மனிதத்தை மீறுமோ அறிவியல் ....

Posted by அகத்தீ Labels:




மனிதத்தை மீறுமோ அறிவியல்


சிரஞ்சீவி
ஆசிரியர்: டாக்டர் பாலகிருஷ்ணன் செரூப்பா,

தமிழில் : யூமா வாசுகி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ தெரு ,
தேனாம்பேட்டை,சென்னை - 600 018,
பக் :96 . விலை : ரூ.60/
இது ஒரு நாவல் அல்ல;இரண்டு நாவல். ஆனால் முதல் நாவலின் கதநாயகன் காலத்தை மீறி இரண்டாவது நாவலில் உலாவருகிறான் . இரண்டுமே அறி வியல் சார்ந்த புனைவுகள் .தமிழில் அறிவியல் சார்ந்த புனைவுகள் மிகக்குறைவு ; கிட்டத்தட்ட இல்லைஎன்றே சொல்லலாம். அந்த அளவு குறைவு; அதன் வீச்சு அதைவிடக் குறைவு. மலையாளத்திலிருந்து தமிழுக்கு இதனை இறக்குமதி செய்துள்ளார் யூமாவாசுகி.மனிதன் தன்னால் என்றும் மார்க்கண்டேயனாக வாழ இயலுமா ? அறிவியல்அதற்கு உதவுமா? அப்படி நடந்தால்என்ன நடக்கும் ? அதன் விளைவுகள்என்ன? என்பதை இந்த இரண்டுநாவலிலும் இடம் பெறும் ஹெல்பர்ட் கல்ரிச் என்பவர் வாழ்க்கை சொல்லுகிறது .சிரஞ்சீவி எனும்முதல் நாவலில் கல்ரிச் மேற்கொள்கின்ற சோதனைகள் சாவு என்பதையே கேள்விக்குள்ளாக்குகின்றது; மூளைச்சாவு அடைந்த பின்னும் இதர உறுப்புகள் சிறிது நேரம் ஜீவிக்கும்; இதன் அடிப்படையிலேயே உறுப்புதானம் நிகழ்கிறது .
இது நாமறிந்த அறிவியல் .இந்நாவலிலோ இதயத் துடிப்பை ஒருரசாயனக் கரைசல் மூலம் நிறுத்துகிறார் கல்ரிச்; மூளை இயங்குகிறது . இன்னொரு கரைசல் மூலம் உடலை இயங்கவைக்கிறார். தன்னை சோதனைக்குஉட்படுத்தும் போது சிக்கிக்கொள்கிறார் .உடல் அசைவு நின்றதால் இரண்டாம் கரைசலைப் பயன்படுத்த முடியவில்லை . அவரோ தனித்து வாழ்பவர் .தனிமை விரும்பி . குடும்பச் சூழலால் அப்படி ஒரு மனோ நிலை . தற்கொலை மனோபாவமும் அவருக்கு உண்டு .இப்போது அவருக்கு யார் இரண்டாவது கரைசல் தருவார் ? போலீஸ் வருகிறதுடாக்டர் அரோரா வருகிறார் .சிக்கலிலிருந்து விடுபடுகிறார் . கல்ரிச் ஆய்வுத் தான் மேற்கொள்ளும் புற்றுநோய் ஆய்வுக்கு உதவுவதால் தம்மோடுஅவரும் சேரவேண்டும் என்ற அரோராவின் வேண்டுகோளை நிராகரித்து கல்ரிச் எழுதிய கடிதத்தோடு நாவல் நிறைவடைகிறது . ஆனால் இந்த நாவலைப் படித்த நம்முள் காதல் , அன்பு , நட்பு எதுவுமே இல்லாமல் எத்தனை ஆண்டு வாழ்ந்தாலென்ன எனும் கேள்வி எழுகிறது .
அடுத்த நாவல்அறிவியல் ஆண்டு184 ” . ஆளற்ற தீவை நோக்கி பயணிக்கும் டாக்டர் பர்க் ,கப்பலின் மேல்தளத்தில் ஒரு விசித்திரமான முதியவரைச் சந்திக்கிறார் .அவரை ரகசியமாக தன்னோடு அழைத்துச் செல்கிறார் . நிலாவில் மனிதன் கால்வைத்ததில் தொடங்கி 184ஆண்டு ; முதியவரோ தன் 36 வயதில் அதுநடந்ததாகக் கூறுகிறார். அப்படியானால் அந்த முதியவர் 220 வயது சிரஞ்சீவி. ஆம் நாம் முன்னர் பார்த்த கல்ரிச்தான் .டாக்டர் பர்க்கின் அப்பா ஒரு புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானி . அவரிடமிருந்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டவரே இந்த டாக்டர் பர்க்.அந்த அறிவியல் யுகத்தில் குழந்தைபிறப்பு உட்பட அனைத்தும் விஞ்ஞான நிகழ்ச்சி நிரலாக்கப்பட்டது .ஆண்பெண் இணைந்து பிள்ளைபெறுவது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது . உயிரியல் அறிவியல் முறையில் புதிய படைப்புகளை உருவாக்குவதில் முரண்பாடு ஏற்பட்டு உலகம் இரண்டாகி விட்டது . சாதி, மதம் , இனம் எல்லாம் ஒழிந்தும் அறிவியலால் பிளவு. ஒரு குழு ரகசியமாக மனிதன் குரங்கு , மனிதன் சிங்கம் என விதவிதமான கலவையில் புதிய புதிய உயிரினம் உருவாக்குகிறது. அதில் டாக்டர்பர்க்கும் ஈடுபட்டுள்ளார். அவர்மனைவியோடு இணைந்து ரகசியமாகஒரு மகளைப் பெற்றுள்ளார் . அந்தப் பாசம் துரத்துகிறது . மறுபுறம் தீவின்மொத்த இயக்கமும் பலவித ரோபோக்களால் நடத்தப்படுகிறது . கல்ரிச்ஒன்றும் புரியாமல் வியக்கிறார். புதியஉயிரினங்கள் கடத்தப்பட்டதால் உலகிற்கு ரகசிய ஆய்வுகள் தெரியவரபர்க் குற்றவாளி யாக பலிகொடுக்கப்படஇருந்த நேரத்தில் கல்ரிச் தலையிட்டுதானே அதனைச் செய்ததாகப் பொறுப்பேற்று; அங்கே உருவான ஒரு பசுமைக்குழந்தையோடு கொஞ்ச நாவல் நிறைவடைகிறது.

உயிரியல் தொழில் நுட்பம் மூலம் மனிதனை உருவாக்க முனையும் போது ஏற்படும் உளவியல் அறவியல் சிக்கல் எல்லாம் நாவலின் போக்கில் நமக்கு விளங்க வைப்பதே நாவலின்வெற்றி. ரஜினி நடித்த எந்திரன் படத்தில் ரோபோ ரஜினிக்கு காதல் உணர்வுவந்தால் என்றகற்பனை நுட்பமானதுதான்; ஆனால்அதன் பிரமாண்டத்திலும் சாகசத்திலும் அந்த மையச் சரடுஅறுந்து போகும்.நெஞ்சில் பதியாது.

இந்நாவலில் மனிதனே உயர்ந்தவன் ;மனிதனுக்கு மாற்று இன்னொன்று இல்லை; காதல்,பாசம் , தியாகம் இவைஇல்லாமல் வாழ்க்கை சுவைக்காது என்பதை மிக நுட்பமாக சொல்லியிருப்பதுவே நாவலின் வெற்றி.

அறிவியலைமிரட்டாமல் சொல்ல முடிந்திருக்கிறதுஇந்நாவலில்.தமிழில் அறிவியல் புனைகதைகள் நிறைய வரவேண்டும் .சமூகப் பார்வை அறிவியலுக்கும் தேவை என முழங்க வேண்டும் ; ஆனால் அறிவியலால் விளையும் கேட்டை தவிர்க்க ஆன்மீகம் எனும் புதைகுழியே வழி என மாறிவிடக்கூடாது . இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது . ஆகவே எச்சரிக்கையோடு படைப்பாளிகள் களத்தில் இறங்குக !இந்நாவல் அதற்குத் தூண்டுகோல் ஆயின் மகிழ்ச்சி !

சு.பொ.அகத்தியலிங்கம் .





0 comments :

Post a Comment