சமூகத்தை ஆற்றுப்படுத்தும் மு.வ. எழுத்துகள்

Posted by அகத்தீ Labels:




மு.வ இந்த இரண்டெழுத்துக்குள் ஆழமான சிந்தனை வரலாறு பொதிந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. “மு.வ எப்போதும் காதுக்குள் புகுந்து போதனை செய்பவர்”என்று குறை கூறுவோரும் சரி; ”மு. வ எப்போதும் அறவிழுமியங்களை உயர்த்திப்பிடிப்பவர்”என மெச்சிப் பேசுவோரும் சரி:பார்வைக்கு எதிர் எதிராக இருப்பதாகத் தோன்றினாலும் சாராம்சத்தில் ஒரே புள்ளியில்தான் சந்திக்கின்றனர்.அவரைப் பற்றிய சரியான மதிப்பீடு இருசாராருக்கும் இல்லை என்றே கூறவேண்டும்.

“ஆற்றுப்படை” என்பது தமிழ் இலக்கிய மரபு.வள்ளைலை நோக்கியோ, அரசனை நோக்கியோ,இறைவனை நோக்கியோ ஆற்றுப்படுத்துவது அல்லது வழிநடத்துவது புலவர் தொழில்.தமிழ்ப் புலமையில் ஊறிமுகிழ்த்த மு.வ.அந்த பழமையை முழுமையாய் உள்வாங்கிக்கொண்டவர்.அன்றன்று மலரும் புதுமையை மிகநுட்பமாக இனம்கண்டவர். எதிர்கொண்டவர். ஆகவே தமிழ்ச்சமூகம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற தணியா ஆர்வத்துடன் எழுத்தை வாகனமாக்கினார்.

விடுதலைப் போராட்ட முதல் அலை வீசியகாலத்தில் பிறந்தவர்,அதே சமயம் விடுதலைப் போர் மூன்றாம் அலை வீசியடிக்கிற காலகட்டத்தில்தான் எழுத்துலகில் அடியெடுத்துவைக்கிறார்.தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமும் தமிழுணர்வும் மேலோங்கிய காலகட்டமே இவரது எழுத்துகளின் காலகட்டமாகும்.மேலும் பொதுவுடைமை இயக்கம் களத்தில் தீவிரமாகச் செயல் பட்ட காலமும் ஆகும்.கல்விசார் பல்வேறு பொறுப்புகளை வகித்துக்கொண்டேதான் இவர் எழுதிக்குவித்தார்.62 ஆண்டுகளே வாழ்ந்தார். அதற்குள் 85 நூல்களை எழுதினார்.

13 நாவல்கள், 2 சிறுகதைத்தொகுப்பு,6 நாடகநூல்கள். 2 சிந்தனைக்கதைகள்,11 கட்டுரைநூல்கள்,24 இலக்கிய விருந்துகள்,4, சிறுவரிலக்கியங்கள்,4 இலக்கியம்,1 பயண இலக்கியம்,1 இலக்கிய வரலாறு,6 மொழியியல் நூல்கள்,4 வாழ்க்கை வரலாறுகள்,3சிறுவர் இலக்கணம்,2மொழிபெயர்ப்புநூல்கள், இவற்றுடன் தமிழிலக்கியம் குறித்த இரண்டு ஆங்கிலநூல்கள் என இவர் படைத்தவற்றின் மைய நீரோட்டமாய் அமைந்த சிந்தனைக்கரு எது? என் கட்டுரையின் தேடல் அதுதான்.

”காலம் என்பது மக்களின் தனி வாழ்க்கையை வரையறுப்பது போலவே, நாட்டின் வாழ்வையும் வரையறை செய்வதாகும்.தமிழ் நாட்டின் வரலாறும் காலத்தின் பேராற்றலுக்குக் கட்டுப்பட்டு விளங்கிவருகின்றது.இப்போது பலரும் காண்பது பழைய தமிழகத்தின் மறைவும் புதிய தமிழகத்தின் தோற்றமும் ஆகும்.”

