தேர்தல் பிரச்சாரம் கொதிநிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. எல்லா பக்கங்களிலும் உணர்ச்சிகள் கொம்பு சீவிவிடப்படுகின்றன. மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி தனிநபர் தாக்குதல்கள் உக்கிரமடைகின்றன. எல்லாத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க நடக்கும் விபத்துதான் இது. இவற்றிற்கு மத்தியிலும் சமூக அக்கறையோடு தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அமைப்புகளும் மகளிர், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் என தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அவை எந்த அளவு அரசியல் கட்சிகளால் கண்டுகொள்ளப்பட்டன என்பது கேள்விக்குறியே. தேர்தல் களத்திலும் அடிப்படை மக்கள் பிரச்சனை குறித்து ஒரு அக்கறைமிகு விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொதுவாக நடுநிலையாளர்கள் கூறுவதுண்டு. ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது கிடையாது. அதேநேரம் இடதுசாரிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களை வாட்டிவதைக்கும் பிரச்சனைகள் குறித்து நுட்பமான சிறு பிரசுரங்கள் வெளியிடுவது என்பது வாடிக்கை. இந்தத் தேர்தல் களத்தில் இடதுசாரி சிந்தனையாளர்கள் எழுதிய நான்கு சிறு பிரசுரங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு கால்கோள் நாட்டியிருக்கிறது. பவர் கட் திமுக: தமிழக மின்வாரியத்தை திவாலாக்கிய திமுக என்ற பெயரில் காண்டீபன் எழுதிய 16 பக்க பிரசுரம் இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு ஒளி பாய்ச்சுகிறது. இந்தப் பிரசுரத்தில் பல உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 156 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்சார உற்பத்தி 1990ஆம் ஆண்டு வரையில் நேர்த்தியான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 100 விழுக்காடு கிராமங்கள் மின்மயப்படுத்தப்பட்டன. மின்சாரம் உபரியாக இருக்கிற நிலையை தமிழகம் கொண்டிருந்தது என கடந்த காலத்தை வரைந்துகாட்டும் சித்திரம் நிகழ்காலத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது தெரியுமா? 1990லிருந்து 2008ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகாலத்தில் மின்வாரியம் தன்தொகுப்பில் 1180 மெகாவாட் தனியார் மின் நிலையம் உட்பட கூடுதலாக 4470 மெகாவாட் மின்சாரத்தையே பெற்றுள்ளது. இதுதான் நாம் இன்று எதிர்கொள்ளும் மின் தட்டுப்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகும். இக்காலகட்டத்தில் ஆண்டுத் தேவை சுமார் 500 மெகாவாட்டுகள் கூடிக் கொண்டே சென்றது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கும் மேலாக தமிழகத்தில் 120 பன்னாட்டுக் குழுமங்கள் தொடர்புடைய தொழிற்பூங்காக்கள் அமைக்க அனுமதி அளித்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மட்டுமே கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தடையில்லா மின்சாரம் வழங்கும் உத்தரவாதத்தோடு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம் முதல்வரால் ஒப்பமிடப்பட்டன. மேலும் ஒரு கோடி வண்ணத் தொலைக்காட்சிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கு மட்டும் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். இதன் விளைவாக தமிழகத்தின் மின்பற்றாக்குறை சுமார் 3000 மெகாவாட்டுகளாக உயர்ந்தது. இதனைச் சமாளிக்க இயலாமல் அரசே மின் வெட்டை அறிவிக்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்த்திருக்க முடியாதா? இக்கேள்விக்கும் விடைகாண இப்பிரசுரம் முயற்சித்திருக்கிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரை தமிழக அரசின் தரப்பில் நிறைவேற்றப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் சுமார் 514 மெகாவாட்டுகள் ஆகும். மக்கள் நலன் சார்ந்து தொலை நோக்கோடு சிந்திப்பதாக பீற்றிக் கொள்ளும் அரசு ஆண்டுக்கு குறைந்த அளவு 500 மெகாவாட்டுகள் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்வதற்குத் திட்டமிட்டு நிதி