சுவரெழுத்தும் முகநூலும் …

Posted by அகத்தீ Labels:

 

சுவரெழுத்தும் முகநூலும் …

 

நேற்று என் தம்பி சு.பொ.ஐயப்பன் அகமதாபாத்திலிருந்து அழைத்து பேசினான் .நினைவுகள் பின்னோக்கி உருண்டோடின .

 

பழவந்தங்கலில் வெண்மணிப் படிப்பகம் ஆரம்பிக்க முடிவெடுத்தோம். அந்நாட்களில் ரயில் நிலையங்களில் விளம்பர பலகைகள் வைப்பர் .அதன் அனுமதி காலம் முடிந்ததும் கழற்றி ரயில் நிலையத்தில் அனாதையாகப் போட்டுவிடுவார்கள். அப்படிக் கிடந்த ஒரு போர்டை ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டு உ.ரா.வரதராஜன் ,நான் ,பத்மநாபன் உள்ளிட்ட தோழர்கள் எடுத்து வந்தோம் .

 

என் குடிசை வீட்டில் வைத்து அதில் வெள்ளை பெயிண்டடித்து சிகப்பு எழுத்தில் அழகாக  ‘வெண்மணி படிப்பகம்’ என என் தம்பி சு.பொ.ஐயப்பன் வரைந்து கொடுத்தான் . சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி முதல் அறைகூவல் புத்தகத்திற்கும் அவனே அட்டை டிசைனர் . அவன் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவன் .பின்னர் அகமதாபாத்துக்கு பிழைப்பு நிமித்தம் சென்றுவிட்டான்.

 

நான் மட்டுமல்ல என் அண்ணன் நாராயணன் ,தம்பி ஐயப்பன் என மூவரும் இயக்கத்தில் இணைந்திருந்தோம் . சுவரொட்டி ஒட்ட பசை ரெடி பண்ணுவது தேடி வரும் தோழர்களை அரவணைப்பது என என் தாய் தங்கம்மாளும் தோள் கொடுத்தார் .என் அப்பா பொன்னப்பர் கூட்டங்கள் நடக்கும் போது வந்து பேச்சைக் கவனிப்பார் .

 

என் தாயும் தந்தையும் சாதி ,மத , கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே ! தோழர் தினதயாளன் சாதி மறுப்பு பதிவுத் திருமணம் செய்த போது பதிவு அலுவலகத்துக்கு என் தாயும் வந்தார் .என் அண்ணன் இதுபோல் சாதி ,மத மறுப்பு திருமணம் செய்யும் போது என் தாயும் தந்தையும் உடன் இருந்தனர் .ஆயின் பின்னர் ஏனோ அண்ணனையும் அண்ணியையும் அவர்களுக்குப் பிடிக்காமல் போனது .

 

தோழர்கள் மைதிலி சிவராமன் , பி.ஆர் .பரமேஸ்வரன் , எ.கே .பத்மநாபன் , கே .எம் .ஹரிபட் ,து.ஜானகிராமன் ,நெ.இல.சீதரன்,உ.ரா.வரதராஜன் போன்ற தோழர்கள் எங்கே பார்த்தாலும் என் தாயிடம் ஐந்துநிமிடம் பேசாமல் செல்லமாட்டார்கள் .

 

 

என்னை முழுநேர ஊழியராக்க தோழர்கள் வீட்டில் வந்து பேசியபோது என் அப்பா சொன்ன ஆட்சேபனை , “ உங்க கட்சியில சேர்ந்தால் கல்யாணமே பண்ணிக்காமல் அல்லவா வாழணும் .” குமரி மாவட்ட அனுபவத்தில் அவர் சொன்னார் . தோழர் வி.பி.சியும் பிஆர்பியும் வாக்கு கொடுத்து முழுநேர ஊழியர் ஆக்கினர் .பின்னர் தோழர் நெ.இல .சீதரன் பெண் பார்த்துக் கொடுக்க சி.கலாவதி என் இணையர் ஆனார்

 

வேடிக்கை என்னவெனில் என் தந்தையும் தாயும் அண்ணனும் சாகும் வரை கட்சி மீது பற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர் . .என் அண்ணன் நோயில் விழுந்தபின்  சாகும் வரை வடசென்னை கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில்தான் தங்கியிருந்தார்.

 

நான் பெரம்பூரில் குடியிருந்த போது – வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டு சமயத்தில் என் வீட்டிற்கு தோழர் ஹன்னன் முல்லாவும் , மாணிக் சர்க்காரும் வந்திருந்தனர் . என் தாயிடம் இருவரும் முக்கால் மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர் .என் தாய்க்கு ஆங்கிலம் தெரியாது . அவர்களுக்கு தமிழ் தெரியாது . நீங்கள் என்ன பேசினீர்கள் எனக் கேட்டபோது ஹன்னன் சொன்னார் ,” “ எல்லா அம்மாக்களும் அன்புதான். மொழி பிரச்சனை இல்லை.”

