உரைச் சித்திரம் – 1.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் – 1.

 

 


 

 அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இனிய காண்க; இவண் தணிக !”

 

இப்படி நாம் நெஞ்சாரா வாயார வாழ்த்தும் அரசுகளே எங்ஙணும் அமைந்தால்  எப்படி இருக்கும் ?

 

இது ஒரு புறநானூற்று கனவு .

 

சிறிய யாழ் எனும் இசைக்கருவியில் தேனைவிட இனிமையாய் பாடல் இசைக்கும் பாணா !

 

உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கடம், கிணை, தண்ணுமை, தவில், பம்பை, பறை, மத்தளம், முரசு போன்ற எண்ணற்ற தோல் இசைக்கருவிகளை  தமிழ் சமூகம் அறியும் . அதில் ஒன்றே கிணை .குளத்து ஆமையைக் கயிற்றால் கட்டியது போன்ற வடிவமைப்பில்லான கிணையை இசைப்பவனே !

 

 இனிய காண்க ! இவண் தணிகஎன முழங்கி , அதாவது  இனிமை பொங்கட்டும்! அமைதி தழைக்கட்டும்!’ என முரசறைந்து பாடல் முழக்குபவனே !

 

கிள்ளி வளவன் நாடு எப்படிப் பட்டது தெரியுமா ?

 

தை மாதத்தில் இறைக்க இறைக்க வற்றாது ஊறும் குளத்து நீர் போல அள்ளிக் கொடுக்க கொடுக்க வற்றாத செல்வம் உடைய நாடு ! குடிக்க நீரும் உண்ணச் சோறும் குறைவு இன்றி கிடைக்கும் நாடு !

 

உணவு சமைக்க அடுப்பை மூட்டுவதால் உண்டாகும்  அடுதீஅங்கு நிரம்பி இருக்கும் ! ஆனால் பகை மன்னன் ஊரையே சுட்டெரிக்கும்  சுடுதீஅறியாத நாடு !

 

நீங்கள் நம்பிக்கையோடு அவனிடம் செல்லுங்கள் !

 

வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும் ,பாதிரிப் பூவையும் சூடியஉதட்டில் புன்னகை மின்னும் உன் விறலியோடு  கிள்ளிவளவனிடம் செல்வாயாக !

 

விறகு வெட்ட காட்டுக்குச் சென்றவனுக்கு எதிர்பாராமல் அதிர்ஷ்டவசமாக தங்கப் புதையல் கிடைத்தது போன்ற கனவல்ல.

 

மெய்யாகவே வளவன் அப்படி அள்ளிக் கொடுப்பான் ! நம்பிச் செல்வீராக !

 

 

சோழன் குளமுற்றுத்துஞ்சிய கிள்ளி வளவனைப் புகழந்து புலவர் கோவூர் கிழார் பாடிய இந்தபுறநானூற்றுப் பாடல் சொல்லும்  முக்கியச் செய்தி என்ன தெரியுமா ?

 

 

அடுப்பு நெருப்பைத் தவிர யுத்த நெருப்பில்லா தேசத்தில் செல்வம் கொழிக்கும் ! மகிழ்ச்சி பொங்கும் ! அமைதி நிலவும் !

உலகமே யுத்தமின்றி வாழ்க ! யுத்தச் செலவுகள் குறையக்குறைய குளிர்நீரும் குறையாத சோறும்எல்லோருக்கும் கிட்டுமே!

 

 

 

 

 தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!

5

தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,

10

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்

15

செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!”

 


                                                                                                    [ புறநானூறு : 70 ]

 

ஆம் !

குளிர்நீரும் குறையாத சோறும்எல்லோருக்கும் கிட்டுமே!

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/3/2022.

 

குறிப்பு : அடிக்கடி கொஞ்சம் இப்படி இலக்கிய விருந்தும் பரிமாறலாம் என எண்ணுகிறேன்.சரிதானே !

 

0 comments :

Post a Comment