ஒதுக்கியிருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 7500 மெகாவாட் மின்சாரத்தை இன்று கூடுதலாகப் பெற்று உபரி மின்சாரம் படைத்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்திருக்க முடியும். இப்படி தமிழக அரசு கோட்டைவிட்ட வாய்ப்புகளையும் மறுபுறம் கொள்ளையடிக்க தனியாருக்கு வாசல் திறந்துவிட்டதையும் விவரமாய் பதிவு செய்திருக்கும் இப்பிரசுரத்தை வாசிப்பது அவசியம். குறைந்தபட்சம் அரசியல் கட்சியின் ஊழியர்கள் இதனை படித்தால் அவர்கள் பிரச்சாரத்தில் உண்மை ஒளிரும். விலை உயர்வும் வெங்காயக் கனவும் விருதுநகர் கண்ணன் எழுதிய 64 பக்க பிரசுரம் விலை உயர்ந்து கொண்டே போவதின் காரணத்தை மிக நுட்பமாக ஆழமாக அலசியிருக்கிறது. விலை உயர்வு என்பது இந்தியா முழுவதும் மக்களைப் பாதிக்கிற மிகப்பெரிய பிரச்சனை மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் விலை உயர்வின் மூலம். இதனை எடுத்துச் சொல்வதில் ஊடகங்கள் மிகப் பெரிய தவறு செய்கின்றன. அதிலும் விலை உயர்வுக்கு அடிப்படையான தாராளமய தனியார் மய கொள்கைகளை ஊடகங்கள் விமர்சிப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்திலும் விலைஉயர்வு குறித்து கோபமும் வேதனையும் வெளிப்படுத்தப்படுகிறதே தவிர அதன் அடிப்படைகள் சுட்டிக்காட்டப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. இந்தப் பிரசுரம் அந்தக் குறையை போக்குவதற்கு உதவி செய்யும். வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றுமில்லாமல் போகும். அதுதான் இன்று வெங்காய விவசாயிகளின் நிலை மட்டுமல்ல. ஒட்டுமொத்த விவசாயிகளின் நிலையும் கூட என விலை உயர்வின் ஏற்றமும் இறக்கமும் கூட சாதாரண மக்களையும் விவசாயிகளையும் ஒருசேர பாதிப்பதையும் மறுபுறம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெங்காயத்தைப் பார்க்காமல் சர்க்கரையைப் பார்க்காமல் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு விலையை ஏற்றுகிற அக்கிரமத்தை அழகாக உதாரணங்கள் மூலம் இந்நூல் எளிமையாய் சொல்லியிருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி குறித்து மத்திய அரசு - திமுகவும் அங்கம் வகிக்கிற - ஐமுகூ அரசுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சி என்று மன்மோகனும் கருணாநிதியும் கதைப்பதை இந்நூல் தோலுரிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரம்! ஆகா! ஓகோ!!! என அவ்வப்போது 8 விழுக்காடு, 89 விழுக்காடு என சில புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. அப்படியென்றால் நானும் இந்தியாவில்தான் இருக்கிறேன். ஏன் என்னுடைய (பொருளாதாரம்) பொழப்பு மட்டும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிக்கொண்டிருக்கிறது என எண்ணத் தோன்றும் அதுவும் சரிதான். நம்ம பொழப்பு நாறும்போது, 2008ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்தக் கோடீவரர்கள் எண்ணிக்கை 84 ஆயிரம். 2009ல் அதாவது ஒரே ஆண்டு 51 விழுக்காடு அதிகரித்து 1.26 லட்சம் பேர் கோடீவரர்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளனர் என அரசு பெருமைப் பேசுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் 82.5 கோடி பேர் ஏழைகள் இருக்கிறார்கள் என்று ஆசிய வங்கி வளர்ச்சி கூறுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருவரது மாத வருமானம் ரூ.1035க்கு கீழ் இருந்தால் ஏழை என்று கணக்கிடப்படுகிறது. இப்படி உண்மை நிலைமைகளை படம் பிடிக்கும் இந்நூல் அம்பானி குடும்பம் மட்டும் ஓகோ என்று வளர்ந்திருப்பதை அதிலும் முகேஷ் அம்பானி என்ற ஏழை 4,500 கோடி ரூபாய் செலவில் ஒரு எளிய குடிலை கட்டியிருப்பதை அற்புதமாக இந்நூல் எடுத்துக்காட்டியிருக்கிறது. 2-ஜி பெக்ட்ரமில் 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு பற்றிப் பேசுகிறோம்.அதில் முகேஷ் அம்பானியின் பங்கு காத்திரமானது. இதையெல்லாம் அறிய இந்நூல் உதவும். அதுமட்டுமா ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி டாலர் பணத்தை ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர் லாரன் சம்மர்சுக்கு இந்த அம்பானிகள் தட்சணைக் கொடுத்திருப்பதை என்னென்பது? அதாவது 50 மடங்கு பெக்ட்ரம் பணம் தட்சணையாகவே கொடுத்தார் என்றால் இவர் எவ்வளவு விழுங்கியிருப்பார்? அரசின் பார்வை எப்படி இருக்கிறது? 2010-11ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஏழைகளின் உயிர் வாழ்விற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.450 கோடி வெட்டப்பட்டது. ஆனால் அதே நேரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் 50 ஆயிரம் கோடி சலுகைகள் வாரி வழங்கப்பட்டது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். காங்கிர தலைமையிலான (திமுகவும் பங்குபெறும்) அரசின் கொள்கை முடியும். காங்கிர தலைமையிலான அரசின் கொள்கை என்பது பெரும் செல்வந்தர்களைப் பாதுகாப்பது மட்டுமே. கடைக்கோடி ஏழை தெருக்கோடிக்கு தள்ளப்பட்டு, நாதியற்று நாண்டு செத்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ள (திமுகவும் பங்குபெறும்) காங்கிர அரசு தயாரில்லை. இப்படி உண்மைகளை கேன் ரிப்போர்ட்டாக நம்மிடம் இந்நூல் படம் பிடிக்கிறது. பிரச்சாரத்தில் இதன் ஒரு சிறு பகுதியாவது இடம் பெறுமானால் அதன் அரசியல் எழுச்சியும் விழிப்புணர்வும் எதிர்காலத்தை நிச்சயம் பாதுகாக்கும். சிறப்புமில்லை... கூறுமில்லை...: தலித் நலத்திட்டம் குறித்த ஒரு பார்வை அ.பழனியப்பன் எழுதிய 24 பக்க பிரசுரம். தலித் மக்களுக்கு நாங்கள்தான் அதிகம் நன்மை செய்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பதும்; எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என்றும் பிரச்சாரத்தில் உரக்கக் கேட்கிறோம். ஆனால், தலித் மக்களுக்கு இதுவரை என்ன கிடைத்தது என்பதை இந்நூல் துல்லியமாக கணக்கிட்டு காட்டிவிட்டது. குறிப்பாக சிறப்புக் கூறு திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட வேண்டிய நிதி பெருமளவு ஒதுக்கப்படாமலே கழிந்ததும் ஒதுக்கப்பட்டபோது அது அவர்களுக்கு உரிய முறையில் செலவிடப்படாமல் வேறு வகைக்குத் திருப்பப்பட்டதும் வேதனை மட்டுமல்ல. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செயலுமாகும். இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விவரங்களை இங்கே தருகிறோம். தலித் மாணவர்களில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டால் பாடை கட்டுவதற்கும் கக்கூ கட்டுவதற்கும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். இதை இவர்களிடம் யார் கேட்டது? என்று ஒரு ஐ.ஏ.எ அதிகாரி சீறியதை இந்நூல் சரியாக பதிவு செய்துள்ளது. அதுபோல் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட அக்கிரமத்தை இப்பிரசுரம் அம்பலப்படுத்துகிறது. மறுபுறம் தலித் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இப்பிரசுரம் சுட்டுகிறது: சென்னையில் தோல் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறவனம் (ஊநவேசயட ஐளேவவைரவந டிக டுநயவாநச கூநஉடிடடிபல) உள்ளது. செருப்புத் தைக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுவரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட, இதுவரையில் அந்த உயர்கல்வி நிறுவனத்தை எட்டிப்பார்க்கவில்லை. ஐஐடி (ஐனேயை ஐளேவவைரவந டிக கூநஉடிடடிபல) ஐஐஎம் (ஐனேயை ஐளேவவைரவந டிக ஆயயேபநஅநவே) எய்ம் (ஹடட ஐனேயை ஐளேவவைரவந டிக அநனஉயட ளுஉநைஉநள) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மற்ற மாணவர்ககளைப் போல எளிதாக இடம் கிடைத்து படிக்கிற வாய்ப்புகள் தலித், பழங்குடி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தலித் மாணவர்களுக்குக் கிடைக்கிற ஒரே தொழில்நுட்ப படிப்பு ஐடிஐ (ஐனேரளவசயைட கூசயபே ஐளேவவைரவந) மட்டுமே. அதிகபட்சமாக பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு பெறுவார்கள். தலித் மக்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை அரசு வழங்குகிறது. ஆனால், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் தொழில் துவங்குவதற்கு வங்கிக்கடன் பெறுவது குதிரைக்கொம்பாக உள்ளது. அதுமட்டுமல்ல தலித் விடுதி