திராவிட இயக்க நூற்றாண்டு அறிவியல்பூர்வமான ஆய்வு தேவை

Posted by அகத்தீ Labels:





திராவிடநூற்றாண்டு என திமுக அறிவித்து விழாக் கொண்டாடியதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன. முதலாவதாக, இந்த ஆண்டு திராவிட இயக்க நூற்றாண்டு என்று கூறுவது சரியா, இரண்டு, திராவிடம் என்ற அடையாளம் இன்றைக்கும் பொருந்துமா, மூன்று, திராவிட இயக்கத்தால் தமிழர் இனம் நிறைய இழந்து விட்டது என்பது சரியா, நான்கு, திராவிட இயக்கத்தால்தான் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பது உண்மையா, ஐந்து, திராவிட இயக்கம் தோன்றியிரா விட்டால் என்ன ஆகியிருக்கும்; இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கான விடைகளை சற்று தேடுவோம்.

  “சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த இத்தேசத்து கல்வியில்லாத அரசர்களை, பிராமணர்கள் அடுத்து தாங்கள் மட்டும் எப்போதும் பெருமையாய் இருக்கும் பொருட்டு கல்வியைத் தங்களுக்கு உபயோகஞ் செய்து கொண்டும், அதற்கு வேண்டிய பூஸ்துதி, மான்யங்களைப் பெற்றுக் கொண்டும், மற்றவர்கள் கல்வியறிவு இல்லாமல் எப்போதும் தங்களுக்குத் தாழ்ந்த ஸ்திதியில் இருக்கவும் மோசவெண்ணங் கொண்டு, கல்வி உபயோகப்பட்டுக் கடவுள் அறிய செய்யத்தக்க, கனமாகிய பொருளை ஒவ்வொரு கல் முதலானவைகளுக்கும் பிரயோசனப்படும்படி செய்து விட்டார்கள்”
- இதைப் பேசியது பெரியாரோ அண்ணாவோ அல்ல. அவர்களுக்கெல்லாம் முன்னால் சைவ சித்தாந்த ஏடான தத்துவ போதனியில் 1862ஆம் ஆண்டு எழுதப்பட்ட வியாசமே (அந்தக் காலத்தில் கட்டுரைகளை வியாசம் என்பார்கள்) இது

1845ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு ஏட்டுக்கு திராவிட தீபிகை என்று பெயர். திராவிட என்ற பெயர் தாங்கி அன்றைக்கு டஜனுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வந்துள்ளன. ஆக, நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பே திராவிட கருத்தியல் இந்த மண்ணில் வேர் கொள்ளத் துவங்கி விட்டது. தமிழர் தத்துவ மரபை எடுத்துக் கொண்டாலும் வேத மறுப்பு என்பது அதன் ஆணிவேராக இருப்பதைக் காணலாம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று சொல்லுகிற பகவத் கீதையின் உபதேசத்தை ஏற்க மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ சிந்தனை தமிழ் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் நன்கு வேர் விட்டு தழைத்துள்ளது“சாத்திரங்கள் ஓதுகிற சட்டநாதப் பட்டரே / வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமா” என சித்தர்கள் சீறிய பாரம்பரியமும் உண்டு. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பிராமண எதிர்ப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு இயக்க வடிவம் பெறலாயிற்று. அதற்கான சமூகத் தேவையும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது என்பதுதான் உண்மை.

 1891ஆம் ஆண்டு அயோத்தி தாசப் பண்டிதர் திராவிட மகாஜன சபை என்கிற அமைப்பை உருவாக்குகிறார். அவர் ஆரியர் எதிர்ப்பு, வேத எதிர்ப்பு இவற்றில் காலூன்றி தமிழரின் தத்துவ சித்தாந்த மரபை மீட்டு எடுக்கவும் மேன்மைப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் ஆதி பௌத்தம் என்கிற புத்த மத மரபை முன்னிறுத்தி மிகப்பெரிய கருத்துப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். இன்று படித்தாலும் அவரது சிந்தனைகள் புத்தெழுச்சி தருபவையாகவே உள்ளன.  1891 திராவிட இயக்கத்தின் தோற்றமாகக் கொண்டு நூற்றாண்டை எப்போதோ  கொண்டாடியிருக்கலாம். ஆனால், அது நடக்காமல் போனதற்கும் தத்துவ அரசியல் காரணம் உண்டு

