விசாரணைக் கூண்டில் கடவுள்

Posted by அகத்தீ Labels:

 
 
 
விசாரணைக் கூண்டில் கடவுள்

- சு.பொ. அகத்தியலிங்கம்



து கடவுள் குறித்த கதை அல்ல; வரலாறு. இப்படிச் சொல்வதால் கடவுள் என்பது மெய்யானது என்றாகிவிடுமோ?; இச்சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே கடவுளின் கதை என இந்நூலுக்கு பெயர் சூட்டினாரோ அருணன்.

இந்நூல் இன்றைய தேவை. ஆம். விஞ்ஞான ஒளி பரவப்பரவ மூடநம்பிக்கைகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும் என்கிற கருத்து இன்றைய யதார்த்தத்தோடு பொருந்தவில்லை. அறிவியல்  தகவல் ஞானம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. அறிவியல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. வாழ்வின் ஒரு நொடிகூட அறிவியல் சாதனங்களின் துணையின்றி நகராது என்கிற உண்மையும்; அதே நேரத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமே மூடநம்பிக்கைகள் வலுவாக தூக்கிநிறுத்தப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது.  உலகமயத்தின் பண்பாட்டு தத்துவ விளைவாய் மதவாதம் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது. இச்சூழலில் மதம், கடவுள் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமாய் முன்னெடுத்துச் செல்லப்படுவது காலத்தின் கட்டாயம் . இந்நூல் அப்பணிக்கு பெரிதும் உதவும் என்பதால் முதலாவதாக இந்நூலை வரவேற்போம்.

ஆங்கிலத்தில் இது குறித்து ஆழமான நூல்கள் பல வந்துள்ள போதிலும் அவை தமிழ் வாசகர் பரப்பை இன்னும் போதுமான அளவு எட்டவில்லை. ஆகவே உலகெங்கும் மதம், கடவுள் தோற்றம் குறித்து நடக்கும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை விவாதங்களை உள்வாங்கி அத்தகைய நூல்களை தேடிப்படித்து சாறு பிழிந்து, மார்க்சிய சல்லடையில் வடிகட்டித் தருவது பெரும் சேவையாகும். அந்த வகையில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.

கடவுளின்கதை யானது நம்பிக்கை நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையாலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுள் கொண்டு வரத்துடித்த தீவிரம், அதற்கு பல கடவுள் காரர்களே தெரிவித்த  கடும் எதிர்ப்பு , அப்படிக் கொண்டு வரப்பட்ட போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது. என்று நூலாசிரியர் அருணன்  முன்னுரையில் தந்துள்ள வாக்கு மூலம் நூல் நெடுக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று சில லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த கடவுள் - மத நம்பிக்கையின் ஆதிக்கூறு - அமானுஷ்ய நம்பிக்கை கருக்கொண்டு சமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தாம் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரணம் குறித்த அறியாமையும் பயமும் ஆதிமனிதனிடம் தோற்றுவித்த அமானுஷ்ய நம்பிக்கை தொடங்கி அல்லா என்கிற ஏகக்கடவுள் சிந்தனை வரை கடவுள் கற்பிதம் வளர்ந்த பாதை நெடுக இரக்கமற்ற கொலைகளும் மோதல்களுமே வரலாற்றின் பக்கம் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பதை நூலாசிரியர் வலுவாக வரைந்து காட்டுகிறார்.

வேட்டை சமூகம் , விவசாய சமூகம் என ஒவ்வொரு சமூகத்திலும் உருவான வழிபாட்டு முறைகள் எப்படி அந்த சமூகத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதையும்; வெவ்வேறு நாடுகளில் தோன்றிய கடவுள்களும் மதங்களும் அவர்களில் புவியியல் சமூகவியல் சூழலோடு இணைந்தது என்பதையும் மிக நுட்பமாக குறித்துச் செல்கிறார். 
 