”பழைய தமிழகத்திலிருந்தே புதிய தமிழகம் தோன்றிவளர்ந்து வருகின்றது.பழைய தமிழகம் தாய்,புதிய தமிழகம் சேய் ; தாயிடமிருந்து சேய் கற்க வேண்டியவை பல உள்ளன.புதிய தமிழகம் பலவகையிலும் வேறுபட்ட வளர்ச்சி உடையது.ஆனாலும் ,பழைய தமிழகமாகிய அன்னையின் அனுபவ அறிவுரைகளைப் புறக்கணிக்க முடியாது.அந்த அறிவுரைகளைப் புதிய தமிழகம் எவ்வளவிற்கு ஏற்கின்றது....”

மு.வ. வின் இந்த உள்ளக்கிடக்கைதான் அவரது எழுத்துகள் நெடுக ஊடும் பாவுமாய் விரவிநிற்கிறது எனில் மிகையல்ல. அவரது சிந்தனை நீரோட்டத்தினை சரியாக உள்வாங்க அவரது கடித இலக்கியங்களும், கி.பி.2000 என்ற சிந்தனைக் கதையும் பெரிதும் துணைசெய்யும்.இது என் உறுதியான முடிபு. அதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிற நாம் எதிர்கொள்கிற சிக்கல்கள் பன்முகம் கொண்டவை. நாளையைப் பற்றிய நமது கனவுகள் வேறுவிதமானவை. ஆனால் 1947 ஆம் ஆண்டு மு.வ. கண்ட கனவு கி.பி.2000 என்ற நூலாய்- ஆவணமாய் நம்முன் உள்ளது.இந்தியா 2020 என்ற நூலில் அப்துல் கலாம் விதைத்த கனவுகள் ஒருவகை.அது உலகவங்கியின் விருப்பங்களுக்குக் கொடுத்த நூல்வடிவமே தவிர வேறல்ல.ஆனால் மு.வ.வின் கனவோ மானுடம் தழுவியது. உட்டோபியன் சோஷலிசம் எனப்படுகிற'கற்பனா சோஷலிசம்' வகையைச் சார்ந்தது.அதே சமயம் தமிழ்ச்சூழலிலிருந்து தன் கற்பனைச் சிறகை விரித்துள்ளார்.

'அளவளாவி' என்றொரு கருவியை மு.வ. இந்நூலில் கற்பனை செய்து படைத்திருக்கிறார்.வீடியோ கான்பரன்ஸ் வசதி கொண்ட அலைபேசியை அது ஒத்திருக்கிறது.நாமும் ”அலைபேசியை” இனி ”அளவளாவி” என அழைத்தால் என்ன?அவர் கனவில் நம் கையைப் பிடித்து ஒரு விருந்து மனைக்கு அழைத்துச் செல்கிறார்.அங்கே பல விதிகள் உண்டு.அதில் முதல் விதி,”உலகத்தில் மக்கள் எல்லோரும் வாழ வேண்டும்.ஆதலால் எந்த வேற்றுமையும் மறந்து அன்பைப் பாரட்டுங்கள்.' இன்னொரு விதி “ இந்த விருந்துமனையைக் கடந்து வெளியே செல்லும் போது பொதுவுடை அணிந்து செல்லுங்கள்:பொது உள்ளம் பெற்றுச் செல்லுங்கள்”. இவற்றின்மூலம் பொதுமை உலகை அவர் உள்ளம் நாடுவதை அவதானிக்க முடியும்.

