அவள் உங்கள் கனவிலும்
வருவாள்…. அரம்பை ….
“ நாளை மீதான அக்கறையில் உருவாகும் நேற்றின்
மீதான என்னுடைய கேள்விகள் தரவுகளுடன் கூடிய புனைவு [டாக்குஃபிக்சன்] வகைமை கதைகளின்
பக்கமே என்னை இழுத்துச் செல்கின்றன.” என்கிறார் முன்னுரையில் முஹம்மது யூசுஃப் .
இவரின் முந்தைய
மூன்று நாவல்கள் ,இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வாசித்தவன் என்கிற முறையிலும் நூலறிமுகம்
எழுதியவன் என்கிற முறையிலும் அவரின் பயணப் பாதை அதுதான் எனச் சான்றளிக்கிறேன். ‘அரம்பை’ நாவலும் அவ்வழிதான் .
யூசுஃப்பின் பரந்த
வாசிப்பும் ,தேடலும் ,இடைவிடாப் பயணமும் , உரையாடலும் ,உழைப்பும் இவரது நாவல்களை வாசிக்கும்
யாரையும் வியக்க வைக்கும் .
இவர் முன்வைக்கும்
தரவுகளோடும் வாதங்களோடும் உடன்படவும் முரண்படவும் நிறைய இடம் இவர் நூல் நெடுக உண்டு
. அதுவே இவரின் வெற்றி ! இந்நூலும் அப்படியே !
அசோக் எனும் பணக்கார
வீட்டு மைனர் பையனின் பாலியல் சீண்டலோடு நாவல் தொடங்கும் ; ஏது முதலிலேயே வில்லங்கத்தை
அறிமுகம் செய்கிறார் பார்த்தால் மெல்ல மெல்ல அவன் உயர்ந்து கடைசி அத்தியாயத்தில் நிமிர்ந்து
நிற்பான் . காசிம் , சாலமன் ,உதயணன் ,மாயா
, ,அஸ்மா , ஆவுடையம்மா , வேணியம்மாள் ,பரமசிவ
பண்ணையார் ,சந்தியா ,பத்மா ,விஜிலா ,ராகேல் ,கதிஜா ,அல்லல் காத்தான் ரவூஃப் பாய் ,மணிகுண்டன்
,மலைச்சாமி ,சேட் ,பக்கிள் ராஜா ,கரீம் ,சட்டர்ஜி இப்படி நாவல் நெடுக விரவிக்கிடக்கும்
பாத்திரங்கள் எல்லோரையும் குறை நிறைகளோடு படைத்திருப்பது குறிப்பிடத் தக்கது .வாழ்வின்
யதார்த்தம் அதுதானே ! போலீஸிலும் நல்லவங்க கெட்டவங்க இரண்டும் இருப்பதை சித்தரிக்கிறார்
.
சோதிடம் , கொஞ்சம்
அமானுஷ்யக் கற்பனை ,கொஞ்சம் செண்டிமெண்டான நம்பிக்கை எல்லாம் நாவலில் உண்டு . ஆயினும்
அதை வலியுறுத்தவில்லை என்பது முக்கியம் . மிளகு
,வெற்றிலை ,பட்டு , கைத்தறி ,ஜவுளி ,பழைய சாமான்கள் ,அபின் ,பத்தமடைப்பாய் ,பீடி ,நகைப்பெட்டி
,பழைய கலைச்சாமான்கள் என பல பொருட்களின் வணிக
உலகம் , வணிகப் பாதை ,வணிக வரலாறு ,வணிகச் சண்டை ,வணிகத் தகவல்கள் .யானை உலகம் ,மதம்
எல்லாம் குறித்து ஏராளமான செய்திப் புதையல்களோடு நாவல் புனையப்பட்டுள்ளது .
பச்சைக்கிளிக்கு
லைக் போடவா வேண்டாமா என குழம்பவைக்கும் முகநூல் பதிவுகள் தரவுகளை கொட்டிச் செல்ல நல்ல
யுத்தியானது .
தன் தாய் சந்தியா
விதவையா ? தன் தந்தை கலிவரதன் செத்துவிட்டாரா ? உயிரோடு இருக்காரா ? தாய் தன்னை குழந்தையிலேயே விட்டுவிட்டு தனித்து
வாழ்வது ஏன் ? என பல கேள்விகளுக்கு விடைதேடி அசோக்கின் பயணம் ஒரு புறம் .
தன் பூர்விக சொத்து
இது என ஒன்றை நம்பி வக்போர்ட் சொத்து சார்ந்து
அலைந்து கைப்பொருளையும் இழந்து வெளிநாட்டு வேலைக்குப் போகும் காசிம் , பீடி
சுற்றி வாழ்வை நடத்தும் மனைவி இவர்களின் கதை ஒரு புறம் ,
ஆய்குடி பெருமை
, பழங் கலைப் பொருட்கள் ,காடு என தேடிச் சலிக்கும் சாலமன் ,மாயா,உதயணன் மற்றும் ஏசு
பக்தியில் மூழ்கிகிடக்கும் விஜிலா இன்னொரு
புறம்
இப்படி மூன்று
பெரிய முடிச்சுகளைப் போட்டு அதை அவிழ்ப்பதுனூடே டாக்குஃபிக்சன் நெய்திருக்கிறார் யூசுஃப்.