 பிரிட்டிஷ் ஆட்சியில் படித்த இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று சுதேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி போன்றோர் கோரிக்கை வைத்துப் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் உத்யோகங்கள் கிடைக்க வழி ஏற்பட்டது. இந்திய சமூகத்தில் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. மேல் ஜாதியினர் மட்டுமே படித்து வந்தனர். அதிலும் பிராமணர்கள் ஆங்கிலக் கல்வியில் முன் நின்றதால் அரசு உத்யோகங்களை அவர்கள் எளிதாகப் பறித்துக் கொண்டனர். செங்கல்பட்டில் வெங்கம் என்ற இடத்தில் சென்னை- செங்கல்பட்டு பிராமணர்கள் மாநாடு கூட்டி அரசு உத்யோகங்களை பெற திட்டம் தீட்டி செயல்பட்டனர் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. இந்தப் பின்னணியில் கல்வி வேலை வாய்ப்பில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்கிற மனக்குறை பிராமணர் அல்லாத மேல்ஜாதிக்காரர்களிடம் மேலோங்கியது. அவர்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெற ஒரு அமைப்பை உருவாக்கினர்

1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தி மெட்ராஸ் யுனைடெட் லீக் அமைப்புதான் அது. பின்னாளில் டெபுடி கலெக்டராக விளங்கிய சரவணப்பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, பொறியியல் துறை சார்ந்த துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு போன்றோர் இதன் முன்னணியில் நின்றனர். டாக்டர். சி. நடேசன் இதன் செயலாளராகப் பணியாற்றினார். அந்தப் பெயர் பொருத்தம் இல்லை என அதன் உறுப்பினர்கள் கருதியதால் பார்ப்பனர் அல்லாதார் சங்கம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது எதிர்மறையாக இருப்பதால் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த பெயராக சென்னை திராவிடர் சங்கம் 1912 நவம்பர் 10ஆம் நாள் துவங்கப்பட்டது. எப்படியோ திராவிட இயக்கம் ஒரு அமைப்பாக முளைவிட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் வேப்பேரி எத்திராஜூ இல்லத்தில் பலர் கூடி தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் நடத்திய ஆங்கில பத்திரிகையின் பெயர் ஜஸ்டிஸ். அந்த பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி என மக்களால் அழைக்கப்பட்டது.  இதுவே நீதிக்கட்சி ஆகும். இந்த கட்சியின் சார்பில் சர்.பி.டி. தியாகராய செட்டியார் சொற்பொழிவு ஆற்றினார்.  

அதுகுறித்து திருவிக, தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள செய்தி வருமாறு;-
1916ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணர் அல்லாதார் முன்னேற்றம் பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப்  பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்.

இப்படி உருவான நீதிக்கட்சிக்கு 1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில்தான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டின்போதே திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக்கூடாது, தமிழர் கழகம் என வைக்க வேண்டும் என கி..பெ. விசுவநாதமும் அவரது கூட்டாளிகளும் குரல் எழுப்பினர். திராவிடர் இயக்கத்தின் தோற்றத்தை 1891ஆம் ஆண்டு அயோத்திதாசர் உருவாக்கிய  திராவிட மகாஜன சபையில் துவங்குவதா? 1912ஆம் ஆண்டு உருவான சென்னை திராவிடர் சங்கத்தில் துவங்குவதா? 1916ல் உருவான தென்னிந்திய நல சங்கத்தில் துவங்குவதா?எல்லாவற்றிற்கும் முன் ஜான் ரத்தினம் ஊட்டியில் ஒரு மாநாடு கூட்டி உருவாக்கிய திராவிடர் கழகத்தை துவக்கமாகச் சொல்வதா?தென் இந்திய நலவுரிமை சங்கம் 1944ல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றதில் துவங்குவதா? என்கிற விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை.  