மேலும் அந்த நூல் நெடுக அவர் சித்தரிக்கிற காட்சிகள் ஒவ்வொன்றும் உழைப்பை மையப்படுத்தியே உள்ளன. கல்வி. ஆராய்ச்சி. நூலகம்.பொழுதுபோக்கு,தேர்தல். ஆட்சிமுறை.தண்டனை அனைத்துமே உழைப்பை மையம் கொண்டதாகவே இருக்கக் காணலாம்.திருடுதல்,கொள்ளையடித்தல் போன்றவை கடந்தகால வரலாற்று செய்திகளாக - பள்ளிகளில் சொல்லித்தருபவையாக மட்டுமே இருக்கும் என அவரின் கனவு நீள்வதைக் காணலாம்.பள்ளிக் கூடங்கள் பூங்காக்களாய் மகிழ்விக்கும் காட்சி அற்புதம்.காதல் வாழ்வுக்கு தடைகளேதுமற்ற சூழலில் கட்டற்ற அன்பு வாழ்க்கையில் திளைக்கும் மக்களுக்கு அதுவே தீமையாகிவிடுகிறதாம்.ஒருவர் இறந்தால் இன்னொருவர் உயிர்விடுகிற சோகம் ஏற்படுகிறதாம்,அதைத் தவிர்ப்பது எப்படி என்பதுதான் அங்கு விவாதமாம். சுகமான கற்பனை.அரசு என்கிற அடக்குமுறைக்கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற கம்யூனிச சமூகம் போன்ற ஒரு அமைப்பைக்கூட கற்பனை செய்கிறார்.இன்றும் அதாவது அவர் கனவு கண்டு ஏறத்தாழ 64 ஆண்டுகள் முடிந்தபின்னரும் இன்னும் அது வெறும் கனவாய் மட்டுமே நம்முன் இருப்பது ஏன்?

கற்பனா சோஷலிசத்தை விஞ்ஞான சோஷலிசமாய் மாற்றிய பெருமை காரல்மார்க்ஸுக்கு உண்டு. அதற்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை லெனினுக்கு உண்டு.தத்துவவெளிச்சமும் கட்சி என்ற நெம்புகோலும்தான் அதனை சாதிக்க உதவியது.இது குறித்து மு.வ. அறியாமல் இருந்திருக்க முடியாது.அவர் பரந்த வாசிப்புப் பழக்கம் உடையவர். ஆயினும் அவர் தம் கனவை தத்துவதரிசனமாக்காமல் விட்டதோடு கட்சி என்ற நெம்புகோலையும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறத் தவறை செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.இக்குறை விமர்சன நோக்கோடு படிக்கிற சிலரால் மட்டுமே காணமுடியும். பொதுவாசகன் ”வெள்ள அன்பால் மானுடம் தழுவுகிற” உயர்கனவாகவே இன்றும் இநூலை புரிந்துகொள்வான். அதுவே மு.வ.வுக்கு கிடைத்த வெற்றி.

இதன் தொடர்ச்சியாகவே அவரது கடித இலக்கியங்களை நான் பார்க்கிறேன்.தம்பிக்கு,தங்கைக்கு, அன்னைக்கு, நண்பருக்கு என நான்கு கடித இலக்கியங்கள் நம் முன் உள்ளன. தமிழ்ச்சமூகம் சந்திக்கும் சவாலகள், அதனை எதிர்கொள்ள எப்படித் தமிழ்சமூகம் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் ஆகியன அவற்றில் மைய இழையாக உள்ளன.”நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது:வல்லவனாகவும் இருக்க வேண்டும்” என பொதுவாகவும், தமிழனுக்கு சிறப்பாகவும் அவர் எழுதியுள்ளார்.

தமிழின் பெருமை, தமிழ் பண்பாட்டின் மேன்மை குறித்து தமிழருக்கே உரிய கர்வமும் பெருமையும் மு.வ.வுக்கும் உண்டு.ஆனால் அதற்கும் மேல் செல்ல விழைந்தார். சென்றார்.”உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன். ஆனால்.உணர்ச்சி வெள்ளம் மட்டும் இருந்தால் போதாது. அது என்றைக்கேனும் ஒரு நாள் வற்றிவிடும். வற்றாத ஊற்று உன் உள்ளத்தில் இருக்கட்டும். செயல் திறன் வளரட்டும்”என்கிறார்.அதற்கான ஆற்றுப்படுத்தலையே இக்கடித இலக்கியங்கள் குறிப்பாக செய்கிறது எனில் மிகையல்ல.”தமிழ் மொழி நல்ல மொழிதான்:ஆனால் அதை வல்ல மொழியாக்கினோமா?”” என்ற மு.வ. வின் அர்த்தமிகுந்த கேள்வி இன்றைக்கும் நம்முன் வலுவாகவே ஓங்கி நிற்கிறதே.

