யாரையும் காயப்படுத்தாமல்

Posted by அகத்தீ Labels:

யாரையும் காயப்படுத்தாமல்..

சு.பொ.அகத்த்யலிங்கம் .

யாரையும் காயப்படுத்தாத
கவிதையொன்று படைக்க வேண்டும் .
மாளாத ஆசை வெகுநாளாய் ..

யாரேனும் ஒருவர்
யோசனை ஒன்று பகருமின் !

 கடவுளைப் பாடுக!”
 “ அறிவியல் கேள்வி கேட்குமே !”

 “ அப்படியானால் , பகுத்தறிவைப் பாடுக !”
“ மதவெறியர் கோபம் பெருகுமே”

“ வரலாற்றைப் பாடுக!”
“ மெய்யான வரலாறெனில்
சாதி மத எதிர்ப்புகள் மிகுமே!”

“ இயற்கையைப் பாடுக!”
“ இயற்கை சமநிலை குலைத்திடும்
பகைவர்கள் சீற்றம் பெருகுமே!”

“ காதலைப் பாடுக!”
“ கலாச்சார அடியாட்கள்
கொலைவாள் ஓங்குமே!”

 “ அரசியல் பாடுக!”
“ ஜால்ரா இசை மட்டுமே
 ஒலிக்க வேண்டுமே !”

 “ அறத்தை போற்றுக!”
  ‘நூலோர்’ அறமா? ‘வியர்வை’ அறமா?
மோதல் உண்டே”

“ நீதியைப் பாடுமின் !”
“ வர்க்கம் வர்ணம் பார்த்து
நீதியின் தராசும்ஏறி இறங்குமே!”


யாரையும் காயப்படுத்தாத
கவிதையொன்று படைக்க வேண்டும் .
மாளாத ஆசை வெகுநாளாய் …

0 comments :

Post a Comment