ஒரு புத்தகத்தை முன்வைத்து...
சமூக முதல் + கடின உழைப்பு = வெற்றி
சு.பொ. அகத்தியலிங்கம்
வெற்றியாளர்களின் வாழ்க்கை
வரலாறுகளாகச் சொல்லப்படுவதெல்லாம் உண்மையா ? வாழ்க்கை வரலாறுகளில் உண்மையை, புனைவை வேறுபடுத்திக் கண்டறிவது எப்படி?
சுயவரலாறாக எழுதப்படும்போது ஒரளவு உண்மைச் செய்திகள் மேலோங்கி
இருக்கும். ஒரளவு என்று கூறுவது காரணத்தோடுதான். எல்லா உண்மையையும் எப்போதும் எல்லோரும்
சொல்லிவிட முடியாது. சொல்லவும் தேவை இல்லை. நீதிமன்றங்களில்கூட நான் சொல்வதெல்லாம்
உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை, என்றுதான் உறுதிகூறுகிறோம். இதன் பொருளே உண்மைகளையெல்லாம்
சொல்வதென்பதல்ல, மாறாக சொல்வது உண்மை, அவ்வளவுதான். மகாத்மாகாந்தி, இ .எம் .எஸ். நம்பூதிரிபாட்,
ஏ.கே. கோபாலன் ஆகியோர் எழுதிய சுயவரலாறுகளில் உண்மையின் பேரொளி சுடர்விட்டது.
ஆக, வெற்றியாளர்கள் வாழ்க்கையின் உண்மையை அறிவதற்குப் பகுத்தறிவை
பயன்படுத்துவதே சரியான வழி. மாற்று இருப்பதாகத் தெரியவில்லை. அதை எப்படிச் செய்வது
? அதற்கு வழிகாட்டியாய் ஒரு நூல் வெளிவந்துள்ளது -பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள
கணிதமேதை ராமானுஜன். ஏற்கெனவே ரகமி எழுதி தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்த - பின்னர்
நூல் வடிவம் பெற்ற - பல லட்சம் வாசகரை சென்றடைந்த நூலின் மறுபதிப்புத்தான். ஆனால்,
அதில் த.வி. வெங்கடேஸ்வரன் செய்துள்ள தொகுப்பும் வழங்கியுள்ள குறிப்பும் நம்மை வேறு
தடத்தில் சிந்திக்க வைத்து விடுகின்றன.
ராமானுஜன் சிறந்த கணிதமேதை இதில் யாருக்கும் ஐயமில்லை. த.வி.வெ.யும்
அதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவரது கணித மேதைமையின் உட்பொருளை மிகச்சரியாக
இனம் காட்டியிருக்கிறார். அதே சமயம் புனைவுகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வெற்றியின்
சமூகரகசியம் பற்றி உடைத்துக் காட்டியிருப்பதுதான் மிகமுக்கியம். இது அவரைச் சிறுமைப்படுத்த
அல்ல; மாறாக சமூகநீதியின் அவசியத்தை உணர்த்தவே.
ரகமியின் புத்தகத்தை மறுத்தோ கண்டுகொள்ளாமலோ வெங்கடேஸ்வரன் புதிதாக
ஒன்றை ஆக்கியிருக்கமுடியும். அது ஒரு பகுதியினரைச் சென்றடையும். ஆனால், அது புனைவையும்
உண்மையையும் பிரித்தறிய உதவியிருக்காது. அவ்வகையில் இந்நூல் தனி கவனிப்புக்கு உரியது.
முதலில் ரகமி எழுதியதை தன் நோக்கிற்கு சிதைத்து வெளியிடவில்லை.
மாறாக விளக்கம்,மறுப்பு,தகவல் பிழை இவற்றை சரியாகச் சுட்டிக்காட்டி மொத்தம் 28 அடிக்குறிப்புகள்
தந்துள்ளார். எடுத்துக்காடாக [ பக்கம்
48] “ ராமனுஜம்
எப்போதும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்குபவர் . எப். எ. தேர்வில் ராமணுஜம் மற்றபாடங்களில்
தோல்வி அடைந்த போதும் கணக்கில் நூறுவாங்கினார்,” என்று ரகமி புத்தகம் கூறுகிறது.
இப்படிக் கூறுவது தவறு. அவர் கணிதத்திலும் நூற்றி ஐம்பதுக்கு எண்பதைந்துதான் வாங்கினார்
என்று வெங்கடேஸ்வரன் ஆதாரத்தோடு கூறுகிறார். இது ராமனுஜத்தின் பெருமையைக் குறைப்பதல்லை.