திராவிடர் என்கிற பெயர் வரலாறு நெடுகிலும் வேத மறுப்பு, பிராமண எதிர்ப்பு இவற்றை சுட்டுவதாகவும், பிராமணர் அல்லாதாரை குறிப்பதாகவுமே பயன்பட்டு வந்துள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளடக்கிய தென் மாநிலங்களின் இன அடையாளமாக முன்னிறுத்தப்பட்டபோதும் தமிழகத்துக்கு வெளியே அது ஈர்ப்பைப் பெறவில்லை. பின்னர் அண்ணா, திராவிட நாடு கோரிக்கை எழுப்பியதும், அதற்கும் தமிழகத்திற்கு வெளியே ஆதரவு கிடைக்காமல் போனதும் இதன் தொடர்ச்சியே. அறிவியல்பூர்வமாக நில மற்றும் இன வரையறைக்குள் திராவிட நாட்டை வடித்தெடுக்காததால் அது காலச் சூறாவளியில் தாக்குப் பிடிக்காமல் தகர்ந்தது. ஆயினும், பிராமணர் அல்லாதார் நலன் காக்க உருவான இயக்கம் திராவிட இயக்கமாக, திராவிட முன்னேற்ற கழகமாக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமாக, மேலும் பல அமைப்புகளாக பிரிந்தாலும் எல்லாவற்றிலும் திராவிடம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில், பிராமணர் அல்லாத தமிழர்களின் நலனை பிரதிபலிப்பவர்கள் என்ற பொருளில்தான் மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 1944ல் நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது திராவிடர் கழகம் என்று ஆனது. அதில் திராவிடர் என்பது ஒரு இனம் என்கிற பார்வை உள்ளது. ஆனால் அதற்குப்பின்னால் உருவான கட்சிகளில் திராவிடர் இல்லை. திராவிட என நிலம் சார்ந்த அடையாளமே அமைந்தது தற்செயலானதா? அல்லது திராவிடர் என்ற இன அடையாளம் பொருத்தம் இல்லை என்பதால் கைவிடப்பட்டதா? இப்போது மேலும் குழப்பம். திராவிடம் என்கிற தென் மாநிலங்கள் எங்கும் இவ்வமைப்புகளுக்கு பெரும் செல்வாக்கோ வேர்ப்பிடிப்போ இல்லை. ஆயினும், திராவிடம் என்ற சொல் நீடிக்கிறது. இதுகுறித்த விவாதங்களும் எல்லையற்று நீள்கிறது.  

சமீபத்தில் திராவிட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் மு. கருணாநிதி பேசும்போது  நாம் மொழியால் தமிழர்கள். இனத்தால் திராவிடர்கள். நாட்டால் இந்தியர்கள். உலகத்தால் மனிதர்கள் என்று முதலில் விளக்கம் அளித்தவர் அதே உரையில் அடுத்த சில நிமிடங்களில், திராவிட நாடு இதழில் 8.3.1942 தொடங்கி அண்ணா எழுதிய தொடர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஒரு பகுதியை சுட்டிக்காட்டினார்“தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறுதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும் திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடம் என்று மாறிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன. உதாரணமாக, 1926ல் டி.. சாமிநாதய்யர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் டிக்ஷ்னரியில் 440வது பக்கம் 5வது வரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடு என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் - திராவிடர்கள் என்றுதான் கருதப்படுகிறதே ஒழிய வேறில்லை.” இதன் மூலம் தமிழ் இனம், திராவிட இனம் இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிறது. கருணாநிதி முதலில் சொன்னதற்கு இது முரண்பாடாக இல்லையா?