தமிழன் சுயநலமியாக இருப்பதை , விரிந்தபார்வையும் செயல்திறனும் பெறாதவனாக இருப்பதை அவர் மீண்டும் மீண்டும் தம் கடிதங்களில் இடித்துரைப்பதைக் காணலாம்.”தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு.ஆயினும் பொதுவாக தமிழரின் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன?தமிழரிடையே சில குறைகளும் இருத்தல் கூடுமன்றோ? இந்த எண்ணமே இத்தகையக் கடிதங்கள் எழுதத் தூண்டியது.'தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காணல்' திருவள்ளுவர் நெறி. நம் குற்றம் குறைகளை நாமே உணர்தல் நலம். 'குற்றம் உணர்வான் குணவான் ' என்பது நன்மொழி”இப்படி தமிழ்சமூகம் அகத்தாய்வு செய்து தன்னைச் சீர்திருத்திக் கொள்ள விழைந்தார். முன் மொழிந்தார்.குறை நிறை இரண்டையும் அடையாளம் காட்டினார்.விடிவுக்கான பாதையை உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக எடுத்துக் காட்டினார்.அதனால் மு.வ காட்டிய வழி இன்றும் பேசத்தக்கதாக உள்ளது.

மொழிவழி மாநிலம் குறித்தும் நிறையவே பேசி இருக்கிறார்.இக்கடிதங்களில் தேதி இடப்படாததால் காலப்பின்னணியோடு இக்கடிதங்களை சரியாக இன்றைய தலைமுறை உள்வாங்குவது சிரமமாகும்.அவர் 1974ல் இறந்துவிட்டார். 1950களின் முன்னும் பின்னுமாக இந்நூல்கள் வெளிவந்துள்ளன. எனவே திராவிட இயக்கம் மேலோங்கிவந்த காலகட்டத்தில் - தமிழனின் உயர்வு பாடுபொருளாக இருந்த காலகட்டத்தில்- மொழிவழிமாநில சிந்தனை வலுப்பெற்றுவந்த காலகட்டத்தில் அதற்கு உரம்சேர்க்கும் விதமாகவும்: அதே சமயம் வெறியையும் பற்றையும் சரியாக இனம்பிரிக்கும் விதமாகவும் மு.வ பெரிதும் முயன்று. அதில் வெற்றியும் ஈட்டினார் எனில் மிகையல்ல.

'”இப்போது பெற்றிருப்பது அரசியல் விடுதலையே. இனிப்பெற வேண்டிய உரிமைகள் பொருளாதார உரிமையும், சமுதாய உரிமையும் அறவுரிமையும் ஆகும்.இவற்றிற்காகப் பாடுபடுவதே இனி உள்ள கடமை”இந்தத் தெளிவோடு அவர் தமிழ்ச் சமூகச் சிக்கல்களை அடையாளம் காட்டியுள்ளார்.அறபோதனை என்கிற சாக்கில் பழமையை அப்படியே பற்றி நிற்கக் கூறாமல் பண்பாட்டில் காலூன்றி புதிய உலகச்சூழலை உள்வாங்கி தமிழ்ச்சமூகம் முன்னேற எழுதுகோலை மிக எச்சரிக்கையோடு கையாண்டிருக்கிறார்.



சமூகத்தில் வெறும் சீர்திருத்தப் பிரச்சாரம் மட்டுமே இலக்கை எட்ட உதவாது என்பதை மிகச்சரியாகவே பதிவு செய்துள்ளார்.”வாழ்க்கைக் கவலை குறையும் வரையில் வீட்டுக்கு ஒரு சீர்திருத்தத் தலைவர் பிறந்தாலும் மூடநம்பிக்கைகளைப் போக்கமுடியாது.என்று நான் கூறினேன்; இன்னும் அதையே திரும்பக் கூறுகிறேன்;எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போது மனிதனுடைய மனதில் சூழும் இருள்தான் மூடநம்பிக்கைக்குக் காரணம்.இனிமேல் எப்படி வாழ்வது,எப்படி வயிறு வளர்ப்பது,நம் வயிற்றில் பிறந்த மக்களை எப்படி வாழ வைப்பது ,நம் முதுமையின் போது நாம் கவலையில்லாமல் வாழ முடியுமா நம்மை அப்போது யார் காப்பாற்றுவார்கள்?இப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணும் ஒவ்வொருவர் மனதிலும் இருள் சூழ்வது இயற்கை.அங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் காளான் போல் தோன்றும்.அந்தக் கவலைகளில் பெரும் பங்கானவை பொருள் பற்றிய கவலைகளே. ஆகவே இந்த பொருட்கவலை தீர்ந்தாலின்றி இந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்கமுடியாது,”இப்படி நுட்பமாகப் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அலசும் மு.வ. .' வாழ்க்கை நெருக்கடிகளே அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாக மாற்ற முடியுமே தவிர வேறு எதனாலும் அல்ல.”என்பதை வலியுறுத்தி நடைமுறை சார்ந்தே வழிகாட்டுகிறார்.