வெறுமே புராண ஆபாசங்களையோ கடவுள்கதைகளின் ஆபாசங்களையோ நம்பிக்கை யாளர்கள் மனம் நோகும் படி பிரச்சாரம் செய்வது பகுத்தறிவுப்  பிரச்சாரம் ஆகிவிடாது. ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள சமூக வாழ்வியல் தேவைகளோடும் காலத்தின் பின்னணியோடும் இணைத்துப் பார்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். சிங்காரவேலர் அத்தகைய பிரச்சாரத்தை அன்றைக்குக் கிடைத்த அறிவியல் தகவல்களின் அடிப்படையில் கூர்மையாகச் செய்தார். பெரியாரைமறுத்து அல்ல அவரது சிந்தனைகளை சரியான திசைவழியில் மேம்படுத்தி சிங்காரவேலர் தொடங்கிய பணி பின்னர் உரியவர்களால் தொடராமல் விடுப்பட்டுவிட்டது. தற்போது புரட்சியில் பகுத்தறிவு என ப.கு. ராஜன் எழுதிய நூல் உட்பட பல நூல்கள். இடதுசாரி வட்டத்தில் இருந்து வெளிவரத்துவங்கி உள்ளன. இது நம்பிக்கை யூட்டும் நல்ல செய்தி. அதன் இன்னொரு அடிவைப்பே இந்நூல் எனில் மிகை ஆகாது.

இறந்தோர் வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, விக்ரக வழிபாடு, பல தெய்வ வழிபாடு, இப்படி வேர்விட்டு கிளைபரப்பிய கடவுள் கற்பிதத்தின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. சட்டென்று கடவுளை மனிதன் நம்பி விடவுமில்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எல்லாம் காலகதியில் எப்படி அரங்கேறியது? யார் அரங்கேற்றினர்? கேள்விகளுக்கு இந்நூலில் விடை உண்டு.

மோசே, இயேசு, முகமது நபி என தொடர்ந்துவந்த ஒவ்வொருவரும் சமூகத்தில் வழிபாட்டில் தங்கள் தாக்கத்தை ஆழமாகவேரூன்றினர். மோசே மலையில் இருக்கும் போது யோகாவா எனும் கடவுளின் கட்டளைகள் பெற்றார். இயேசு மலைப்பிரசங்கம் செய்தார். முகமது நபியும் மலையில் இருக்கும் போதே அசரீரிகேட்டார். இப்படி மலைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? இந்நூலில் சொல்லிச் செல்கிறார். 
 
கடவுள் மனிதனைப் படைக்க வில்லை; மாறாக மனிதனே கடவுள் கற்பித்ததை சிருஷ்டித்தான் என்பதை ஆணித்தரமாய் இந்நூல் நிறுவுகிறது. அதுவும்  விதவிதமாக தன்தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அவன்படைத்த கடவுள் எண்ணிக்கை அநேகம். அதில் செத்துப்போனவை பல. இன்னும் மீதமிருப்பவை பல. இவற்றையும் கொன்று ஏகமாக்க நடக்கும் தொடர்முயற்சிகள் எல்லாம் நம்மை வியக்கவைக்கின்றன.  விழிகளைத்திறக்கின்றன.

சமூகம் என்பது ஆயுதபலத்தால் மட்டுமல்லாது, புத்தி பலத்தாலும் உணர்வு பூர்வமான ஓப்புதல் பலத்தாலும் ஆளப்படுகிறது என்பதை ஆண்டான்கள் கிறுத்துவத்தின்  மூலம் பரிபூர்ணமாக உணரந்தார்கள் என ஐரோப்பிய அனுபவத்தை சொல்லும் போது சரி; பிராமணியம் வர்ணாசிரமத்தை காக்க தனது கற்பனைகளை ஆயுதங்களாக்கியதையும் மிகச்சரியாக வரைந்துள்ளார்.

யூதம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம்,  இந்து என இன்று உலகில் நின்று நிலைக்கும் முக்கிய மதங்கள் தோன்றிய சூழல்; தன்னை தக்கவைத்துக் கொள்ள அவை மேற்கொண்ட சாகசங்கள்; ஆட்சியாளர்கள் தலையீடு என வரலாற்றுப் பார்வையோடு மதம், கடவுள் கற்பிதங்களின் தோற்றத்தை இந்நூலில் பதிவு செய்கிறார் அருணன்.

ஆண்டான் அடிமை யுகத்தில் நிகழ்ந்த செய்திகளே இந்நூலின் பிரதான சுருதி, ஆனால் நிலபிரபுத்துவகாலம், முதலாளித்துவ காலம், என தொடரும் இந்த கடவுள் மத நம்பிக்கை குறித்து அடுத்த பாகத்தில் அலசப்போவதாக நூலாசிரியர் வாக்குறுதி தந்துள்ளார். அதே சமயம் இதில் கூறப்பட்ட செய்திகளையே உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது. 
 