மாறாக த.வி.வெ. கூறுவது போல்,
“ கணிதவியல் என்றாலே வேகவேகமாக வகுத்தல் - பெருக்கல் செய்வது; வர்க்க மூலம் கண்டுபிடிப்பது
போன்ற கணித வித்தைகளைத்தான் நாம் நம் முன் கண்கிறோம். உள்ளபடி கணிதவியல் என்பது கூட்டல்
பெருக்கல் அல்ல. 18 பெருக்கல் 8 என்பதை சட்டென்று சரியாகச் சொல்வது மெய்கணிதத் திறமை
அல்ல.” ஆகவே
கணிதத்தில் நூற்றுக்கு நூறுவாங்குவது மட்டுமே கணித மேதைமை அன்று. இதைத்தான் அடிக்குறிப்பில்
உணர்த்துகிறார் வெங்கடேஸ்வரன்.
இன்னொரு எடுத்துக்காட்டு, டாக்ஸி நெம்பர் புதிர் (பக்கம் 118). ராமானுஜன் எண் என்றே வழங்கப்படுகிற
1729 என்ற எண்ணைப் பற்றியது. “ இரண்டு விதமாக 1729ஐ இரண்டு எண்களின் மும்மடி
என ராமானுஜம் எளிதில் கூறியதில் வியப்பிற்கு இடமில்லை. உள்ளபடியே இவ்வாறு அமையக் கூடிய
எண்களில் மிகச்சிறியது 1729 என்பதில்தான் அவரது கணிதப் புலமை அடங்கியுள்ளது.” இதே போல, “ தனது இளம் வயதிலேயே ராமானுஜத்தால்
பகா எண்களை ஒரு கோடி வரையில் சொல்லமுடிந்தது” என்கிறார் ரகமி இதனை தனது
அடிக்குறிப்பில் த.வி.வெங்கடேஸ்வரன் தெளிவுப்படுத்துகிறார்: “இவ்வாறு ராமானுஜன் உள்ளபடி ஒருகோடி பகாஎண்கள் ஓன்றும் கண்டுபிடிக்கவில்லை.
ஒரு கோடி வரையுள்ள பகா எண்கள் கூட இனம் கண்டு பதியவில்லை. பகா எண்களின் பட்டியலை அவர்
தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதினார் என்பது உண்மைதான். மெய்வருத்தி கணிதம் செய்து
ஒவ்வொரு எண்ணாகப் பரிசோதித்துதான் பாகா எண் பட்டியலைத் தயாரித்தார். அதன் நோக்கம் பகா எண்களில் ஏதேனும் பாங்கு தென்படுகிறதா
என அறியத்தான். உள்ளபடியே 2005ம் ஆண்டில் தான்
முதல் ஒரு கோடி பகா எண்கள் கண்ணி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன.” இவ்வாறு கணித உண்மைகளை
நேர்மையுடன் வெங்கடேஸ்வரன் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் ராமானுஜத்தின் மேதைமை கொஞ்சமும்
மங்கிவிடவில்லை. மாறாகப் பிரகாசிக்கவே செய்கிறது.
ரகமி தமது எல்லைக்கு உட்பட்டு ராமானுஜத்தை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
அதன் பயனை மறுதலிக்காமல் மேலும் செழுமைப் படுத்த 28 அடிக்குறிப்புகள் த.வி. வெங்கடேஸ்வரன்
தந்திருப்பது மிக முக்கியம். தமிழில் நானறிந்தவரை இதுவே இத்தகு முதல் முயற்சி. வழக்கமாகச்
செய்வது போல இந்த நூலை வேகமாக வாசிக்க அடிக்குறிப்புகளை கண்டுகொள்ளாமல் பக்கங்களைப்
புரட்டினால் அரிய பல உண்மைகள் தெரியாமலே போய்விடும்.
