சடங்காக இல்லாமல்…… சாணை பிடிக்கும் பட்டறையாக …

Posted by அகத்தீ Labels:

 


சடங்காக இல்லாமல்…… சாணை பிடிக்கும் பட்டறையாக …

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] தமிழ்நாடு மாநில 23 வது மாநாடு மார்ச் 30 அன்று செம்படை அணிவகுப்போடு மதுரையில் தொடங்குகிறது . என் நினைவுகள் பின்னோக்கி குமிழியிடுகின்றன .

 

நான் கட்சிக்கு வந்தபின் சென்னையில் நடைபெற்ற 10 வது மாநில மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . அம்மாநாட்டிற்கான பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டேன் . வெண்மணி வில்லிசை நிகழ்ச்சி தயாரித்ததும் அப்போதுதான் .

 

இம்மாநாட்டுக்கு முன் சென்னை –செங்கை மாவட்ட 10வது மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது .அதிலும் பங்கேற்றேன் . அன்றைய சென்னை என்பது இன்றைய வட சென்னை ,தென் சென்னை , மத்திய சென்னை , செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சி என ஆறுமாவட்டங்கள் இணைந்தது .

 

எனது மாநாட்டு அனுபவங்கள் அப்போதுதான் தொடங்கின . முதலில் கிளை மாநாட்டிலும் பங்கேற்றேன். மாநாட்டுற்குப் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டதையே பெருமையாகக் கருதி மகிழ்ந்த காலம் அது .

 

20 வது தமிழ்நாடு மாநில மாநாடு நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போது நான் விருப்ப ஓய்வு பெற்றேன் . மொத்தமாக சென்னை தொடங்கி நாகைவரை பதினோரு மாநில மாநாடுகளில் பங்கேற்றவன் . உள்ளுக்குள் ஊறும் எல்லா நினைவுகளையும் சொல்லிவிட முடியாதல்லவா ?

 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாநாட்டில் விவாதத்தில் பங்கேற்று நான் பேசியபின் தோழர் வி.பி.சி சொன்னார் , “ பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் விவாதத்தில் பேசுவது கூடாது . நாம் சொல்ல வேண்டிய கருத்தை வரிசைப்படுத்தி வழங்கப்பட்ட குறுகிய நேரத்தில் பேசப் பழக வேண்டும் .”

 

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தோழர் .ஏ.பாலசுப்பிரமணியன் மாநாட்டு விவாதங்களுக்கு தொகுப்புரை வழங்கும் போது பாராட்ட வேண்டியவைகளை மனம் திறந்து பாராட்டியதும் ; ஏற்க வேண்டியவற்றை தயக்கமின்றி ஏற்றதும் ; தவறுகளை கறாராக அதே நேரத்தில் காயப்படுத்தாமல் சுட்டியதும் இன்றும் நினைவில் உள்ளன .

 

தீக்கதிர் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு போதுமான ஊழியர் இன்மையைச் சொன்னார் . தோழர் அருணனுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது , திருமணத்திற்கு பிறகு தீக்கதிருக்கு வருவதாய் சொல்லியிருக்கிறார் . சூழல் எப்படி இருக்குமோ ? பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் .

 

இம்மாநாடுகளை அசைபோடும் போது அன்று அர்ப்பணிப்போடு உழைத்த தோழர்கள் ஒவ்வொருவராய் மனக் கண் முன் வருகின்றனர் . யாரைப் பற்றிச் சொல்வது ? யாரை முதலில் சொல்வது ? என்னால் முடிவு செய்ய முடியவில்லை .

 

தோழர் கஜபதியை ,மேயர் கிருஷ்ணமூர்த்தியை ,ஞானசாமியை ,சி கே .மாதவனை , சி .கே .மாணிக்கத்தை ,சுப்பாராவை .எஸ் கே சீனிவாசனை ருக்மணி அம்மாளை ,வரதம்மாளை பட்டியல் முடியவில்லை .நீண்டு கொண்டே செல்லும் .

 

சென்னைத் தோழர்களே கிட்டத்தட்ட மறந்துவிட்டனரோ என நினைக்கத் தோன்றுகிறதுபுதிய தலைமுறைக்கு சென்னைத் தோழர்கள் பற்றியாவது கொஞ்சம் நினைவூட்ட வேண்டுமென்று மனம் ஏங்குகிறது .அதன் விளைவே என் பதிவுகள் .

 

கட்சியின் மாநில வரலாறு தோழர் என். ராமகிருஷ்ணன் முயற்சியால் ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளது . தோழர் என்ஆர் மூத்த தலைவர்களின் வரலாற்றையும் ஓரளவு சொல்லிவிட்டார் . களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் புத்தகம் மூலம் ஜி.ராமகிருஷ்ணன் பலரை நினைவூட்டி இருக்கிறார் .பல மாவட்ட வரலாறுகளும் ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளன . ஆனால் சென்னை ,தஞ்சை ,குமரி வரலாறுகள் என்ன ஆனது ?

 

குமரி மாவட்ட வரலாறு தோழர் என் .ராமகிருஷ்ணனால் எழுதப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் கிடக்கிறது . புதிய குமரி மாவட்டக்குழு முயற்சி எடுத்து விரைவில் கொண்டு வரும் என நம்பலாமா ?

 

தஞ்சை மாவட்ட வரலாறு அதாவது அன்றைக்கு ஒன்றாயிருந்த தஞ்சை மாவட்ட வரலாறு மிக முக்கியமானது .இதனை எழுத தோழர் என் .ராமகிருஷ்ணன் முயற்சித்தபோது தலைவர்கள் தலையிட்டு இது வழக்கமான தகவல் தொகுப்பாக இருந்தால் போதாது பெரும் உயிர்ப்புடன் வரவேண்டும் என கருத்து தெரிவித்து - அவர் எழுதுவதைவிட தோழர் ச.தமிழ்ச் செல்வன் எழுதலாம் எனச் சொல்ல , தோழர் என்ஆர்ம் மனம் உவந்து ஒப்புக் கொண்டார் .

 

இப்பணியை முடிப்பதற்காகவே தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழ்ச் செல்வனும் தன்னை மாநிலக் குழுவிலிருந்து விடுவித்துக் கொண்டதாய் மாநாடு முடிந்ததும் என்னிடம் அலைபேசியில் சொன்னார் . விரைவில் நூல் வரும் என  நம்புகிறேன். தோழர் ஜி வீரையன் எழுதிய விவசாய இயக்க வரலாறு இப்போது கொஞ்சம் ஆறுதல் தருகிறது .

 

அன்றைய சென்னை மாவட்ட வரலாறு – இன்றைய ஆறு மாவட்டங்களின் தொகுப்பான வரலாறு எழுதவும் தோழர் என் ராமகிருஷ்ணன் முயற்சித்தார் . அதுவும் தலைவர்களின் பெருங்கனவால் அவர் தன் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று .கனவு கண்டவர் யாரும் அதற்காக இதுவரை துரும்பையும் கிள்ளிப்போடவில்லை .இனியும் நடக்குமா தெரியாது .பழைய அனுபவம் உள்ள தோழர்கள் கிட்டத்தட்ட விடைபெற்று விட்டனர் . இன்னும் ஒன்றிரண்டு பேரே மீதம் உள்ளனர் . என்ன செய்வது ? ஏக்கப் பெருமூச்சே பதிலாகிறது .

 

தோழர் என்.ராமகிருஷணன் குறித்து அவரது படைப்பரங்கு பற்றிய கருத்தரங்கில் நான் ஆற்றிய உரையில் சொல்லியிருப்பேன் , ” நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது – தோழர் என். ராமகிருஷ்ணனின் நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடித்தளமாக உள்ளது.”

 

எந்த வரலாற்று நூலும் , அறிவியல் நூலும் முதல் முயற்சியிலேயே நூறு சதம் சரியாக அமைந்துவிடாது .முதலில் எழுதுவோர் தகவல் தளம் அமைப்பர் .விடுபட்டவை ,விடை காணாத கேள்விகள் என முயற்சித்து பின் வருவோர் செப்பனி செப்பனிட்டு செழுமைப் படுத்த வேண்டும் . காலம் செதுக்கிச் செதுக்கி சரியான பார்வை வழங்கும் .இதில் முன்னத்தி ஏரான ஏரான தோழர் என்.ராமகிருஷ்ணன் சென்ற மாநாட்டில் இருந்தார் .இம்மாநாட்டில் இல்லை .

 

நான் நாகை மாநாட்டில் விடுவித்துக் கொண்டபின் சென்னையில் நடந்த 21 வது மாநில மாநாட்டிற்கு வந்தேன் .பிரதிநிதியாக அல்ல ,சென்னைத் தோழர்களின் – குறிப்பாக தோழர் பாக்கியத்தின் அழைப்பை ஏற்று வரவேற்புக்குழு பாட்ஜ் அணிந்து மாநாட்டில் வலம் வந்தேன் . 22 வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்ற போது இப்படியொரு வாய்ப்பு இல்லை . இப்போது மதுரை மாநாடு தீக்கதிர் தோழர்கள் அழைத்தனர் – குறிப்பாக முருகன் அழைத்தார் ஆயினும் வருவதற்கான திட்டமும் வாய்ப்பும் இல்லை .

 

மாநாடுகள் சடங்காக இல்லாமல்…… ஆயுதங்களை சாணை பிடிக்கும் பட்டறை ஆகட்டும் !

 

சு.பொ.அகத்தியலிங்கம். 22/3/2022.

 0 comments :

Post a Comment