மாணவர்கள் அடிக்கடி போராடுகிறார்கள். அப்போதெல்லாம் ஊடகங்களும் சில பெரிய மனிதர்களும் தலித் மாணவர்களை பொறுப்பற்ற சமூக விரோதிகள் போல் அவதூறு செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் நிலையை ஊடகங்கள் சொல்லுவதில்லை. தலித் மாணவர்களிடையே உருவாகும் கொந்தளிப்புக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுதியின் அவல நிலையே அடிப்படைக் காரணம். இப்பிரசுரம் அந்த அவலத்தை விவரமாக பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,241 விடுதிகள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை விடுதிகளுமே படுமோசமான நிலையில்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள 67 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் படிக்கிற மாணவர்களுக்கு 58 விடுதிகளே உள்ளன. மாணவிகளுக்கு 50 விடுதிகள் மட்டுமே உள்ளன. ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான மாணவர்களுக்கு 108 விடுதிகளே உள்ளன. இவற்றில் 9,929 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 9 விடுதிகளே உள்ளன. இவற்றில் ராயபுரத்தில் உள்ள அரசு முதுகலை மாணவர் விடுதிக்கு மட்டுமே தனிக்கட்டிடம் உள்ளது. மற்ற 8 விடுதிகளும் இளங்கலை படிக்கிற விடுதி மாணவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய விடுதிகள் உருவாக்கப்படவில்லை. சென்னையில் மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கிற ஒட்டுமொத்த மாணவர்களில் 70.7 விழுக்காட்டினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும் பகுதியினர் தலித் மாணவர்கள். இந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் போதுமான விடுதிகள் இல்லை. ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர் விடுதிகள் வெறும் 7 மட்டுமே உள்ளன. இவற்றில், அரசின் கணக்குப்படி, 1,722 மாணவர்கள் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதியில் இடம் கிடைக்காத ஏழை மாணவர்கள், வெளி மாணவர்களாக 1,200 பேர் இந்த 7 விடுதிகளில் தங்கியுள்ளனர். 15-10 அடி கொண்ட ஒரு அறையில் கிட்டத்தட்ட 20ல் இருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். சென்னை ராயபுரத்தில் உள்ள மாணவியர் விடுதியில் இளங்கலை, முதுகலை, ஐடிஐ மாணவியர் என 800 பேர் தங்கியுள்ளனர். இங்கு போதுமான குடிநீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகள் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இவை மாட்டுத்தொழுவத்தைவிட கேவலமான நிலையில் உள்ளன. இந்த லட்சணத்தில்தான், சிறப்புக்கூறு திட்ட நிதியான 3,828 கோடி ரூபாயில் வெறும் 22 கோடியை உயர்கல்விக்கு ஒதுக்குகிறது தமிழக அரசு. தலித்துகளும், பழங்குடி மக்களும் உயர்கல்வி பெறக்கூடாது என்கிற நோக்கத்திலேயே ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இப்படி சிறப்பு கூறு திட்டத்தை கூர்மையாக பிய்த்து அலசி ஆய்ந்திருக்கிறது இந்நூல். இதில் வெளிப்படும் உண்மையின் சூட்டினை தேர்தல் களத்தில் நிற்கும் ஊழியர்கள் சிறிதளவேனும் உணர்ந்து மக்களிடம் வெளிப்படுத்தினால் அதன் பலன் பன்மடங்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை. வசூல் ராஜா: மக்கள் நல்வாழ்வை சீரழித்த திமுக விஜயராகவன் எழுதிய 16 பக்க சிறு பிரசுரம் தமிழக நல்வாழ்வுத்துறை குறித்த சிடி-கேன் ரிப்போர்ட் என்றால் மிகையல்ல. அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்குடன் சுதந்திர இந்தியா தனது பயணத்தை ஆரம்பித்தது. பணம் இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவ சேவை மறுக்கப்படக் கூடாது என்று 1946ல் அமைக்கப்பட்ட போரே கமிட்டியின் பரிந்துரைதான் இந்த இலக்கை தீர்மானிப்பதற்கு உதவிகரமாக இருந்தது. அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை என்ற கொள்கையே சுதந்திர இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இதை அமல்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வு என்ற பொறுப்பு மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டது. காலம் செல்லச் செல்ல