திராவிட இனம் குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே பல்வேறு முனைகளில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் வடக்கே சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட மொழிகளும் பண்பாடும் தோன்றி நிலைத்ததைப் போல தெற்கே தமிழ் மொழியும் அதை மையமாகக் கொண்ட பண்பாடும் பன்னெடுங்காலமாக நீடித்து நிலைக்கிறது. இரண்டும் இருவேறு மரபுகளை தத்துவங்களை உயர்த்திப் பிடிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சமூக யதார்த்தம். ஆகவே, இப்பெயர்களில் எவ்வளவு குழப்பம் இருப்பினும் புரிதலில் எவ்வளவு சிக்கல் இருப்பினும் சமஸ்கிருத பிராமணிய வேதப் பண்பாட்டுக்கு எதிராக ஒரு பண்பாட்டு இயக்கம் தமிழகத்தில் உண்டு. அதன் தோற்றத்தை சித்தர் பாடல்களிலும் அதற்கு முன்பும் காணலாம்.  அதேசமயம், பிராமணியம் இங்குள்ள தமிழகத்தை ஆண்ட அரசர்களின் - சேர சோழ பாண்டியர் உட்பட அரசர்களின் ஆதரவோடு சமூக வாழ்வின் சகல துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டது. ஆகவே, தமிழகத்தின் சமூக வாழ்வில் பிராமணர் அல்லாதவர்களிடமும், பிராமணியத்தின் கூறான சாதிய மேலாண்மைத் திமிர் நீக்கமற நிறைந்திருப்பதை காண முடியும். இதற்கெதிரான கலகமும் நெடுங்காலமாய் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. இனியும் தொடரும். 

   திராவிட இயக்கத்தால் தமிழர்கள் நிறைய இழந்து விட்டார்கள் என்ற வாதம் இப்போது முன்மொழியப்பட்டு தமிழர் என்ற அடையாளம் மட்டுமே சரியென வாதிடப்பட்டு; இங்கு நெடுங்காலமாய் வாழ்கிற தெலுங்கர்கள், மலையாளிகள், கர்நாடகத்தவர்களுக்கு எதிராய் விஷம் கக்கப்படுகிறது. இதற்குள் சாதிய அரசியலும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் அது பெரும்பாலும் ஆதிக்க சாதியின் கைகளில் மாட்டிக் கொண்டதால் தலித்துகளின் நலனும் உரிமையும் உரிய விதத்தில் முன்னிறுத்தப்படவில்லை. இதைச் சொல்லுகிறபோது பெரியாரை தலித்துகளுக்கு எதிராக சில அறிவுஜீவிகள் நிறுத்துவதில் எமக்கு உடன்பாடில்லை. தீண்டாமைக்கு எதிராகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பெரியாரின் தன்னலமற்ற போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. பிராமணியத்தை எதிர்த்த போரில் அனைத்து சாதியினரும் தமிழராக ஒன்றிணைவார் என்ற பெரியாரின் கனவு பொய்த்துப் போனது. பெரியார் சாவதற்கு முன்பு கடைசியாக தி.நகரில் ஆற்றிய உரையில் இதனை மன வேதனையோடு குறிப்பிடுகிறார். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்பதை இந்த நூற்றாண்டு விழா கொண்டாடுகிற தருணத்தில் நிச்சயமாக அகத்தாய்வு செய்தாக வேண்டும். அதனை செய்வது என்பது பெரியாருக்கோ திராவிட இயக்கத்துக்கோ எதிராக அல்ல. மாறாக, அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அறிவியல்பூர்வமான முயற்சியாகும்

 தமிழகத்தின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் சமூக இயக்கம் என்பதைத் தாண்டி அரசியலுக்குள் வந்து ஆட்சியைப் பிடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணம். அதை விமர்சிப்பதற்காக திராவிட இயக்கத்தின் சாதனைகள் எதுவுமே இல்லை என ஒரேயடியாக நிராகரிப்பது  வரலாற்று திரிபாகும். நீதிக்கட்சி சமூக இயக்கமாகத் தோன்றினாலும் விரைவிலேயே தேர்தலில் பங்கேற்கிற இயக்கமாகிவிட்டது. நீதிக்கட்சியில் பங்கேற்ற பலர் ஜமீன்தார்கள், மன்னர்கள், சர் ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள் என்பது கசப்பான உண்மை. அண்ணாவே ஜரிகைக் குல்லாக்காரர்கள், அரண்மனைவாசிகள் என இவர்களைக் கேலி பேசியதுண்டு. ஆயினும், காங்கிரஸ் கட்சி தேர்தலில் பங்கேற்காத சூழலில் - நிலவரி கட்டுகிறவர்கள் மட்டுமே வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் என்ற பின்னணியில் நீதிக்கட்சி வெற்றி பெற்று 16ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதுதான் கம்யூனல் ஜி.. எனப்படுகிற இடஒதுக்கீடு முறைக்கு முதல் வித்து போடப்பட்டது. சமூக நீதி என்ற வகையில் இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமூகம் இன்று அனுபவிக்கிறது எனில் அதன் தொடக்கம் இந்த ஜி..தான். மேலும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றியதும் தேவதாசி முறையை ஒழித்ததும் இதுபோன்ற பல சமூக சீர்திருத்த செயல்களுக்கு நீதிக்கட்சி ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டது அடிக்கோடிட்டு காட்டத்தக்கன. பின்னால் சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகள், போராட்டங்கள், வெற்றிகள் அனைத்திலும் நீதிக்கட்சியின் ஆரம்பகாலப் பங்கை மறுக்கவே முடியாது.  

நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது கட்சிக்குள் பொறாமையும், கோஷ்டிச் சண்டையும் பதவிக்காக எதையும் செய்யும் போக்கும் அதிகரித்தது.  அதனைக் கண்டித்து பெரியார் சுயமரியாதை இயக்க ஏடான குடியரசில் கடுமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். பதவி வேண்டாம், சமூகத் தொண்டாற்ற வாருங்கள் என வற்புறுத்தியுள்ளார். பெரியாரைப் பொறுத்தவரை காங்கிரசில் தன் பயணத்தைத் துவக்கியவர். பிராமண எதிர்ப்பு, வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என பல அம்சங்களில் காங்கிரசோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டார். சிங்கார வேலர், ஜீவானந்தம் போன்றோர் அவரோடு இருந்தனர். சுயமரியாதை இயக்கம் தமிழத்தில் ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த கருத்தியல் எழுச்சிக்கு வித்திட்டது எனில் மிகையல்ல. பெரியார் காங்கிரசை எதிர்ப்பதற்கும் பிராமணர் அல்லாதார் நலன் காப்பதற்கும் நீதிக்கட்சியை பயன்படுத்த முனைந்தார். அவர்களோடு நெருங்கினார். இந்த இடத்தில்தான் . திருநாவுக்கரசு ஒரு கருத்தை நீதிக்கட்சி வரலாறு எனும் தன் நூலில் சொல்லுகிறார். திராவிட இயக்கத்தின் பிரம்மாண்டத்தையும் பிரம்மிப்பையும் தெரிந்து பெருமிதம் கொள்கின்றோர் என்றவர் ஓரிடத்தில் கூறுகிறார், பிட்டி தியாகராயர் காலந்தொட்டு நீதிக்கட்சிக்குள் நிலவிய குழுவாதப் போக்குகளை பெரியார் விமர்சித்துள்ளார். பெரியார் ரசவாதம் செய்யவில்லையெனில் 1926லேயே நீதிக்கட்சி முடிந்து போயிருக்கும் திருநாவுக்கரசின் இந்த நிர்ணயிப்பை ஏற்று அந்நூலின் முன்னுரையில் கி. வீரமணி வழிமொழிந்திருப்பது கவனத்துக்குரியது.  


இந்த இடத்தில்  அன்று நீதிக்கட்சி இருந்தது என்பதற்கு தனஞ்சய்கீர் எழுதிய ஒரு செய்தியை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.   “ பார்ப்பனர் அல்லாதவர்களின் கட்சி நீதிக்கட்சியின் வீழ்ச்சி பற்றி ஆய்வுத்தன்மையில் அம்பேத்கர் (1944ல்) உரையாற்றினார். பார்ப்பனர் அல்லாதவர்களில் பெரும்பாலோர் இரண்டாம் நிலை பார்ப்பனர்களாகிட முயன்றனர். அவர்கள் பார்ப்பனியத்தைக் கைவிடவில்லை. மாறாக, அடிமை மனப்பான்மை  மனப்பான்மையுடன் பார்ப்பனர்கள் போல் நடித்தனர். பார்ப்பனியக் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடித்தனரென்று கருதுவதாக அம்பேத்கர் குறிப்பிட்டார். பார்ப்பனர் அல்லாத கட்சிக்கு சிறந்த தலைவர், தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கைகள் இருக்க வேண்டியதின் இன்றியமையாமையை அம்பேத்கர் வலியுறுத்தினார்.” 

