உரைச் சித்திரம் – 2.
வாழ்தலின் நெறி…….
மலையைக் கற்பனை செய்யுங்கள் , அதன் உச்சியில்
வட்ட முழுநிலா ! அடடா ! அடடா! கற்பனைசெய்தாலே
அழகு சொட்டுகிறதே !
மலைபோல் யானை நிற்கிறது , அதன் மீது ஒருவர்
கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ,அவர் பொன்வண்ணத்தில் குடை பிடித்திருக்கிறார் .
மேலே சொன்ன இரண்டு காட்சியையும் அருகருகே
வரைந்து பாருங்கள் அதன் பேரழகும் மதிப்பும் புலப்படும் .
யானை மேல் உட்கார்ந்திருப்பவர் முடிசூடிய
மன்னர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !
ஆனால் அந்த மாமன்னரும் ஒரு நாள் இறந்து போனார்
. அப்போது பிணம் என இழிந்த நிலையானார் !
யாக்கை நிலையற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ
?
சூரியன் ஒவ்வொரு நாளும் உதிக்கிறாள் . வாழ்வு
ஒவ்வொரு நாளாகக் குறைந்துகொண்டு போவதை சொல்லிச் செல்கிறான் .
சாவு எல்லோருக்கும் வரும் ! எப்போது வேண்டுமானாலும்
வரும் !
சாவு உங்களைத் தேடி வரும் முன் , நாலு பேருக்கு
நல்லது செய்யுங்கள் !
சங்க இலக்கியங்களின் ஒன்றான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் வரைந்து காட்டும் சித்திரங்களே மேலே சுட்டியவை
நாலடியார்
மட்டுமல்ல சங்க இலக்கியம் நெடுகிலும் இத்தகு யாக்கை நிலையாமை குறித்து நிறையவே பேசப்படுகின்றது
.
சாவைக் காட்டி
மிரட்டவோ – சாக்குருவி வேதாந்தம் பேசவோ அல்ல . ஒன்றிரண்டு அப்படியும் இருக்கலாம் ;ஆயினும்
பெரிதும் மேலோங்கி இருப்பது அதுவல்ல ; வாழ்தலின் அறத்தை நெறியைச் சொல்லவே !
சாவு எந்த
நொடியிலும் வரட்டும் கவலையில்லை .வாழும் ஒவ்வொரு நொடியும் நல்லன நினை ! நல்லன செய்
! ஊருக்கு உழை ! ஒல்லும் வகையெல்லாம் அறன் வழி செல் !
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் |
வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் |
ஒவ்வொரு நொடியிலும் பயனுற வாழ்வதென்பது பிறர்
நலன் பேணலே !
ஆம் . நொடிகளுக்கிடையே வாழ்ந்தாலும் கோடி
மின்னலைப்போல் வாழவேண்டும் .சரிதானே !
சு.பொ.அகத்தியலிங்கம்.
20/3/2022.
0 comments :
Post a Comment