 

நான் மட்டுமல்ல ,தோழர் குமாரதாஸ் , போக்குவரத்து ஊழியர் ராஜு இப்படி என் போல் குடும்பமாய் கட்சியோடு இருந்த தோழர்களும் உண்டு . என் தலையைப் பார்த்தாலே சபிச்சுக் கொட்டி - வீட்டுக்கு வராதே என விரட்டியடித்த வீடுகளும் உண்டு .

 

அதிலும் சுவர் பிரச்சாரம் / ஊர்வலம் /ஆர்ப்பாட்டம் என தெரிந்துவிட்டால் .அந்தத் தோழரை வீட்டைவிட்டு அனுப்பவே மாட்டார்கள் .ஆயினும் வீட்டில் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வந்து சேர்ந்துவிடுவர்

 

சுவரெழுத்துக்காக முன்கூட்டியே உட்கார்ந்து பேசி ; சுருக்கமாய் கவிதை வரிகளாய் எழுதிக் கொண்டு ,இரவு பத்து மணிக்கு மேல் போய் விடியற்காலை வரை சுவரில் தீட்டிவிட்டு வருவதும் ; மறு நாள் அந்தப் பக்கம் போய் மக்கள் அதை கவனிக்கிறார்களா  கேலி செய்கிறார்களா என கவனிப்பதும் ; அது ஒரு பருவ காலம் .

 

 “ கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை” என அவசரகாலத்தில் ஒன்றிய அரசு எங்கும் எழுதி வைத்தது , குறிப்பாக ரயில் நிலையங்களில் . நாங்கள் அதன் பக்கத்தில் எழுதினோம் . என்ன தெரியுமா ? “ ஆம் ! ஈடான ஊதியமும் இல்லை ; இணையான போணசும் இல்லை.” .இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே!

 

தட்டிபோர்டு வைத்தால் அது டீக்கடையில் பேச்சாகும் .போலீஸ் குறிப்பெடுக்கும் . எதிர்கட்சிக்காரன் மேடையில் இதைக் கிண்டலடிப்பான் . இந்த பிரச்சார யுத்தி எல்லாம் இன்று கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டதோ ? இப்போதும் தேவைப்படும் இடங்களும் சந்தர்ப்பமும்கூட உண்டு.

 

முகநூலும் டுவிட்டரும் சமூகவலைதளங்களும் இந்த இடத்தைப் பிடித்துவிட்டது போலும் . ஆயின் அதை நாம் பயன்படுத்த கற்றுத் தேறிவிட்டோமா ?இல்லை .

 

மதவெறி ஆர் எஸ் எஸ் கூட்டம் பிழையான செய்தியைக்கூட வெகுசீக்கிரம் பரப்பிவிடுகிறார்கள் . நாம் சரியான செய்தியைக்கூட அப்படிச் செய்யத் தவறிவிடுகிறோமே ! இதற்கென வல்லுநர் ஆலோசனை பெற முயற்சிக்கலாமோ !

 

அதெல்லாம் இருக்கட்டும் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ?

 

முதலில் இறுக்கமான மொழிநடையின்றி எளிதாக சுவையாக சொல்லப் பயில்வோம் . ஆம் , எதைச் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம்

 

இரண்டாவது மிக முக்கியம் நம்மிடம் மிகப்பெரிய மத்திய தர வர்க்கம் உண்டு .அவர்களுக்கு கணினி வசதி உண்டு .பயிற்சி உண்டு . அவர்கள் எல்லோரும் பதிவு போட்டு ,மற்ற பதிவுகளுக்கு லைக் போட்டு ,ஷேர் செய்து களமாடினால் நமது வீச்சு மிகப்பெரிதாக இருக்கும் .

 

அவர்களில் பெரும்பான்மையோர் வெறும் பார்வையாளர்களாக இருப்பதுதான் ஆகப் பெரும் தடை .

 

இன்றைய சுவர் நம் கையில் இருக்கிறது .இன்றைய தட்டிபோர்டு நம் கையில் இருக்கிறது .இடதுசாரி அரசியலை –கம்யூனிஸ்ட் அரசியலை உரக்கப் பேசத் தடை என்ன ?

 

நான் தொடர்புடைய குடும்ப வாட்ஸ் அப் குரூப்களில் என் அரசியல் பதிவுகளை தொடர்ந்து பதிகிறேன் . நீங்களும் செய்யலாமே ! ஆனால் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் பதிய முடியாது அதனதன் நிலை அறிந்து நம் சங்கை ஊதத்தான் வேண்டும் . ஊதலாமே !

 

சுபொஅ.

27/3/2021.

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment