விவாதத்திற்கான ஒரு நூல்....

Posted by அகத்தீ Labels:



விவாதத்திற்கான ஒரு நூல்



ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய உள்வாங்க வேண்டிய இரு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் .முதல் கட்டுரைஇந்திய சமூகக்கட்டமைப்பும் மரபணுவும்” 2013மே மாதம்புதுவிசையில் வெளிவந்தது.

மானுட மரபணுவின் பயணப்பாதையில் கட்டுரையும் தொடங்குகிறது .எல்லோரும் ஆப்பிரிக்க தொப்புள்கொடி மூலத்திலிருந்து வந்தவர்கள் என்கிற ஒற்றை வரியில் ஆரிய திராவிட பிரச்சனையை அடக்கிவிட இயலுமா ?

இந்நூலாசிரியர் ஒரிடத்தில் நெற்றிப்பொட்டில் அறைந்து கூறுகிறார்; “ ஆரியரும் திராவிடரும்ஒரே உயிரினமே அல்ல என பெரியார் கண்டுபிடித்தது போலவும் , எல்லோரும் சகோதரர்கள் என்பதுதான் அவரை எதிர்த்து நின்ற ஆச்சாரியார்கள் ,அய்யர்கள் , அய்யங்கார்கள் ,சாஸ்திரிகள் , சர்மாக்களின் வாழ்க்கை நோக்கு என்பதைப் போன்றும் சித்திரத்தை எழுப்ப எந்த அளவு அசட்டுத் துணிச்சல் வேண்டும் ? ஆரிய திராவிட விவாதம் எழுந்ததேபிறப்பொக்கும்என்ற அணுகுமுறை இல்லாததால்தானே ? ஆரிய- திராவிடப் பிரிவினை உயிரியல் அடிப்படை கொண்டது என்று எந்த வரலாற்று அறிஞர் கூறினார் ? அல்லது பெரியார்தான் அப்படிக் கூறினாரா ?

வேறுபாடுகளும் , அடையாளங்களும் இன மொழி தனித்துவங்களும் மரபணு அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுமென்றால் , மனிதனுக்கும் சிம்பன்ஸிக்களுக்கும் உள்ளவேறுபாடு 2 சதவீதத்திற்கும் குறைவே. அடிப்படைகள் வரலாற்று பூர்வமானவை ,பண்பாட்டு ரீதியானவை.சமூக , பொருளாதாரக் காரணங்களால் நீட்டித்து வைக்கப்பட்டுள்ளன.
 மரபணு வேறுபாட்டை அறிவியல்மறுக்கவே இல்லை ; ஆயினும் அதுவே இன , சாதி , மத வேறுபாடுகளின் அடிப்படை என்பது அபத்தமான வாதமாகும்.
தகுதி, திறமை, முதலியவற்றை மரபணுக்களே தீர்மானிப்பதாகச் சொல்லி - சாதியை நியாயப் படுத்தலுக்கும் சமூகநீதியை மறுத்த லுக்கும் இட்டுச் செல்கிற இன்றைய சூழலில் அதற்கு சவுக்கடியாய் இந் நூல் உள்ளது.

இங்கே ஒரு அண்மை அரசியல் செய்தி கவனத்திற்குரியது . “திராவிட அரசியலால் தமிழகம் பின்னுக்குப் போய்விட்டது.” என்கிற வாதம் பாஜக மற்றும் அவர்களின் எடுபிடிகளான சாதி வெறியர்களால் முன்னுக்கு வைக்கப்படுகிறது .

தமிழகம் மட்டுமல்ல எல்லா மாநிலமும் இந்தியாமுழுவதும் முன்னேறாமல் இருப்பதற்கு அடிப்படைக்காரணம் முதலாளித்துவப்பாதையில் செல்வதினாலேதான் என்கிற உண்மையை மூடிமறைக்கும் சுரண்டல் வர்க்க அரசியலே இது . இடதுசாரிப் பார்வையோடு திமுக , அதிமுக ஆட்சிகள்விமர்சிக்கப்பட வேண்டியவையே. இதில் கருத்து வேறுபாடில்லை .ஆயினும் பொய்யாய் முன்னிறுத்தப்படும் குஜராத்தைவிட தமிழகம் பலபடி முன்னால் உள்ளது என்பதே உண்மை .இது போதுமானதல்ல என்பதும் உண்மையே . ஆனால் மாற்றைமுன்வைப்பதற்குப் பதிலாகதிராவிடஎனப் பொதுமைப்படுத்தி இழிவுபடுத்துவோரின் நோக்கம் சமூகநீதிக்கு எதிரானதே என்பதை உணரவேண்டும் . இதனை நிறுவ அடுத்த கட்டுரை உதவும் .

சாதியும் வர்க்கமும்என்றஇரண்டாவது கட்டுரைபுதுவிசையில் 2008 ஜூலையில் வெளியானது.

எல்லா சாதிகளிலும் எல்லா வர்க்கத்தினரும் இருக்கின்றனர் ; எல்லா வர்க்கத்திலும் எல்லா சாதியினரும் இருக்கின்றனர்என்ற தவறானமனப் பதிவை அடித்து நொறுக்கும் கட்டுரை இது.
எடுத்துகாட்டாக இந்தியாவின் முதல் 54 கோடீஸ்வரர்கள் பட்டியலை தந்துள்ளார் அதில் 6 பேரைத்தவிர ஏனையோர் எல்லாம் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதிகளைச் சார்ந்தவர்களே. மக்கள் தொகையில் 10 விழுக்காட்டிற்கு கீழே உள்ள இவர்களிடம் பெரும் பகுதி சொத்துக்கள் ;இதன் பொருள் இந்தியாவின் ஆளும்வர்க்கம் இவர்களே !

இதே போல் பெருநிறுவனங்களின் தலைமை, நிலவுடைமை , அரசின் உயர் பதவிகள் அனைத்திலும் மேல்சாதியே ஆதிக்கம் செய்வதை இக்கட்டுரை வலுவாகஎடுத்துவைக்கிறது . முற்போக்கு எனபொத்தாம் பொதுவில் பேசி எல்லோரிடமும்பேஷ் !பேஷ் !சபாஷ்எனப் பாராட்டு வாங்கும் கட்டுரையல்ல ; கசக்கும் உண்மைகளை தயங்காது சொல்லியிருப்பதே இக்கட்டுரையின் வெற்றி.

இந்தியாவில் இப்போது பொதுவாகப் பேசப்படும் இந்தியப் பெருமை என்பதை கேள்விக்குள்ளாக்காமல் பகிரங்கமாய் ஒடுக்கப்பட்ட 85 விழுக்காடு மக்கள் பக்கம் நிற்காமல், இனியும் பொத்தாம் பொதுவாய் பேசிக்கொண்டிருக்கலாமோ என்கிற கேள்வியை வலுவாக முன்வைக்கிறது .

ஒத்தடம் வேண்டாம் ; அறுவை சிகிச்சை தேவை ;தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளில்பட்டினிக்கொடுஞ்சிறையில் பதறுகின்ற மனிதர்கள்!” என ஒரு சர்வதேசியகீதம் தவறாது பாடப்படும் . அதில் ஒரு வரிவரும்இக்கணம் நாம் நமக்குரிய பங்கைக்காட்டிக் கேட்கிறோம்எனவரும்; அதன் விளக்கமாக இக்கட்டுரை உள்ளது .இந்நூலை படியுங்கள் விவாதியுங்கள் . உரத்த விவாதமே உண்மை ஒளியைத் தரிசிக்க உதவும் .

சாதி வர்க்கம் மரபணு
ஆசிரியர் : .கு.ராஜன் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7 , இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,
சென்னை – 600 018.
பக்: 64 , விலை : ரூ.40/

 - சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : தீக்கதிர் , புத்தக மேசை  02-08-2015


0 comments :

Post a Comment