எப்.ஏ. தேர்வில்
வெற்றிபெறவே முடியாமல் மூன்று முறை தோற்றவரான ராமனுஜம் வெளிநாடு செல்ல வாய்ப்பு பெற்றது
எப்படி? தெய்வத்தின் அருளா? த.வி.வெ. நூலின் இறுதியில் தந்துள்ள மதிப்பீட்டுக் கட்டுரையில் கூறுவது மிகவும் சிக்கலான, ஆனால் இந்திய சமுதாயக்கட்டமைப்பு
சார்ந்த முக்கியமான செய்தியாகும். [ நூலில்
158 ஆம் பக்கம் பார்க்க]: “ போர்ட் டிரஸ்ட் மேலதிகாரி பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ்
ஸ்பிரிங் ; இந்திய கணித சங்கத்தை தோற்றுவித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர் என ராமானுஜத்திற்கு
உதவியவர் பலர். பிராமண உயர் சாதி வகுப்பில் பிறந்த காரணத்தினால் ராமானுஜத்தினால் உயர்
பதவியில் உள்ள பலரின் ஆதரவை எளிதில் நாட முடிந்தது.
அதாவது தனது சமூகமுதலைப் பயன் படுத்தி அவரால் வெளிவரமுடிந்தது.”
த.வி. வெங்கடேஸ்வரன் சுட்டியிருப்பது கசப்பான உண்மை. பிராமணியம்
என்ற சொல்லை பயன் படுத்தவில்லை. சமூகமுதல் என்கிற சொல்லாடல் கவனத்திற்குரியது. ஏனெனில்
அவர்கூறுவது இன்றைக்கு உயர்சாதி, உயர்பதவி, அரசியல் செல்வாக்கு என பல சமூக முதல்கள்
உள்ளன. அதில் உயர் சாதி என்பது குறிப்பிடத்தக்கது அல்லவா?
தொடர்ந்து வாதிடுகிற வெங்கடேஸ்வரன் சொல்கிறார்: “ சமூகமுதல்
(சோஷியல் கேப்பிட்டல்) நமது வாழ்வில்
வகிக்கும் பங்கு குறித்து இங்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். வறுமை. கிராமச் சூழல்
முதலிய தடைகள் மட்டுமல்லாது சமூகமுதலின்மை என்ற சவாலையும் சந்திக்கும் மாணவ மாணவியர்
அவ்வளவாக நடைமுறைவாழ்வில் மெச்ச முடிவதில்லை.” [மிளிர என்ற
சொல்லே இருந்திருக்க வேண்டும். அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.]
ராமனுஜம் போலவே கணிதத் திறமை பொதிந்து ; ஆனால் சமூக முதலின்றிப்
பிறந்த எவ்வளவு ராமானுஜன்கள் வெளிவர முடியாமல்
சேற்றிலே புதைந்துவிட்டனர்... என த.வி.வெ. வருந்துவது பொருள்பொதிந்தது. ஆம் ராமனுஜத்தின்
கதை, சமச்சீர் கல்வியின் தேவையை - சமூகநீதி
இன்றைக்கும் தேவைப்படுவதை - மிக அழுத்தமாக பதியவைக்கிறது. ராமானுஜம் தம் சொந்த வாழ்வில்
சனாதனியாக - பிராமண மடிசஞ்சியாக - நாமகிரித்தாயார் என்ற குறிப்பிட்ட சாமி மீது பயபக்தி கொண்டவராக
- தற்கொலைக்கு முயன்றவராக இருந்ததை இந்நூல்
படம்பிடிக்கிறது. அப்படிப்பட்டவர் வெற்றி பெற்றதன் ரகசியம் எது என்பதை அடிக்குறிப்புகளும்
த.வி.வெ. கட்டுரைகளும் கூறுகின்றன.
“காளிதாசனுக்கு காளி நாக்கில் எழுதி வரம்
கொடுத்ததால் அவருக்கு சொல்வன்மை வந்தது என்பார் ; அதுபோல நாமகிரித்தாயார் கொடுத்த வரமல்ல ராமானுஜத்தின் கணிதம்.
கடும் உழைப்பு; தீவிரப் படிப்பு; கல்விமான்களுடன் உரையாடல்; அடுத்தவரிடமிருந்து கற்றல்
என்பதுதான் ராமானுஜ ரகசியம்.”
சமூகப்
பின்புலம் என்கிற சமூக முதலுடன் கடின உழைப்பும் தீவிர படிப்பும் சேரும்போது அவர் மேதைமைக்
குன்றிலிட்ட விளக்கானார். இத்தகைய சமூக முதலில்லாத மேதைகளைக் கைதூக்கிவிட சமூகநீதியும்
சமதுவப்பார்வையும், கல்வி உரிமையும், சமச்சீர்கல்வியும்
மிகமிக அவசியம். a
2 comments :
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
அருமையான ராமானுஜ ரகசியம்... நன்றி ஐயா... (From http://blogintamil.blogspot.in/2013/02/normal-0-false-false-false-en-us-x-none.html)
Post a Comment