வலியும் ரசனையும்
பிசைந்த கூட்டாஞ்சோறு
‘மனதின் சோம்பேறித்தனம்’ இருப்பதிலேயே கொடுமையான
வியாதி . கண்சிகிட்சை ,சளி காய்ச்சல் ,உடல் அசதி என காரணங்கள் அமைய சென்ற ஆகஸ்ட் இறுதி
முதல் என் வாசிப்பு பழக்கம் சற்று தேய்ந்தது
. இடையில் சில நூல்களை வாசித்த போதிலும் வழக்கமான தடத்திற்கு வந்து சேரவில்லை . காரணம்
மனதின் சோம்பேறித்தனமே ! அது உடல் அசதியின் ஒரு கூறாக வந்திருப்பினும் ; உடைத்தாக வேண்டும்
. இன்றே உடைக்கிறேன்.
மேசை மேல் வரிசை
கட்டி நிற்கும் புத்தகங்கள் நான் நீ என முண்டியடிக்க , கடைசியாக கைக்கு கிடைத்தது மேலே
இருந்ததால் முந்திக் கொண்டது .
இழப்பின் வலியைக்
காட்சிப் படுத்தும் “ வள்ளியப்பன் மெஸ்ஸும்
மார்க்ரீட்டா பீஸ்ஸாவும்” தலைப்பே நூலின் ஈர்ப்பு மையமானது . தோழர் மு.இக்பால்
அகமதுவின் அனுபவப் பிழிவுகளின் தொகுப்பு இந்நூல்.
வாழ்வின் வலி
, ஆழ்ந்த ரசனை , பயணத்தில் பெருவிருப்பம் , கூடவே சாப்பாட்டிலும் , கூர்மையான சமூக
அக்கறை , நெடிய அனுபவம் இவற்றினூடே அவ்வப்போது செதுக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்
.
தென்காசி ,மதுரை
,சென்னை ,கொச்சி ,எர்ணாகுளம் , மசூரி ,அந்தமான் , மணிப்பூர் என இவரின் எழுத்துக் களம்
விரிகிறது ; எங்கு போனாலும் இவரிடம் அளப்பரிய மாந்த நேயமும் , கூரிய பார்வையும் ,சமூக
அக்கறையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது . எங்கும் காலவெளியில் இழந்ததவற்றை அசைபோடவும்
இவர் தவறுவதில்லை
“ அந்தமான் பயணத்தின் அடர்காட்டில் நான் சந்திக்க
நேர்ந்த அந்த பதினோரு ஜாராவாக்களும் என் மூதாதையர்கள் ,என் பாட்டனின் பாட்டன் வழியே
எனக்குச் சொந்தமானவர்கள் என்றே என் உணர்வுகள் என்னிடம் பேசின . அவர்களுக்கும் எனக்கும்
இடையேயான உறவுக்கு அடையாளமாக அவர்களுக்கும் எனக்கும் பொதுவான பாட்டைப்பாடிக் கொண்டிருந்த
அக்காட்டின் குயிலொன்று உதிர்த்த சிறகை திரும்பும் போது என்னோடு எடுத்துவந்தேன்.”
இந்த வரிகளைப்
படித்தபோது காதலியின் உடைந்த வளையல் துண்டை சேகரிக்கும் ஓர் இளைஞனின் ஆர்வம் இவருக்கு
மனிதகுலம் முழுமைக்கும் இருப்பதைக் கண்டு வியந்தேன் .
அந்தமானின் மண்ணில்
விழுந்த மலபார் மாப்ளாக்களின் வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் என்னை உலுக்கியது .
“இம்மக்களைப் பற்றிய புரிதல் ஒன்றிய அரசுக்கும் அதன்
அதிகார பீடங்களுக்கும் ஏற்படாதவரை இவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.” என வடகிழக்கு
மாநிலங்களைப் பற்றி இவர் முன்பொழிவது நூறு சதம் மெய் .
இந்திய சமூகத்தின்
பொது புத்தியில் வடகிழக்கு அதற்குரிய இடத்தை ,அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதா என்பது
என் கேள்வி !
குற்றாலக் குறவஞ்சி
தொட்டு தென்காசி முதல் ரங்கண்ணத் திட்டு வரை பறவைகளோடு நம்மையும் பறக்க விட்டுள்ளார்
.எனக்கு ரங்கண்ணத் திட்டுக்கு போகணும்னு ஆசை வந்திரிச்சு ..
துலாபாரம் , மாடர்ன்
டைம்ஸ் ,பாதை தெரியுதுபார் என சினிமாக்களை ரசனையும் வரலாறும் கலந்து அவர் அசைபோடும்
போதும் நாமும் கடந்த காலத்தில் பிரவேசித்து மீள்கிறோம் .
ஆரம்பத்தில் துலாபாரம்
.நிங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி போன்ற படைப்புகளை உச்சிமோந்த இ எம் எஸ் தன் வாழ்வின்
பிற்பகுதியில் மறுவாசிப்பு செய்து சுயவிமர்சனம் செய்தார் . அப்படிப்பட்ட ஓர் மனந்திறந்த
பார்வை தமிழகத்தில் துளிர்க்க இன்னும் எவ்வளவு
நாள் ஆகுமோ ?
பொதுவாக இவரது
கட்டுரைகளில் பெர்சனல் ட்ச்சு என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சுய அனுபவ முத்திரையோடு
அமைந்துள்ளதால் உயிர்ப்போடு உலாவுகின்றன . ஒரு கட்டுரையில் என்னைப் பற்றியும் சொல்லிச்
செல்கிறார் . என்னை அவர் புரிந்துகொண்ட அளவுக்கு நான் அவரைப் புரிந்து கொண்டேனா என்பது
என்னுள் விஸ்வரூபமெடுக்கும் வினா .
தான் எந்த அரசியலின்
பிரதிநிதி என்பதை இவர் மறைக்கவும் இல்லை ;துருத்திக் கொண்டு எழுதவும் இல்லை . எல்லாம்
அதனதன் போக்கில் தன் அரசியலை பேசவிட்டுள்ளார் .அது இவர் எழுத்தின் வெற்றி !
தோழர் இக்பால்
! உன் திருமண வரவேற்பே வித்தியாசமானது அல்லவா ? தேவி தியேட்டரில் அனைவரும் ஓர் சினிமா , பின் கடற்கரைச்
சந்திப்பு என அமைந்ததில் உன் ரசனையும் தேடலும் இருந்ததை அன்று வியந்து பார்த்தவன்
. இன்றும் உன் நூலை வியந்து பார்க்கிறேன் . தம்மினும் தம்மக்கள் அறிவுடைமை எனக்கும்
பெருவகைதானே !
நூலின் உள்ளடக்கம்
முழுவதையும் நானே சொல்லிவிட்டால் எப்படி ? வாங்கிப் படியுங்கள் !
வள்ளியப்பன் மெஸ்ஸும்
மார்கரீட்டா பிஸ்ஸாவும் ,
மு. இக்பால் அகமது
,
பக்கங்கள் :
186 , விலை : ரூ.195 /
வெளியீடு
:Notion press media pvt Ltd .
தொடர்புக்கு :
94999 09395 .
சு.பொ.அகத்தியலிங்கம்.
2/3/2022.
0 comments :
Post a Comment