ஊசலாட்டத்தில் இருந்து உறுதியாக …

Posted by அகத்தீ Labels:

 

ஊசலாட்டத்தில் இருந்து உறுதியாக …

 

இரு நாட்களுக்கு முன் நான் 1974 ல் கட்சி உறுப்பினரானதாகச் சொன்னேன் . ஆதரவாளர் குழுவில் இணைய படிவம் பூர்த்தி செய்து கொடுத்ததுதான் அது . நான் திராவிட அரசியலில் இருந்து கம்யூனிசத்துக்கு வந்ததை கொஞ்சம் சொல்ல முடியுமா என ஓர் தோழர் கேட்டிருந்தார் . அவருக்காவும் பொதுவாகவும் பதிகிறேன்.

 

நான் 1968 ல் சென்னை வந்தேன் . 1969 ல் முதல்வர் அண்ணா இறந்த போது பள்ளி அசெம்பிளியில் வாய்விட்டு அழுதவன் .பள்ளி ஆண்டுமலரில் அண்ணா குறித்து கட்டுரை எழுதியவன் .என் எழுத்தை முதன் முதல் அச்சில் பார்த்தது அப்போதுதான். பெரியாரை பெரியார் திடலில் சென்று பார்த்தவன் .அவர் நன்கு படிக்க புத்தி சொல்லி அனுப்பினார் .

 

நான் பெரியாரை பெரிதும் நேசித்தேன் .அவர் கருத்துகள் என்னுள் ஊடுருவின .அந்நாட்களில் மாணவர்கள் சிவாஜி ரசிகன் ,எம்ஜிஆர் ரசிகன் என பிரிந்து கிடந்த சூழலில் நான் வித்தியாசமாய் எம் ஆர் ராதா ரசிகனாக இருந்தேன்.

 

பள்ளி இறுதி வகுப்பு முடித்தபின் கிண்டி சி டி ஐ யில் டூல் அண்ட் டை மேக்கர் படிக்கச் சேர்ந்தேன் .அங்குள்ள வளாகச்சூழலும் எனக்கிருந்த தமிழ் தமிழர் பற்றும் மலையாளிகள் எதிர்ப்பில் கொண்டு சேர்த்தன . பின்னர் திமுகவில் ஏற்பட்ட பிளவு அவ்வுணர்வை மேலும் கூரேற்றின .

 

ஹிந்துஸ்தான் டெலிபிரண்டரில் அப்ரண்டீஸாகச் சேர்ந்தேன் . சிடிஐயில் என்னோடு பயின்ற பாபு எனும் நண்பரின் மாமா பத்மநாபன் ரிசர்வ் வங்கி கேண்டினில் பணிபுரிந்தார் அவர் தொடர்பு கிடைத்தது .என்னை கம்யூனிசம் நோக்கி நகர்த்த முதல் அச்சாரம் போட்டவர் அவரே !

 

டெலிபிரண்டரில் இருந்த போது அங்கு நெடிய வேலை நிறுத்தம் ஏற்பட்டது . அப்ரண்டீசுகள் சைதை ரயில் நிலையத்தில் இருந்து பஸ்மூலம் பேக்ட்ரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .நான் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து நடந்துபோய் தொழிலாளிகள் போராட்டப் பந்தலில் கொஞ்சம் இருந்துவிட்டு பின்னர் பேக்ட்ரிக்கு செல்வேன் . உள்ளே நிர்வாகம் என்னை சந்தேகத்தோடு பார்த்தது . வீடு திரும்பும் போதும் அப்படித்தான். தோழர் நந்தகோபால் , காசிநாதன்,அர்ச்சுனன் போன்றோர் அறிமுகம் அப்போதுதான் .அப்போது நான் கம்யூனிஸ்ட் அல்ல .

 

அங்கு பணியாற்றும் போது தோழர் செல்வராஜ் ,ராம்பிரசாத் போன்ற தோழர்கள் மூலம் செம்மலர் ,பிரசுரங்கள் ,ரஷ்ய இலக்கியங்கள் அறிமுகமாயின .சைதை தேரடியில் சிபிஎம் கூட்டம் அடிக்கடி நடக்கும் அங்கு நானும் உத்தண்டராமனும் ,சிவராஜும் போவோம் .அங்கு மிகக்குறைந்த விலையில் ரஷ்ய வெளியீடுகள் கிடைத்தன .

 

சைதையில் அறவாழி ,சிவராஜ் ,நான் எல்லோரும் சேர்ந்து “ நுணுகி” எனும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம் .இதற்கிடையில் குரோம்பேட்டையில் குடியிருந்த நாங்கள் பத்மநாபன் முயற்சியில் பழவந்தங்கல் எம் ஜி ஆர் நகரில் ஓர் ஓலைக் குடிசையைச் சொந்தமாக வாங்கினோம். அங்கு குடிவந்துவிட்டோம் .பின்னர் பத்மநாபன் என்னை கட்சி வேலைகளில் அவரோடு இழுத்துக் கொண்டு சுற்றலானார் .குமாரதாஸ் ,டி.கே.ராஜன் ,விஸ்வம்பரம்  , உரா வரதராஜன் ,து.ஜானகிராமன் ,முண்டன் என எல்லோரும் அறிமுகம் ஆயினர் .