வழக்கமாக நாத்திகம் பேசுவோர் மீது ஒரு அம்பு வீசப்படும். அதாவது நீங்கள் இந்து மதத்தையே தாக்குகிறீர்கள் கிறுத்துவம், குறித்தோ இஸ்லாம் குறித்தோ பேசப் பயப்படுகிறீர்கள் என்பது தான் அந்த குற்றச் சாட்டு.  இந்நூல் கிறுத்துவம், இஸ்லாம் அதற்கு முந்திய யூதம் இவற்றின் தோற்றம்,  மோதல்,  பலி என பலதை ஆதாரபூர்வமாகப் பேசுகிறது என்பது வெறும் செய்தி அல்ல பகுத்தறிவாளர்களுக்கு கிடைத்துள்ள கருத்தாயுதம் என்றே பொருள்.

ஒரு சின்ன செய்தி சுன்னத் என்கிற விருத்தசேதனம் பொதுவாக இஸ்லாமியர் உலகுக்கு கொண்டுவந்த நடைமுறை என்றே கருத்து பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது. ஆனால் ஆது யூத மதத்திலிருந்தே பெறப்பட்டதாக நூலாசிரியர் வாதிட்டுச் செல்வது மிக முக்கியம். அதசமயம் புத்தமதத்திலும் இச்சடங்கு இருந்ததா? சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே! அருணன் அடுத்த பதிப்பில் இதற்கான பதிலையும் இணைப்பார் என நம்புகிறேன்.

வெண்கலயுகம், இரும்பு யுகம் என ஆயுதங்களின் மாற்றங்களோடு கடவுள் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விரிவாக பதிவாகி உள்ளது.
சாக்ரட்டீஸ் துவங்கி இந்தியாவில் லோகாயாவாதிகள் நடத்திய பகுத்தறிவு போராட்டமும் கூடவே உள்ளது. இஸ்லாம் பிற மதநம்பிக்கையாளர்களை கூட நாத்திகர்களாகவே கருதுவதை; ஏன் கிட்டத்த அனைத்து மதங்களும் பிற மதங்களை மத நம்பிக்கையாளர்களை நாத்திகர்களை விட அதிகமாக வசைபாடுவதை விமர்சிப்பதை தாக்குவதை படிக்கிறபோது அன்பைப் போதிக்கவே மதங்களும் கடவுள்களும்உருவாயின என்ற கருத்து ஆட்டம் காண்கிறது.

தமிழகத்தில் நிலவிய ஆதி வழிபாட்டுக் கூறுகள்; நம்பிக்கைகள் திணைவழி சமூகத்தின் அம்சங்கள், வேல்வெறியாட்டு, கொற்றவை வழிபாடு, போன்றவைகள் உரியமுறையில் இந்நூலில் இடம் பெற்றிருந்தால் புரிதல் மேம்பட உதவி இருக்கும். தமிழர் தத்துவமரபு என இரு நூல் தொகுதிகள் எழுதிய அருணனுக்கு அது அறியாத செய்தி அல்ல. ஒரு அத்தியாயம் சேர்திருக்கலாமே? ஏன் தவறவிட்டார்? அடுத்த பதிப்பில் எதிர்பார்க்கிறோம்.

மதம் , கடவுள் தோற்றம் குறித்த செய்திகளை படிப்பது கதை படிப்பதோ வரலாறு படிப்பதோ அல்ல; மாறாக சமூகத்தின் பொது புத்தியில் ஊறியுள்ள கற்பிதங்களை அடையாளம் காணவும் அதன் பொருளற்ற நம்பிக்கைகளை அடித்து நொறுக்கவும் கருத்துப்போராட்டத்தின் ஒரு கூறு . அதாவது பகுத்தறிவை கூரேற்றும் முயற்சி அதற்கு இந்நூல் உதவும்.

இடதுசாரிகள் தாம் சரியான கோணத்தில் சமூகசீர்திருத்தத்தை இனி முன்னெடுத்துச் செல்லமுடியும். அதற்கு இந்நூல் குறித்த  விமர்சனங்களும் விவாதங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள் பரப்புங்கள். 
 
கடவுளின் கதை
ஆதிமனிதக் கடவுள் முதல் அல்லாவரை
ஆசிரியர்: அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்   69/21, ஏ, அனுமார் கோயில் படித்துறை  சிம்மக்கல் , மதுரை 635 001 பக்: 360,    விலை: ரூ. 250/-

2 comments :

  1. sanjay

    பகுத்தறிவு பேசுவோருக்கு பெரும் பொக்கிஷமான இந்த நூல் மற்றும் அட்டைப்படத்தை வடிவமைத்தவன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்...

  1. vimalavidya

    Have to give more attention to read this heavy subject book..will read very soon --

Post a Comment