 இது பெரிதும் உண்மை. நீதிக்கட்சியின் பக்கம் வந்த பெரியார் இச்சூழலில் இருந்து அதனைக் காக்க நினைத்தார். நாடாளுமன்ற அரசியலுக்குள் போவதால்தான் சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள நேருகிறது. எனவே நமக்கு நாடாளுமன்ற அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து திராவிடர் கழகத்தை சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடத்துகிறார். அதே சமயம், குலக்கல்விக்கு எதிரான போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என பலவற்றை நடத்துகிறார். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் ஆசை கொண்டவர்கள் மெல்ல மெல்ல மாற்று வழி தேடினர். அதன் பரிணாம வளர்ச்சிதான் திமுக என்ற கட்சி உதயமானது. அண்ணா வார்த்தைகளில் சொல்வதானால் அறைக்குள்ளிருந்த நீதிக்கட்சியை பெரியார் ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தார். ஆனால் அதைவிடப் பெரிய வெட்ட வெளிக்கு அதைத் தொடர்ந்து கோட்டைக்கு நான் (அண்ணா) கொண்டு வந்திருக்கிறேன். பெரியாரோ ஆலமரத்தடியே போதுமென்று அங்கேயே நின்றுவிட்டார். பெரியாரின் பணியை தனியே ஆய்வு செய்ய வேண்டும்

 திராவிட இயக்கம் என்கிற பொதுவரையறை மட்டும் அதற்குப் போதாது. ஏனெனில், பதவி அரசியலில் ஈடுபட்ட 1967க்கு பிந்தைய காட்சிகள் மட்டுமே தற்போது நம்முன் உறுத்திக் கொண்டிருப்பதால் திராவிடம் என்கிற சொல் அதனோடு பின்னிப் பார்க்கப்படுவது தவிர்க்க இயலாது. அதேநேரத்தில் பெயர் எதுவாக இருப்பினும் இந்த இயக்கம் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு சாராரை கைதூக்கி விட்டிருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தோற்கடித்ததிலும் மீண்டும் அது ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்ததிலும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்ததிலும் வகுப்பு வாத வெறி ஒப்பீட்டளவில் வட இந்தியாவைக் காட்டிலும் இங்கு குறைவாக இருப்பதிலும் திராவிட இயக்கத்தின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் சாதியத்தை உடைப்பதிலும் குறிப்பாக தீண்டாமையை முற்றாக ஒழிப்பதிலும் திராவிட இயக்கம் பெருவெற்றி பெற முடியவில்லை. சுயமரியாதை இயக்கத்தின் கூறாக இருந்த பொதுவுடைமைச் சிந்தனைகள் வாக்குகளைக் கவரும் வெறும் பிரச்சாரக் கோஷமாக சிறுத்துப் போகச் செய்தனர். சுயமரியாதைக்கு முற்றிலும் எதிரான தனிநபர் துதி உச்சத்தில் இருக்கும் மாநிலமாய் சிதைந்து போனது. அதன் தீய விளைவுகளை இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.  

அன்றே சுயமரியாதை இயக்க மாநாடுகள் குறித்து சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் இப்போதும் பொருள் பொதிந்ததாய் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் பிரச்சார வலிமையை புகழ்ந்த சிங்காரவேலர், இந்தப் பேச்சுத் திறனால் நீங்கள் ஒருநாள் ஆட்சியைக்கூடப் பிடிக்கலாம் என வாழ்த்தினார். அதே நேரத்தில் பொருளாதார முன்னேற்றத்தில் இதர சமூக அரசியல் பிரச்சனைகளில் உள்ள குறைபாடுகளை நறுக் நறுக்கென சுட்டிக்காட்டினார். சுயமரியாதை இயக்கமா அவமரியாதை இயக்கமா என்ற தலைப்பில் அன்றே ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளைச் சொல்லும். எவ்வளவு இருப்பினும் சிங்கார வேலர் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து நின்றது போல் பொதுவுடைமை இயக்கத்தவர்கள் திராவிட இயக்கத்தை ஆரம்ப காலத்தில் அணுகியதாகக் கூறமுடியாது. இந்த இடத்தில் திருநாவுக்கரசு சொல்லுகிற ஒரு சேதி முக்கியமானது.  

