பெரியாருக்கு ஒரு கடிதம்

Posted by அகத்தீ Labels:

 
பெரியாருக்கு ஒரு கடிதம்…



மரியாதை மிக்க ஐயா பெரியார் அவர்களுக்கு ,

வணக்கம்.

நான் எழுதும் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் . அறிவியல் பூர்வமாக படிக்கவும் முடியாது. இதனை நீங்கள் உயிரோடு இருந்தால் உரக்கச்சொல்வீர்கள்.உயிரோடு நான் இருப்பதால் அதனை உரக்கச் சொல்கிறேன். ஆயினும் கற்பனையில் கடிதம் வடிக்கிறேன்.

இல்லாத பொல்லாத சொர்க்கம் , நரகம் கட்டுக்கதைகளை நீங்கள் நம்பியதில்லை . எனவே உங்களை அங்கே தேடுவது வீண்.இறப்புக்குப் பின் வாழ்வதென்பது தான் கைக்கொண்ட லட்சியத்தின் தொடர்ச்சியையைத்தான் கூறவேண்டும் . ஆம் வெறுமே நீங்கள் சொன்னவற்றைக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத்திரும்ப சொல்வது மட்டுமே இலட்சியத் தொடர்ச்சி ஆகாது.நாளது வரை சமூகம் சந்தித்துள்ள வளர்ச்சிகளை மாற்றங்களை உள்வாங்கி ஈடுகொடுத்து வளர்ந்து புதிய சவால்களை சந்திக்க அந்த லட்சியம் தயாராக வேண்டும் ; தொடர்ச்சி என்பதன் பொருள் அதுவே.

நலிவுற்ற சமுதாயம் மீள்வதற்காக உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் பாதம் அழுத்தமாகப் பதிந்த இந்த மண்ணில் மதவெறி விஷச்செடிகள் ஆங்காங்கு முளைத்தது எப்படி ? உங்களைவிட சாதியத்திற்கு எதிராய் அதிகம் பேசியவர்கள் யார் ஆயினும் சாதிவெறி போதை உச்சிக்கேறி காதலுக்கு எதிராக கொலைவாள் சுழற்றுவோர் மிடுக்கோடு திரிவது எப்படி ? ஐயரைத் தவிர்த்து பொதுமேடையில் திருமணம் செய்தாலும் – திருமண அழைப்பிதழில் உங்கள் படத்தையும் பொன்மொழியையும் பொறித்தாலும் - சாதியையும் வரதட்சணையையும் மட்டும் பற்றிநிற்பவர் எண்ணிக்கை பெருகுகிறதே! ஏன் ? பெண்விடுதலை குறித்து தங்களைவிட அதிகம் சிந்தித்தவர் பேசியவர் எழுதியவர் யார் ? யார் ? ஆயினும் கற்பை ஒருதலையாய் பற்றி நின்று இங்கு கூத்தடிப்பதை என்னென்பது ?

ஐயா ! சைவ மடங்கள் போல் – வைணவ மடங்கள் போல் உங்கள் வழித்தோன்றல்கள் திராவிட மடம் ஆக்கிவிடுவார்களோ என்கிற என் ஐயத்தை சொல்லாம்ல் இருக்க முடியவில்லையே ! உங்கள் பேச்சை எழுத்தை வார்த்தைக்கு வார்த்தை கிளிப்பிள்ளைபோல் – நகலெடுப்பது போல் திருப்பிச் சொல்வது போதுமா ? அது இன்றையத் தேவையை நிறைவு செய்யுமா ? காலம் மாறிக்கொண்டே இருக்கிறது – அறிவியலும் சமூகக்கண்ணோட்டமும் மாறிக்கொண்டே இருக்கிறது வளர்ந்துகொண்டே இருக்கிறது – மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூடிக்கொண்டே இருக்கிறது ; இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் யுத்தி மாறவேண்டாமா ? வளரவேண்டாமா ?

"வைதீகப் பழமைக்கு எதிராக தமிழ் மொழியும் இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட அதே வேளையில் தமிழ் பழமையும் பெருமிதங்களும் விமர்சனமின்றி பாராட்டப்பட்டன. இது பகுத்தறிவு வகைப்பட்ட அரசியல் அன்று - அறிவின் சமூக மாற்றப் பண்பு நீர்த்துப்போயிற்று. திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் வளர்த்தெடுத்த தமிழ்ப் பழமையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமிதங்களுக்கிடையில் அரசு எனும் அடக்குமுறை இயந்திரம் குறித்த விமர்சனம் அடியோடு இல்லாமல் போயிற்று. கண்ணகியின் கற்பு பற்றிய மலைப்புகளுக்கிடையில் பெண் விடுதலை என்பதே அரவமில்லாமல் மறைந்துபோயிற்று. இவையெல்லாம் சமூக மாற்றத்திற்கான பகுத்தறிவுப் பாதை அல்ல." என முத்து மோகன் நொந்து கூறுவதை புறந்தள்ளிவிட முடியுமா ?

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. இது சிங்காரவேலர் வாதம். உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்: "பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே" என்றார். இதனை தமிழ் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா?

ஐயா நீங்களும் சிங்காரவேலரும் அயோத்திதாசப் பண்டிதரும் ஜீவாவும் அம்பேத்கரும் துவங்கிய சமூகசீர்திருத்தப் பணிகளை அடுத்தகட்ட்த்திற்கு – அறிவியல் சமூக தளத்தில் முன்னெடுத்துச் செல்லும் கடமையும் பொறுப்பும் தகுதியும் ஆற்றலும் உள்ள கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் அதனை தேவைக்கேற்ப உணர்ந்திருக்கிறார்களா ? செய்கிறார்களா ? இந்த அறுவரும் உடன்படும் இடமும் உண்டு முரண்படும் இடமும் உண்டு ஆனால் இது நட்பு முரண்பாடு ; இதனை பகை முரண்பாடு ஆக்குவோர் இறுதியில் சுரண்டும் வர்க்கத்திற்கும் மநுவாதிகளுக்குமே சேவை செய்கிறார்கள் . இந்த சாதாரண உண்மையை உங்களை – இவர்களை புகைப்படமாக்கி மாலை அணிவிப்போர் உணர்வார்களா ? இன்னும் காலம் கடந்துவிடவில்லை . இன்னும் நம்பிக்கை இருக்கிறது .இப்போது விழித்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போதைய மார்க்சிய அறிஞ்ர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார், “இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம்”

ஐயா ! உங்கள் பிறந்த தினத்தன்று என் சிந்தனையில் திரண்டவற்றை கடிதம் வாயிலாக பகீரங்கமாக தெரிவித்துவிட்டேன்..விவாதங்களை எப்போதும் ஊக்குவிக்கிறவர் அல்லவா நீங்கள் ..

அன்புத் தோழன்,

சு.பொ.அகத்தியலிங்கம்.

சென்னை , 17 செப்டம்பர் 2013.

0 comments :

Post a Comment