 

 “நுணுகி” பத்திரிகை விமர்சனக்கூட்டம் சைதாப்பேட்டையில் ஓர் மொட்டை மாடியில் இயங்கிய இந்தி டுயூஷன் செண்டரில் நடத்திவந்தோம் . உத்தண்டராமன் மூலமே அந்த இடம் கிடைத்தது.அக்கூட்டத்துக்கு தோழர் உ.ரா.வரதராஜன் வந்தார் . ஒரு கூட்டத்துக்கு மைதிலி சிவராமன் வந்தார் . து .ஜானகிராமனும் ஓர் கூட்டத்திற்கு வந்தார் .இப்படி மெல்ல மெல்ல நான் கம்யூனிஸ்டாக மாறினேன் .

 

என் அப்பா கிண்டி டான்ஸி கிளாஸ் பேக்டரியில் வேலை செய்தார் அவர் சிஐடியு உறுப்பினர் .சிபி தாமோதரன் அறிமுகமானார் .என் அண்ணன் நாராயணன் டைபிஸ்ட் குரோம் லெதர் கம்பெனியில் சிறுது காலம் வேலை செய்தார் .அங்கு யூனியன் அமைக்க தாம்பரம் வழக்கறிஞர் சிவாஜியை அணுகி அவர் மூலம் கட்சியோடு நெருங்கினார் .

 

இதற்கு இடையில் வேலை தேடி விசாகப்பட்டிணம் சென்றேன் .ரயில்வே போராட்டம் நடந்த காலம் அது .எனக்கு மஞ்சள் காமாலை வேறு வர ஊர் திரும்பினேன் .

 

 வழக்கறிஞர் தோழர் சிகரம் .ச.செந்தில்நாதனோடு டைப்பிஸ்டாக என் அண்ணன் நாராயணன் செயல்படலானார் .என்னைவிட அவர்தான் உறுதியான கம்யூனிஸ்ட் .சிகரம் முதல் இதழிலேயே என் கவிதை வெளியானது .

 

அந்த காலகட்டத்தில் அ.சவுந்திரராஜன் , உ.ரா வரதராஜன் ,போக்குவரத்துத் தொழிலாளி பவுன்ராஜ் , பரணீதரன் , சிகரம் .செந்தில்நாதன் இவர்களோடு நானும் பங்கேற்ற சமூகம் சார்ந்த பட்டி மன்றங்கள் பெரம்பூர் ,ஆவடி ,பழவந்தங்கல் ,புதுவண்ணை என மாறிமாறி நடக்கலாயின .

 

தோழர்கள் பி.ஆர் .பரமேஸ்வரன் ,வி பி சிந்தன் , மைதிலி சிவராமன் ,து .ஜானகிராமன் ,கே எம் ஹரிபட் ,வே ,மீனாட்சிசுந்தரம் போன்ற தலைவர்களில் அரசியல் வகுப்புகளும் போதனையும் வாசிப்பும் என்னுள் உணர்வு பூர்வ மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன .

 

கட்சிக்குள் வந்தாலும் எனக்கு பெரியார் மீதான பற்று ,டிராஸ்கிஸ்ட் கீதாவுடனான அரசியல் தொடர்பு ,நக்சலைட்டுகளோடான அரசியல் தொடர்பும் உரையாடலும் என ஓர் குழப்பக் கலவையாகவே இருந்தேன் .அவசரகாலம்தான்  முழு சிபிஎம் ஆக உணர்வு பூர்வமாக என்னைச் செதுக்கியது. பல்லாவரம் குவாரி கல்லுடைக்கும் போராட்டம் என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. நான் சிபிஎம் பக்கம் உறுதியாக நிற்கலானேன்.

 

பெரியார் மீது அன்றைக்கு இருந்தது முரட்டுப் பக்தி ; இன்றைக்கு இருப்பது உயர் மதிப்பீடு ! என் எழுத்திலும் பேச்சிலும் மூடநம்பிக்கை எதிர்ப்பு , சாதி எதிர்ப்பு போன்ற கருத்தோட்டங்கள் இன்றைக்கும் ஓங்கி இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம் . அதே நேரம் மார்க்சியத்தை சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரைபோல் முன்னெடுக்க வேண்டும் என்கிற கருத்து என் உள்ளத்தில் எப்போதும் கனந்துகொண்டே இருக்கிறது .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

15/3/2022.

 

 

 

0 comments :

Post a Comment