இக் கொள்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, 1990களின் ஆரம்பத்திலிருந்து அமல்படுத்தி வரும் உலகமயமாக்கல் கொள்கைகளின் பலனாக, இலவச மருத்துவ சேவை என்பது அரசின் கடமை என்ற நிர்வாகவியல் கோட்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்படி கொள்கைத் தடுமாற்றத்தை வலுவாக எடுத்துரைத்திருக்கிற இந்நூல் எவ்வாறு தமிழக அரசு மக்களின் நல்வாழ்வை தனியாருக்குக் காவுக் கொடுக்கிறது என்பதை விளக்கமாக அலசி இருக்கிறது. பெரும் சாதனையாகப் பேசப்படும் உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எப்படி ஊனமுடையதாகவும் மக்களுக்கு பயன்தராததாகவும் உள்ளது என்பதை நுட்பமான ஆய்ந்திருக்கிறது. குறிப்பிட்ட 51 வகை நோய்களில், மருத்துவ நோய்கள் (ஆநனஉயட டைநேளள) பெருமளவிற்கு விடுபட்டுள்ளன. சாதாரண வைர நோய்களுக்கு (டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை) மலேரியா, எலிஜூரம் (டுநயீவடி) கூக்ஷ போன்ற எந்த தொற்று நோயும் (சமீபத்திய பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட) இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற நோய்களால் இறப்பவர் எண்ணிக்கை, பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அறுவை சிகிச்சை நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகம். இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது. இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்டத்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுகிறவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலைமைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்று கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009ல் அமலுக்கு வந்தது. 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலைமையில், இத்திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும். இப்படி இத்திட்டத்தை அம்பலப்படுத்துவதுடன் மீண்டும் மலேரியா, யானைக் கால், டெங்கு இவற்றுடன் சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் என பரவும் தொற்றுநோய்களுக்கு எந்த முறையாக சிகிச்சையும் கிடைக்கவில்லை என்கிற எதார்த்தத்தை இந்நூல் குறிப்பிடுகிறது. பணம் இருப்பவனுக்கு நட்சத்திர வைத்தியம். ஏழைக்கு இல்லை என்கிற சுடும் உண்மையை ஆழமாய் புரிய வைக்கிறது இந்நூல். இதன் சிறு துளியாவது தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிரொலிக்குமானால் அது ஆரோக்கியமான புதிய மாற்றத்திற்கு தொடக்கமாகும். இப்படி நான்கு பிரசுரங்களும் தேர்தல் களத்திற்கான பிரச்சார வாகனமாக மட்டும் அல்லாமல்; தேர்தலுக்குப் பின் இந்தப் பிரச்சனைகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் தீர்வு வழங்குவதற்கான சாவியாகவும் உள்ளது. மேலும் இவை இப்போது மூச்சைப் பிடித்துக்கொண்டு தேர்தல் களத்தில் பேசுவதற்காக மட்டுமல்ல; உண்மையான மாற்றைத் தேடிக் கண்டடைய ஆரோக்கியமான விவாதத்திற்கு அடிப்படையாகவும் உள்ளது. அரசியல் ஊழியர்கள் யாராக இருப்பினும் அவர்கள் படிக்க வேண்டிய கையேடாகும் இவை. -- |
2 comments :
மேற்கண்ட பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வோம் "தி மு க" வின் ஐந்தாண்டு ஆட்சியின் அவலங்களை பிரச்சாரமாக்குவோம்,சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலம் தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களை கிடைக்க விடாமல் இலவசங்களுக்காக அந்த பணத்தை விரயமாக்கியது மின்சாரத்துறையில் நடந்துவரும் சீர்கேடு, இலவசங்கள் என்ற பேரில் ஒரு கையில் கொடுத்து மறுக் கையில் மக்களிடத்திலிருந்து மறைமுகமாக பணத்தை சுரண்டும் கருணாநிதியின் கேடுகெட்ட புத்தியை மக்களிடத்தில் அம்பலமாக்குவோம்...பாரதி புத்தகாலயத்தின் பணிகள் சிறக்கட்டும்....
writing is a good thing..no doubt.but what is the use of this belated publications???will the party bring this booklets to mass through out state..who will do the job ??then???
-vimalavidya
Post a Comment