என்னை ஈர்க்காத “போராட்டங்கள்” ….

Posted by அகத்தீ Labels:

 

என்னை ஈர்க்காத  “போராட்டங்கள்” ….

 

பொதுவாய் நான் போராட்டங்களை நேசிப்பவன் .கொண்டாடுபவன் . ஆயினும் ,எல்லா போராட்டங்களையும் நான் ஏற்பதுமில்லை ; சிலவற்றை கடுமையாக எதிர்த்தும் இருக்கிறேன் .சாதி ,மதம் ,வெறுப்பு அரசியல் சார்ந்த போராட்டங்கள் உட்பட சமூக நலனுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நான் ஆதரித்தது இல்லை ; மாறாக கடுமையாகச் சாடி இருக்கிறேன் .

 

இங்கே நான் தலைப்பில் சொன்ன  “போராட்டங்கள்” வேறு வகையானது ..

 

நான் இடதுசாரி அரசியல் பக்கம் ஈர்க்கப்பட்ட எழுபதுகளில் வாலிபர் அரங்கம் ,எழுத்தாளர் சங்கம் ,கட்சி என களமாடத் துவங்கிய போது பழவந்தங்கலிலும் சைதையிலும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு . அவர்களில் சிலர்  கம்யூனிசம் நோக்கிய எனது பயணத்தை மடை மாற்ற நினைத்தார்கள் .

 

இயல்பாகவே நான் புத்தகக் காதலனாக இருந்ததால் ; அதுவும் இலக்கியம் ,அரசியல் ,வரலாறு ,தத்துவம் ,ஆன்மீகம் ,சோதிடம் ,மந்திரம் என எதையும் தவிர்க்காமல் வாசிப்பவனாக இருந்ததால் ; அவர்களின் பணி எளிதென யோசித்து செயல்பட்டனர் .

 

அப்போதெல்லாம் வார இதழகளில் தொடராக வரும் நாவல்களை ,வாராவாரம் வரிசையாக சேகரித்துவைத்து பைண்டு செய்யும் பழக்கம் உண்டு . அவ்வாறு பைண்ட் செய்யப்பட்ட ரா.சு.நல்லபெருமாள் எழுதிய “ கல்லுக்குள் ஈரம் “ “ போராட்டங்கள்” போன்ற நாவல்களை வாசிக்கத் தந்தனர். இரண்டையும் படித்தேன். இரண்டுமே என்னை பெரிதாய் ஈர்க்கவும் இல்லை .அசைக்கவும் இல்லை. இதைத்தான் தலைப்பில் சொன்னேன்.

கம்யூனிச எதிர்ப்புக்கு என்றே படைக்கப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் “ விலங்குப் பண்ணை” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை ஓர் நண்பர் தந்தார் . வாசித்தேன் .என்னுள் கம்யூனிஸத் தேடல் அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை .

 

இதுபோல் சில மொழியாக்க  நாவல்களும் என்னிடம் வந்தன வாசித்தேன் பள்ளி இறுதித் தேர்வு விடுமுறை காலகட்டத்திலேயே இராமாயணம் ,மகாபாரதம் என வாசிக்கத் துவங்கிவிட்ட நான் அதனுள்ளும் மூழ்கிப் பார்த்தேன் .என் அப்பாவின் நண்பர் கிருஷ்ண மூர்த்தி ஐயர் அவை குறித்து என்னிடம் நிறையப் பேசுவார் . அவை எல்லாம் என்னை கம்யூனிஸ்ட் பக்கம் போகவிடாமல் இழுத்ததில்லை .

 

மளிகைக் கடை வைத்திருந்த [பின் விறகுக்கடை வைத்த] ராமச்சந்திரன் அண்ணாச்சி சோதிடம் ,மந்திரம் ,ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் தந்தார் வாசித்தேன் .நானும் அவரும் நள்ளிரவு சுடுகாட்டுக்கெல்லாம் போனோம் .அவை என்னை அங்கே கொண்டு சேர்க்கவில்லை .

 

இதே காலகட்டத்தில் முற்போக்கு இலக்கியங்கள் ,ரஷ்ய இலகியங்கள் , பிற மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வழி என்னை நான் செப்பனிட்டுக் கொண்டேன்.

 

ஸ்லோ பாய்சனாக  கம்யூனிஸ எதிர்ப்பு விஷத்தை செலுத்தும் பாலகுமரனின் “ மெர்க்குரி பூக்கள்” ,” இரும்புக் குதிரைகள்” போன்றவற்றை அவை வெளிவந்த போதே வாசித்தவன் .

 

ஜெயமோகனின் “ பின் தொடரும் நிழல்கள்” நாவல் வருவதற்கு ஒரு ஆறெழு மாதம் முன்பு அலைகள் பதிப்பகத் தோழர் பெ.ந.சிவம் அவர்கள் ஒரு மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதியை என்னிடம் கொடுத்து வாசித்து கருத்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் .

 

நானும் வாசித்துவிட்டு அவரிடம் சொன்னேன் , “ இது முழுக்க முழுக்க கம்யூனிச எதிர்ப்பு நாவல் இதை நீங்கள் வெளியிடுவது நன்றாக இருக்காது,வேறு யாரேனும் வெளியிட்டுத் தொலைக்கட்டும் !” .

 

அவர் சொன்னார் ,” நான் ஏற்கெனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டேன் .செகண்ட் ஒப்பினியனுக்காகத்தான் உங்களிடம் கேட்டேன்”

 

அலைகள் வெளியிடவில்லை .பின்னர் யாரேனும் வெளியிட்டார்களோ நான் கவனிக்கவில்லை .

 

ஜெயமோகனின் “ பின் தொடரும் நிழல்கள்” வெளிவந்த உடன் படித்தேன் . அப்போது அந்த மலையாள நாவல் கிட்டத்தட்ட முழுவதையும் , விலங்குப் பண்ணையும் இன்ன பிறவற்றையும் மீண்டும் தொகுத்துப் படித்த அலுப்பு ஏற்பட்டது .

 

இப்போதும் முகநூலில் சிலர்  கம்யூனிச எதிர்ப்பைத் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கின்றனர் . அவற்றை நான் தவறாமல் வாசிப்பேன் . எதிரி என்ன சொல்லுகிறான் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியத் தேவையே !

 

எவ்வளவு ஜோடித்துச் சொன்னாலும் அவதூறுகளுக்கு அற்ப ஆயுளே ! வாழ்வின் யதார்த்தம் உண்மையை உரக்க உரைத்துக்கொண்டே இருக்கிறது .கம்யூனிசம் உண்மைகளில் வேர்கொண்டு நிற்பதால் புயல் ,மழை ,வறட்சி ,கடுங்குளிர் அனைத்தையும் எதிர்கொண்டு ஓங்கி வளரும் .இதனைத் தாமதப்படுத்தலாம் .தடுத்து நிறுத்த முடியாது .

 

கம்யூனிசக் கருத்தை விதைத்துக் கொண்டே இருப்போம் .அக்கருத்து மக்களைக் கவ்விப்பிடிக்கும் போது பொன்னுலகம் பூக்கும் ! காய்க்கும் ! கனியும் !

 

இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் [ 1883 ]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/3/2022.

 


0 comments :

Post a Comment