்தது. 

“ கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டுமானால் புரட்சி செய்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற கனவு இருக்கலாம்.தொழிலாளிக்கு அது கிடையாது.நல்ல சம்பளம் , நியாயமான வேலை கொடுத்தால் போதும். எங்கள் மில் என்று பேசத்தொடங்கி விடுவார்கள்...”இப்படி சரியாக புரிந்து கஸ்தூரி நாயுடு செயல்பட்டது ; இரண்டாவது உலகயுத்தத்துக்கு பின் ஏற்பட்ட பஞ்சுத் தட்டுப்பாட்டை தொடர்ந்து செயற்கை இழைக்கு மாறியது ; 1969 ல் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தொடர்ந்து மரக்கூழ் தயாரிப்பில் இறங்கியது; வடக்கத்தி முதலாளியை எதிர்கொள்ள முடியாமல் ஆலை கை மாறியது.லாபவெறியில் பவானி ஆறு நச்சுச் சாக்கடையாய் ஆனது - ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியாய் அமைந்த அரசியல் – பொருளாதாரம் ; அதன் சமூக தாக்கம்.… அடடா ! ஒரு ஒருங்கிணைந்த பார்வையோடு அனைத்தையும் ஊடுருவுகிறது இந்நாவல் . 

தமிழார்வலராய் மிலிரிட்டிரியிலிருந்து ஓய்வுபெற்றுவந்த ராஜூ – அவரின் திமுக அனுதாபம் ;அவரின் நண்பரும் தொழிற்சங்கப் போராளியுமான ஆரான் ஆக இரண்டு பாத்திரச் சித்திரிப்பும் அவர்களது குடும்பம் மூன்றுதலைமுறையாய் மாறிக் கொண்டிருப்பதும் - இரண்டு அரசியல் பண்பாட்டுக் கூறுகளை இயல்பாய் படம் பிடிக்கிறது . 

நாவலின் மைய இழையே கண்மூடித்தனமான தொழில்மயமாக்கம் நீரையும் நிலத்தையும் நாசப்படுத்தியதை அரசியல் பொருளாதார நுட்பத்தோடு முன்வைப்பதுதான் . அதில் இந்நாவல் வெற்றிபெற்றுவிட்டது .

பவானி ஆறும் - ராஜூ அதற்கு செல்லமாய் இட்டபெயரான முகிலினியும் உயிர்துடிப்பான பாத்திரங்களாய் உலாவருகின்றது . மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ரமணியின் சாயலில் வடிவமைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் பாத்திரத்தோடு சுற்றுச்சூழல் போராளிகள் ஆவேசத்தோடு உரையாடும் இடம் (பக்கம்276,277.278) மிக முக்கியம் .

 உலகமயத்தை டெக்ஸ்டைல்துறையில் முதலில் ஆளும் வர்க்கம் பரிட்சித்துப் பார்க்கத் தொடங்கி இருப்பதன் குரூர முகத்தை சுட்டுகிறார் .பாடுபட்டு ஒழித்த குழந்தைத் தொழிலாளி முறை , கொத்தடிமைமுறையெல்லாம் நவீன வடிவத்தில் திரும்பி வந்திருப்பதை விளக்கிவிட்டு சொல்லுவார் , “ நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை .இனி வருங்காலத்தில் கட்சி இவை குறித்து கவனத்துடனிருக்க வேண்டும் . நாம் எதிரிகள் அல்ல. சேர்ந்து போராடுவதற்கான களத்தை இனி விழிப்புடனிருந்து உருவாக்குவோம். ஏதாவது ஓரிடத்தில் நமது பாதைகள் இணையும்.” 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் , அரிசிப் போராட்டம் , குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்க அலைந்த கொடுமை என பல அரசியல் நிகழ்வுகளும் நாவலின் நிகழ்வுகளோடு கலந்து நிற்கின்றன . நம்மாழ்வார் , இயற்கை விஞ்ஞானம் ,நதிகள் காப்பு எல்லாம் மாற்றங்களை மட்டுமா சொல்லியது அல்ல. 

உண்மையான அக்கறையோடு சமூக ஆர்வலர் சிலர் முயல மறுபுறம் என்ன நடக்கிறது?” ஆனால், அரசும் ,பெருநிறுவங்களும் தங்கள் வழக்கமான தந்திரத்தின்படி இதை இன்னொரு லாபமீட்டும் வியாபாரமாக மாற்றி வருகின்றன…” மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகும் போக்கு ;இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் ஸ்கேன் ரிப்போர்ட்டாகவே இந்நாவல் சொல்லும் சேதிகள் அதிகம் . 

மூடப்பட மில்லை சூறையாடும் மக்கள் ; அதற்கான சமூக நியாயம், அடடா ! கொலை வழக்கு எல்லாம் வெறும் கற்பனை அல்ல நிகழ்வின் பதிவே ! ராஜூவின் பேரனான கௌதம் வழக்கறிஞராகி வர்ஷினி காதலில் விழுவது; மறுபுறம் அவனின் சமூக அறச்சீற்றம் எல்லாம் ஒரு மாற்றத்தின் குறியீடு ; அவன் தன் திருமண அழைப்பிதழை முகிலினி நதியை தன் உறவாய் நட்பாய் கொஞ்சி கொடுப்பதுடன் நாவல் நிறைகிறது .

 புதிய சிந்தனை முகிழ்க்கிறது . இலக்கியச் செறிவு குறித்து சிலர் கருத்து மாறுபடலாம் . ஆயினும் பொருளடர்த்தி, பார்வை ஒழுங்கு குறித்து வியக்காமல் இருக்க முடியாது . “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் ஆழமான புத்தகத்தை தமிழில் தந்த இந்நூலாசிரின் பார்வைக் கூர்மை இந்த நாவலை வழிநடத்தி இருப்பதை அவதானிக்க இயலுகிறது . முந்தைய நாவலான “ மிளிர்கல்” உடனே படிக்க ஆர்வம் எழுகிறது.


முகிலினி (புதினம்),
ஆசிரியர் : இரா.முருகவேள் ,
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம் .
4/413 பாரதி நகர் . 3- ஆவது வீதி,
பிச்சம்பாளையம் அஞ்சல் ,
திருப்பூர் – 641 603.
பக் : 488 , விலை: ரூ.375.

0 comments :

Post a Comment