.தங்கைக்கு எழுதிய கடிதத்தில் பெண்விடுதலையை அன்றைய சமூகநிலைசார்ந்து பண்பாடு சார்ந்து அதேநேரம் அடுத்தகட்டத்துக்கு தமிழ்ப்பெண்களை முன்னேற்றும் நோக்கோடு வரைந்துள்ளார்.

“உலகத்தில் எவர்க்குள்ளும் உண்மையான சமத்துவம் இல்லை;இருக்கவும் முடியாது.மக்கள் வெவ்வேறான ஆற்றலுடனும் பண்புகளுடனும் பிறந்து வளரும்படியாகப் படைப்பு அமைந்துள்ளது.ஆதலின் சமத்துவம் என்பது இயற்கையில் இல்லை”என்கிறார். ஆண்பெண் பற்றியே இப்படிக் கூறுகிறார் என்பதை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த வரையறையை சாதியோடு போட்டுக் குழப்பித் தவறான முடிவுகளுக்குப் போகும் அபாயம் உண்டு.அதே சமயம் இன்றைய பெண்ணியியலாளர்கள் இந்த வரையறையையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.அன்றையச் சூழலில் இவர் கூற்றை புரிந்து கொள்வதே அறிவுடைமை.அடுத்த வரிகளில் அவர் கூறுவதை பார்த்தால் நம் ஐயம் அகலும்.

”இயற்கையை வெல்ல முயலும் மனிதன் சமத்துவத்தைப் படைக்க முயலுகிறான்.சமத்துவத்தை அன்பால் ஏற்படுத்திக் கொள்கிறான்;அல்லது சட்டத்தால் அமைத்துக் கொள்கிறான்”

“மனத்தின் தொடர்பு அவ்வளவாக இல்லாத துறைகளில் சட்டத்தின் சமத்துவம் நிலைக்கும். இல்வாழ்க்கை என்பது மனத்தின் உணர்ச்சிகளையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது.அதனால் சட்டம் இங்கு என்ன செய்யும்?அன்பு ஏற்படுத்தும் சமத்துவம்தான் நிலைக்கும் “ என்கிறார்.உளவியல் சார்ந்து குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதுதானே இன்றும் ஏற்புடைத்து.

தங்கைக்கு இப்படி அறிவுரை சொல்வது மட்டுமின்றி அதற்கும் மேல் சென்று கூறுகிறார்,”மனம் கிணற்றுத் தவளையாய் தாழாமல் வானம்பாடியாய் உயர்வதற்குப் பரந்த உலகப் பழக்கம் வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்தப் பரந்த உலகத்தை வீட்டினுள் வரவித்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.அதாவது,அனுபவிக்கும் இன்ப துன்பம் எதையும் உலகத்தோடு,உலகப் படைப்போடு இயைத்துப் பார்.நடைபெறும் நிகழ்ச்சிகளை உலக வரலாற்றோடு இயைத்துப்பார். காணும் சுற்றுப் புறத்தைக் காவியங்களில் உள்ள கற்பனையுலகத்தோடு ஒப்பிட்டுக் கருதிப்பார்.இன்று உள்ள இந்தச் சிறுவாழ்க்கை என்றும் உள்ள கடவுள் தன்மையாகிய கடலில் ஒரு துளி என்றும் உணர்ந்து பார்.இவ்வாறு எண்ணுவதாலும் கருதுவதாலும் உணர்வதாலுமே உண்மையான பரந்த உலகப் பழக்கம் மனதிற்கு ஏற்படும்.அப்போதுதான் புள்ளி போல் உள்ள சிறு வட்டம் வளர்ந்து பெரிய வட்டம் போல் பெருகி உலகையெல்லாம் வளைத்துக் கொள்ளும் பெருமனம் ஆகும்”இப்படி வாழ்க்கை வட்டத்தை அழகாக சித்தரித்துக் காட்டிய மு.வ. வின் பரந்த மனமும் கூர்த்தமதியும் எண்ண எண்ண வியப்பாக விரியும்.