திருநெல்வேலி
,திருகுறுங்குடி ,செங்கோட்டை , கொல்கத்தா
,சென்னை என மையங்கொண்டு சுற்றி இருக்கும் நிலப்பரப்பு , வனம் எங்கும் பயணிக்க
வைக்கிறார் .பொதுவாக இவரது படைப்புகளை வாசிக்க பூகோள அறிவு கொஞ்சம் தேவைப்படுகிறது
. நாவல் போக்கில் நம்மையும் மேப்பைத் தேடவைத்துவிடுவார் .
மேலும் சைவம்
,சமணம் ,வைணவம் ,தாய்தெய்வவழிபாடு ,புத்தம் ,சனாதன பிராமணியம் என பல கலாச்சார சங்கமிப்பாய்
பாத்திரங்களும் பேசுபொருளும் . கதையூடே இந்தியாவே பன்மைத்துவ பூமி என சொல்லிச் செல்லும்
பாங்கு ! நூலிழை பிசகினும் கலவர விதையாகிவிடும் ஆயினும் நுட்பமாக சமன் செய்கிறார்
. அதுபோல் நேற்றைய உலகில் சஞ்சரிக்கும் போது சொல்லும் செய்திகள் மூலம் ஒரு வறட்டு பெருமிதம்
வந்திவிடுமோ என்கிற ஐயமும் எழத்தான் செய்கிறது .தமமுக ,பாஜக எல்லாம் தொட்டுச் செல்லும்
நாவல், எனினும் அந்த உரசலில் மூழ்காமல் கழைக்கூத்தாடி போல் சாகசமாக நகர்த்தி இருக்கிறார்
.
பூதப்பாண்டிக்குட்பட்ட
புத்தேரிதான் என் அப்பா பிறந்த ஊர் , ஆராம்பொளி என நாங்கள் அழைத்த ஆரல்வாய் மொழி என்
பெரியம்மா ஊர் , நான் பிறந்து வளர்ந்தது சுசீந்திரம் . முன்னுரையில் யூசுஃப் பூதப்பாண்டி
எனச் சொன்னதால் ஈர்ப்பு அதிகமானது . 15 வயதிலேயே ஊரை விட்டு வந்துவிட்ட எனக்கு அந்த
வட்டாரத்தின் பூகோளம் ,சரித்திரம் ,பெருமை எதுவும் சரியாகத் தெரியாது என ‘அரம்பை’ உணர வைத்துவிட்டது . நானும் அந்த பாரம்பரியத்தின்
சொந்தக்காரன் என இனி கொஞ்சம் பீற்றிக்கலாம் போல .
சின்ன வயதில் யானை
பொம்மை கேட்டு அழுது அழுது எனக்கு காய்ச்சல் வந்ததையும் , மாமா நாகர்கோவில் போய் யானை
பொம்மை வாங்கி வந்தபின்தான் சமாதானம் ஆனேன் என என் வீட்டில் அடிக்கடி கேலி செய்வார்கள்
. என் சிறு வயது கனவில் பெரும்பாலும் யானைகளே ! யானை மீதான என் ஈர்ப்பு பெரிது .
“ நாவல் பழ அடர்நீல
நிறத்தில் ஜீன்ஸ் பேண்டும் அக்வா மெரைன் நீலக்கலரில் டாப்ஸூம் அணிந்து மாயா யானை மீது
ஏறவா என்று சாலமனிடம் கேட்க, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாலமன் அப்புது
, அப்புது , ஆய் ,ஆய் என்று கூறியதும் யானை கால்மடக்கிக் காட்டியது .”
“ஆச்சர்யமாக சாலமனைப்
பார்த்தபடி கயிற்றைப் பற்றிப்பிடித்து யானை மீதேறினாள் மாயா ,குச்சரொழுகை இல்லாமல் யானைமீது போடப்பட்டிருந்த அரிசி சாக்கில் கையில்
ஒரு கம்பைப் பிடித்தபடி ….”
இந்த வர்ணனை நெஞ்சில்
கனவை விதைக்கிறது . நாவலைப் படித்தபின் தூங்கும் போது மாயா கனவில் நிச்சயம் எல்லோருக்கும்
வருவாள் மகளாக ,காதலியாக , கதாநாயகி ஆக . ஆம் என் கனவிலும் வந்து அப்பா என அழைத்தாள்.
31 வது அத்தியாயத்துடன்
, 392 வது பக்கத்துடன் நாவலை முடித்திருக்கலாமோ ? கிட்டத்தட்ட ‘எண்ட்’ கார்டு போட்ட பீலிங் வந்துவிடுகிறது .அப்புறம்
இரண்டு அத்தியாயங்கள் 24 பக்கங்கள் நீள்கிற்து .31 வது அத்தியாயம் என்ன இது வேறெங்கோ
நாவலை நகர்த்துகிறாரோ என நினைக்க வைக்கிறது . ஆனால் , சந்தியா மீண்டும் பட்டுப்புடவை
,தலையில் ரோஜாவுடன் டீச்சராக ,தலைமையாசிரியராக வருவதுடன் நிறைவடைகிறது . இதுவும் தமிழ்
மரபு சார்ந்த செண்டிமெண்டாக இருக்குமோ ?
இந்நாவல் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவித அனுபவம் தரலாம்; வாசியுங்கள் !
அரம்பை , [ நாவல்
]
முஹம்மது யூசிஃப்
,
யாவரும் வெளியீடு
,
பக்கங்கள் :
416 , விலை : ரூ.500/
தொடர்புக்கு ;
www.be4books.com , www.yaavarum.com
- சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment