உரைச் சித்திரம் : 4.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 4.

 


தாய் குழந்தைகளைக்

காப்பாற்றுவதைப் போல…

 

 

 “கருங்கற் பாறைகள் நிரம்பி இருக்கின்றன .அவை பார்ப்பதற்கு எருமை மாடுகள் போலிருக்கின்றன .

 

அவற்றினூடே பசுக்கூட்டம் மேய்வதுபோல் யானைகள் கூட்டம்கூட்டமாய் மேய்கின்றன  .

 

அந்த யானைகளை ஒத்த வலுமிக்க கானக நாடன் என்பவன் நீர்தாமோ !

 

உமக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

அன்பும் அருளும் இல்லாதார் வாழ்க்கை நரகம் போன்றது ஆகும் .

 

அந்த தீயவர் கூட்டத்தில் நீங்களும் ஒருவனாக மாறிவிடாதீர்கள் !

 

ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுவாரோ அப்படி நீவிர் உம் குடிமக்களைக் காப்பீராக !”

 

இப்படி சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் எனும் சேர மன்னரை நோக்கி புத்தி சொல்கிறார் நரிவெரூஉத் தலையார் எனும் புலவர்.

 

 

 

 “விரும்பி வந்த திருமகளை மார்பில் அணைக்காமல் , தோல் கவசம் அணிந்து வலிமை மிக்க மார்பினை நிமிர்த்தி நிற்கும் மன்னா !

 

 

யானைப் படையை ஏவியும் காலாட் படையை ஏவியும் எதிரி நாட்டை மிதித்து அழிக்கிறாய் !

 

கைத்திறனைக் காட்டி அம்பு மாரி பொழிந்து எதிரியை கலங்க அடிக்கிறாய் !

 

இரவு பகல் பாராது பகை நாட்டை தீவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் அந்நாட்டு மக்கள் கதறி அழுவதைக் கண்டு ரசிக்கிறாய் !

 

மன்னா ! இது நன்றல்ல . நன்றல்ல ….தவறு .

 

தண்ணீர் வள மிக்க சோழவள நாட்டைக் காக்கும் கடமையைச் செய்யாமல் , மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டை அழித்தொழிப்பது எந்த விதத்தில் நியாயம் ?”

 

 

சோழமன்னர் கரிகால் பெருவளத்தானை நோக்கி புலவர் கருங்குழல் ஆதனார் இடித்துரைத்தவை இவை .

 

 

 “விண்மீன்கள் மிகுந்திருக்கும் வானத்தை இருள் சூழ்ந்திருக்கிறது .

தகத்தாய பேரொளியுடன் சூரியன் உதித்து இந்த இருட்டை விரட்டி அடிக்கிறான்.

 

பாண்டிய மாமன்னர் நெடுஞ்செழியனே !

 

இருட்டை இல்லாமலாக்கிய சூரியனைப்போல தன் பகை நாடான சேர சோழ படைகளை தம் வலிமையான அம்புகளால் வீழ்த்துகிறாய் !

 

அவர்களின் போர் முரசுகளைக் கைப்பற்றி வெற்றி முழக்குகிறாய்… … எல்லாம் சரிதான்…

 

அங்கே பார் !

 

அங்கே போர்க்களத்தில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிகளைப் பார் !

 

தங்கள் கருங்கூந்தல் மண்ணில் புரள மார்பில் அடித்துக் கொண்டு கணவர்களின் உயிரற்ற உடலில் விழுந்து புரண்டு அரற்றி அழுவதைப் பார் !

 

தங்கள் அழகிய கருங்கூந்தலை வெட்டி எறிந்து மொட்டை அடிப்பதைப் பார் !

 

இன்னுமா யுத்தம் விரும்புகிறாய் ? வேண்டாம் ! வேண்டாம் !

 

நிலவு போன்று ஒளிரும் உன் வாள்கள் இனியேனும் யுத்தத்தைத் தவிர்க்கட்டும் ! யுத்தத்தைத் தவிர்க்கட்டும் !”

 

பாண்டிய மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை நோக்கி புலவர் கல்லாடனார் உளம் உருகப் பாடியது

 

சேரமன்னர் ,சோழ மன்னர் ,பாண்டிய மன்னர் மூவரையும் நோக்கி புலவர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் ?

 

 “போர் வேண்டாம் .மக்களைக் காத்து நிற்பீர் !

 

யுத்தத்தில் பொன்னும் பொருளும் உயிரும் விரயம் ஆவதைத் தவிர்த்து ,அதனை மக்கள் நல்வாழ்வுக்கு அரண் செய்வீர் !”

 

இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நாம் அதைத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது

 

 

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா

5

நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

 

[ புறநானூறு :5 ]

 

 

 

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,

5

தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!

10

தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

 

[புறநானூறு : 7 ]

 



மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

5

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,

10

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

[ புறநானூறு : 25 ]

 

 

போர் செய்து அழியாதீர் !

மக்கள் நலம் பேணி புகழடைவீர்

 

!    

 

சு.பொ.அகத்தியலிங்கம் 28/3/2022.


 

0 comments :

Post a Comment