கடித இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர் அதனை நன்கு பயன்படுத்தியவர் மு.வ. என்றே துணிந்து கூறலாம்.மற்றவர்கள் இவர் அடியொற்றி முன்சென்றவரே.கட்டுரையாக எழுதுவதைவிட கடிதமாக எழுதும்போது 'பெர்சனல் டச்' என ஆங்கிலத்தில் கூறுகிற வாசகன் 'நெஞ்சோடு நெருங்கும்' அனுபவம் அதிகம்.அது 'சோஷியல் கவுன்சிலிங்' என இப்போது கூறப்படுகிற 'ஆற்றுப்படுத்தலை' சாத்தியமாக்கும்.அமெரிக்க அறிஞர் நாம்சோம்ஸ்கி கூறுவதைப் போல கருத்துருவாக்கம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும்.மு.வ இதனை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார் என்பதே என் கருத்து.அவர் எழுதியுள்ள கருத்துகள் சில இன்று தேவைப்படாமல் போகலாம்;ஆனால் பல இன்றைக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.. அவரின் சமூக அக்கறை பொருள்பொதிந்தது.காலத்தை வென்று நிற்பது.நேற்றும் தேவைப்பட்டது. இன்றும் தேவைப்படுகிறது. நாளையும் தேவைப்படும்.ஆம், மு.வ. காலத்தை மீறி வாழ்கிறார்.இனியும் வாழ்வார்.அவரது எழுத்துகள் சமூகத்தை ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

3 comments :

  1. திசைசொல்

    உங்கள் முடிவில் மாறுபாடு இருப்பினும்,மு.வ வின் ஆளுமையை மாக்சிய் நோக்கில் ஆய்வு செய்த நல்ல கட்டுரை

  1. சமன் மாறாது

    மு.வ.என்ற ஆளுமை பற்றி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை வாயிலாக அடிக்கடி கேட்டிருக்கிறேன். மற்றபடி அவரை நான் வாசித்ததில்லை. உங்கள் பதிவு அவரது மனஉலகைக் காட்டுவதாக இருந்தது. மு.வ. என்ற ஒரு தமிழுலக அறிஞரை இன்று நினைப்பாரும் உண்டு என்பதற்கு சான்றாக உங்கள் பதிவு அமைந்துள்ளது. ஆனால் அறிவுலக வெளியில் கூட அவர் பற்றி அநேகமாக யாருமே தற்போது பேசுவதில்லை என்றே எனக்குப் படுகிறது. நான் நினைப்பது சரியா? இன்னும் விரிவாக அவரை ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிடுங்கள் தோழரே!

  1. சமன் மாறாது

    மு.வ.என்ற ஆளுமை பற்றி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை வாயிலாக அடிக்கடி கேட்டிருக்கிறேன். மற்றபடி அவரை நான் வாசித்ததில்லை. உங்கள் பதிவு அவரது மனஉலகைக் காட்டுவதாக இருந்தது. மு.வ. என்ற ஒரு தமிழுலக அறிஞரை இன்று நினைப்பாரும் உண்டு என்பதற்கு சான்றாக உங்கள் பதிவு அமைந்துள்ளது. ஆனால் அறிவுலக வெளியில் கூட அவர் பற்றி அநேகமாக யாருமே தற்போது பேசுவதில்லை என்றே எனக்குப் படுகிறது. நான் நினைப்பது சரியா? இன்னும் விரிவாக அவரை ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிடுங்கள் தோழரே!

Post a Comment