சுயமரியாதை இயக்க வரலாறு நீதிக்கட்சியைப் போன்று அரசியல் மற்றும் அதிகாரத்தைப் பற்றிய வரலாறு அன்று. அது சமுதாய சமய அடிமை வாழ்வை தகர்த்து எறிய புறப்பட்ட அறிவாயுதப் படையாகும் இது சரிதான். ஆனால், இந்த சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரியாரும் பொதுவுடைமை இயக்கமும் தவறி விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் நீதிக்கட்சியை காப்பாற்ற பெரியார் முயன்று முன்னின்றதால் தமிழகத்திற்கு இரண்டு நட்டங்கள் ஏற்பட்டன என்று திருநாவுக்கரசு ஒரு இடத்தில் மிகச் சரியாக சொல்லுகிறார், மேலும்  அவர் சொல்லுகிறார்,  “ஒன்று சுயமரியாதைப் பிரச்சாரம் முழு அளவில் செய்யப்படவில்லை. இரண்டு, தென்னிந்திய சமதர்மக் கட்சியை வெளிப்படையான ஜனநாயக கட்சிபோல் உருவாக்காமல் விட்டுவிட்டார்.” இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு

 நீதிக்கட்சியாகட்டும், திராவிட இயக்கமாகட்டும் காங்கிரசைப்போல் பெரு முதலாளிகளின் கட்சியல்ல. பாஜகவைப் போல் மதவெறிக் கட்சி அல்ல. மாநில முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்துகிற கட்சிதான். அதன் வரலாற்றுத் தேவையை ஒட்டி பல முற்போக்கான  பாத்திரங்களை அது கடந்த காலத்தில் வகித்துள்ளது. இனியும் தேவைக்கேற்ப அவ்வாறு வகிக்க முடியும். ஆயினும், நீர்த்துப்போன திராவிட இயக்க சித்தாந்தத்தை மீண்டும் முரட்டுத்தனமாக பழைய பாட்டையில் கொண்டு செல்ல முடியாது. அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் இவர்களின் ஆழமான சிந்தனைகளை உள்வாங்கி இன்றைய காலத் தேவைக்கேற்ப அதனை செப்பம் செய்ய வேண்டும். இதை திராவிட இயக்கம் செய்யாது. செய்யவும் முடியாது. ஏனெனில், அவர்கள் சுயநல அரசியலிலும், பணம், பதவி என்ற மோகத்திலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதுமட்டும் அல்ல. இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக இடதுசாரிப் பாதையில்தான் பயணித்தாக வேண்டும். அதனை கம்யூனிஸ்ட்டுகள்தான் முன்னெடுக்க முடியும். ஆகவே, அயோத்திதாசரையும், பெரியாரையும், சிங்காரவேலரையும், அம்பேத்கரையும், மார்க்சையும் உள்வாங்கிய இந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மலரச் செய்வதே இந்த நூற்றாண்டில் நாம் செய்ய வேண்டிய அருஞ்செயலாகும். தற்போது கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்த சிந்தனை வலுப்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சு.பொ.அகத்தியலிங்கம்

[ ஆழம் என்ற மாத இதழில் ஜூன் 2012ல் இக்கட்டுரையின் சுருக்கம் வெளிவந்துள்ளது.]

1 comments :

  1. திசைசொல்

    சிறப்பானக் கட்டுரை.மகிழ்ச்சி.அடையாள அரசியல்,தலித்திய நோக்கில் திராவிட இயக்கத்தை அதன் வரலாற்றுக் காலந்தொட்டு மறுக்கிற பார்வைக்கு மறுப்பாய் ,சரியானப் புள்ளி தொட்டு விவாதிக்கும் கட்டுரை.திராவிட இயக்க நூற்றாண்டு என்பது,சொல்லிற்கான விழா அல்ல.அதன் அரசியல் நோக்கிறகான விழா என்பதால் 1912 சரியானது தான்.

Post a Comment